ஷூன்யாவின் மகத்துவம் என்ன? "ஷூன்யா" என்பதை "வெறுமை" என்று மொழி பெயர்க்கலாம், எனினும் "வெறுமை" என்று சொல்வது ஷூன்யாவை முற்றிலுமாக விவரிக்காது. வெறுமை என்பது ஒருவித எதிர்மறையான வார்த்தை - இருக்கவேண்டிய ஒன்று, இல்லாததை அது குறிக்கிறது. ஷூன்யா என்பது இல்லாமை இல்லை - அது எல்லையில்லாத ஒரு இருப்பு. பூஜ்ஜியம் என்பது இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தபோது, நாம் அதை இல்லாத ஒன்றாக பார்க்கவில்லை, எண்ணின் உச்சம் என்றே பார்த்தோம். பூஜ்ஜியம் என்றால் ஒன்றுமில்லை, ஆனால் இன்னொரு எண்ணின் மதிப்பை அதனால் கூட்டமுடியும். ஷூன்யா என்பது அதுபோலத்தான். இதை சரியான முறையில் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்றால் - அண்டத்தில் 99 சதவிகிதத்திற்கும் மேற்பட்டது வெறுமை என்று நவீன பிரபஞ்சவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். ஒரு அணுவில் 99 சதத்திற்கும் மேற்பட்டது வெறுமை. பிரபஞ்சத்தின் 99 சதவிகிதம் வெறுமையாக இருக்கிறது. இதைத்தான் ஷூன்யா என்கிறோம். நீங்கள் இருக்கும் உயிரின் தன்மையால், உங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன: ஒன்று, இந்த அகண்ட வெறுமையில் ஒரு சிறு உயிரினமாக இருக்கமுடியும், அல்லது எல்லா படைப்பிற்கும் மூலமான அந்த வெறுமையாகவே நீங்கள் இருக்கமுடியும். இதைத்தான் நாம் ஷூன்ய தியானம் மூலம் அணுகுகிறோம்.

படைப்பின் மூலமான இந்த வெறுமை உங்கள் ஒவ்வொரு செல்லினுள்ளும் துடித்துக்கொண்டு இருக்கிறது என்பதுதான் உண்மை

உங்கள் தனிப்பட்ட கருத்தில், நீங்கள்தான் இந்த படைப்பின் மிக முக்கியமான உயிரினமாக இருக்கிறீர்கள். உங்கள் குடும்ப அமைப்பில், நீங்கள் முக்கியமான ஒரு உயிராக இருக்கிறீர்கள். ஊருக்குள் நீங்கள் ஓரளவு முக்கியமானவராக இருக்கலாம், ஆனால் நீங்கள் இல்லாமலும் அவர்களால் இருக்கமுடியும். தேசத்தில் பார்த்தால், நீங்கள் மிகக் குறைவான முக்கியத்துவம் கொண்ட ஒரு மனிதர் - நீங்கள் இல்லாமல் போனால், எவரும் கவனிக்கமாட்டார்கள். உலகில் பார்த்தால், நீங்கள் அதனினும் சிறியதொரு உயிர். அண்டவெளியில் பார்த்தால், நீங்கள் இல்லை என்றே சொல்லிவிடலாம். இதைப் பற்றி நீங்கள் விழிப்புணர்வாக சிந்திக்காவிடினும், தங்களின் ஆழங்களில் அனைவரும் இதை அறிந்திருக்கின்றனர். அதனால்தான் இவ்வளவு ஆணவம், ஆடம்பரம், செல்வத்தின் அணிவகுப்பு - ஏனென்றால் உங்களை நீங்கள் கணிசமான அளவு முக்கியத்துவம் வாய்ந்தவராக மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற பரிதவிப்பு இருக்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

செல்வமானாலும், பணமானாலும் , அகங்காரமானாலும், கல்வியானாலும், குடும்பமானாலும் - இவையனைத்தும் உங்களை நீங்களே எப்படியோ முக்கியத்துவம் வாய்ந்த உயிராக உணரவேண்டும் என்பதற்கான முயற்சிகளே. ஆனால் உங்கள் உடலிலுள்ள ஒவ்வொரு அணுவும் 99 சதம் வெறுமையாக, பிரபஞ்சம் முழுவதுமே 99 சதம் வெறுமையாக இருக்கையில், படைப்பின் மூலமான இந்த வெறுமை உங்கள் ஒவ்வொரு செல்லினுள்ளும் துடித்துக்கொண்டு இருக்கிறது என்பதுதான் உண்மை. இது உங்கள் அனுபவத்தில் உண்மையானால், நீங்கள் முற்றிலும் மாறுபட்ட விதத்தில் வாழ்வீர்கள். அதைத் தேடித்தான் அரசர்கள் பிச்சைக்காரர்களாக மாறுவதைத் தேர்ந்தெடுத்தார்கள். கௌதம புத்தர் பிச்சைக்காரராக நடந்தார். சிவன் பிச்சைக்காரராகவே நடக்கிறார். அலங்காரமும், ஆடம்பரமும், எவ்வித கூடுதல் ஆபரணமும் தேவைப்படாத ஒன்றை அவர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள் என்பதையே இது காட்டுகிறது. இது பிரபஞ்சம் முழுவதிலும் வியாபித்திருப்பது. நான் இங்கு உட்கார்ந்திருக்கும்போதே, இது தன்னளவில் முழுமையாக இருக்கிறது.

வெறுமை உங்கள் உடலின் ஒவ்வொரு செல்லுக்குள்ளும் அணுவுக்குள்ளும் பொதிந்திருப்பது போல, நாம் ஷூன்ய நிலையை ஒரு தியானத்தில் பொதிந்திருக்கிறோம்.
வாழ்க்கையின் இந்த பரிமாணத்திற்கு, பொதுவாக ஒருவர் தன்னை நிறையவே தயார்செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால் இன்று, மக்கள் வெகு குறைவான நேரமே கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். 21ம் நூற்றாண்டில் குருவாக இருப்பதன் பரிதாபநிலை இதுதான். இந்த வெறுமை உங்கள் உடலின் ஒவ்வொரு செல்லுக்குள்ளும் அணுவுக்குள்ளும் பொதிந்திருப்பது போல, நாம் ஷூன்ய நிலையை ஒரு தியானத்தில் பொதிந்திருக்கிறோம். இது ஷூன்யாவின் மாத்திரை போல. நான் இப்படியெல்லாம் சொல்லி இதை அபத்தமாக்குகிறேன், ஏனென்றால் உலகில் பெரும்பாலான மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை அணுகும் விதம் அபத்தமானது. இந்த அகண்ட விரிந்த பிரபஞ்சத்தில், நீங்கள் மிகவும் சிறியவர், ஆனால் பெரியவர் என்று நினைத்துக்கொள்கிறீர்கள். அவர்கள் வீடு, குடும்பம், குப்பை, நகை, சொத்து, ஆகியவை முக்கியம் என்று வாழ்க்கையின் கடைசி நாள் வரை அதற்காகவே போராடும் பலபேரை நான் பார்த்திருக்கிறேன். அதற்குப் பிறகு திடீரென இறந்துவிடுவார்கள். அவர்கள் உயிருடன் இருக்கும்போதே அவர்களுக்கு இதைச் சுட்டிக்காட்ட நான் முயற்சித்திருக்கிறேன், ஆனால் அவர்களுக்கு அதில் நாட்டமிருக்கவில்லை. இறக்கும் தருணத்தில்தான் மக்கள் சுயநினைவுக்கு வருகிறார்கள் என்பது துரதிர்ஷ்டவசமானது.

ஒரு பரீட்சையில் நீங்கள் 99 சதம் மதிப்பெண் பெறுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த 99 சதத்தால் மிகவும் சந்தோஷமடைந்து அந்த 1 சதத்தை நீங்கள் கவனிக்காமல் விடுவதற்குத் தயாராக இருப்பீர்கள். இப்போது இந்த 99 சதம் ஷூன்யா. 1 சதம் படைப்பு. ஷூன்ய தியானத்தில், சற்று நேரத்திற்கு அந்த 1 சதத்தை ஓரமாக வைத்துவிட்டு, 99 சதத்தை ரசிக்கிறீர்கள். இதுவரை அந்த 99 சதத்தை நீங்கள் கவனிக்காமல் இருந்திருக்கிறீர்கள், இது அபத்தமானது. முழுமையைத் தேடி ஓடுவதில் இவ்வளவு எரிச்சல்கள் வந்திருக்கின்றன. யாரோ ஒருவரின் சட்டைப்பை உங்களுடையதைவிட அதிகம் நிறைந்திருந்தால், நீங்கள் எரிச்சலடைகிறீர்கள். யாரோ ஒருவரின் தானியக்கிடங்கு உங்களுடையதைவிட அதிகம் நிறைந்திருந்தால் எரிச்சலடைகிறீர்கள். யாரோ ஒருவரின் இதயம் உங்களுடையதைவிட நிறைந்திருந்தால் எரிச்சலடைகிறீர்கள். அதனால்தான், எப்படிப் பார்த்தாலும் நீங்களே ஜெயிக்கும் விதமான ஒரு புதிய விளையாட்டை உங்களுக்கு கற்றுத்தருகிறோம். எல்லாவற்றுக்கும் மேலாக, வெறுமை என்பது நிறைவைவிட சுலபமானது.

ஷூன்யா என்றால் "வெறுமை", அல்லது "ஒன்றுமில்லாத்தன்மை". இன்னும் பொருத்தமாகச் சொல்வதென்றால் "பொருளற்ற தன்மை". அதாவது பொருள்தன்மைக்கு அப்பாற்பட்டதொரு பரிமாணம். ஷூன்யா என்றால் எதுவும் செய்யாதிருப்பது. நான் தொடர்ந்து உங்களிடம், "எதுவும் செய்யாதிருங்கள், எதுவும் செய்யாதிருங்கள்" என்று சொன்னால், உங்களுக்கு பைத்தியம் பிடித்துவிடும். ஒன்றும் செய்யாமலிருக்க நீங்கள் எந்த அளவு அதிகமாக முயற்சி செய்கிறீர்களோ, அந்த அளவு அதிகமாக பைத்தியம் பிடிக்கும். எதுவும் செய்யாமலிருக்க உங்களுக்கு உதவி தேவை. ஒன்றுமில்லாத் தன்மையில் நீந்தவேண்டும் என்றால், அதற்கு பிடித்துக்கொள்ள உங்களுக்கு ஒரு கயிறு தருகிறோம். எப்படிப்பட்ட கயிறு இது? பொருளற்ற தன்மை நிசப்தத்தைக் குறிப்பதாகவும் இருக்கிறது. ஏதோவொன்றாக இருக்கும் தன்மை சப்தத்தைக் குறிப்பதாகவும் குறிக்கிறது. நாம் வழங்கும் கயிறு, ஒரு குறிப்பிட்ட சப்தம் அல்லது மந்திரம். இந்த ஒன்றுமில்லாத்தன்மை உங்களைத் திணறவைக்கும்போது, இந்த சப்தத்தை நீங்கள் பிடித்துக்கொள்ளலாம்.

பலவிதமான மந்திரங்கள் உள்ளன. உங்கள் அனைவருக்கும் பரிட்சயமான ஒரு மந்திரம் என்றால், அது "ஆஉம்". அது, அதனை சப்தமாகவும் தெளிவாகவும் உச்சரித்தால், சக்திவாய்ந்ததாக மாறும் தன்மையுடைய மந்திரம். பீஜ மந்திரம் என்று நாம் குறிப்பிடக்கூடிய வேறு விதமான மந்திரங்கள் உள்ளன. பீஜ மந்திரம் என்றால், அர்த்தமற்ற, தூய்மையான சப்தம். மந்திரம் என்றால் தூய்மையான சப்தம், பீஜா என்றால் விதை. ஒரு விதையை ஒரு குறிப்பிட்ட விதமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதனை மண்ணுள் போட்டுவிட்டால், அதற்கு சரியான அளவு ஈரப்பத்தத்தைத் தரவேண்டும் - அப்போதுதான் அது முளைவிடும். ஒரு விதை, தான் என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்யும்; மண், தான் என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்யும். உங்கள் வேலை, தேவையான சூழ்நிலைகளை பராமரிப்பதே. அதேபோல ஷூன்ய தியானம் - அதனை நீங்கள் சரியாகக் கையாண்டால், அது முளைவிட்டு, வளர்ந்து, பிரம்மாண்டமான மரமாக வளர்ந்து கனிகள் கனியும்.


Love & Grace