சம்யமா - அடுத்த பரிமாணத்துக்கான நுழைவு வாயில்
ஈஷா யோக மையத்தில் சத்குருவின் முன்னிலையில் நடைபெறக்கூடிய தீவிரமிக்க ஒரு தியான நிகழ்ச்சியான சம்யமா பற்றி ஒரு பங்கேற்பாளர் கேள்வி எழுப்புகிறார்: "சம்யமா கர்மாவைக் கரைக்க உதவுகிறது என்று நான் கேள்விப்பட்டேன், ஆனால் அது எப்படி வேலை செய்கிறது, மரணம் மற்றும் மறுபிறப்பு சுழற்சியிலிருந்து தப்பிக்க அது உதவுகிறதா?" இதற்கு சத்குருவின் பதிலை படித்தறியும்போது சம்யமா எப்படிப்பட்ட ஒரு சாத்தியம் என்பது புரியவருகிறது.
கேள்வி:
சம்யமா உங்கள் கர்மாவைக் கரைக்க உதவுகிறது என்று நான் கேள்விப்பட்டேன், ஆனால் அது எப்படி வேலை செய்கிறது என்றும், மரணம் மற்றும் மறுபிறப்பு சுழற்சியிலிருந்து தப்பிக்க அது உதவுகிறதா என்றும் அறிய விரும்புகிறேன்.
சத்குரு:உங்கள் வாழ்க்கையை துரிதப்படுத்தும் ஆன்மீக செயல்முறைகள்
அடிப்படையில் எல்லா ஆன்மீக செயல்முறைகளும் உங்கள் வாழ்க்கையை துரிதப்படுத்துவதற்காகவே. சாதாரணப் போக்கில் சென்றால், அது நீண்ட காலம் எடுக்கலாம். அதனால், ஆன்மீக செயல்முறை என்பது அவசரப்படுகிற மக்களுக்கானது. அவர்கள் மிகக் குறைந்த நேரத்தில் இலக்கை அடைய விரும்புகிறார்கள். நீங்கள் எவ்வளவு விரைவாக இலக்கை அடைய விரும்புகிறீர்கள் என்று என்னிடம் சொன்னால், அதன் அடிப்படையில் உங்கள் பயிற்சிகளை நாங்கள் அமைக்க முடியும். ஆனால் விஷயங்கள் மிக விரைவாக நகரும்போது, நீங்கள் ஒரு குறிப்பிட்ட ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
நீங்கள் பயணம் செய்யும் முறை என்ன?
நீங்கள் தெருவில் நடந்து செல்லும்போதோ அல்லது வனப்பாதையில் நடக்கும்போதோ, புளியமரத்தைப் பார்த்தால், உங்கள் வாயில் எச்சில் ஊறும். நீங்கள் புளியைப் பறிக்கலாம், பூக்கள் கூட நல்லதுதான். நீங்கள் சிறிது புளியம்பூக்களைச் சாப்பிடலாம். அதற்கு நீங்கள் நடந்து செல்வது நல்லது. நீங்கள் மரத்தில் ஏறி, விரும்பிய அளவு புளியை சாப்பிட்டுவிட்டு போகலாம். நீங்கள் மாட்டு வண்டியில் செல்கிறீர்கள் என்றால், சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் - கிடைப்பதை விரைவாக பறித்துக்கொள்ள வேண்டும். தேர்ந்தெடுத்து பறிக்க முடியாது. நீங்கள் காரில் செல்கிறீர்கள் என்றால், பறிப்பது சற்று ஆபத்தானதாக இருக்கும். நீங்கள் பறித்தால், அது உங்கள் கையை துண்டித்துவிடக்கூடும். நீங்கள் வேறு ஏதாவது செய்கிறீர்கள் என்றால், விமானத்தில் பறக்கிறீர்கள் என்றால், அத்தகைய விஷயங்களை நீங்கள் கற்பனை கூட செய்ய முடியாது. நீங்கள் கையை வெளியே நீட்டவே கூடாது.
Subscribe
மக்கள் தங்கள் விருப்பப்படி பயணத்தை தேர்ந்தெடுக்கிறார்கள். மக்கள் தங்கள் இலக்கை அடைய எவ்வளவு ஆவலாக உள்ளார்கள் அல்லது இலக்கைப் பற்றி அக்கறை கொள்ளாமல் பயணத்தை எவ்வளவு ரசித்து அனுபவிக்கிறார்கள் என்பதைப் பொறுத்து பயணம் செய்யும் முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அவர்கள் அக்கறை கொள்ளவில்லை என்பதல்ல. யாரும் தாங்கள் அக்கறை கொள்ளவில்லை என்று சொல்ல முடியாது. இங்கே அமர்ந்திருக்கும்போது, சௌகரியமாக இருப்பதால் அவர்கள் அக்கறை கொள்வதில்லை. ஆனால் நேரம் செல்லும்போது அவர்கள் அக்கறை கொள்வார்கள். எல்லோரும் இலக்கை அடைய விரும்புகிறார்கள். கேள்வி என்னவென்றால், நீங்கள் எவ்வளவு நேரம் காத்திருக்க தயாராக இருக்கிறீர்கள்?
வேகம் அதிகரிக்கும்போது நீங்கள் செய்யவேண்டியது…
சம்யமா என்பது ஒரு குறிப்பிட்ட செயல்முறை, அங்கு நாங்கள் உங்களை மிகவும் பாதுகாப்பான சூழலில் துரித முன்னேற்றத்தில் ஈடுபடுத்துகிறோம். பாதுகாப்பான சூழலில் இல்லாமல் நீங்களாகவே இதை செய்ய முயற்சித்தால், அது ஆபத்தானதாக இருக்கலாம். பாதுகாப்பான சூழலில் இல்லாமல் செய்தால், மக்கள் தங்கள் மூளையை வெடிக்கச் செய்யக்கூடும். நாங்கள் இத்தகைய கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான காரணம், செய்யப்படும் செயல்பாட்டில் சரியான ஒழுக்கமும் கவனமும் இருக்க வேண்டும் என்பதால்தான். இல்லையென்றால், பேருந்தில் செல்லும்போதுகூட, நீங்கள் புளியமரத்தை பிடித்துக் கொண்டிருந்தால், ஒன்று பேருந்து நிற்க வேண்டும் இல்லையென்றால் உங்கள் கையை அங்கேயே விட்டுவிட்டு போக வேண்டும். இதில் ஏதாவது ஒன்று நடக்கத்தான் வேண்டும். இல்லையென்றால் நீங்கள் கையை வெளியே நீட்டக்கூடாது. நீங்கள் வெறுமனே உலகம் கடந்து செல்வதை பார்க்க வேண்டும். நீங்கள் நடந்து செல்லும்போது அப்படி அல்ல, ஆனால் அது நீண்ட நேரம் எடுக்கும். இங்கிருந்து கோயம்புத்தூர் செல்லக்கூட மிக நீண்ட நேரம் ஆகலாம்.
சம்யமா எதற்காக?
சம்யமா அதன் இயல்பில் ஆபத்தானது அல்ல, அல்லது யாரோ அதற்கு தயாராக இருக்கிறார்கள் அல்லது இல்லை என்பதும் அல்ல. எல்லோரும் அந்த திசையிலேயே இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்களை தயார்செய்யவில்லை என்றால், நிச்சயமாக அவர்களுக்கு கடினமாக இருக்கலாம்; தேவையான ஏக்கம் இல்லாமலும் அவர்களுக்கு கடினமாக இருக்கலாம்.
நீங்கள் ஒரு சிறந்த வாழ்க்கையை மட்டுமே எதிர்பார்க்கிறீர்கள் என்றால் - நல்ல வாழ்க்கை என்றால், அமைதியான, மகிழ்ச்சியான, அன்பான வாழ்க்கை - அவை மட்டுமே வேண்டும் என்றால், ஈஷா யோகாவும், பாவ ஸ்பந்தனாவும் உங்களுக்கு போதுமானது. ஆனால் நீங்கள் வாழ்க்கையின் மூல ஆதாரத்தை அறிய விரும்பினால், அத்தகைய ஏக்கம் வந்திருந்தால், நீங்கள் இன்னும் கொஞ்சம் தீவிரமான முயற்சி செய்ய வேண்டும். சம்யமா அதுதான். அதாவது, நீங்கள் மெதுவாக உங்களை ஒதுக்கி வைக்க கற்றுக்கொள்கிறீர்கள், இந்த படைப்பில் நீங்கள்தான் ஒரே தடையாக இருக்கிறீர்கள் என்பதை புரிந்துகொண்டால் மட்டுமே நீங்கள் இதை செய்ய ஆர்வம் கொள்வீர்கள்.
மறைபொருளை வெளிப்படையாக்கும் சம்யமா
அதே நேரத்தில், நீங்கள் விரும்பினால் ஒரு நுழைவாயிலாக மாறமுடியும். இது ஒரு கதவைப் போன்றது. கதவு மூடப்பட்டிருந்தால், அது ஒரு தடையாக இருக்கிறது. அது திறந்திருந்தால் அது ஒரு நுழைவாயில், இல்லையா? நீங்களும் அப்படித்தான். நீங்கள் ஒளிபுக முடியாத ஒரு தடையாக மாறலாம். ஒரு உருவகமாக சொன்னால், உங்களுக்கு கதவுகள் மூடப்பட்டுள்ளன என்றால், அதன் பொருள் நீங்கள் செல்ல முடியாது என்பதுதான். ஒரு கதவு இருந்தால், அதை திறக்க ஒரு வழி இருக்க வேண்டும், இல்லையா? இப்போது அது மூடப்பட்டிருக்கலாம், ஆனால் ஒரு கதவு இருந்தால், அங்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. அனைத்தும் ஒரு ஜிப்சம் தடுப்புச்சுவராக இருந்தால், அது வேறு விஷயம். இப்போது இது ஒரு கதவு. யாரோ அதை மூடி வைத்திருக்கிறார்கள், ஆனால் நீங்கள் விரும்பினால், அதை திறக்க முடியும்.
அதனால், சம்யமா என்பது அந்த பரிமாணம், அங்கு மறைபொருளாக இருப்பதை வெளிப்படையாக்க விரும்புகிறோம். அது சாத்தியமில்லை என்றால், குறைந்தபட்சம் அதை ஒளி ஊடுருவக்கூடியதாக மாற்ற விரும்புகிறோம், அதனால் அது உங்களைக் கடந்துசெல்ல விடாவிட்டாலும், குறைந்தபட்சம் வாழ்க்கையில் மற்றொரு பரிமாணம் இருப்பதை தெளிவாக பார்க்க முடியும். ஒருமுறை நீங்கள் பார்த்துவிட்டால், உங்களை நீங்களே ஏமாற்ற முடியாது. நீங்கள் அங்கே செல்ல வேண்டும் என்பதை அறிவீர்கள்.
குறிப்பு: சம்யமா நிகழ்ச்சி பற்றி மேலும் அறியுங்கள்.