வேம்பாளம் பட்டை பயன்கள் (Vembalam pattai Benefits in Tamil)
நாம் வெகுவாக மறந்துவிட்ட பல மருத்துவ மூலிகைகள் நம் பாட்டிகள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தி வந்தவையாகும். அவற்றுள் ஒன்றான வேம்பாளம் பட்டை எனும் அற்புத மூலிகை பற்றி உமையாள் பாட்டி சொல்லத் தெரிந்துகொள்ளுங்கள்.

கொல்லைப்புற இரகசியம் தொடர்
விநாயகர் சதுர்த்திக்காக செய்த கொழுக்கட்டைகளும் சுண்டலும் எடுத்து வைத்திருந்தாள் அம்மா. அவற்றை உமையாள் பாட்டியிடம் கொடுத்து, ஆசி வாங்கி வரும்படி கூறினாள், பாட்டியைப் பார்த்து பல நாட்கள் ஆகிவிட்டதால், நானும் ஆவலுடன் சைக்கிளில் கிளம்பினேன்.
பாட்டி தன் கைகளால் கலை நயத்துடன் செய்திருந்த அழகிய களிமண் விநாயகர்கள், அவளது குடில் வாயிலில் என்னை வரவேற்றன.
"வாப்பா வா, விநாயகர் பெர்த் டே கொண்டாட்டமா?!" கைகளில் இருந்த கொழுக்கட்டை, சுண்டலைப் பார்த்து, பாட்டி நகைச்சுவையாகக் கேட்டாள்.
"அதை அங்க வை! முதல்ல நான் செஞ்சதெல்லாம் நீ சாப்பிட்டு எப்படி இருக்குன்னு சொல்லு!"
பாட்டி தான் செய்தவற்றை ஒரு தட்டில் வைத்து கொடுத்தாள்.பாட்டியின் கைகளால் செய்த பண்டங்கள் எப்போதும் தனி ருசி என்பது தெரியுமல்லவா? தட்டில் இருந்த பண்டங்களை கபளீகரம் செய்யத் துவங்கினேன்.
"என்னப்பா முன்னெல்லாம் கருவேப்பிலை இருந்தா ஒதுக்கி வச்சிருவ. இப்போ சுண்டல்ல இருக்கிற கருவேப்பிலை எல்லாத்தையும் தேடித்தேடி சாப்பிடுற?" நான் சாப்பிடுவதில் இருந்த வித்தியாசத்தை சரியாக கண்டுபிடித்துக் கேட்டாள் பாட்டி.
நானும் வெட்கத்தோடு இடது கையால் என் தலையை சொறிந்து கொண்டு “ஹிஹி…அதுவா பாட்டி, இப்பல்லாம் முடி அதிகமா கொட்டிக்கிட்டு இருக்கு, எனக்கும் அப்பா மாதிரி தலை வழுக்கை விழுந்துடுமோன்னு பயமாயிடுச்சு, அதான் கருவேப்பிலை எல்லாம் கிடைச்சா இப்போ விடுறதில்ல" என்றேன்.
"நீ தான் தலைக்கு மேல இருக்கறதை நம்பி வாழ்றவன் இல்ல, தலைக்கு உள்ள இருக்கறதை நம்பி வாழ்றவன்னு பஞ்ச் டயலாக்கெல்லாம் பேசுவியே, இப்போ என்னாச்சு?! " என்று பகடி செய்தாள் உமையாள் பாட்டி.
Subscribe
"இல்ல பாட்டி, ப்ரெண்ட்ஸ் எல்லாம் கிண்டல் பண்ற அளவுக்கு முடி கொட்டுற பிரச்சனை சீரியஸா ஆகிடுச்சு. அதான் நான் அதை கொஞ்சம் கேர் பண்ணலான்னு நினைக்கிறேன். நீங்க இதுக்கு ஏதாவது தீர்வு வெச்சிருந்தா சொல்லுங்க ப்ளீஸ்!"
நான் எனது பிரச்சனையை கவலையுடன் தெரிவிக்க, பாட்டி எதுவும் பேசாமல் உள்ளே போய், அலமாரியில வைத்திருந்த ஒரு எண்ணெய் பாட்டிலை எடுத்து வந்து தந்தாள்.
"இது வேம்பாளம்பட்டை சேர்த்து கலந்த எண்ணெய். இதை தினமும் இரவு தலையில் தேச்சு வந்தா, முடி கொட்டுறது நின்னு, முடி நல்லா வளரும். அது மட்டும் இல்லாம, இதுல இன்னும் நிறைய மருத்துவ பயன்கள் இருக்குப்பா!"
ஆர்வத்துடன் அந்த எண்ணெயை வாங்கிக் கொண்டு, வேம்பாளம் பட்டையின் அனைத்து மருத்துவ பயன்களையும் கூறும்படி கேட்டுக்கொண்டேன். பாட்டி சொல்லச் சொல்ல கொழுக்கட்டையை ருசித்துக்கொண்டே கேட்கத் தொடங்கினேன்.
வேம்பாளம் பட்டை பயன்கள் (Vembalam pattai Benefits in Tamil)
தலைமுடி பிரச்சனைகளுக்குத் தீர்வு
"வேம்பாளம் பட்டை, பட்டையாவும், பொடியாவும் நாட்டு மருந்துக் கடைகள்ல கிடைக்குது.
இந்த பட்டையை தேங்காய் எண்ணெயில கலந்து தலையில தேய்க்கலாம். தொடர்ந்து இதை பயன்படுத்தி வந்தா எல்லாவிதமான தலைமுடி பிரச்சனைகளும் தீரும்.
முடி உதிர்வு, முடி உடையறது, இளநரை, பொடுகு, பேன் தொல்லை, அரிப்பு மாதிரி பல்வேறு பிரச்சனைகளுக்கு சிறந்த இயற்கை தீர்வா வேம்பாளம் பட்டை விளங்குது."
தூக்கமின்மைக்குத் தீர்வு
"வேம்பாளம் பட்டை எண்ணெய் தூக்கமின்மை பிரச்சனைக்கு சிறந்த தீர்வா இருக்குது. இந்த எண்ணெயை தலையிலயும், நாசி மேலயும் பூசினா மனம் அமைதி அடையும், நிம்மதியான தூக்கம் வரும்ன்னு சித்த மருத்துவத்துல சொல்றாங்க. இது உடலுக்கு குளிர்ச்சி தர்றதால, காய்ச்சலுக்கும் மருந்தா பயன்படுது."
அலர்ஜி எதிர்ப்புத் தன்மை
"இயற்கை அழகுப் பொருட்கள் தயாரிப்புலயும் இதை அதிகமா பயன்படுத்தறாங்க. இந்த பட்டை சரும தொற்றுகள் வராம தடுக்குது. அலர்ஜி எதிர்ப்புத் தன்மை இதுல இருக்கறதால, தீக்காயங்கள விரைவா ஆற்றக்கூடியதா இருக்குது.
வேம்பாளம் பட்டைப் பொடியை, வெண்ணெயோட சேத்து, அலர்ஜி இருக்கற இடத்துலயும், தீக்காயங்கள் உள்ள இடங்கள்லயும் பூசி வந்தா விரைவா குணமடையும். வேம்பாளம் பட்டை, பெருங்காயம், கருஞ்சீரகம் எல்லாத்தையும் பொடி செஞ்சு, தேங்காய் எண்ணெயோட கலந்து காயங்கள் மேல பத்து போட்டு வந்தா விரைவா ஆறும்.
வெயில்னால வர்ற சரும பாதிப்புகளையும் இந்தப் பட்டை குணப்படுத்த உதவுது.
இந்தப் பட்டையை தண்ணியில போட்டு காய்ச்சிக் குடிச்சா வயிற்றுப்போக்கு, அல்சர், நாள்பட்ட இருமல் குணமாகும்.
வேம்பாளம் பட்டையின் பயன்களை உமையாள் பாட்டி முழுமூச்சாகச் சொல்லி முடிக்க, நானும் கொழுக்கட்டைகளை மொத்தமாக காலி செய்திருந்தேன்.
“சரி பாட்டி, அப்போ நான் இந்த எண்ணெயை எடுத்துட்டு போய், ஒரு மாசத்துல மண்டைல கொண்டை போடற அளவுக்கு, அடர்த்தியா முடியை வளர்த்துக்கறேன்” என்று சொல்லி கிளம்ப எத்தனித்தேன்.
"அட கொஞ்சம் பொறுப்பா, இந்த எண்ணெயை தடவினா மட்டும் அடர்த்தியான முடி கிடைச்சுறாது, இது வெளிப்பூச்சா ஒரு உதவியா மட்டும்தான் இருக்கும். நம்ம வாழ்க்கை முறை, உணவு முறையையும் மாத்தினா மட்டும்தான் முடி உதிர்வு குறைஞ்சு முடி வளர்ச்சி அதிகமாகும்" என்று என்னைத் தடுத்து, அதற்கான டிப்ஸையும் கொடுத்தாள்.
ஆம், முடி கொட்டுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது, நம் வாழ்க்கை முறையும் உணவு முறையும் ஆகும். எனவே இரவு சீக்கிரம் தூங்குவதும், இயற்கையான உணவுகள், நார்ச்சத்து உள்ள காய்கள், பழங்கள், கீரைகள், புரதச்சத்துமிக்க உணவுகளை சேர்த்துக் கொள்வதும் மிகவும் முக்கியம்.
முக்கிய குறிப்பு:
வேம்பாளம் பட்டையை கருவுற்றிருக்கும் பெண்கள் மற்றும் பாலூட்டும் அன்னையர் பயன்படுத்தக்கூடாது. குறிப்பிட்ட அளவுக்கு மேல் இதைப் பயன்படுத்தும்போது உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே வேம்பாளம் பட்டையை பயன்படுத்தும் முன் சித்தா அல்லது ஆயுர்வேத மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுப் பயன்படுத்தவும்.
மருத்துவக் குறிப்புகள்:
Dr.S. சுஜாதா MD(S).,
ஆரோக்யா சித்தா மருத்துவமனை,
சேலம்.