ஏக்கம் என்பது என்ன?
"ஏக்கம் என்பது என்ன? இந்தியர்கள் மற்ற நாட்டினரை விட புத்திசாலிகளா? ஆனந்தமாக இருப்பது தவறான செயலில் ஈடுபட வைக்கிறதே?" போன்ற கேள்விகளுக்கு சத்குருவின் பதில்கள் இங்கே...
"ஏக்கம் என்பது என்ன? இந்தியர்கள் மற்ற நாட்டினரை விட புத்திசாலிகளா? ஆனந்தமாக இருப்பது தவறான செயலில் ஈடுபட வைக்கிறதே?" போன்ற கேள்விகளுக்கு சத்குருவின் பதில்கள் இங்கே...
சத்குரு:
ஏக்கம் என்பதை எளிதாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால், அடுத்த மூன்று நாட்களுக்கு உணவருந்தாமல் இருந்து பாருங்கள். உணவுக்கான ஏக்கத்தை, உங்கள் உடல் உங்களுக்கு உணர்த்தும். எதை உங்களுக்கு மறுதலிக்கிறீர்களோ, அதற்காக நீங்கள் ஏங்க ஆரம்பிக்கிறீர்கள்.
Subscribe
நீங்கள் விரும்பும் ஏதோ ஒன்று கிடைக்கக்கூடியது என்று தெரிந்திருக்கிறது. ஆனால் அது கைவரப் பெறாதபோது, உங்களுக்கு ஏற்படும் உணர்வுதான் ஏக்கம். ஈஷாவில் உங்களுக்கு வழங்கப்படும் வகுப்புகளின் நோக்கமே உங்களுக்குக் கிடைக்கக்கூடிய மேன்மை ஒன்றின்மீது உங்களுக்கு ஏக்கத்தை உண்டு பண்ணுவதுதான்.
உலகில் உள்ள ஏதாவது ஒரு பொருளின்மீது ஏக்கம் கொள்கையில், அது அவ்வப்போது தணியும், மறுபடி கிளர்ந்தெழும். தவணைமுறைகளில் அந்த ஏக்கம் தலை தூக்கும். ஆன்மீகத்தில் அப்படியல்ல, அந்த ஏக்கம் முழுமையாகத் தாக்கும். விரும்பியது மொத்தமாகக் கிட்டினால்தான் அமைதியாக முடியும் என்ற அளவுக்கு, அது உங்களைச் செலுத்தும்.
நான் உங்கள் தாகத்தைத் தணிக்கும் குரு அல்ல. உங்கள் தாகத்தை மேலும் மேலும் தீவிரப்படுத்தும் குரு. அந்த தாகத்தைத் தாங்க முடியாத நிலையை நீங்கள் அடையும்போது, ஒரு மாற்றம் நடக்கும். அதை நான் வார்த்தைகளால் விளக்கப்பார்த்தால், அது உங்கள் கற்பனைகளைத் தான் பெரிதாக்கும். ஆகவே அதை நோக்கிய முழுமையான ஏக்கமும் தேடுதலுமே உங்களைச் செலுத்தட்டும்!
சத்குரு:
உலகத்தின் பல்வேறு நாடுகளைச் சுற்றி வந்தவன் என்ற முறையில் இதை நான் கண்கூடாகப் பார்க்கிறேன். இந்தியர்கள் மற்ற நாட்டினரை விட மிகக் கூர்மையான புத்திசாலித்தனம் கொண்டிருக்கிறார்கள். இதற்குக் காரணம் இனமோ, மொழியோ அல்ல. இங்கே கடைப்பிடிக்கப்படுகிற கலாச்சாரமே இதன் அடிப்படை.
உங்கள் புத்தியைப் பயன்படுத்த விடாமல் மழுங்கடிக்கும் சில கலாச்சாரங்கள் போல் அல்லாமல், நம் கலாச்சாரம் உங்கள் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தத் தூண்டுகிறது.
ஆனால், இந்த தேசத்தில் ஒரு அபாயம் நேரவிருக்கிறது. கிராமங்களில் இருப்பவர்கள் பசியின் காரணமாகக் கல்வியைத் துறக்கிறார்கள். இந்த நிலை உடனடியாக மாற வேண்டும். பெரிய பெரிய நிறுவனங்களை நடத்துபவர்களிடம் இதைத் தான் நான் சொல்லி வருகிறேன்.
கிராமத்தில் இருப்பவர்களுக்கு நல்ல ஆரோக்கியமான உணவுக்கும், கல்விக்கும் வழி செய்யுங்கள். இதை ஒரு செலவாக நினைக்காதீர்கள். இது உண்மையில் நீங்கள் செய்யும் ஒரு முதலீடு தான். இன்னும் பத்துப் பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகு, இந்தியப் பொருளாதாரம் அடுத்தக் கட்டத்துக்கு நகர முனையும் போது, மிக நல்ல புத்திசாலிகள் அதிக அளவில் தேவைப்படுவார்கள். கிராமத்திலிருந்து வருபவர்கள் அந்த விதத்தில் உங்களுக்கு மிகவும் பயனுள்ளவர்களாக இருப்பார்கள். இல்லையென்றால், பொருளாதாரத்தை மேலும் முன்னேற்ற நீங்கள் தயாராக இருக்கும் போது, அதற்குத் தேவைப்படும் கரங்கள் உங்களுக்குக் கிடைக்காது.
சத்குரு:
ஆனந்தமாக இருந்தால் தவறான செயல்களில் ஈடுபட வாய்ப்பே கிடையாது. ஆனந்தம் என்றால் என்ன என்று உங்களுக்குப் புரியவில்லை, இன்பங்களை மட்டுமே புரிந்திருக்கிறீர்கள். இன்பம்தான் ஆனந்தம் என்று நினைத்திருக்கிறீர்கள். இன்பம் என்பது எப்போதுமே வெளியே இருந்து வருவது. ஆனந்தம் எப்போதுமே உள்ளே இருந்து வருவது. இன்பம் தேடிப் போனால் நமக்கு எதோ ஒன்றுடன் அடிமைத்தனம் வருகிறது. ஆனந்தமாக இருக்கிறபோது நமக்கு சுதந்திரம் வருகிறது. இவை இரண்டிற்கும் அதிகமான வித்தியாசம் இருக்கிறது. ஒன்று உள்ளே இருக்கிறது, இன்னொன்று வெளியே இருக்கிறது.