சித்தரத்தை தரும் சிறப்பான ஆரோக்கியம்! (Sitharathai Benefits in Tamil)
சித்தரத்தை எனும் அற்புத மூலிகை குறித்து இன்றுள்ள தலைமுறை பெரும்பாலும் தெரிந்திருக்காமல் இருப்பது வருத்தமான விஷயம்தான். ஆனால், இங்கே நம் உமையாள் பாட்டி அரத்தைப் பற்றி சொல்ல வந்துவிட்டாள்! நெஞ்சிலிருக்கும் சளியை வஞ்சமில்லாமல் அகற்றக்கூடிய அரத்தைப் பற்றி பாட்டியின் வார்த்தைகளில் இந்தப் பதிவில் படித்தறியலாம்!
கொல்லைப்புற இரகசியம் தொடர்
“இந்த தும்மல், இருமல், விக்கல், கொட்டாவி… இதெல்லாம் வந்தா தடுக்க முடியாது. ஏன் வருதுன்னு கேள்வி கேக்கவும் முடியாது.” டிவியில ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் அந்த சினிமா டயலாக் எனக்கு சற்று ஆறுதல் அளித்தாலும், கடந்த இரண்டு நாட்களாக இருமலுடன் சளி இருப்பது எனக்குள் கொஞ்சம் பீதியை கிளப்பியது.
மூக்கு இருக்கும்வரை சளி இருக்கும் என ராசம்மா பெரியம்மா அடிக்கடி சொல்லிக்கொண்டே மூக்கை சீந்திக்கொள்வாள். ஆனால், இப்போதிருக்கும் சூழலில் சளி, இருமல், தும்மலெல்லாம் சாதாரண விஷயமாக இல்லை. எனவே நான் இதற்கு ஏதாவது மருத்துவத்தை உடனே செய்துவிட வேண்டுமென்று முடிவெடுத்தேன்.
இதுபோன்ற குழப்பம் எனை ஆட்கொள்ளும்போதெல்லாம், எனை ஆட்கொள்ளும் ஆபத்பாந்தவர், நம் ஒன் அண்ட் ஒன்லி உமையாள் பாட்டிதான்.
அடுத்த தெருவிலிருக்கும் உமையாள் பாட்டியை இந்த லாக்டவுனில் பார்ப்பதற்கு, நான் பலத்த காவல்களையெல்லாம் கடக்க வேண்டியிருந்தது.
Subscribe
பாட்டியின் வாசலில் இருமிக்கொண்டே நுழைந்த என்னை, 6 மீட்டர் இடைவெளியை கடைபிடித்தபடி பாட்டி நலம் விசாரித்தாள்.
"என்ன இது..? தொண்டைய என்ன பண்ணி வெச்சிருக்க? சளி அதிகமா இருக்கு போல?!" என்று அக்கறையுடன் கேட்டாள் பாட்டி.
“எனக்கு எப்போதும் வழக்கமாக வரும் நெஞ்சு சளிதான் பாட்டி, வேற இன்ஃபெக்ஷன் எல்லாம் இல்ல! கொரோனா டெஸ்ட் கூட பண்ணியாச்சு, ரிசல்ட் நெகட்டிவ்னு வந்திருக்கு” என்றேன் மாஸ்க் அணிந்த வாய் வழியாக.
"அடப்பாவி! சளி நெஞ்சு வரைக்கும் இருக்கு, லேசா இருக்குனு சாதாரணமா சொல்ற...! சரி... சரி! கொஞ்சம் பொறு, இதோ வர்றேன்" என்று கூறி உள்ளே சென்றவள், ஒரு கிண்ணத்தில் ஏதோ ஒரு மூலிகைப் பொடியுடன் தேனைக் கலந்து கொண்டுவந்தாள்.
"இந்தா இத சாப்பிடு!" என்று கொடுத்துவிட்டு, வழக்கம்போல் தன் வைத்தியத்திற்கான கைவேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள்.
ஏதும் பேசாமல் அதைச் சாப்பிட்ட பின் அவளிடம் கேட்டேன், "நீங்க குடுத்தது என்னது பாட்டி?"
சித்தரத்தையின் மருத்துவ பலன்கள் (Sitharathai Uses / Sitharathai Benefits in Tamil)
சித்தரத்தை பொடி:
"அதான் சித்தரத்தை. அந்த அரத்தைய பொடியாக்கி 2-4 கிராம் எடுத்து, தேன் கூட கலந்து டெய்லி ரெண்டு வேளை சாப்பிட்டா, சளி கிளியெல்லாம் பறந்துடும்.
அரத்தையில் இரண்டு வகை:
அரத்தையில சிற்றரத்தை பேரரத்தைனு ரெண்டு வகை இருக்கு. ரெண்டுமே சளிக்கு நல்லதுதான்.
சித்தரத்தை கசாயம்:
நெஞ்சு சளி, கோழை, ஈளை, இருமல், நாட்பட்ட கபம்னு எல்லாத்தையும் குணமாக்குற சக்திவாய்ந்தது இந்த அரத்தை. அரத்தைய கசாயம் போட்டு குடிச்சா, நுரையீரல்-தொண்டை நோயெல்லாம் ஓடிப்போகும்.
இஞ்சி குடும்பத்தை சேர்ந்த இந்த அரத்தைய தட்டி, 350 மிலி வெந்நீர்ல 3 மணிநேரம் ஊற வச்சு, வடிகட்டி 22 மிலி – 44 மிலி தேன் கலந்து குடிச்சு வந்தாலும் சளி இருமலெல்லாம் சரியாகும்.”
பாட்டி சொல்லிக்கொண்டே தன் வாயில் ஒரு சிறுதுண்டு அரத்தையை போட்டு சுவைப்பதைப் பார்த்த என்னிடம், “இப்படி அரத்தையை வாயில போட்டு சுவைச்சாலும் தொண்டைக்கட்டு, வாந்தி, சளி, இருமலெல்லாம் சரியாகும்ப்பா…!” என்று பாட்டி அரத்தையின் பலன்களை சொல்லி முடிக்க, கொஞ்சம் அரத்தையை வாங்கிக்கொண்டு அப்படியே நடையைக்கட்டினேன்.
வாசலைத் தாண்டி செல்லும் முன் என்னை அழைத்த பாட்டி, “இன்னையில இருந்து சிம்ம கிரியா பயிற்சி செய்ய ஆரம்பிச்சிருப்பா…!” என்று வீட்டின் உட்புறத்திலிருந்து குரல்கொடுத்தாள்.