நில்... கவனி... சாப்பிடு! - பகுதி 2

சிறுவயதில் தேன் இருக்கும் பாத்திரத்தை யாருக்கும் தெரியாமல் எடுத்து ருசித்தவர்கள் கூட, வளர்ந்த பிறகு தேனை மறந்து விடுகிறார்கள். அது ஏதோ மருந்துப் பொருள் என்றே பலரும் எண்ணிக்கொள்கிறார்கள். ஆனால், தேன் ஒரு மகத்தான உணவு என்பது இக்கட்டுரையின் மூலம் முழுமையாய் விளங்குகிறது. என்னென்ன அற்புதங்கள் மறைந்துள்ளன இந்த தேனில்...?! தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்...

மனித ரத்தத்திற்கு நெருக்கமான தேன்!

இலக்கியங்களில் எப்போதும் திகட்டாத உவமையாய் அமைவது "தேன்". மருத்துவத்திலும் அதற்கு மகத்தான இடம் உண்டு. பூமியில் கண்டுபிடிக்கப்பட்ட உணவுகளிலேயே மனித ரத்தத்துக்கு மிக நெருக்கமான ஒரே உணவுப் பொருள், தேன்தான். ரசாயனத் தன்மையில் சிறிதளவு மாற்றம் செய்தாலே அது மனித ரத்தத்தின் தன்மையைப் பெற்றுவிடும்.

தினமும் ஒரு அவுன்ஸ் தேன் பருகினாலே, பெரிய அளவில் வித்தியாசத்தை ஏற்படுத்தும்.

இயற்கையின் வரப்பிரசாதம், தேன். மலர்களின் கருவறையில் பிறக்கிற தேன், தேனீக்களால் சேகரிக்கப்படுகிற உணவுப்பொருள். பூச்சிகளால் தயார் செய்யப்பட்டு மனிதனால் உட்கொள்ளப்படும் ஒரே உணவுப் பொருளும் தேன்தான்.

ஜானுகிருபாஸின் உணவு

கர்நாடகாவில் ஜானுகிருபாஸ் என்னும் பழங்குடியினருக்கு நிரந்தர உணவே தேன்தான். தலக்காடு வனச்சரகத்தில் வசிக்கிற அவர்களுக்கு மரமேறுவதுதான் வேலை. தினமும் 30 கி.மீ நடந்தாக வேண்டும். 40 மரங்கள் ஏறி இறங்க வேண்டும். இடையே சாப்பிட உணவு கட்டி எடுத்துச் செல்கிற பழக்கமெல்லாம் அவர்களுக்கு இல்லை.

பசித்தால், காணக்கிடைக்கிற தேன் கூட்டைக் கலைத்துத் தேனெடுத்துப் பருகுவார்கள். காலையில் 7 மணிக்கெல்லாம், மூங்கில் டம்ளர்களில் முக்கால் லிட்டர் வரை தேனைக் குடிக்கிறார்கள்.

கடுமையாய் உழைக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற உணவு தேன் என்பதற்கு அந்தப் பழங்குடியினர் வாழும் சாட்சி.

தினமும் தேன் சாப்பிட்டால் ஆச்சர்யப்படும் அளவுக்கு உங்கள் சக்திநிலை உயரும். தினமும் ஒரு அவுன்ஸ் தேன் பருகினாலே, பெரிய அளவில் வித்தியாசத்தை ஏற்படுத்தும். குறிப்பாய் அதிக வேலைப்பளு உள்ள நாளில் தேனைப் பருகிப்பாருங்கள். வித்தியாசத்தை நீங்களே உணர்வீர்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தேன், காலகாலமாக மனிதகுலத்தை மகிழ்வுற வைக்கிற இயற்கைக் கொடை. ஏறத்தாழ 2700 வருடங்களாக பல நோய்களுக்கு அது அருமருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பழங்காலத்திலிருந்தே தேன் சேகரித்தல் இருந்திருக்கிறது. பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே தேன் வேட்டை துவங்கியிருக்கலாம் என்கிறார் ஆராய்ச்சியாளர் வில்சன்.

தேனின் மருத்துவ பலன்கள்

ரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் அளவை தேன் அதிகரிக்கச் செய்யும். ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்வது மிக மிக அவசியமான ஆரோக்கியம். உடலில் உள்ள ஆக்ஸிஜன் அளவைப் பொறுத்துத்தான் உங்கள் திறன் உள்ளது. ரத்தத்திலுள்ள ஆக்ஸிஜன் குறைந்தால், செயல்திறனும் குறையும். ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகரித்தால், சுவாசம்கூட சீராகிவிடும்.

தினமும் தேன் பருகினால் உங்கள் செயல் திறன் முன்னெப்போதையும்விட உற்சாகமாக இருப்பதை உணர்வீர்கள்.

ஃப்ரக்டோஸ், க்ளுகோஸ் போன்றவை தேனில் அடக்கம். தேனில் கொழுப்புச் சத்து சிறிதும் இல்லை.

தேன் எல்லோருக்குமே ஏற்ற உணவு என்றாலும் பெண்களுக்கு மிகவும் ஏற்றது. ஆய்வின்படி 70% இந்தியப் பெண்கள் பல காரணங்களால் ரத்தச் சோகை நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு தேன் அற்புதமான மருந்து. தினமும் தேன் அருந்துங்கள்.

குழந்தைகளுக்குத் தினமும் தேன் கொடுத்து வளரச் செய்யுங்கள். அது அவர்கள் வருங்காலத்தை இனிக்கச் செய்யும்.

வெந்நீரில் தேனையும் மிளகையும் கலந்து பருகினால், ஆஸ்துமா பாதிப்பைச் சுலபமாகத் தள்ளிப் போடலாம்.

காதலர்களுக்கும் கவிஞர்களுக்கும் காலகாலமாய் தேன் தான் இனிமையான நினைவுகளுக்கான இதமான அடையாளம். மொழி, கலாச்சாரம், மதம், நம்பிக்கைகள் இவற்றில் இனிப்பின் அடையாளமாக தேன் எப்போதும் உருவகப்படுத்தப்படுகிறது. தேனைப் பற்றி சில நம்பிக்கைகள் உள்ளன. வெந்நீரில் கலந்து தேனைப் பருகினால், உடலில் கொழுப்புச் சத்து கரையும், குளிர் நீரில் தேனைக் கலந்து பருகினால், உடலில் கொழுப்புச் சத்து கூடும் என்றும் நம்பிக்கை உள்ளது.

ஆஸ்துமா உள்ளவர்களுக்கு தேன் மிக உகந்தது. அது உடலுக்குத் தேவையான உஷ்ணத்தை வழங்குகிறது. வெந்நீரில் தேனையும் மிளகையும் கலந்து பருகினால், ஆஸ்துமா பாதிப்பைச் சுலபமாகத் தள்ளிப் போடலாம். தொடர்ந்து இப்படிப் பருகுவதன் மூலம் முழுமையாக ஆஸ்துமாவிலிருந்து விடுபடவும் வாய்ப்புண்டு.

தாகத்தைத் தணிப்பதிலும் தேனின் பங்கு உண்டு. சிறிதளவு குளிர்ந்த நீரில் தேனைக் கலந்து குடித்தால் உடனே தாகம் தணியும்.

‘பார்த்தேன் ரசித்தேன்’ எனத் தொடங்கி ஒரு பாடல் முழுக்கத் தேனைப் பயன் படுத்தியிருப்பார் கவியரசு கண்ணதாசன். வாழ்க்கை முழுக்க தேனைப் பயன்படுத்தினால், பாடல் போல வாழ்வும் இனிக்கும்!

தேனை பயன்படுத்தும்போது தவிர்க்க வேண்டிய நடவடிக்கை...
  • தேனை அடுப்பில் வைத்து சமைக்கக்கூடாது. அப்படிச் செய்தால் அது விஷத்தன்மை பெற்றுவிடும். சிலர் சமைக்கவும் செய்கிறார்கள்.
  • பேக்கரித் தொழிலில் இது மிக அதிகம். அது நல்லதல்ல.
  • வெதுவெதுப்பான நீரில் மட்டுமே தேனைக் கலந்து பருகலாம். கொதிக்கும் நீரில் கலப்பது தவறு!

தேன் விற்கிற சிலர் அதில் சர்க்கரைப் பாகைக் கலந்து விற்றுவிடுகிறார்கள். அப்படியிருந்தால், அந்த பாட்டிலை 2 வாரத்துக்கு ஒரே இடத்தில் வைத்துவிடுங்கள். பாகு, பாட்டிலின் அடியில் தங்கிவிடும். மேலே உள்ள தேனை பயன்படுத்திக்கொள்ளலாம். தேன் தீர்ந்தவுடன் பாகையும் பயன்படுத்திக்கொள்ளலாம். சர்க்கரைப் பாகு ஆரோக்கியத்துக்குக் கெடுதல் தருவதல்ல. ஆனால், தேன் என்று சொல்லி உங்களை ஏமாற்றிவிட்டார்கள், அவ்வளவுதான்!

‘மோது பௌர்ணமி’ - இந்தியாவிலும் பங்களாதேஷிலும் புத்தமதத்தினரால் கொண்டாடப்படும் பண்டிகை. புத்தர் தம் சீடர்களுக்கு உபதேசம் செய்தபோது ஒரு குரங்கு அவருக்கு உண்ணத் தேன் எடுத்து வந்து தந்ததாகச் சொல்லப்படுகிறது. அதன் நினைவாக புத்த மதத் துறவிகளுக்கு அந்நாளில் தேன் கொடுக்கிறார்கள்!

உலகின் மிகப் பழைமையான உணவுகளில் ஒன்று தேன். காயங்களை ஆற்றவும் பழங்காலத்தில் தேன் பயன்படுத்தப்பட்டது. 20-ம் நூற்றாண்டில் ஆன்டிபயாடிக் மருந்துகள் வரத்தொடங்கியவுடன் காயங்களை ஆற்ற, தேனின் பயன்பாடும் குறையத் தொடங்கியது!

அடுத்த வாரம்...

இளநீர்-தேங்காய்.. இவற்றின் மகத்துவத்தை அறிந்துகொள்ள காத்திருங்கள் அடுத்த வாரம் வரை!


நில்... கவனி... சாப்பிடு! தொடரின் பிற பதிவுகள்