சத்குரு:

பெரும்பாலான இந்திய மொழிகளில் பொதுவான புழக்கத்தில் "ஹட்டா" என்ற சொல்லுக்கு பிடிவாதமாக இருப்பது என்று பொருள். இது உங்களுக்கு தேவைப்படுகிற ஒரு குணம். உங்கள் உடம்பு, போதும், அவ்வளவுதான் முடியும் என்று சொல்லும். ஆனால் நீங்கள் பிடிவாதமாக இருக்க வேண்டும், இதுதான் ஹடயோகா. உங்கள் மனம், நான் விடப்போகிறேன், இதற்கு மேல் என்னால் முடியாது என்று சொல்லும். ஆனால் நீங்கள் பிடிவாதமாக இருக்க வேண்டும். சும்மா அதை செய்துகொண்டே இருக்கிறீர்கள். ஹடயோகா என்பது ஒருவருடைய வாழ்க்கையில் உடல் ஒரு தடையாக இல்லாதவாறு உடலை உருவாக்குவது பற்றியது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
உங்கள் உடம்பில் 72% தண்ணீர் தான். உங்கள் உடம்பு மேல் தண்ணீர் ஊற்றினீர்கள் என்றால் குறிப்பிட்ட சுத்திகரிப்பு நடக்கிறது.

உடல் ஒரு படிக்கல்லாக மாறும், தடையாக இருக்காது. ஒருவர் தனது உச்சகட்ட சாத்தியத்திற்கு மலர தடையாக இல்லாமல் இருக்கிறது. ஒரு சில எளிய டிப்ஸ். நான் டிப்ஸ் கொடுக்கக்கூடிய ஒரு ஆள் கிடையாது. எனக்கு அதில் கொஞ்சம் கெட்ட பெயரும் உண்டு. ஆனாலும் இங்கே சில எளிய குறிப்புகள்...

யோகாவும் குளியலும்

ஆற்றில் குளியல், River bath

யோகக் கலாச்சாரத்தில் குளியல் என்று எதுவுமே இல்லை. குளிப்பது என்றால் எப்போதுமே ஆற்றில் முழுக்கு போட்டு நீராடுவது. எப்போதுமே ஆற்றுக்குப் போய் முழுக்கு போட்டு குளித்துவிட்டு வருவார்கள். நீங்கள் இதை செய்தால் உங்கள் தசைகள் நன்றாக இருக்கும். இதுபோல செய்வதற்கு மாற்று வழி என்னவென்றால், வழக்கமாக நம் வீட்டில் குளிப்பதற்கு நாம் பயன்படுத்துகிற வாளி பெரிதாக இருக்கும். குறைந்தது நான்கு லிட்டர் தண்ணீரை அது கொள்ளும். நீங்கள் இதை செய்யும்போது முழு உடம்பும்... பெண்களுக்கு நான் இதை அழுத்தி சொல்லப் போவதில்லை. ஏனென்றால், உங்கள் hair style, அது எல்லாமே இருக்கிறது. ஆனால் எப்போதுமே குளியல் என்றால் முதல் குவளையை உங்கள் தலையில் தான் ஊற்ற வேண்டும். உடம்பில் முதலில் குளிர்ந்த நீரை ஊற்றினீர்கள் என்றால் வெப்பம் மிக விரைவாக உங்கள் மூளைக்கு போய்விடும். அப்படி நடக்கக்கூடாது. இதனால்தான் தலைமுடியை நனைக்க விரும்பாதவர்கள், குறைந்தபட்சம் குளிர்ந்த நீரை எடுத்து காது அருகில், காதிற்கு பின்புறம் கொஞ்சம் குளிர்ந்த நீரை நீங்கள் வைத்தால், உடனே தலைப்பகுதி குளிராவதை உணர்வீர்கள். அதன் பிறகு நீங்கள் உடம்பிற்கு குளிக்கலாம். இல்லையென்றால் எப்போதுமே முதல் குவளை உங்கள் தலையில் தான், உடம்பில் கிடையாது. அதனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்றால், முதலில் வாளியை நிரப்பி, அதை தலைவழியாக ஊற்றுவது. காலையில் இப்படி செய்வது தான் சிறந்த வழி.

உடல் முழுவதும் தண்ணீரில்...

உடம்பு தண்ணீரில் மூழ்க வேண்டும். நீங்கள் ஆற்றில் குளிப்பது போலவே செய்யப் பார்க்கிறீர்கள், சரியா. அதேநேரத்தில் முழு உடம்பும் நனைய வேண்டும். குறைந்தது தோல் முழுவதும் ஒரே நேரத்தில் தண்ணீரால் நனைக்கப்பட்டு இருக்க வேண்டும். நீங்கள் தண்ணீரை ஊற்றினால் முழு உடம்பும் மூழ்கி குளிப்பதாக உடம்பு நினைத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் இப்படி ஊற்றினால் உடல் அமைப்பில் குறிப்பிட்ட விதமான குளிர்ச்சி ஏற்படும். தசைகளும் மிக இலகுவாக மாறிவிடும். ஷவரில் குளித்தாலும் இந்த அனுபவம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது, ஏனென்றால் ஷவர் போதுமான அளவு பலமாக இருந்தால், தண்ணீருடைய அளவு போதுமானதாக இருந்தது என்றால், ஷவரால் இதை சுலபமாக செய்ய முடியும். அறையின் தட்பவெப்பத்தை விட கொஞ்சம் குளிரான தண்ணீரை பயன்படுத்துவது எப்போதுமே சிறந்தது.

இளமையாக வைத்திருக்கும் குளியல்

ஒரு குறிப்பிட்ட அளவு தண்ணீர் உங்கள் மீது ஓட வேண்டும், அதில் மூழ்க வேண்டும். அறையின் தட்பவெப்பத்தை விட குளிரான தண்ணீரில் இது நடக்க வேண்டும். இது நடந்தால் தோலின் மேற்பரப்பில் இருக்கும் எபிதீலியல் செல்கள் சுருங்கும். அந்த செல்கள் சுருங்கும்போது செல்களுக்கு இடையே உள்ள துவாரங்கள் திறக்கும். செல்களுக்குள்ளேயே துவாரங்கள் இருக்கிறது. அதை நாம் திறக்க விரும்பவில்லை. வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றினால் அது திறந்துகொள்ளும். உங்கள் உடம்பை சூடான தண்ணீர் தொட்டியில் நனைத்தீர்கள் என்றால், செல்கள் திறந்து தண்ணீரை எடுத்துக்கொள்ளும். அது நல்ல விஷயம் கிடையாது. உங்கள் உடம்பை குளிர்ந்த நீரில் வைத்தீர்கள் என்றால் செல்கள் சுருங்கும், இடையில் இருக்கும் இடைவெளிகள் திறக்கும். அது யோகப் பயிற்சி செய்வதற்கு மிக முக்கியம். ஏனென்றால், உடம்புடைய செல் கட்டமைப்பை வேறு ஒரு பரிமாணத்தை சேர்ந்த சக்தியால் சக்தியூட்ட வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். செல்கள் சுருங்கி இடம் கொடுத்தது என்றால், அதன்பிறகு நீங்கள் யோகப் பயிற்சியை செய்யும்போது, உடலில் செல்லுலார் அமைப்பு சக்தியடைகிறது. ஒருவர் ஏன் மற்றவர்களை விட அதிக உயிர்ப்போடு இருப்பது போல தெரிகிறது என்றால், இதனால்தான். உடலுடைய செல்லுலார் கட்டமைப்பு சக்தியூட்டப்பட்டது என்றால், அது மிக மிக நீண்ட காலத்திற்கு இளமையாகவே இருக்கும். என்னடா, இந்த கிழவன் இன்னும் போகாமல் இருக்கிறானே என்று மற்றவர்கள் நினைக்கும்போது, நீங்கள் இன்னும் 25 வயது போல உணர்வீர்கள்.

நீரின் வெப்பநிலை அளவு?

ஹடயோகா நம்மைச் சுற்றி இருக்கும் உலகத்தை விரக்தி அடைய செய்வதற்கான ஒரு வழி. இதனால் தான் அறையின் தட்பவெப்பத்தை விட குளிரான நீரை பயன்படுத்துகிறோம். இந்தியாவில், குறைந்தது தென்னிந்தியாவிலாவது, ஏனென்றால் தண்ணீர் எப்போதுமே அந்த வெப்பநிலையில் தான் இருக்கிறது. ஆனால் நீங்கள் குளிர் பிரதேசத்தில் இருந்தால், நீங்கள் மிதமான சீதோஷண நிலையில் இருந்தால், தண்ணீர் மிகவும் குளிராக இருக்கும். அது சரி கிடையாது. தண்ணீர் அறையின் வெப்பத்தை விட ஐந்து முதல் எட்டு டிகிரி சென்ட்டிகிரேட் குறைவாக இருக்க வேண்டும். அதைவிட அதிகமாக இருக்கக்கூடாது.

குளியலால் வரும் சளிப் பிரச்சினைக்கு...

உங்களுக்கு ரொம்ப சீக்கிரமாகவே சளி பிடிப்பது போன்ற உடல் இருந்தால், ஆரம்பத்தில் முதல் இரண்டு வாரங்கள் ஒரு ஸ்பூன் யூகலிப்டஸ் எண்ணெய்யை தண்ணீரில் கலந்து அதை குளிர்ந்த தண்ணீரில் போட்டு குளியுங்கள், சளி போய்விடும். யூகலிப்டஸ் எண்ணெய்யால் இல்லை, குளிர்ந்த நீரால். உங்களுக்கு ஏதேனும் தொற்றோ, இல்லை அதிகப்படியான கோழையோ உருவாக்குவது போன்ற ஏதாவது பிரச்சனை இருந்தால், அதற்கு நாம் வேறுவிதமாக சிகிச்சை அளிக்க வேண்டும். ஆனால் நான் ஏற்கனவே சொன்னது போல, தண்ணீர் அறையின் தட்பவெப்பத்தை விட ஐந்தில் இருந்து எட்டு டிகிரி வரை குறைவாக இருக்க வேண்டும், அதிகப்படியான குளிர்ந்த நீராக இருக்கக்கூடாது.

எத்தனை முறை குளிப்பது?

ஏதோ ஒருவிதத்தில் கும்பலாக, இல்லை நிறைய பேரோடு கலக்கும்போது, அதிக நேரம் ஒரு கூட்டத்தில் இருந்தால், நீங்கள் வீட்டிற்கு சென்றதும் முதலில் குளிக்க வேண்டும். இதை நீங்கள் நிச்சயமாக செய்ய வேண்டும். ஒரு நாளில் மூன்று, நான்கு, ஐந்து முறை கூட குளிக்கலாம். அது ஒரு பெரிய விஷயமே இல்லை. ஒரு சாதகரைப் பொறுத்தவரை ஒரு நாளில் பல தடவை குளிப்பது நல்லது. மிக அதிகமாக பண்ணிக்கொள்ள தேவையில்லை. ஆனால் ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்தில் இருந்து ஏழு முறை நான் குளித்த காலகட்டங்கள் எல்லாம் இருக்கிறது. இப்போதெல்லாம் குறைந்துவிட்டது, இரண்டு தடவை நிச்சயமாக குளிப்பேன். சில சமயம் மூன்று தடவை. இரண்டு உங்களுக்கு கட்டாயமாக நடக்க வேண்டும். அதற்கு மேல் என்றாலும் பரவாயில்லை.

ஏதோ ஒருவிதமான உடல் தொடர்பு ஒருவரோடு நடக்கிறது என்றால், உதாரணமாக, ஆறு நிமிடங்களுக்கு மேல் நீங்கள் ஒருவருடைய கையை பிடித்திருந்தீர்கள் என்றால் கூட, யோகா செய்வதற்கு முன்னால் ஒரு தடவை குளிப்பது நல்லது. இது சுத்தம் பற்றிய விஷயம் இல்லை. நாம் உடம்பை சுத்தம் செய்ய முயற்சிக்கவில்லை. அது விஷயம் இல்லை. யாரும் அசுத்தமானவர் என்பதற்காக உங்கள் உடம்பை சுத்தம் செய்வதற்கு நாம் முயற்சிக்கவில்லை. யோகா என்பது ஒரு தனிமனிதனுக்கு ஏற்றவாறு, அவர்கள் சக்தியை முறைப்படுத்துகிற ஒரு வழி. அதனால் ஏதோ ஒருவிதமான பரிமாற்றம் அதிகமாக நடந்தால், நான் ஒரு வகுப்பில் உட்கார்ந்தேன் என்றால், நான் யாரையும் தொடுவது கூட இல்லை, நான் ஒரு வகுப்பில் இரண்டு மூன்று மணி நேரம் உட்கார்ந்து இருந்தேன் என்றால், முதல் விஷயம் குளிப்பது தான்.

ஏனென்றால், அந்த தொடர்பே உங்கள் சக்தியுடைய கட்டமைப்பை கொஞ்சம் தளர்வாக்கிவிடும். அதனால் எந்த நேரம் ஆனாலும் நீங்கள் வீட்டிற்கு போனால் முதல் விஷயம் குளிப்பது.

ஆழமான நிலையில் சுத்திகரிக்கும் குளியல்

குளிக்க வேண்டும் என்றால் சோப்பு, ஷாம்பு, இது அது எல்லாம் போட வேண்டும் என்று அர்த்தம் இல்லை, ஒரு வாளி முழுக்க நீரை எடுத்து ஊற்றிக்கொள்வது. ஓடுகிற அந்த தண்ணீர் உடம்பை சுத்திகரிக்கிறது. கழுவாமல், துடைக்காமல் நீர் எப்படி சுத்திகரிக்கிறது? அப்படி நீங்கள் கேட்டால், அப்படி இல்லை, அணு உலைகளில் சில உலோகங்களை பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக டைட்டானியம், பிளாட்டினம், வேறு சில விஷயங்கள் பயன்படுத்துகிறார்கள். இந்த உலோகங்களை சுத்திகரிக்கிறார்கள். அவர்களுக்கு உலோகங்கள் தூய்மையான வடிவத்தில் தேவை என்று விரும்புகிறார்கள். சாதாரண ஆய்வகத்தில் அவர்களால் அது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டும்தான் தூய்மைப்படுத்த முடியும். ஒரு கட்டத்தைத் தாண்டி அவர்களால் தூய்மைப்படுத்த முடியாது. அதனால் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால், இந்த உலோகத்தை ஒரு தடி போல உருவாக்கி, அதன் உள்ளே இன்னொரு வளையத்தை உருவாக்குகிறார்கள். அதைத் தொடாமல் மேலும் கீழும் நகர்த்துகிறார்கள். அதன் மூலமாக உலோகங்கள் சுத்திகரிக்கப்படுகிறது.

உங்கள் உடம்பில் 72% தண்ணீர் தான். உங்கள் உடம்பு மேல் தண்ணீர் ஊற்றினீர்கள் என்றால் குறிப்பிட்ட சுத்திகரிப்பு நடக்கிறது. உங்கள் தோலில் உள்ள அழுக்கை சுத்தப்படுத்துவது பற்றி இல்லை. அது எப்படியும் நடக்கிறது, அது வேறு விஷயம். ஆனால் உங்கள் மேல் நீர் ஓட அனுமதிக்கும்போது ஆழமான அளவில் ஒரு குறிப்பிட்ட சுத்திகரிப்பு நடக்கிறது.

நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? ஒரு குறிப்பிட்ட நாளில் நீங்கள் மிகவும் பதற்றமாக இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளலாம். நீங்கள் போய் ஷவருக்கு கீழே நிற்கும்போது உங்களுக்கு வெளியே வர விருப்பமே இருக்காது. கொஞ்ச நேரம் அங்கேயே இருக்க விரும்புவீர்கள். அந்த மூன்று, இல்லை ஐந்து நிமிடத்தில் உங்கள் வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் தீரவில்லை. ஆனால் நீங்கள் வெளியே வரும்போது அது போனது போல ஒரு உணர்வு ஏற்படுகிறது. நீங்கள் புதிதாக பிறந்தது போல உணர்வீர்கள். இதை கவனித்திருக்கிறீர்களா? எல்லாம் போய்விட்டது என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் என்ன நடக்கிறது என்றால், உடம்பில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர் தான் இருக்கிறது. இதில் தண்ணீர் ஓடினால் குறிப்பிட்ட சில விஷயங்கள் மாறுகிறது.