கேள்வி: நமஸ்காரம் சத்குரு, என்னை மற்றவர்கள் மதிப்பிடுவதும் கேலிசெய்வதும் பற்றிய பயம் எனக்கு தடையாக இருக்கிறது.

சத்குரு: இது உங்களுடைய மதிப்பீடு இல்லை, இன்னொருவருடைய மதிப்பீடு. அவர்களுடைய மதிப்பீடு என்னவென்றும் உங்களுக்கு தெரியாது. முதலில் உங்களைப் பற்றி மதிப்பீடுகள் செய்ய அவர்களுக்கு நேரம் இருக்கிறதா? உங்களைப் பற்றி மதிப்பீடுகள் செய்து நேரத்தை வீணாக்குகின்ற அளவிற்கு அவர்களுக்கு உங்கள் மீது ஆர்வம் இருக்கிறதா? ஆனால் யாரோ ஏதோ சொல்லலாம். நீங்கள் முற்றிலும் தவறான திசையில் போனால், ஏதோ சொல்லலாம்.

கிண்டல் செய்யப்படுவது எதனால்?

கனடாவில் ஒருவர் குளிர்காலத்தில் கொஞ்சம் குடித்துவிட்டு போதையாக இருந்தார். அப்போது அவர் ஐஸ்ஸில் மீன் பிடிக்கப் போகலாம் என்று நினைத்தார். அவர் போய் ஐஸை உடைக்க ஆரம்பித்தார். அப்போது சத்தமாக ஒரு குரல் "இந்த ஐஸ்ஸிற்கு கீழே மீன் இல்லை" என்று சொன்னது. அவர் அதிர்ந்து போனார். அவர் கடவுள் பேசுகிறாரோ என்று நினைத்தார். அப்போது அவரால் எதையும் பார்க்க முடியாததால் குடித்ததால்தான் அப்படி தோன்றுகிறதோ என்று நினைத்தார். அதனால் மறுபடியும் அவர் ஐஸை உடைக்க ஆரம்பித்தார். மறுபடியும் சத்தமான ஒரு குரல், "இந்த ஐஸ்ஸிற்கு கீழே மீன் இல்லை" என்று சொன்னது. உடனே அவர் மண்டியிட்டார். "கடவுளா, நீங்கள் கடவுளா? நீங்கள் எங்கே இருந்து பேசுகிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு, நான் ஐஸ் மீது விளையாட்டுகள் விளையாடுகின்ற இடத்துடைய மேனேஜர் என்று பதில் வந்தது. 

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஏதாவது அபத்தமானது என்று நினைத்தீர்கள் என்றால், அதை செய்யாதீர்கள். அதை செய்வது அர்த்தமுள்ளது என்று நினைத்தீர்கள் என்றால், அதை செய்யுங்கள்.

நீங்கள் சில விஷயங்களை செய்தால், கேலிக்கு ஆளாகத்தான் செய்வீர்கள். ஆனால் பெரும்பாலான சமயம் யாருக்கும் உங்களைப் பற்றி நினைப்பதற்கும், உங்களைப் பற்றி மதிப்பீடுகள் செய்வதற்கும், உங்களை கேலி செய்வதற்கும் நேரமில்லை. அவரவர் விஷயங்களிலேயே அவர்கள் பிஸியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு நிமிடம் கிடைத்தால் இப்படித்தான். அவர்கள் உங்களை எங்கே பார்க்கிறார்கள்? அவர்கள் இப்போதெல்லாம் உங்களைப் பார்ப்பது கூட இல்லை. அதனால் நீங்கள் கவலைப்படாதீர்கள். நீங்கள் கொஞ்சம் அபத்தமாக தெரிந்தீர்கள் என்றால், மக்கள் சிரித்தார்கள் என்றால், அவர்கள் ஒருவேளை சிரித்தால், நீங்கள் யாரோ ஒருவரையாவது சந்தோஷப்படுத்துவது நல்ல விஷயம்தானே? எப்போதும் உங்களை நீங்களே கோமாளியாக்கிக்கொள்ள வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அது பரவாயில்லை. எப்போதாவது உங்களை நீங்களே கோமாளியாக்கிக் கொள்வது மனிதருக்கு இயல்புதான், இல்லையா?

கொஞ்சம் கோமாளியாக இருக்கலாம்

நீங்கள் எப்போதுமே மிகவும் சரியானவர் என்றால், அது கொஞ்சம் பிரச்சனை தான். அப்படியென்றால், நீங்கள் சரியானவர் என்று அர்த்தம் இல்லை. நீங்கள் கொஞ்சம் பைத்தியம் என்று அர்த்தம், ஆமாம். நான் எப்போதுமே சரியானவர் என்றால், உங்களுக்கு புரிந்துவிட்டது என்று இல்லை, நீங்கள் கொஞ்சம் பைத்தியமாக இருக்கிறீர்கள், அவ்வளவுதான். உங்களால் பார்க்க முடியவில்லை, அப்போதுதான் நீங்கள் அபத்தமாக ஆகிறீர்கள். நீங்கள் அபத்தமானவராக ஆவதற்கு தயாராக இருந்தால், நீங்கள் மிகவும் நேசத்திற்கு உரியவராக ஆவீர்கள். நிறைய பேர் உங்கள் மீது காதலில் விழுவார்கள். ஏனென்றால் நீங்கள் முட்டாளாக இருக்கிறீர்கள். உண்மைதான், நீங்கள் அழகாக இருப்பதாக அவர்கள் நினைப்பார்கள். 

அதனால், யார் என்ன நினைக்கிறார்கள் என்று கவலைப்படாதீர்கள், அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது அவர்கள் பிரச்சனை, இல்லையா? அவர்கள் மனதில் நடப்பது அவர்கள் பிரச்சனை, ஆமாவா இல்லையா? நீங்கள் கோமாளி என்று அவர்கள் உங்களிடம் வந்து சொல்கிறார்களா? அப்படி சொன்னார்கள் என்றால், அவர்கள் உங்களுக்கு ரொம்பவே உதவுகிறார்கள். உதாரணத்திற்கு, நீங்கள் ஐஸ் மீது விளையாடுகின்ற இடத்தில் மீன் பிடிப்பதற்கு தோண்டினால், யாராவது உங்களுக்கு எடுத்துச்சொன்னால், அது ரொம்பவே உதவியான ஆலோசனை, இல்லையா? 

யார் என்ன நினைக்கிறார்கள் என்று கவலைப்படாதீர்கள், அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது அவர்கள் பிரச்சனை, இல்லையா? அவர்கள் மனதில் நடப்பது அவர்கள் பிரச்சனை, ஆமாவா இல்லையா?

அவர்கள் உங்களுக்கு சொல்லவில்லை. உங்களுக்கு அவர்கள் மனதில் என்ன நடக்கிறது என்று தெரியாது. நீங்கள் ஏன் எல்லோர் மனதையும் தெரிந்துகொள்ள முயற்சி செய்கிறீர்கள்? உங்கள் மனதுடைய தன்மையைப் பற்றி உங்களுக்கு கவனம் இருக்க வேண்டும். மற்றவர்கள் மனதில் இருப்பதுடைய தரத்தைப் பற்றியும், என்ன இருக்கிறது என்பதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். அது அந்த அளவிற்கு மதிப்பானது இல்லை. நான் சொல்கிறேன், மற்றவர்கள் மனதை தெரிந்துகொள்வது அர்த்தமில்லாதது. அதில் உண்மையாகவே மதிப்பானது எதுவும் இல்லை.

அபத்தமானதைச் செய்ய வேண்டாம்!

உங்கள் மனதில் என்ன நடக்க வேண்டும் என்று நீங்கள் கவனம் செலுத்தினால், உங்கள் வாழ்க்கை மேம்படும். அவர்கள் என்ன நினைப்பார்கள், இவர்கள் என்ன நினைப்பார்கள் என்று நீங்கள் கவலைப்பட்டீர்கள் என்றால், நீங்கள் பைத்தியமாகி விடுவீர்கள். ஏனென்றால், என்ன நடக்கிறது என்று உங்களுக்கு தெரியாது, அது வெறும் யூகம்தான். அதை நீங்கள் தினமும் செய்துகொண்டு இருந்தீர்கள் என்றால் பைத்தியம் பிடித்துவிடும், இல்லையா? அதனால், இப்போதிலிருந்து இதை நீங்கள் கவனித்துப் பாருங்கள். ஏதாவது அபத்தமானது என்று நினைத்தீர்கள் என்றால், அதை செய்யாதீர்கள். அதை செய்வது அர்த்தமுள்ளது என்று நினைத்தீர்கள் என்றால், அதை செய்யுங்கள். பரவாயில்லை, யாரோ அதை அபத்தம் என்று நினைப்பார்கள். இந்த பிரபஞ்சத்தில் எதை வேண்டுமானாலும் கிண்டலடிக்க முடியும். அதற்கென்று, நான் அதை எதிர்க்கிறேன் என்று அர்த்தம் இல்லை. அதை நினைத்து அழுவதற்கு பதிலாக, முட்டாள்தனமான விஷயங்களை நினைத்து சிரிக்கவாவது செய்யலாமே. என்ன செய்வது? இது நாம் எடுக்கும் முடிவு. 

உலகத்தில் இருக்கின்ற பல முட்டாள்தனமான விஷயங்களைப் பார்த்து, நீங்கள் அழவும் முடியும் அல்லது சிரிக்கவும் முடியும். நாம் எல்லாவற்றையும் சரிசெய்துவிட முடியும் என்று இல்லை. ஆனால், நம்முடைய சரிசெய்யக்கூடிய திறன் நாம் சிரிக்கின்ற நிலையில் இருந்தால்தான் அதிகமாக இருக்கும், அழுகிற நிலையில் இருக்கும்போது இல்லை, அப்படித்தானே? அதனால் நீங்கள் கவலைப்படாதீர்கள். யாராவது சிரித்தால் நீங்களும் கூட சேர்ந்து சிரிக்கலாம். நீங்கள் நண்பர்களாகிவிடுவீர்கள். நீங்கள் அதை எதிர்த்தீர்கள் என்றால், நீங்கள் இன்னும் அபத்தமாகி விடுவீர்கள். நீங்கள் ஏற்கனவே ஒரு முட்டாள்தனமான விஷயம் செய்துவிட்டீர்கள். அதற்கு எதிர்செயல் செய்தால் நிரந்தரமாக கோமாளியாகி விடுவீர்கள். நீங்கள் அவர்களோடு சேர்ந்து சிரித்தால், நீங்கள் தவறாக செய்கின்ற ஏதோவொன்றில் இருந்து வெளிவர, அவர்கள் உங்களுக்கு உதவலாம். அப்படி நடக்கலாம். ஆனால் எப்படியும் பெரும்பாலான மக்கள் உங்களைப் பற்றி நினைக்கவில்லை, இது ஏமாற்றமாக இருந்தால் மன்னித்துவிடுங்கள்.