வியக்க வைக்கும் வரகு அரிசி பயன்கள்! (Varagu Rice Benefits in Tamil)
சிறுதானியங்களில் அதிக சத்தும் சுவையும்கொண்ட வரகு அரிசியின் ஆரோக்கிய பலன்கள் பற்றி உமையாள்பாட்டியிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வாருங்கள்.

கொல்லைப்புற இரகசியம் தொடர்
சித்திரை மாதம் முழுக்க வெள்ளியங்கிரி மலைக்கு பயணிக்கும் பாரம்பரியம் கோவை மற்றும் சுற்றுவட்டார மக்களிடத்தில் காணப்படுகிறது. தற்போது தமிழகம் முழுவதிலுமிருந்து வெள்ளியங்கிரி மலைக்கு புனிதப்பயணம் மேற்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் பார்க்கமுடிகிறது. நானும் எனது trekking நண்பர்கள் குழுவுடன் இணைந்து, வெள்ளிங்கிரி மலையேறுவதற்கு அடிவாரத்தில் காத்துக்கொண்டிருந்த வேளையில், உமையாள் பாட்டி அங்கே தனது சுற்றும்சூழ மலையேறும் தனது குழுவினருக்காக அங்கிருந்த ஒரு மண்டபத்தில் உணவு சமைத்துக் கொண்டிருந்தார். அதிகாலையில் மலையேறப்போகும் தனது பேரன் பேத்திமார்கள் உட்பட 50 பேருக்கு அவர் வரகு அரிசியில் தக்காளி சாதம் செய்துகொண்டிருந்தார்.
வரகு அரிசியில கோதுமைய விட அதிகமா நார்ச்சத்து இருக்கிறதா சொல்றாங்க. மாவுச்சத்து இதுல குறைவா இருக்குறதால ஆரோக்கியத்துக்கு ரொம்ப நல்லது.
பாட்டியை அங்கே தற்செயலாகப் பார்த்த எனக்கு, ஒரு ஆனந்த அதிர்ச்சி இருந்த அதே வேளையில், பாட்டி செய்துகொண்டிருந்த தக்காளி சாதத்தின் வாசனை என்னை வெகுவாக ஈர்த்தது.
பலமுறை வெள்ளியங்கிரி மலையின் ஏழாவது மலைக்கு பாட்டி சென்றுவந்து, அந்த அனுபவத்தை என்னிடம் பகிர்ந்திருக்கிறார். நான் முதன்முதலாக வெள்ளியங்கிரி மலை ஏறப்போவதால், பாட்டியிடம் ஆசி பெற்று செல்லும் பாக்கியம் கிடைத்திருப்பதை நினைத்து மேலும் உற்சாகம் என்னுள் சேர்ந்தது.
"இந்தாப்பா இந்த கரண்டிய சத்தநேரம் பிடிச்சு கிளறிவிடு பார்ப்போம்" என்று என்னிடம் அந்த மிகப்பெரிய இரும்பு ஜல்லிக்கரண்டியை ஒப்படைத்துவிட்டு, பாட்டி அங்கே ஓலைப்பாயில் நறுக்கி வைக்கப்பட்டிருந்த தக்காளி மற்றும் கொத்தமல்லித் தழைகளை எடுத்துவரச் சென்றாள்.
தக்காளியை சேர்த்துப்போட்டு வதக்கிவிட்டு, பின் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து அங்கிருந்த வரகு அரிசியை எடுத்த பாட்டி, பக்குவமாக அதில் சேர்த்து கிளறிக்கொண்டிருந்தாள். வழக்கமான அரிசியில் தக்காளி சாதம் செய்யாமல், வரகு அரிசியில் சமைப்பது குறித்து பாட்டியிடம் கேட்கத் தோன்றியது.
தக்காளி சாதத்தை அங்கிருந்த பழைய செய்தித்தாள்களின் மேல் வாழை இலைகளை அளவாக வெட்டிவைத்து, பொட்டலம் போடுவதில் தனக்கு உதவி செய்தால், வரகு அரிசியின் ஆரோக்கிய பலன்கள் பற்றி தான் கூறுவதாக பாட்டி என்னுடன் ஒப்பந்தம் போட, நானும் ஒப்புக்கொண்டேன்.
வரகு அரிசி பயன்கள்! (Varagu Rice Benefits in Tamil)
நார்ச்சத்து அதிகம்:
“வரகு அரிசியில கோதுமைய விட அதிகமா நார்ச்சத்து இருக்கிறதா சொல்றாங்க. மாவுச்சத்து இதுல குறைவா இருக்குறதால ஆரோக்கியத்துக்கு ரொம்ப நல்லது.”
உடல் எடை குறைய:
“வரகு அரிசியில நார்ச்சத்து அதிகமா இருக்கிறதால, அதிக உடல் எடையால அவதிப்பட்டு வர்றவங்க உணவுல வரகு சேர்த்துட்டு வந்தா நல்ல பலன் கிடைக்கும்.”
Subscribe
நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்க:
“வரகரிசி உணவுகள அப்பப்போ சாப்பிட்டு வந்தா, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு வேகமா குறைஞ்சு நீரிழிவு நோய் கட்டுக்குள்ள வரும்.”
குடல் புண்கள் ஆற, மலச்சிக்கல் தீர:
“இதில நார்ச்சத்து அதிகமா இருக்குறதால, வரகரிசியில செய்யப்பட்ட உணவுகள சாப்பிட்டு வந்தா வயித்துலயும், குடல்லயும் இருக்குற புண்கள் குணமாறதுக்கு உதவிசெய்றதோட, மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கும்.”
ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது:
"தாது உப்புக்கள், இரும்புச் சத்து, வைட்டமின்கள், சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள்னு இந்த எல்லா சத்துக்களும் வரகு அரிசியில இருக்கிறதால, உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் எல்லாத்தையும் வரகு அரிசி குடுக்கக் கூடியதா இருக்குது.”
இதய ஆரோக்கியம் மேம்பட:
“இவ்வளவு சத்துக்கள் வரகு அரிசியில இருக்கிறதால, இதயம் சீரா வேலசெய்றதுக்கு வரகரிசி உதவுது. வரகு சாப்பிட்டு வந்தா, இதயம் பலப்பட்டு, இதய ஆரோக்கியம் மேம்படும்.”
மாதவிடாய் பிரச்சனைகள் சரியாக:
“பெண்களுக்கு மாதவிடாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாறதுக்கும், மாதவிடாய் பிரச்சனைகள் வராம தடுக்குறதுக்கும் வரகு அரிசியில இருக்குற சத்துக்கள் உதவுது.”
பாட்டி வரகு அரிசியின் ஆரோக்கிய பலன்களை சொல்லி முடித்தபோது, வரகரிசி தக்காளி சாதத்தை பொட்டலம் போடுவதில் வாலண்டியரிங் செய்த எனக்கும் ஒரு பொட்டலம் வழங்கி தனது அன்பை வெளிப்படுத்தினாள்.
வெள்ளியங்கிரி மலையேறுவதற்கு முன், பாட்டியிடம் மலையேற்றத்திற்கான டிப்ஸ்களை கேட்கலாம் என்று தோன்றியது.
"பாட்டி கால் வலியில்லாம, டயர்ட் ஆகாம, மூச்சு வாங்காம, மலையேறுறதுக்கு டிப்ஸ் சொல்லுங்க பாட்டி" என்றேன்.
"நீ தொடர்ந்து ஒரு மண்டலம் ஹட யோகா பண்ணிட்டு வாப்பா" என்றாள் பாட்டி.
“அடுத்த மலையேற்றுத்துக்குள்ள பண்ணிருலாம் பாட்டி!” என்று பாட்டியிடம் உறுதிமொழி சொன்ன என்னை ஏற இறங்க பார்த்த பாட்டி,
"உனக்கேத்த இன்னொரு நல்ல ஐடியா இருக்கு கேட்கிறியா?" என்றாள்.
நானும் ஆர்வத்துடன் சொல்லுங்க பாட்டி என்றேன்,
"இப்ப ஒரு புது App வந்திருக்கு, அதுல இங்கிருந்து செல்ஃபி எடுத்து, 7வது மலையில இருக்கிற மாதிரி எடிட் பண்ணி post போட்டுக்கலாம்பா" என்று அநாயாசமாக கலாய்த்துவிட்டு என்னை வழியனுப்பினாள் பாட்டி.
மருத்துவ குறிப்பு: டாக்டர். சுஜாதா MD (S)
ஆரோக்யா சித்தா க்ளினிக், சேலம்.
சிறுதானியங்கள் பற்றிய பிற பதிவுகள்:
1) ராகி வழங்கும் 7 ஆரோக்கிய நன்மைகள்! 4 எளிய ராகி ரெசிபிகளுடன்!
கேழ்வரகு அல்லது ராகி எனும் சிறுதானியத்தின் வரலாறு, 7 ஆரோக்கிய நன்மைகள் மற்றும் ராகி ரெசிபிகள் என ராகி பற்றிய முக்கியக் குறிப்புகள் இப்பதிவில்...
2) தினை அரிசி நன்மைகள் மற்றும் 6 சுவையான சமையல் குறிப்புகள்
எடை குறைதல், நீரிழிவு நோய் கட்டுப்படுவது மற்றும் கர்ப்பம் தரிப்பதற்கு துணைநிற்பது உட்பட தினையின் ஆரோக்கிய நன்மைகள் பல உள்ளன. இதில் வைட்டமின்களும் தாதுப்பொருட்களும் அதிகமாக உள்ளன. மேலும், இதன் சுவையின் காரணமாக பல்வேறு சமையல் பதார்த்தங்களில் அரிசி அல்லது கோதுமைக்கு ஒரு அற்புதமான மாற்றாக அமைகிறது.