தென்னிந்தியாவில் உள்ள கோயம்புத்தூர் நகரத்திலிருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் ஈஷா யோக மையம் அமைந்துள்ளது. உள்நிலை வளர்ச்சிக்கான சக்திவாய்ந்த மையமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த பிரசித்திபெற்ற இடம், உலகம் முழுவதிலும் உள்ள பலதரப்பட்ட மக்களை ஈர்க்கிறது. யோகாவின் நான்கு முக்கிய பாதைகளான ஞானம் (அறிவு), கர்மா (செயல்), க்ரியா (சக்தி) மற்றும் பக்தி (அர்ப்பணிப்பு) ஆகியவற்றை ஒவ்வொரு தனிமனிதருக்கும் ஏற்ப, குறிப்பிட்ட விதமாக வழங்குவதில் தனித்துவம் வாய்ந்ததாகவும் இவ்விடம் உள்ளது.

உள்ளடக்கம்
1. ஈஷாவை வந்தடையும் வழிகள்
2. காண வேண்டிய இடங்கள்
2.1 தியானலிங்கம்
2.2 ஆதியோகி - யோகத்தின் மூலம்
2.3 யோகேஷ்வர லிங்கம் மற்றும் சப்தரிஷிகள்
2.4 லிங்கபைரவி
2.5 தீர்த்தகுண்டங்கள்
2.6 நாகா சந்நிதி
2.7 நந்தி
2.8 திரிமூர்த்தி சிற்பங்கள்
2.9 ஸ்பந்தா ஹால்
2.10 ஆதியோகி ஆலயம்
2.11 மாட்டு மனை
2.12 சர்ப்ப வாசல்
2.13 மலை வாசல்
3. அனுபவித்து உணர
3.1 நாத ஆராதனை
3.2 ஆதியோகி திவ்ய தரிசனம்
3.3 பஞ்சபூத கிரியா
3.4 அமாவாசை மற்றும் பௌர்ணமி அர்ப்பணிப்புகள்
3.5 பௌர்ணமி அபிஷேகம் & லிங்கபைரவி ஊர்வலம்
3.6 நவராத்திரி
3.7 யக்ஷா
3.8 மஹாசிவராத்திரி
4. கற்றுக்கொள்ள
4.1 இலவச யோகா வகுப்புகள்
4.1.1 ஓம்கார தீட்சை
4.1.2 உப-யோகா
4.1.3 ஈஷா கிரியா
4.1.4 பயிற்சி திருத்தங்கள்
4.2. யோகா நிகழ்ச்சிகள்
4.3 ஹட யோகா ஆசிரியர் பயிற்சி
4.4 சாதனபாதா
4.5 சத்குரு அகாடமி - தலைமை, மேலாண்மை மற்றும் செயல் திட்டம்
4.5.1 இன்சைட்: வெற்றியின் இரகசியம்
5. தன்னார்வத் தொண்டு
6. உணவகங்கள்
6.1 பெப்பர் வைன் உணவகம்
6.2 வெள்ளியங்கிரி உணவகம்
7. தங்குமிடம்
7.1. தங்கும் அறைகள்
7.2 நாளந்தா ஹால்
7.3 பிற நாட்டு பார்வையாளர்கள்
8. ஷாப்பி
8.1 ஈஷா லைஃப் ஸ்டோர்
9. ஆரோக்கிய நிகழ்ச்சிகள்

ஈஷாவை வந்தடையும் வழிகள்

ஈஷா யோக மையம் தமிழ்நாட்டில் கோயம்புத்தூருக்கு மேற்கே 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. தென்னிந்தியாவின் முக்கிய தொழில் நகரமான கோயம்புத்தூர், விமானம், ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்துகள் மூலம் சிறப்பாக இணைக்கப்பட்டுள்ளது. முக்கிய விமான நிறுவனங்கள் சென்னை, டெல்லி, மும்பை மற்றும் பெங்களூருவிலிருந்து கோவைக்கு தினசரி விமானங்களை இயக்குகின்றன. இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் ரயில் சேவைகள் உள்ளன. கோயம்புத்தூருக்கும் ஈஷா யோக மையத்திற்கும் இடையே நேரடி பேருந்துகள் உள்ளன (கால அட்டவணையைக் காணுங்கள்). விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்திலிருந்து டாக்சிகளை முன்பதிவு செய்யமுடியும். மாற்றாக, நீங்கள் யோக மையத்தின் 24 மணிநேர பயண உதவி மையத்தைத் தொடர்புகொண்டு, மையத்திற்கு ஒரு டாக்ஸியை முன்பதிவு செய்யலாம்.

காண வேண்டிய இடங்கள்

தியானலிங்கம்

தியானலிங்கம், Dhyanalinga

"தியானலிங்கத்தின் வளையத்திற்குள் ஒருசில நிமிடங்கள் மௌனமாக அமர்ந்திருப்பதே, தியானம் பற்றி ஏதும் அறியாதவரையும் ஆழ்ந்த தியான நிலையை உணரச்செய்யும்." - சத்குரு

சமஸ்கிருத மொழியில் “தியானா” என்றால் தியானம் என்றும், “லிங்கா” என்றால் வடிவம் என்றும் பொருள் படும். யோகியும், தன்னை உணர்ந்த ஞானியுமான சத்குரு அவர்களால் மூன்று வருட தீவிர பிராண பிரதிஷ்டை (உயிர்சக்திகளைப் பயன்படுத்தி பிரதிஷ்டை செய்யப்படும் முறை) க்குப் பின் நிறுவப்பட்டது. கடந்த ஆயிரமாயிரம் வருடங்களில் முதன்முதலாக, ஏழு சக்கரங்களும் அதன் உச்சநிலையில் சக்தியூட்டப்பட்டு, சக்தி சிதைவுறாமல் இருப்பதற்காக பூட்டப்பட்டு, முழுமையாய் நிறைவு செய்யப்பட்ட ஒன்றாக தியானலிங்கம் உள்ளது.

தீவிரமான அதே சமயம் சூட்சுமமான தன் சக்தி சூழலினால் ஒருவரை உள்நிலை அமைதி மற்றும் ஆழ்ந்த அசைவற்ற நிலைக்கு இட்டுச்சென்று, அவர்தம் உயிரின் அடிப்படைத் தன்மையையே வெளிக்கொணர்கிறது. உயிருள்ள ஒரு குருவாக விளங்கும் தியானலிங்கம், பிரமாதமான சக்தி மூலமாகவும், ஞானம் மற்றும் விடுதலைக்கான வாசலாகவும் திகழ்கிறது.

இந்த தனித்துவமிக்க சக்தி உருவம் தூண்கள் அற்ற, 25000 செங்கற்களால் கட்டப்பட்ட ஒரு குவிமாடத்தினுள் அமைந்துள்ளது.

தியானலிங்க வளாகத்தினுள் நுழையும் முன், பார்வையாளர்கள் 17-அடி ஒற்றை வெள்ளை கிரானைட் கல்லினால் ஆன, சர்வ தர்ம ஸ்தம்பத்தை காண்கிறார்கள். அதன் பக்கச்சுவர்களில் உலகின் ஒன்பது முக்கிய மதங்களின் சின்னங்கள் பொறிக்கப்பட்டு, உலகத்தினர் அனைவரையும் வரவேற்கும் விதமாக இது நிறுவப்பட்டுள்ளது.

கல் நுழைவாயில் அல்லது தோரணம் பிரதான நுழைவாயிலாக செயல்படுகிறது. தோரண வாயிலுக்குப் பின் மனதின் மூன்று குணங்களான - தமஸ், ரஜஸ் மற்றும் சத்வத்தை குறிக்கும் விதமாக மூன்று வழக்கத்திற்கு மாறான உயரம்மிக்க வாயிற்படிகள் எழுப்பப்பட்டுள்ளன.

இந்த படிகளில் ஏறி, ஒருவர் தியானலிங்கத்தை நோக்கிச் செல்லும் உட்பிரகாரத்திற்குள் நுழைகிறார். இடதுபுறத்தில் புகழ்பெற்ற யோக சூத்திரங்களின் ஆசிரியரான பதஞ்சலி முனிவரின் 11-அடி சிலை உள்ளது, வலதுபுறத்தில் தியானலிங்கத்தின் பெண் தெய்வமான வனஸ்ரீ, ஒரு அரச மரத்தின் சிற்ப வடிவமாக சன்னதி கொண்டுள்ளாள். குவிமாடத்தின் நுழைவாயில் வரை, ஆறு கலைச் சிற்பங்கள் கொண்ட கற் பதாகைகள் தியானலிங்க உட்பிரகார நடைபாதையின் இருபுற சுவர்களிலும் பதிக்கப்பட்டுள்ளன. இவை தென்னிந்தியாவை சேர்ந்த, ஞானோதயம் பெற்ற ஆறு சிவயோகிகளின் கதைகளை விளக்குகின்றன.

தரிசன நேரம்: காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை

தியானலிங்கம், Dhyanalinga

ஆதியோகி யோகத்தின் மூலம்

ஆதியோகி, Adiyogi

"ஆதியோகி உச்சபட்ச நல்வாழ்வுக்கும் முக்திக்குமான வாசல்." -சத்குரு

15,000 ஆண்டுகளுக்கு முன்பு, அனைத்து மதங்களும் தோன்றுவதற்கு முன், உலகின் முதல் யோகியான ஆதியோகி யோக அறிவியலை தனது ஏழு சீடர்களான சப்தரிஷிகளுக்கு பரிமாறினார். 

மனிதர்கள் தங்கள் எல்லைகளைக் கடந்து, தங்கள் வாழ்வின் உச்சபட்ச திறனை அடைவதற்கான 112 வழிகளை ஆதியோகி விளக்கினார். ஆதியோகியின் அர்ப்பணிப்புகள் ஒவ்வொன்றும் தனிமனித மாற்றத்திற்கான கருவிகள், ஏனெனில் தனிமனித மாற்றம்தான் உலக மாற்றத்திற்கான ஒரே வழி. மனித குலத்திற்கான அவரின் அடிப்படைச் செய்தி, மனித நல்வாழ்விற்கும் விடுதலைக்கும் “உள்நோக்கி திரும்புவதே ஒரே வழி” என்பதே ஆகும்.

ஈஷா யோக மையத்தில் தெய்வீக இரவான மஹாசிவராத்திரியன்று, ஆதியோகி திருமுகத்தை மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைத்தார்.

சத்குருவால் வடிவமைக்கப்பட்ட, ஆதியோகியின் திருமுகம், 112 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இது ஒருவர் நல்வாழ்வையும் தனது உச்சபட்ச தன்மையையும் அடைவதற்கு ஆதியோகி வழங்கிய 112 வழிமுறைகளைக் குறிப்பதாக அமைந்துள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆதியோகி மனிதகுலத்திற்கு வழங்கிய உள்நிலை மாற்றத்திற்கான இந்த கருவிகள், இன்றும் நமக்கு பொருந்தக் கூடியவையாக மட்டுமல்லாமல், அவசியமாகவும் உள்ளன. ஆதியோகியின் 112 அடி திருமுகம் நம் அனைவருக்கும் ஒரு சக்திவாய்ந்த நினைவூட்டலாகவும் உத்வேகமாகவும் உள்ளது. மேலும் இது, உலகின் மிகப்பெரிய மார்பளவு சிற்பம் என்ற அடிப்படையில் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதோடு, Incredible India சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

தரிசன நேரம்: காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை

யோகேஷ்வர லிங்கம் மற்றும் சப்தரிஷிகள்

யோகேஷ்வர லிங்கம் மற்றும் சப்தரிஷிகள், Yogeshwar Linga and Saptarishis

ஆதியோகிக்கு அருகில் அமையப்பெற்றுள்ள யோகேஷ்வர லிங்கம், மனித உடல் மண்டலத்திலுள்ள ஐந்து முக்கிய சக்கரங்களின் ஒரு வெளிப்பாடாக சத்குருவால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. யோகேஷ்வர லிங்கம், ஆன்மீக ஒழுக்க நெறிமுறைகளும் உற்சாகம் பொங்கும் பரவசமும் கலந்த ஒரு கலவையாகும். யோகேஷ்வர லிங்கத்தின் இருப்பினால், ஆதியோகி நம்முடன் வாழும் ஒருவராக மாறியுள்ளார். 

லிங்கத்தின் பின்பாக சப்தரிஷிகளின் சிற்ப வடிவங்கள் மிக நேர்த்தியாக கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. அகஸ்தியர், அத்ரி, அங்கிரர், பிருகு, கௌதமர், வசிஷ்டர் மற்றும் காஷ்யபர் ஆகிய சிவனின் ஏழு சீடர்களான சப்தரிஷிகள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு யோக நிலைகளிலும் குறிப்பிட்ட முத்திரைகளுடனும் இருப்பதாக இந்த சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.

யோகேஷ்வர லிங்கத்திற்கு சிறப்பு அர்ப்பணிப்புகள்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை

லிங்கபைரவி

லிங்கபைரவி, Linga Bhairavi

“பைரவியின் அருளை சம்பாதிக்கும் ஒருவர், வாழ்க்கை – மரணம், ஏழ்மை அல்லது தோல்வி பற்றிய கவலையுடனோ பயத்துடனோ வாழத் தேவையில்லை. தேவியின் அருளை மட்டும் அவர்கள் சம்பாதித்தால், நல்வாழ்வு என்று மனிதர்கள் கருதுபவை அனைத்தும் அவர்களுடையதாகும்.” - சத்குரு

லிங்கபைரவி தேவி, தெய்வீகப் பெண்தன்மையின் சக்திமிக்க ஒரு வெளிப்பாடு. லிங்க வடிவில் எட்டு அடி உயரத்தில் தனித்தன்மையுடன் அமையப்பெற்றுள்ள தேவி, தாய்மையின் பரிபூரண அம்சமாக திகழ்கிறாள். சக்திமிக்கவளாகவும் அனைத்தையும் அரவணைக்கும் தன்மையுடனும் தேவி அருள்பாலிக்கிறாள்.

பிராண பிரதிஷ்டை மூலம் சத்குரு அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட தேவி உறுதித்தன்மை, ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக மூன்றரை சக்கரங்களைத் தன்னுள்ளே கொண்டிருக்கிறாள். உக்கிரமும் கருணையும் ஒருசேர தன்னுள் கொண்டுள்ள தேவி, தனது பக்தர்களுக்கு உடல்நிலை, பொருள்நிலை மற்றும் மிக முக்கியமாக, ஆன்மீக நிலையிலான நல்வாழ்வின் அனைத்து அம்சங்களையும் அருள்செய்து காக்கிறாள்.

தேவியின் அளப்பரிய அருளினைப் பெற்று பக்தர்கள் தங்கள் வாழ்க்கையில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் துணைநிற்கும் விதமாக, பல்வேறு அர்ப்பணங்களும் சடங்குகளும் இங்கே வழங்கப்படுகின்றன.

தரிசன நேரம்: காலை 6:30 முதல் மதியம் 1:20 வரை; மாலை 4:20 முதல் இரவு 8:20 வரை

அபிஷேக நேரங்கள்: காலை 7:40, மதியம் 12:40, இரவு 7:40

தீர்த்தகுண்டங்கள்

இந்தியாவில், ஒரு புனிதமான இடத்திற்குள் நுழைவதற்கு முன், ஒருவரின் கிரகிக்கும் திறனை அதிகரிக்க முழு உடலையும் ஈரமாக்கிக்கொள்வது ஒரு பாரம்பரியமாகும். 

சூரியகுண்டம் மற்றும் சந்திரகுண்டம்

சூரியகுண்டம், Suryakund

சந்திரகுண்டம், Chandrakund

இரண்டு தீர்த்தகுண்டங்கள் ஈஷா யோக மையத்தில் உள்ளன: ஆண்களுக்கான சூரியகுண்டம் மற்றும் பெண்களுக்கான சந்திரகுண்டம், இவை பிரதிஷ்டை செய்யப்பட்ட ரசலிங்கங்களால் சக்தியூட்டப்பட்ட நீர்நிலைகளாகும். இந்த சக்திமிக்க நீரில் மூழ்கி எழுவது, ஒருவரின் சக்திநிலையில் ஏற்றத்தாழ்வுகளை சீர்செய்கிறது, ஒருவரின் உடல் மற்றும் மன நலனை மேம்படுத்துகிறது. மிக முக்கியமாக, தீர்த்தகுண்டங்கள் தியானலிங்கத்தின் சக்தியதிர்வுகளை கிரகிக்கக்கூடிய நம் திறனை மேம்படுத்தும் வகையில், தயார்ப்படுத்தும் கருவிகளாக செயல்படுகின்றன.

நேரம்: இரண்டு தீர்த்தகுண்டங்களும் காலை 7:30 முதல் இரவு 8:00 மணி வரை திறந்திருக்கும்.

நாகா சந்நிதி

நாகா சந்நிதி, Naga

சூரியகுண்டத்தின் முன் பக்கத்தில் நாகா சந்நிதி அமைந்துள்ளது. இப்புனித சர்ப்பம் தன் அசைவின்மை மற்றும் அசாதாரண உணர்திறன் ஆகியவற்றால் ஆன்மீக செயல்பாட்டில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. குறிப்பாக ஆன்மீகத் தேடலில் நாட்டம் உள்ளவர்கள் நாகாவின் அருளைப்பெற ஒரு நாளின் எந்த நேரத்திலும் மலர்கள் மற்றும் தூபங்களை சமர்ப்பித்து அவரின் அருளை வேண்டலாம்.

நந்தி

நந்தி, Nandi

தியானலிங்கத்தின் நுழைவாயிலில் அமர்ந்திருக்கும் 15 அடி உயர நந்தி, உலகிலேயே மிகப்பெரிய உலோகத்தாலான நந்தியாகும். உலோகத்தினால் செதுக்கப்பட்டு, புனித சாம்பல், மூலிகைகள் மற்றும் பிற பொருட்களின் தனித்துவமான கலவையால் நிரப்பப்பட்டு, இது ஒரு சிறப்பு வகையான சக்தியை வெளிப்படுத்துகிறது. நந்தி என்பது வரையறையற்ற காத்திருப்பின் அடையாளம், இன்றியமையாத ஏற்றுக்கொள்ளும் தன்மையின் குணம்.

திரிமூர்த்தி சிற்பங்கள்

திரிமூர்த்தி சிற்பங்கள், Trimurti panel

ஒரே கல்லில் வடிக்கப்பட்டுள்ள திரிமூர்த்தி சிலைகள், மனிதனின் உள்நிலை பரிமாணங்களின் அடிப்படை அம்சங்களான “ருத்ரா, ஹரா மற்றும் சதாசிவா” எனும் மூன்று நிலைகளை குறிக்கும்விதத்தில் அமையப்பெற்றுள்ளது. ருத்ரா என்பது இருப்பின் மிகத்தீவிரமான நிலை. ஹரா என்பது குழந்தைத் தனத்தைப் போன்றதொரு தியானநிலை மற்றும் சதாசிவா என்பது நிலையான ஆனந்தத்தில் இருக்கும் நிலையைக் குறிக்கிறது.

ஸ்பந்தா ஹால்

ஸ்பந்தா ஹால், Spanda Hall

ஸ்பந்தா ஹால் என்பது, ஒரு தியான மண்டபம் மற்றும் நிகழ்ச்சிகள் நடக்கும் அரங்கம் ஆகும். வெள்ளைப் பளிங்குத் தளம் மற்றும் தூண்கள் இன்றி நிற்கும் கூரையுடன் அமைந்துள்ளது. பார்வையைக் கவரும் விதமாக இந்த இடத்தின் ஆதிக்கம் செலுத்தும் அம்சமாக இருப்பது, இயற்கையான காய்கறி சாயங்கள் மற்றும் மண் சாறுகளை மட்டுமே பயன்படுத்தி வரையப்பட்ட, ஒரு யோகியின் வாழ்க்கையை சித்தரிக்கும் நேர்த்தியான சுவரோவியம் ஆகும். 140 x 12 அடி அளவுள்ள இந்த தலைசிறந்த கலைப் படைப்பு உலகிலேயே மிகப்பெரிய சுவரோவியமாகும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஆதியோகி ஆலயம்

ஆதியோகி ஆலயம், Adiyogi Alayam

ஆதியோகி ஆலயம் என்பது பாரம்பரிய யோக அறிவியலை அதன் அனைத்து மகிமையோடும் தூய்மையோடும் புதுப்பித்து வழங்க, சத்குரு அவர்களால் பிரத்யேகமாக பிரதிஷ்டை செய்யப்பட்டு கட்டமைக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி அரங்கம் ஆகும். ஆலயத்தின் உள்ளே ஆதியோகி, லிங்க வடிவத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். இந்த பிரதிஷ்டை செய்யப்பட்ட வடிவத்தின் ஆற்றல் யோக அறிவியலை தன்னுள் ஆராய்பவர்களின் தேடலுக்கு எரிபொருளாய் அமைகிறது. 

ஆதியோகி ஆலயம் எனும் இந்த உயிரோட்டமிக்க அரங்கத்தில் ஈஷா ஹடயோகா பள்ளியின் ஆசிரியர் பயிற்சி வகுப்பு நிகழும். இது ஆண்டுதோறும் நடத்தப்படும் 21 வார தீவிர நிகழ்ச்சியாகும். இதில் உலகெங்கிலும் இருந்து வந்து பங்கேற்பாளர்கள் நமது பாரம்பரிய ஹடயோகாவைக் கற்பிக்கப் பயிற்சி பெறுகின்றனர். அதுமட்டுமன்றி இங்கே, அறிமுக நிலை வகுப்புகள் முதல் சம்யமா உள்ளிட்ட மேல்நிலை வகுப்புகள் வரையும் நடைபெறுகிறது. சம்யமா என்பது 8 நாட்கள் நடைபெறும் மௌன நிகழ்ச்சியாகும், இது பங்கேற்பாளர்கள் தங்கள் விழிப்புணர்வின் உச்சங்களைத் தொடவும், தியானத்தின் வெடித்தெழும் நிலைகளை அனுபவித்து உணரவும் உதவுகிறது.

மாட்டு மனை

 மாட்டு மனை, Gaushala

இந்திய கலாச்சாரத்தில் செல்வம், வலிமை, உறுதி, தன்னலமின்றி கொடுத்தல், மற்றும் வளமான வாழ்க்கை ஆகியவற்றின் அடையாளமாக பசு மதிக்கப்படுகிறது. ஈஷா யோக மையத்தில் உள்ள கோசாலைகள், நாட்டு மாடுகளைப் பாதுகாப்பதில் ஒரு முக்கியமான படியாக திகழ்கின்றன. ஈஷா யோக மையத்தில் வாழும் ஆன்மீக ஆர்வலர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இந்த பசுக்களின் பால் ஊட்டமளிக்கிறது. பழங்காலத்திலிருந்தே மிகவும் புனிதமான சடங்குகளில் ஒன்றாக கருதப்படும் Gau Seva வில் பார்வையாளர்கள் பங்கேற்கலாம்.

சர்ப்ப வாசல்

சர்ப்ப வாசல், Sarpa vasal

இவ்வாயிலின் மையத் தூணில் ஒரு நாகப்பாம்பின் அழகிய சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இது பாம்பின் உயரிய உணர்திறனையும் ஆன்மீகத் தேடலில் உள்ளவர்களுக்கு அதன் முக்கியத்துவத்தையும் குறிக்கிறது.

மலை வாசல்

மலை வாசல், Malai vasal

இந்த நுழைவாயில் மீது 235 டன் எடையுள்ள ஒரு பெரிய பாறை அமர்ந்துள்ளது. சத்குருவால் இப்பாறை தேர்ந்தெடுக்கப்பட்ட பின், ஈஷா தன்னார்வலர்கள் இதனை 400 கி.மீ தொலைவுக்கு மேல் இடம்பெயர்த்துக் கொண்டுவந்து, வாயிலின் மீது நிலைநிறுத்துவதற்கு, ஒன்றரை மாத காலம் எடுத்துக்கொண்டது.

அனுபவித்து உணர

நாத ஆராதனை

நாத ஆராதனை, Nada aradhana

நாத ஆராதனை என்பது தியானலிங்கத்திற்கு ஒலிகளால் செய்யப்படும் ஓர் அர்ப்பணிப்பு. குரலிசை, இசையெழுப்பும் கிண்ணங்கள், டிரம்ஸ் மற்றும் தியானலிங்கத்தின் சக்திகளை நீங்கள் சிறப்பாக கிரகிக்க உதவும் பிற இசைக்கருவிகளின் ஒலிக் கலவைகளை இது கொண்டிருக்கும். இது தியானலிங்கத்தின் சக்தியை உணரும் ஒருவரின் தன்மையை மேம்படுத்துகிறது.

இந்த அர்ப்பணம் ஒரு நாளைக்கு இரண்டு முறை காலை 11:50 முதல் 12:10 மணி வரையிலும், மாலை 5:50 முதல் 6:10 மணி வரையிலும் நடைபெறுகிறது. இந்த நேரங்கள் யோக மரபில் சாந்தியா காலங்களாக பார்க்கப்படுகின்றன. சாந்தியா காலம் என்பது இயற்கை குறிப்பிட்ட மாற்றங்களுக்கு உட்படும் காலமாகும். இச்சூழலில் அருளை ஏற்றுக்கொள்ளும் தன்மை ஒருவருக்கு மேலும் அதிகரிக்கிறது.

ஆதியோகி திவ்ய தரிசனம்

ஆதியோகி திவ்ய தரிசனம், Adiyogi Divya Darshanam

ஆதியோகி திவ்ய தரிசனம் என்பது 112 அடி ஆதியோகியின் மீது நிகழ்த்தப்படும் 14 நிமிட ஒளிப்படக் காட்சியாகும். சத்குருவின் குரலில் ஆதியோகியைப் பற்றிய வர்ணனைகளுடன், மனங்களை ஈர்க்கும் இந்த காட்சி மனிதகுலத்திற்கு ஆதியோகியின் பங்களிப்பையும், அர்ப்பணிப்புகளையும் சித்தரிப்பதாக உள்ளது.

நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும் இரவு 7:20 மணிக்கு நடைபெறுகிறது. இலவசமாக வழங்கப்படும் இந்நிகழ்ச்சிக்கு முன்பதிவும் தேவையில்லை.

பஞ்சபூத கிரியா

பஞ்சபூத கிரியா, Pancha Bhuta Kriya

உடல் உட்பட அனைத்து படைப்புகளுக்கும் அடிப்படையானது பஞ்ச பூதங்கள் - நிலம், நீர், காற்று, நெருப்பு மற்றும் ஆகாயம். பஞ்சபூத கிரியா செயல்முறை பூதசுத்தி எனப்படும் யோக வழிமுறையைப் பயன்படுத்துகிறது. அதாவது பஞ்சபூதங்களை சுத்திகரித்து, உடல் மற்றும் மனதின் ஒட்டுமொத்த நல்வாழ்வை உறுதிசெய்தல் என்பது இதன் பொருள். இது குறிப்பாக, பலவீனமான மற்றும் சமநிலையற்ற உடலமைப்பு, உளவியல் ஸ்திரமின்மை, தூக்கமின்மை மற்றும் தொடர்ச்சியான பயம் ஆகியவை உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒருவர் தன் லட்சியங்களை நிறைவேற்றுவதற்கும் உறுதுணையாக இருக்கிறது.

பஞ்சபூத கிரியா ஒவ்வொரு மாதமும் சிவராத்திரியன்று தியானலிங்க வளாகத்திலும் ஆன்லைனிலும் வழங்கப்படுகிறது (முன்பதிவு அவசியம்).

அமாவாசை மற்றும் பௌர்ணமி அர்ப்பணிப்புகள்

அமாவாசை மற்றும் பௌர்ணமி அர்ப்பணிப்புகள், Amavasya and Pournami Offerings

அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் மனித உடலமைப்பில் இயற்கையாகவே சக்திகள் மேலெழும்புகின்றன. இதன் விளைவாக, ஆன்மீகத் தேடலில் உள்ளவர்களுக்கு அவை முக்கியத்துவம் வாய்ந்த நாட்களாகக் கொண்டாடப்படுகின்றன. இந்த இரண்டு நாட்களில், தியானலிங்கத்தின் மீது பால் அல்லது ஜலம் (தண்ணீர்) அபிஷேகம் செய்யும் பாக்கியத்தை நாம் பெறுகிறோம். பால் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், தண்ணீர் மதியம் 1 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் அர்ப்பணிக்கப்படும்.

பௌர்ணமி அபிஷேகம் மற்றும் லிங்கபைரவி ஊர்வலம்

லிங்கபைரவி ஊர்வலம், Linga Bhairavi Procession

ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் லிங்கபைரவி தேவிக்கு விரிவான ஒரு மஹாஅபிஷேகம் நிகழும். இது அற்புதமான பௌர்ணமி பூஜையின் ஒரு பகுதியாக, உயிரோட்டமிக்க நடனம் மற்றும் இசை அர்ப்பணிப்புடன் கொண்டாடப்படுகிறது. ஒருவர் தன் குடும்பத்தின் நல்ஆரோக்கியம், வெற்றி, செழுமை மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்காக இந்த புனிதமான பௌர்ணமி அபிஷேகத்தில் கலந்துகொள்ளலாம்.

பூஜையைத் தொடர்ந்து லிங்கபைரவி உற்சவமூர்த்தியின் (தேவியின் பிரதிஷ்டை செய்யப்பட்ட வடிவம்) ஊர்வலம் நடைபெறுகிறது. தியானலிங்கத்தை நோக்கி ஒரு கம்பீரமான ஊர்வலத்தை தேவி மேற்கொள்கிறாள். அங்கே, ஓர் சக்திவாய்ந்த மஹாஆரத்தியும் பிரமிக்க வைக்கும் நெருப்பு நடனமும் அர்ப்பணிக்கப்படுகிறது.

நவராத்திரி

நவராத்திரி, Navaratri

நவராத்திரி என்பது தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒன்பது சக்திவாய்ந்த இரவுகள். பக்தர்கள் நேரிலும் ஆன்லைனிலும் பல புனிதமான நவராத்திரி அர்ப்பணங்களை செய்து தேவியின் அருளை வேண்டலாம். 11 அர்ப்பணங்களின் ஒரு தொகுப்பான தேவி அபிஷேகமும் இதில் அடங்கும்.

இது பக்தர்கள் தங்கள் மற்றும் தங்களின் அன்புக்குரியவர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்காக நன்றி தெரிவிக்கும் ஒரு புனித காலம் ஆகும். 

யக்ஷா

யக்ஷா, Yaksha

மேடையில் அரங்கேறி நிகழ்த்தக்கூடிய இந்திய கலைகளின் தனித்துவம், தூய்மை மற்றும் பன்முகத்தன்மையைப் பாதுகாத்து, மேம்படுத்தும் முயற்சியில், ஈஷா யோக மையம் ஆண்டுதோறும் மூன்று நாட்கள் திருவிழாவான யக்ஷாவை நடத்துகிறது. உலகப் புகழ்பெற்ற கலைஞர்கள் நிகழ்த்தும் இந்தியப் பாரம்பரிய இசை மற்றும் நடனங்களின் இந்நிகழ்ச்சி, இந்தியப் புராணங்களில் உள்ள வானுலக உயிர்களான யக்‌ஷர்களின் பெயரால் அழைக்கப்படுகிறது.

இந்த பழங்கால கலைகளைப் பார்க்கவும், போற்றிப் பாராட்டவும் சிறந்த கலைஞர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு ஒரு பொதுவான தளத்தை யக்ஷா வழங்குகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி/மார்ச் மாதங்களில் நடைபெறும், மஹாசிவராத்திரி திருவிழாவின் முழு இரவுக் கொண்டாட்டங்களுடன் நிறைவடைகிறது.

மஹாசிவராத்திரி

மஹாசிவராத்திரி, Mahashivaratri

ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு முந்தைய நாள் சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் குறிப்பாக மாசி மாதம் (பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில்) வரும் சிவராத்திரி மகத்துவமிக்கதாகக் கருதப்படுவதுடன், மஹாசிவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது.

மஹாசிவராத்திரியின் தனித்துவமிக்க கிரக நிலைகள் மனித உடல் மண்டலத்தில் இயற்கையான ஒரு சக்தி எழுச்சியை ஏற்படுத்துகிறது. இரவு முழுவதும் விழித்திருந்து, முதுகெலும்பு நிமிர்ந்த நிலையில் வைத்திருப்பவருக்கு, இந்த இரவு மகத்தான உடல் மற்றும் ஆன்மீக நன்மைகளை வழங்குகிறது.

ஈஷாவின் மஹாசிவராத்திரி உலகின் மிகப்பெரிய மற்றும் அதிகம் பார்க்கப்பட்ட கொண்டாட்டமாக உருவெடுத்துள்ளது. Grammys and the Super Bowl நிகழ்ச்சிகளைவிட அதிகமாக ஆன்லைன் பார்வையாளர்களும் லட்சக்கணக்கானோர் நேரிலும் கலந்துகொள்கின்றனர். சத்குருவின் வெடித்தெழச் செய்யும் வழிகாட்டுதல் தியானங்கள், சொற்பொழிவுகள், இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள், பிரமிக்க வைக்கும் ஆதியோகி திவ்ய தரிசனம் ஆகியவை இந்த சக்திமிக்க இரவில் அனைவரும் விழித்திருக்கவும் பங்கேற்கவும் மற்றும் அதன் பலன்களை அறுவடை செய்யவும் ஊக்கம் தருகின்றன.

கற்றுக்கொள்ள

இலவச யோகா வகுப்புகள்

ஈஷா யோக மையத்திற்கு வரும் பார்வையாளர்கள் தினமும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இலவச யோகா வகுப்புகளில் கலந்துகொண்டு தங்கள் அனுபவத்தை ஆழப்படுத்திக்கொள்ளலாம்.

ஓம்கார தீட்சை

ஓம்கார தீட்சை, Aumkar Initiation

இந்த வகுப்பு, காலவரையறை அற்ற மற்றும் சக்திவாய்ந்த "ஓம்" மந்திரம் பற்றிய அறிமுகத்தை நமக்கு வழங்குகிறது. இந்த எளிய தியானம் ஒருவரின் உடல் மற்றும் மன கட்டமைப்பை வலுப்படுத்தவும், தொடர்ந்து பயிற்சி செய்யும்போது மாபெரும் சமநிலை மற்றும் நல்வாழ்வைக் கொண்டுவரவும் உதவும்.

உப-யோகா

உப-யோகா, Upa Yoga

மூட்டுகளிலும், தசைகளிலும் மற்றும் சக்தி நிலையிலும் செயல் ஊக்கம் தந்து, முழு உடலையும் இலகுவாக்கும் எளிய மற்றும் சக்திவாய்ந்த பயிற்சிகளைக் கற்றுக்கொள்ளுங்கள். புதிதாக யோகா கற்பவர்களுக்கு இது ஒரு நல்ல தொடக்கப் புள்ளியாகும், மேலும் இதை மற்ற யோகப் பயிற்சிகளுக்கான தயார்படுத்துதல் பயிற்சியாகவும் பயன்படுத்தலாம்.

ஈஷா கிரியா

ஈஷா கிரியா, Isha Kriya

சத்குரு அவர்களால் உருவாக்கப்பட்ட 12 நிமிட வழிகாட்டலுடனான தியானம். ஈஷா கிரியாவை தினமும் பயிற்சி செய்யும்போது,​​ ஆரோக்கியம், சுறுசுறுப்பு, அமைதி மற்றும் நல்வாழ்வைக் கொண்டுவர உதவுகிறது. இது நவீன வாழ்க்கையின் பரபரப்பான வேகத்தோடு பீடுநடை போட உதவும் ஒரு சக்திவாய்ந்த கருவியாகும்.

பயிற்சி திருத்தங்கள்

பயிற்சி திருத்தங்கள், Practice Corrections

ஈஷா யோகா நிகழ்ச்சியை நிறைவு செய்துவரும் பார்வையாளர்களுக்கு, ஷாம்பவி மஹாமுத்ரா கிரியா பயிற்சியில் திருத்தங்கள் ஆங்கிலத்தில் தினமும் வழங்கப்படுகின்றன.

யோகா நிகழ்ச்சிகள்

ஈஷா மையத்தில் ஈஷா யோகா நிகழ்ச்சிகள் ஆண்டு முழுவதும் வழங்கப்படுகின்றன. மேலும், ஆன்லைனில் ஈஷா யோகா வகுப்பு தொடர்ந்து நடைபெறுகிறது. நீங்கள் 4 நாட்கள் இங்கே வந்து தங்கியிருந்து Inner Engineering Retreatல் பங்கேற்று அனுபவித்து உணரலாம். இது உங்கள் உள்நிலை வளர்ச்சி மற்றும் அக ஆய்வுக்கான பல வாய்ப்புகளை வழங்குகிறது. மேலும் பாவ-ஸ்பந்தனா, ஹடயோகா, ஷூன்யா மற்றும் சம்யமா ஆகிய மேல்நிலை வகுப்புகளையும் இந்த மையம் வழங்குகிறது.

ஹடயோகா ஆசிரியர் பயிற்சி

ஹடயோகா ஆசிரியர் பயிற்சி, Hatha yoga teacher training

சத்குரு அவர்களால் வடிவமைக்கப்பட்டு, சத்குரு குருகுலம் வழங்கும் ஹடயோகா ஆசிரியர் பயிற்சி என்பது, 5 மாதங்கள் மையத்தில் தங்கியிருந்து மேற்கொள்ளும் பயிற்சி ஆகும். இது பாரம்பரிய ஹடயோகா பயிற்சிகளை நாம் கற்று உணர்வதற்கும், அதனை மேலும் பலருக்கு வழங்குவதற்கும் ஒரு வாய்ப்பாகும். இந்தத் தொன்மையான அறிவியலை அதன் தூய்மையுடன் வழங்குவதும், ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அதைக் கிடைக்கச் செய்வதும் சத்குரு அவர்களின் நோக்கம் ஆகும். இந்த நிகழ்ச்சி புனித குரு பௌர்ணமி நாளில் தொடங்கப்பட்டு ஹடயோகாவைக் கற்றுக்கொள்வதற்கும் பயிற்சி செய்வதற்கும் மிக உகந்த இடமான ஆதியோகி ஆலயத்தில் நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சி சக்திவாய்ந்த சாதனாக்கள், யோகப் பயிற்சிகளை கற்பிப்பதற்கான தீவிர பயிற்சி மற்றும் பல்வேறு சிறப்பு அம்சங்களை உள்ளடக்கியதாகும். இப்பயிற்சித் திட்டம் வெறும் ஆசனங்களைக் கற்பிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், பயிற்சியாளர்கள் யோக முறை வாழ்வை கடைப்பிடிப்பதையும் உறுதிசெய்கிறது. நிகழ்ச்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த பயிற்சியாளர்கள் ஹடயோகாவைக் கற்பிக்க சத்குரு குருகுலத்தால் சான்றளிக்கப்படுவதுடன், பயிற்சிக்குப் பிந்தைய உதவிகளையும் பெறுவார்கள்.

சாதனபாதா

சாதனபாதா, Sadhanapada

சத்குரு குருகுலத்தின் ஒரு பகுதியான சாதனபாதா, ஈஷா யோக மையத்தில் நிகழ்கிறது, இது உள்நிலை மாற்றம் உருவாக்கும் விதமாக, 7 மாதங்கள் மையத்தில் தங்கியிருந்து பங்கேற்கும் ஒரு நிகழ்ச்சியாகும். சமநிலை மற்றும் தெளிவு, உணர்ச்சி ரீதியான ஸ்திரத்தன்மை மற்றும் ஆன்மீக வளர்ச்சியை விரும்புவோர் அல்லது தீவிரமான மற்றும் சக்திமிக்க வாழ்க்கையை வாழ விரும்புவோருக்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. உணவு மற்றும் தங்குமிடத்திற்கும் சேர்த்து கட்டணம் ஏதுமில்லாமல் சாதனபாதா நிகழ்ச்சி வழங்கப்படுகிறது. 

சத்குரு அகாடமி - தலைமை, மேலாண்மை மற்றும் செயல் திட்டம்

சத்குரு அகாடமி, நலவாழ்வுக்கான கருவிகளுடன் ஒருவரின் உலகியல் திறன்களை ஒருங்கிணைத்து மிக உயர்ந்த தரத்திலான தலைமைத்துவக் கல்வியினை வழங்குகிறது. உத்திகள் அல்லது நுட்பங்களைக் கடந்து - தலைமைத்துவத்தை உள்ளார்ந்த மற்றும் உள்ளுணர்வு சார்ந்த செயல்முறையாக வளர்ப்பதில் அகாடமி கவனம் செலுத்துகிறது. வெளிப்புற சூழ்நிலைகள் மற்றும் நபர்களை நிர்வகிப்பதற்கு முதலில் ஒருவர் தன் சொந்த மனம், உடல் மற்றும் சக்திகளை நிர்வகிப்பது முக்கியம் என்பதே அதன் வழிகாட்டும் கொள்கையாகும்.

இந்த அகாடமியின் நோக்கம், தன்னுள் இருக்கும் திறத்திற்கு ஒரு முழுமையான வெளிப்பாட்டை கண்டறிந்தவர்களாகவும், தங்கள் உள்ளார்ந்த நலவாழ்வில் ஆழமாக வேரூன்றியவர்களாகவும் மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய உணர்விலிருந்து செயல்படக்கூடியவர்களாகவும் திகழும் தலைவர்களை உருவாக்குவதும் அதன் விளைவாக மேற்கொள்ளப்படும் தீவிரமான செயல்களும் முடிவுகளும் ஆகும்.

இந்த அகாடமி ஒவ்வொரு ஆண்டும் Insight, Brand Insight, Family Enterprise Excellence, and Human Is NOT a Resource ஆகிய நான்கு நிகழ்ச்சிகளை வழங்குகிறது. 

இன்சைட்: வெற்றியின் இரகசியம் 

இன்சைட் - வெற்றியின் இரகசியம், Insight

சத்குரு அகாடமியின் முதன்மை நிகழ்ச்சியான இன்சைட் என்பது, ஒருவர் தன் வணிகத்தையும், தன்னையும் மேம்படுத்தும் விஞ்ஞானத்தை ஆய்ந்து அறிவதற்கான 4 நாள் வணிகத் தலைமைத்துவ பயிற்சி ஆகும். சத்குருவின் தலைமையில் நிகழும் இந்த நிகழ்ச்சி, ஒரு வணிகத்தை வளர்ச்சிக்கும் விரிவாக்கத்திற்கும் இட்டுச்செல்வதற்கு மிகவும் இன்றியமையாத அம்சமான "பார்க்கும்" திறனை எவ்வாறு மேம்படுத்துவது என்பது பற்றி ஆழமாகவும் உற்சாகமாகவும் ஆராய்கிறது. அதுமட்டுமன்றி வெற்றிகரமான தலைவர்களின் அனுபவக் கண்களின் வழியாக பார்க்கவும், வெற்றியின் DNAவை அனுபவப்பூர்வமாக உள்வாங்கிக் கொள்ளவும் இந்த நிகழ்ச்சி ஒரு அரிய வாய்ப்பை வழங்குகிறது.

தன்னார்வத் தொண்டு

தன்னார்வத் தொண்டு, Volunteering

ஈஷா அறக்கட்டளை ஒரு தன்னார்வ அடிப்படையிலான அமைப்பாகும். இது ஈஷா யோகாவை நிறைவுசெய்த உலகளாவிய தன்னார்வலர்களுக்கு, தன்னலமற்ற தங்கள் செயல்மூலம் வளர்வதற்கு வாய்ப்பளிக்கிறது. நீங்கள் ஈஷா யோக மையத்தை ஆழமாக அனுபவித்து உணர்ந்திட தன்னார்வத்தொண்டு துணைநிற்கிறது. இது உங்களுக்குள் ஒரு ஆழ்ந்து ஈடுபடும் தன்மையை கொண்டுவருவதோடு உள்நிலை மாற்றத்திற்கான சக்திவாய்ந்த ஒரு கருவியாகவும் செயல்படுகிறது. இதற்கான முக்கியத் தேவை என்னவென்றால், தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் ஆர்வமும், இந்த கணத்தில் என்ன தேவையோ அதற்கு உங்களை அர்ப்பணிக்க தயாராக இருப்பதும் ஆகும்.

பலதரப்பட்ட ஆர்வங்களைக் கொண்ட தனிநபர்கள் தங்களின் திறன்களையும் நிபுணத்துவத்தையும் அர்ப்பணிக்கும் விதமாகவும், பல்வேறு சமூக மற்றும் சுற்றுச்சூழல் திட்டங்களில் பங்களிக்கவும் மையத்திற்கு வருகிறார்கள். இந்த செயல்பாடுகளினூடே, அவர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களின் உயிரோட்டமிக்க சக்திகளை உள்வாங்கிக்கொள்ளவும், இயற்கையுடன் இயைந்து வாழ்ந்திடவும், உடலுக்கு உகந்த உணவுகளை உட்கொண்டு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொள்ளவும் மற்றும் பன்முக கலாச்சார நிகழ்வுகளில் ஈடுபட்டு மகிழவும் இயலும்.

உணவகங்கள்

பெப்பெர் வைன் உணவகம்

பெப்பெர் வைன் உணவகம், Pepper vine eatery

பெப்பர் வைன் உணவகம் ஈஷாவின் சொந்த உணவு விடுதியாகும், தினமும் காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை திறந்திருக்கும். பார்வையாளர்களுக்கு, புதிய பழச்சாறுகள், பால், தேநீர், காபி மற்றும் சிற்றுண்டிகள் ஆகியவை இங்கே தொடர்ச்சியாக கிடைக்கும். கேரட், நட் மற்றும் சாக்லேட் சுவைகளில் இங்கே கிடைக்கும் முட்டை சேர்க்காத கேக் கண்டிப்பாக முயற்சிக்க வேண்டிய பண்டம். இனிப்பும் காரமும் சேர்ந்த ஒரு சுவையுடன் கூடிய இந்த கேக்கின் நறுமணம் நீண்ட காலம் நம் நினைவில் நிற்கும்.

வெள்ளியங்கிரி உணவகம்

ஒவ்வொரு நாளும் காலை 8:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை திறந்திருக்கும் இந்த உணவகம் பார்வையாளர்களுக்கு தென்னிந்திய உணவுகள், சிற்றுண்டிகள், புதிய பழச்சாறுகள், பால், தேநீர் மற்றும் காபி ஆகியவற்றை வழங்குகிறது.

தங்குமிடங்கள்

தங்கும் அறைகள்

Isha Cottages

ஈஷாவின் தங்குமிடங்கள், செழுமையான மண்ணின் நிறத்தில் எளிமையும் நேர்த்தியும் ஒருங்கிணைந்த ஓய்விடங்களுக்கு விருந்தினர்களை வரவேற்கின்றன. ஒரு தனித்துவமான உட்புற வடிவமைப்பு மற்றும் ஈஷாவின் சொந்த மரவேலைப்பாடுகள் ஆகியவை இந்த விருந்தினர் அறைகளின் அழகியல் உணர்வை வெளிப்படுத்துகின்றன. தியானலிங்கத்தின் சக்திவாய்ந்த சூழலை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ளும் விதமாக, விருந்தினர்களுக்கு ஒரு வசதியான தங்குமிடத்தை வழங்குவதே இதன் நோக்கமாகும். தங்குமிடத்தோடு ஒரு நாளைக்கு இரண்டுவேளை ஆரோக்கியமான மற்றும் சத்தான சைவ உணவுகளும் வழங்கப்படும். மையத்திற்கு வருகைதரும் அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களை கருத்தில்கொண்டு, உங்கள் வருகைக்கு குறைந்தது இரண்டு வாரங்களுக்கு முன்பே அறைகளை முன்பதிவு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.

நாளந்தா ஹால்

நாளந்தா ஹால், Nalanda

நாளந்தா விருந்தினர் தங்குமிடங்களில் நன்கு தயார்செய்யப்பட்ட, குளிரூட்டப்பட்ட விருந்தினர் அறைகள் மற்றும் தனிப்பட்ட ஓய்வறையுடன் கூடிய விசாலமான குடும்ப அறைகள் ஆகியவை அடங்கும். ஈஷா யோக மைய வளாகத்தில் சிலநாட்கள் தங்கியிருந்து பலன்பெற விரும்பும் தியான அன்பர்களும் விருந்தினர்களும் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பிற நாட்டு பார்வையாளர்கள்

நீங்கள் ஈஷா யோக மையத்தில் தங்க விரும்பினால், முதல் படியாக Overseas Online Portalல் பதிவுசெய்து வருகைக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். பதிவு செய்யும்போது சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், பாஸ்போர்ட் (கடவு சீட்டு) மற்றும் விசா (கிடைத்திருந்தால்) கைவசம் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.

ஷாப்பி

ஈஷா லைஃப் ஸ்டோர்

ஈஷா லைஃப் ஸ்டோர், Isha life store

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, யோக விஞ்ஞானங்கள் அன்றாட வாழ்வியல் தேர்வுகளில் துவங்கி கலை, கைவினை, இசை, உணவு மற்றும் உடைகள் வரை வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் விழிப்புணர்வோடு கூடியதாக மாற்றுவதற்கான பல்வேறு வழிகளை உருவாக்கியுள்ளன. ஈஷா லைஃப் இந்த காலத்தால் அழியாத யோக ஞானத்தை, நீங்கள் விழிப்புணர்வோடு வாழ உதவக்கூடிய, கவனமாக வடிவமைக்கப்பட்ட அர்ப்பணிப்புகள் மூலம் உங்கள் அன்றாட வாழ்வில் கொண்டுவர முயற்சிக்கிறது.

எங்களின் நீண்ட பட்டியலில் பண்டைய இந்திய மருத்துவ முறைகளிலிருந்து வருவிக்கப்பட்ட ஆரோக்கியம் மற்றும் நலம் சார்ந்த பொருட்கள், பிரதிஷ்டை செய்யப்பட்ட அர்ப்பணிப்புகள், கைவினைப்பொருட்கள், கைவினை ஆபரணங்கள், தனிப்பட்ட பராமரிப்புக்கான பொருட்கள், யோகாவிற்கான துணைக் கருவிகள், கையால் நெய்யப்பட்ட சால்வைகள் மற்றும் ஷால்கள், சுற்றுச்சூழலுக்கு உகந்த பாரம்பரிய இந்திய ஜவுளி மற்றும் கைவினை ஆடைகள் மற்றும் சத்குருவின் ஆழ்ந்த ஞானத்தை அனைவருக்கும் கிடைக்கச் செய்யும் சத்குருவின் புத்தகங்கள் ஆகியவை அடங்கும். எங்களின் ஒவ்வொரு அர்ப்பணிப்புகளும் உடல், மன மற்றும் உணர்ச்சி நிலைகளில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இயற்கை பொருட்களைப் பயன்படுத்தி மிகுந்த கவனத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஆரோக்கிய நிகழ்ச்சிகள்

Isha rejuvenation

ஈஷா யோக மையத்தில் அமைந்துள்ள Isha Health Solutions வழங்கும் நிகழ்ச்சிகள், ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான உண்மையான, முழுமையான அணுகுமுறையை வழங்குகின்றன. இந்த நிகழ்ச்சிகள் பல்வேறு யோகப் பயிற்சிகள், உணவு முறைகள், மசாஜ்கள், தெரபிகள் மற்றும் பாரம்பரிய இந்திய சித்தா மற்றும் ஆயுர்வேத சிகிச்சை முறைகளை இணைத்து வழங்குகின்றன.

இந்த நிகழ்ச்சிகள் நமது உயிர் சக்திகளின் சமநிலையை மீட்டெடுப்பதையும், உயிரோட்டத்தை ஊக்குவிப்பதையும் மற்றும் நாள்பட்ட நோய்களைத் தடுப்பது மற்றும் வேரறுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்நிகழ்ச்சிகள் அலோபதி, மாற்று சிகிச்சை முறைகள் மற்றும் துணை சிகிச்சைகள் ஆகியவற்றை பல்வேறு இந்திய மருத்துவ முறைகளின் பண்டைய ஞானத்துடன் இணைத்து தனித்துவமிக்கதாக, விஞ்ஞானரீதியாக கட்டமைக்கப்பட்டுள்ளன.

வெள்ளியங்கிரி மலைச்சாரலின் சக்திவாய்ந்த மற்றும் அமைதியான சூழலில் அமைந்திருக்கும் ஈஷா யோக மையம் பார்வையாளர்களுக்கு ஈடுஇணையற்ற ஓர் அனுபவத்தை வழங்குகிறது. வாருங்கள் - உங்களை இலகுவாக்கிக் கொள்ளுங்கள். புத்துணர்வோடு, உங்கள் உள்நிலை மாற்றத்திற்கான பயணத்தைத் தொடங்குங்கள்.