இதுவரை: போர் முடிந்த பிறகு அஸ்தினாபுரம் திரும்புகிறார்கள் பாண்டவர்கள். அரண்மனையில், யுதிஷ்டிரனையும் பீமனையும் கொல்ல முயற்சித்த திருதராஷ்டிரனும் காந்தாரியும் தோல்வியடைகிறார்கள். இருவரும் பாண்டவர்களுடன் அரண்மனையிலேயே தங்குகிறார்கள். திருதராஷ்டிரனும் காந்தாரியும் கானகம் செல்ல வேண்டிய நேரம் வருகிறது, அங்கே குரு வம்சத்தில் எஞ்சியிருந்தவர்களின் மரணம் கோரமான முறையில் நிகழ்கிறது.

பீமனின் பழிவாங்கல் 

சத்குரு: சத்குரு: திருதராஷ்டிரனும் காந்தாரியும், தங்களின் கை கால்களை யாரோ கட்டிப் போட்டது போல் உணர்ந்தாலும், அரண்மனையிலேயே இருக்க முயற்சிக்கிறார்கள். அவர்களை யுதிஷ்டிரன் மிகுந்த மரியாதையுடன் நடத்தி, இயன்றளவு அதிகபட்ச வசதிகளை செய்து தருகிறான். ஆனால் பீமன் விடுவதாக இல்லை, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கேலியும் கிண்டலும் செய்கிறான். திருதராஷ்டிரன் சற்று அதிகமாக உண்ணும் வழக்கம் உடையவன். அனைவரும் இணைந்து உணவு உண்ணுகையில், திருதராஷ்டிரன் ஏதோ ஒன்றை உறிஞ்சும்படி நேர்கிற போதெல்லாம், பீமன் தவறாது, "நான் துச்சாதனன் இதயத்தை உறிஞ்சி குடித்தபோதும் இதே சப்தம்தான் வந்தது" என்பான். திருதராஷ்டிரன் எலும்பை கடித்த போதெல்லாம் பீமன், "ஹ.. நான் துரியோதனின் தொடையை அடித்து நொறுக்கியபோது இதே சப்தம்தான் வந்தது" என்பான். இப்படியே எல்லா வகையிலும் தொடர்ந்து திருதராஷ்டிரனை அவமானப்படுத்தி வந்தான் பீமன்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பொதுவாக, அன்றைய காலகட்டத்தில், உங்கள் மகனுக்கு ஒரு மகன் பிறந்ததுமே, நீங்கள் கானகம் சென்றுவிடுவீர்கள்; இது வானப்பிரஸ்தம் எனப்படும். ஆனால் திருதராஷ்டிரன் கானகம் செல்லவில்லை - ஏனென்றால் அவனது கண் பார்வை குறைபாடு ஒரு காரணம், மற்றொன்று அவனது சௌகரியங்களின் மீது அவன் மிகுந்த பற்று வைத்திருந்தான். ஆனால் பீமன் அவர்களை விடுவதாக இல்லை; அனுதினமும் அவர்கள் வேதனையில் உழலுமாறு பார்த்துக்கொண்டான். பீமனை தடுக்க யுதிஷ்டிரன் எவ்வளவு முயற்சித்தாலும், பீமன் கேட்பதாக இல்லை. "நாம் போர்க்களத்தில் கௌரவர்களுடன் நேரடியாக யுத்தம் செய்து வெற்றி பெற்றிருக்கிறோம். ஆனால் இத்தனைக்குப் பிறகும், இன்னும் அந்தக் கிழவன் என்னை நொறுக்க முயற்சிக்கிறான், அந்தக் கிழவி உன்னை எரிக்கப் பார்த்தாள். இனி என் இதயம் அவர்களிடத்தில் எந்த கருணையும் காட்டாது" என்றான் பீமன்.

கானகத்தில் அடைக்கலம் 

பீமனின் ஏச்சையும் பேச்சையும் இனியும் பொறுக்க முடியாது என்ற நிலை ஏற்படவே, விதுரன் திருதராஷ்டிரனிடம், "இந்த இடம் இனி உனக்கு உகந்ததல்ல. நீ கானகம் செல்வது நல்லது, உன் வயதுக்கு அதுதான் பொருத்தமாகவும் இருக்கும். இதுநாள் வரையிலும் உனது உள்தன்மைக்காக நீ எதுவுமே செய்யவில்லை. உன் வாழ்க்கை முழுவதும் உனது மகன்கள் செய்யும் தீமைகளை தடுப்பதிலேயே கழிந்திருக்கிறது. இப்போது உனக்காக நீ ஏதாவது செய்துகொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. வா, நாம் கானகம் செல்வோம்" என்று அறிவுறுத்தினார். எனவே திருதராஷ்டிரன், காந்தாரி, குந்தி, விதுரன் மற்றும் அவர்களுக்கு உதவியாக சஞ்சயன் என அனைவரும் கானகத்திற்கு சென்றார்கள். கானகத்தில் இருந்த ஏதோ ஒரு ஆசிரமத்தில் அடைக்கலமடைந்த உடனேயே, ஏற்கனவே ஒரு துறவியைப் போல் வாழ்ந்து வந்த விதுரன் தன் ஆன்மீக சாதனாவை தீவிரப்படுத்தினார். மற்ற அனைவரையும் பிரிந்து ஒரு குகையில் அவர் மட்டும் தனியாக இருந்தார். அதன் பிறகு ஒரே ஒருமுறை மட்டுமே மற்றவர்களின் பார்வையில் தென்பட்ட விதுரர், சில நாட்களில் தன் உடலை உதிர்த்தார்.

அக்னியின் பிடியில் குரு வம்சத்தினர் 

திருதராஷ்டிரன், காந்தாரி, குந்தி மற்றும் சஞ்சயனின் வாழ்க்கை தொடர்ந்தது. குந்தியும் காந்தாரியும் தங்கள் வாழ்வின் இறுதி கட்டத்தில் இணைந்து வாழும் சூழல் ஏற்பட்டது. மேலோட்டமாக சற்று நாகரிகமாக நடந்துகொண்டாலும், குருஷேத்திரத்தை விட உக்கிரமான ஒரு போர் இருவருக்குள்ளும் எப்போதுமே நடந்துகொண்டுதான் இருந்தது. அவர்களின் மனதிற்குள் நடந்த போரில் இன்னும் அதிகளவு ரத்தம் சிந்தி, இன்னும் பலவிதமான அற்பத்தனங்கள் வெளிப்படுத்தப்பட்டாலும், சமுதாய சூழ்நிலைகளாலும், இருவருமே அரசிகளாக இருந்ததாலும், வெளிசூழ்நிலையை ஒரு குறிப்பிட்ட விதத்தில் கையாண்டனர். ஆனால் இப்போது, வாழ்வின் இறுதி அத்தியாயத்தில், கண் பார்வையற்ற ஒரு மனிதருடன் இருவரும் இணைக்கப்பட்டார்கள். ஒருநாள், அந்த வனத்தின் ஒரு பகுதியில் காட்டுத்தீ பற்றிக்கொண்டது. காற்றின் வாசனை மற்றும் வெப்பம் அதிகரிப்பதை உணர்ந்த திருதராஷ்டிரன், "நமக்கு அருகாமையில் காட்டுத்தீ பற்றியிருப்பது போல் தெரிகிறது, வாருங்கள் தப்பித்து செல்வோம்!" என்றான். இப்போது தீவிர சிவபக்தையாக மாறியிருந்த காந்தாரி, "எதற்காக?" என்றாள். குந்தியும், "அதுதானே... எதற்காக? நாம் நெருப்பிடமிருந்து ஏன் தப்பிக்க வேண்டும்?" என்று கேட்டாள். அவர்கள் மூவரும் அங்கேயே அப்படியே அமர்ந்தனர், காட்டுத்தீ அவர்களை சூழ்ந்தது. குரு வம்சத்தின் ஒரு தலைமுறை முடிவுக்கு வந்தது.

ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தும் குதிரை

அங்கே அஸ்தினாபுர அரண்மனையில், தன்னால் இயன்றளவு நீதி நேர்மையுடன் நடத்திய யுதிஷ்டிரனின் ஆட்சி அடுத்த 36 ஆண்டுகளுக்கு தொடர்ந்தது. மற்ற சகோதரர்கள் படையெடுத்துச் சென்று பல நிலப்பரப்புகளை கைப்பற்றி தேசத்தின் எல்லையை விரிவுபடுத்தினார்கள். அஸ்வமேத யாகம் ஒன்றையும் அவர்கள் நடத்தினார்கள். அஸ்வமேத யாகத்திற்காக ஒரு குறிப்பிட்ட விதமான குதிரையை தேர்வு செய்து, அதற்கு பலவிதமான சடங்குகளை செய்வார்கள். அடுத்து அந்த குதிரையை கட்டவிழ்த்து சுதந்திரமாக விட்டுவிடுவார்கள். அந்த குதிரை எங்கெல்லாம் செல்கிறதோ, அதை பின்தொடர்ந்து மக்களும் செல்வார்கள். அந்த குதிரை எந்த ஒரு தேசத்திற்குள் நுழைந்தாலும், அந்த தேசத்தின் அரசன் யுதிஷ்டிரனை பேரரசராக ஏற்றுக்கொண்டு கீழ்படிய வேண்டும், அல்லது போர்களத்தில் பாண்டவ சேனையை எதிர்கொள்ள வேண்டும். இப்படியாக பாண்டவர்களின் ராஜ்ஜியம் விரிவடைந்தது. அந்த குதிரை திரும்பி வந்ததும் அதை பலி கொடுத்து, அரசன் என்ற முறையில் யுதிஷ்டிரன் அதன் பாகங்களை உண்ணுவதாக இருந்தது, ஏனென்றால் ராஜ்ஜியத்திற்கு பெரும் வளத்தையும் வலிமையையும் கொண்டுவரும் வகையில் அந்த குதிரை குறிப்பிட்ட விதமாக பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. அதேவிதமாக ராஜ்ஜியம் பெரும் வளமடைந்தது, யுதிஷ்டிரன் சிறப்பாக அரசாட்சி செய்தான்.

தொடரும்...

மஹாபாரதம் பிற பகுதி

ஆசிரியர் குறிப்பு: கோவை ஈஷா யோக மையத்தில் கடந்த 2012ம் ஆண்டு மஹாசிவராத்திரியின் போது, சத்குரு விவரிக்க, நடன நாட்டிய நிகழ்ச்சி வடிவில் நடைபெற்ற மஹாபாரதப் பெருங்கதையின் கட்டுரை வடிவமாக இந்த தொடர் மலர்கிறது. காலத்தை வென்ற இந்த பெருங்காவியத்தின் பல்வேறு கதாப்பாத்திரங்கள் மற்றும் கதைகளின் ஊடே நம்மை மறைஞான தேடலுக்கு அழைத்துச் செல்கிறார் சத்குரு.