கொல்லைப்புற இரகசியம் தொடர்

சந்திராயன் 3 திட்டம் வெற்றியடைந்து, நிலவில் விக்ரம் லேண்டர் சிறப்பாக கால்பதித்து, புகைப்படங்களை அனுப்பியிருப்பதை தொலைக்காட்சிகளில் பார்த்து, வெற்றிக் கொண்டாட்டத்தில் இருந்த வேளையில், உமையாள் பாட்டியிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. 

நீரிழிவு பிரச்சனை இருக்கிறவங்க அரிசி உணவு அதிகமா சாப்பிடுறத தவிர்த்துட்டு, கம்பு மாதிரியான சிறுதானியங்கள சாப்பிடுவது மூலமா உடலுக்கு நல்ல ஆற்றலைப் பெறலாம்.

"கொஞ்சம் இங்க வாப்பா! இங்க ஒரு சின்ன கைவேலை இருக்குது." பாட்டி என்னை அலைபேசியில் அழைக்க, உடனே பாட்டியின் குடிலுக்கு புறப்பட்டேன்.

பாட்டியின் வீட்டிற்குள் நுழைந்ததும் அடுப்பங்கரையில் இருந்து வந்த ஒருவித வாசனை என்னை வெகுவாக கவர்ந்தது. பாட்டி ஏதோ புதிதாக பலகாரம் செய்து கொண்டிருக்கிறாள் என்று எட்டிப் பார்த்தபோது, வழக்கமான தோசையைதான் பாட்டி சுட்டுக் கொண்டிருந்தாள்.

"என்ன பாட்டி இப்படி ஏமாத்திட்டீங்களே?! இந்த வாசனையைப் பார்த்து ஏதோ புது பலகாரம் செய்றீங்க அப்டின்னு நினைச்சேன். ஆனா நீங்க வழக்கமான தோசைதான் சுடுறீங்களா?!"

பாட்டி தான் வழக்கமான தோசையை சுடவில்லை என்பதை தன் சிரிப்பால் வெளிப்படுத்திய படி, தோசையை தட்டில் பரிமாறினார். தக்காளியும் மிளகாய் வற்றலும் சேர்த்து வதக்கி அரைத்த காரசாரமான சட்னியையும் தொட்டுக்கொள்ள பரிமாறினார்.

தோசை, Kambu dosa

அந்த தோசையின் மணத்தால் பசியும் கூடிவிட, நான்கைந்து தோசைகளை ருசிபார்த்துவிட்டு, பாட்டிக்கு நன்றி சொன்னேன்.

"இந்த மாதிரி தோசையெல்லாம் எங்க அம்மா சுடமாட்றாங்க. எங்க வீட்ல பத்து ரூபாய் மாவு பாக்கெட் தோசைதான் டெய்லி" என்று பாட்டியிடம் அங்கலாய்த்த நான், அந்த தோசையைப் பற்றி தெரிந்துகொண்டு அம்மாவையும் அடிக்கடி சுடச்சொல்லலாம் என யோசித்தேன்.

அந்த கம்பு தோசை செய்யும் விதத்தைப் பகிர்ந்த உமையாள் பாட்டி, கூடவே கம்பின் ஆரோக்கிய பலன்களையும் எனக்கு விளக்கினாள்.

கம்பு பயன்கள் (Kambu Benefits in Tamil)

 கம்பு, Kambu

“கம்புல ஊட்டச்சத்துக்கள் நிறைய இருக்கு. கூழ் செஞ்சு அல்லது சோறாக்கி தினமும் சாப்பிட்டு வந்தா, உடல்ல கெட்ட கொழுப்பு குறையும், உடல் வலிமையாகும். கம்புல வைட்டமின் A அதிகம் இருக்கறதால, தோல் ஆரோக்கியத்துக்கும், கண்பார்வைக்கும் நல்லது. இரத்தசோகையால பாதிக்கப்பட்டவங்க கம்பு சாப்பிட்டு வந்தா நல்ல பலன் கிடைக்கும்.”

நீரிழிவு பிரச்சனைக்கு..

நீரிழிவு பிரச்சனை இருக்கிறவங்க அரிசி உணவு அதிகமா சாப்பிடுறத தவிர்த்துட்டு, கம்பு மாதிரியான சிறுதானியங்கள சாப்பிடுவது மூலமா உடலுக்கு நல்ல ஆற்றலைப் பெறலாம். கம்பு தொடர்ந்து சாப்பிட்டு வந்தா நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும்.”  

உடல் எடை குறைய..

“கம்புல நார்ச்சத்து அதிகம் இருக்குது, கொழுப்பு குறைவா இருக்குது. தினமும் ஒருவேளை உணவா கம்பை எடுத்துவந்தா உடல்ல இருக்கிற தேவையில்லாத கொழுப்பு கரைஞ்சு உடல் எடை குறையும்.” 

செரிமானப் பிரச்சனைக்கு...

“செரிமானக் கோளாறு இருக்கறவங்க ஒருவேளை கம்பு உணவை எடுத்துவந்தா வயிறு சம்பந்தமான பிரச்சனை நீங்கி, செரிமானம் நல்லா நடக்கும். கம்புல நார்ச்சத்து அதிகமா இருக்கறதால மலச்சிக்கல் பிரச்சனை இருக்காது. குடலை சுத்தம் செய்யக்கூடிய கம்பு, குடல் புற்றுநோயைத் தடுக்கவும் உதவும்.”

உடல் உஷ்ணம் குறைய...

“கம்பை கூழாவோ கஞ்சியாவோ செஞ்சு, மோர் சேர்த்து குடித்து வந்தா, வெயில் காலத்துல உடல் உஷ்ணத்தைத் தணிக்க சிறப்பான ஒரு உணவா இது இருக்கும்.”

கம்மங்கூழ், Kambu kool, Kambu kanji

கம்பு, Kambu

அளவுக்கு மிஞ்சினால்...

“சத்து நிறைந்த இந்த கம்பை நாம அளவுக்கு அதிகமா சாப்பிடாம, அளவோடு சாப்பிட்டு வந்தால் நல்லது. இரவு நேரங்கள்ல சாப்பிடாம காலை உணவா அல்லது மதிய உணவா எடுத்துக்கலாம்.”

கம்பு பற்றிய பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை விரிவாக எடுத்துரைத்த பாட்டியிடம்,

"ஆமா நீங்க ஏதோ கைவேலை இருக்குதுன்னு சொன்னீங்களே, அது என்ன பாட்டி?!” என்று பவ்யமாக கேட்டேன்.

"ஆமாம்பா மறந்துட்டேன், இந்தா இந்த உலக்கையப் புடி. அந்த உரல்ல இருக்கற கம்பை கொஞ்சம் குத்திக்கொடுத்து எனக்கு ஹெல்ப் பண்ணு" என்று சொல்லி உலக்கையை என்னிடம் கொடுக்க, நான் உலக்கையை எப்படி பிடிக்கறதுன்னு தெரியாம முழித்துக்கொண்டிருந்தேன்.

"வீட்டுக்கு வந்ததும் காஞ்ச மாடு கம்புல விழுந்த மாதிரி, கம்பந்தோசையை ருசி பார்த்தேல்ல, அதெல்லாம் ஜீரணம் ஆகணும்னா இந்தமாதிரி வேலை செஞ்சாதான் ஆகும். வா நான் சொல்லித்தர்றேன்" என்று என்னைக் கலாய்த்த பாட்டி, உலக்கையை லாவகமாகப் பிடித்து கம்பு குத்துவதற்கு கற்றுக்கொடுத்தாள்.

மருத்துவ குறிப்பு: டாக்டர். சுஜாதா MD (S)

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஆரோக்யா சித்தா க்ளினிக், சேலம்.

கம்பு சமையல் குறிப்புகள் (Kambu Recipes in Tamil) 

களி

தேவையான பொருட்கள்: 

கம்பு மாவு 

தண்ணீர் 

உப்பு தேவைக்கேற்ப 

செய்முறை:

முதலில் தண்ணீரை கொதிக்க வைக்கவும். அதில் சிறிதளவு தண்ணீரை தனியாக எடுத்து மாவினை போட்டு கட்டியில்லாமல் கரைத்து அந்த கலவையை கொதித்துக் கொண்டிருக்கும் நீரில் கலந்து பிறகு தேவையான உப்பு சேர்த்து அடி பிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்கவும். நன்றாக வெந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும். மோர் குழம்பு, புளி குழம்பு ஆகியவையுடன் சாப்பிட சுவையாக இருக்கும். ஆறிய கம்பு சாதத்தில் மோர் சேர்த்து கரைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.  

கம்பு சப்பாத்தி 

தேவையான பொருட்கள்: 

கம்பு மாவு - 1 கப்

கோதுமை மாவு - 1 கப்

துருவிய சௌசௌ - 2 டேபிள்ஸ்பூன்

துருவிய தேங்காய் - 1 டீஸ்பூன்

ஓமம் - சிறிதளவு

எண்ணெய் - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு 

செய்முறை: 

அனைத்துப் பொருட்களையும் தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்துக் கொள்ளவும். இந்த மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும். காரமாக தொட்டுக் கொண்டால் காம்பினேஷன் அருமையாக இருக்கும். கம்புக் கஞ்சி, கம்பு சாதம் சாப்பிட அடம் பிடிப்பவர்கள் கூட இந்த சுவையான கம்பு சப்பாத்தியை விரும்பி உண்பர். இது இரும்புச் சத்து நிறைந்த ஒரு உணவு!

கம்பு அடை 

தேவையான பொருட்கள்: 

கம்பு - 1 கப்

இட்லி அரிசி - 1 கப்

மிளகாய் வற்றல் - 4

சோம்பு - 1 டீஸ்பூன்

உப்பு - சுவைக்கேற்ப

கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு

எண்ணெய் - தேவையான அளவு

 செய்முறை:

கம்பு, இட்லி அரிசி இரண்டையும் நன்கு ஊறவைத்து, அதில் மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து அரைக்க வேண்டும். அரைத்து எடுக்கும் முன் சோம்பு சேர்த்து 2 சுற்று அரைத்து எடுத்து, அதில் நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து, தோசைக் கல்லில் ஊற்றவும். சுவையான கம்பு அடை தயார். (விருப்பப்பட்டால் கேரட், முட்டைகோஸ் மெல்லியதாக துருவி சேர்க்கலாம்)

பாலக் கம்பு புரோட்டா 

தேவையான பொருட்கள்:

கம்பு மாவு - 1 கப்

கோதுமை மாவு - 1 கப்

சோயாபீன் மாவு - 2 டேபுள் ஸ்பூன்

பாலக் கீரை - 1 கப் (நறுக்கியது)

புதினா - 1 கைப்பிடி

இஞ்சி விழுது - 1 டீஸ்பூன்

தயிர் - 2 டேபுள் ஸ்பூன்

ஓமம் - 1 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

உப்பு - சுவைக்கேற்ப 

செய்முறை: 

பாலக் கீரையை தண்ணீர் சேர்த்து ஒரு கொதிவிட்டு எடுத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் புதினா, இஞ்சி, தயிர், ஓமம், சீரகம் அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். கம்பு மாவு, கோதுமை மாவு, சோயாபீன் மாவு மூன்றையும் கலந்து அதில் அரைத்த விழுதை சேர்த்து நன்கு பிசைய வேண்டும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர், எண்ணெய் சேர்த்து பிசைந்து சப்பாத்தி கல்லில் தேய்த்து, தோசைக்கல்லில் போட்டு எடுக்கவும்.

 

சிறுதானியங்கள் பற்றிய பிற பதிவுகள்: 

1) ராகி வழங்கும் 7 ஆரோக்கிய நன்மைகள்! 4 எளிய ராகி ரெசிபிகளுடன்! 

கேழ்வரகு அல்லது ராகி எனும் சிறுதானியத்தின் வரலாறு, 7 ஆரோக்கிய நன்மைகள் மற்றும் ராகி ரெசிபிகள் என ராகி பற்றிய முக்கியக் குறிப்புகள் இப்பதிவில்... 

2) தினை அரிசி நன்மைகள் மற்றும் 6 சுவையான சமையல் குறிப்புகள் 

எடை குறைதல், நீரிழிவு நோய் கட்டுப்படுவது மற்றும் கர்ப்பம் தரிப்பதற்கு துணைநிற்பது உட்பட தினையின் ஆரோக்கிய நன்மைகள் பல உள்ளன. இதில் வைட்டமின்களும் தாதுப்பொருட்களும் அதிகமாக உள்ளன. மேலும், இதன் சுவையின் காரணமாக பல்வேறு சமையல் பதார்த்தங்களில் அரிசி அல்லது கோதுமைக்கு ஒரு அற்புதமான மாற்றாக அமைகிறது.

 3) வியக்க வைக்கும் வரகு அரிசி பயன்கள்! 

சிறுதானியங்களில் அதிக சத்தும் சுவையும்கொண்ட வரகு அரிசியின் ஆரோக்கிய பலன்கள் பற்றி உமையாள்பாட்டியிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வாருங்கள். 

4) சத்துக்கள் நிறைந்த சாமை அரிசியின் பயன்கள்!

நம் பாரம்பரிய சிறுதானியங்களில் சுவையும் சத்தும்மிக்க சாமை அரிசியை பற்றி உமையாள் பாட்டியிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வாருங்கள்.