உள்ளடக்கம்
1. தினை என்றால் என்ன?
2. தினை வகைகள் எங்கு வளர்கின்றன?
3. மற்ற மொழிகளில் தினை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
4. தினை அரிசி நன்மைகள்
   4.1 தினையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் என்னென்ன?
   4.2 சர்க்கரை நோய்க்கு தினை நல்லதா?
   4.3 எடை குறைப்புக்கு தினை நல்லதா?
   4.4 கர்ப்பிணிப் பெண்களுக்கு தினை நலம் தருமா?
5. தினையை எப்படி சமைக்க வேண்டும்?
6. தினை ரெசிபிகள்
   6.1 தினை பிரியாணி
   6.2 தினை இட்லி
   6.3 தினை ரொட்டி
   6.4 தினை உப்புமா
   6.5 தினை லட்டு
   6.6 தினை குடைமிளகாய் ரெசிபி
7. எதிர்காலத்தில் சிறுதானியங்களின் பங்கு

தினை என்றால் என்ன?

தினை, செட்டாரியா இட்டாலிகா என்ற தாவரவியல் பெயருடன் அழைக்கப்படும் இது, ஒரு வகையான புல் வகை. தினை பல நூற்றாண்டுகளாக ஆசிய உணவு வகைகளில் முக்கிய அங்கம் வகிக்கிறது. அதிக சத்துள்ள தானியமான இது, பெரும்பாலும் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உணவு ஆதாரமாக பயன்படுத்தப்படுகிறது. மேலும், இது கம்பு, வரகு போன்ற பிற சிறுதானியங்களை ஒத்தது. வைட்டமின்களும் தாதுப்பொருட்களும் நிறைந்த இந்த சிறுதானியத்தின் ஒரு தனித்துவமான சுவையால் பல உணவுப் பதார்த்தங்களில் சேர்க்கப்படுகிறது.

வைட்டமின்களும் தாதுப்பொருட்களும் நிறைந்த இந்த சிறுதானியத்தின் ஒரு தனித்துவமான சுவையால் பல உணவுப் பதார்த்தங்களில் சேர்க்கப்படுகிறது.

தினை பயிர், Thinai crop

தினை எங்கே வளர்கிறது?

பல்வேறு காலநிலையிலும் மண்ணிலும் வளரக்கூடிய வறட்சி தாங்கும் பயிரான தினை, பொதுவாக மற்ற பயிர்கள் செழித்து வளராத வறண்ட பகுதிகளில் வளரக்கூடியது. இந்த சிறிய, மஞ்சள்நிற தானியங்கள் ஆசியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா உட்பட உலகின் பல பகுதிகளில் காணப்படுகிறது. இது ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவின் சில பகுதிகளிலும் வளர்க்கப்படுகிறது. ஆசியாவில் குறிப்பாக சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் இது பிரபலமாக உள்ளது. இந்தியாவில் முக்கியமாக ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய தென் மாநிலங்களில் தினை பயிரிடப்படுகிறது.

தினை மற்ற மொழிகளில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

இந்தியில் இது "கங்கினி" என்றும், தமிழில் "தினை" என்றும் அழைக்கப்படுகிறது. தெலுங்கில் இது "கொர்றா" என்றும், கன்னடத்தில் "நவனே" என்றும் அழைக்கப்படுகிறது. மராத்தியிலும் குஜராத்தியிலும், இது "கங்" என்றும், பெங்காலியில் "காங்" என்றும் அழைக்கப்படுகிறது. ஜப்பானிய மொழியில், "அவ" என்று அழைக்கப்படும் இது, சீன மொழியான மாண்டரினில் "சு" என்று அழைக்கப்படுகிறது. கொரிய மொழியில் இது "ஜோ" என்று அழைக்கப்படுகிறது.

தினை அரிசி நன்மைகள் (Thinai Benefits in Tamil)

தினையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் என்னென்ன?

தினையில் இரும்பு மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்திருப்பது மட்டுமின்றி, gluten எனப்படும் பசைத்தன்மை இல்லாததால், gluten sensitivity பிரச்சனை உள்ளவர்களுக்கு ஏற்ற ஒரு விருப்பத் தேர்வாக அமைகிறது. தினையில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் ஆரோக்கியமான செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும், சிறந்த இதய ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் விதமாக, கொழுப்பின் அளவைக் குறைக்க இது உதவுகிறது. எந்தவொரு டயட் முறையிலும் சிறந்த பங்களிப்பை வழங்கும் தினை, பெரும்பாலும் ஊட்டச்சத்து நிபுணர்களால் பெரிதும் பரிந்துரைக்கப்படுகிறது.

ஆனால் தினையின் நன்மைகள், அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பையும் தாண்டி நிறைய இருக்கின்றன.

சாகுபடி செய்வதற்கும் அறுவடை செய்வதற்கும் எளிதான தினை, சவாலான பருவநிலை நிலவும் பகுதிகளில் முக்கிய உணவு ஆதாரமாக அமைகிறது. உண்மையில் நெல், கோதுமை போன்ற மற்ற பயிர்களை விட தினை வறட்சியையும் வெப்பத்தையும் தாங்கும் திறன் கொண்டது என நிரூபிக்கப்பட்டுள்ளது. இது வறண்ட பகுதிகளில் உள்ள மக்கள், கடினமான சுற்றுச்சூழலை எதிர்கொண்டாலும் கூட அவர்களுக்கு ஊட்டமளிக்க துணைநிற்கிறது. ஒரு காலத்தில், தினை ஆசிய கலாச்சாரங்களில் பிரதான உணவாக இருந்தது. கோதுமை மற்றும் அரிசியின் சாகுபடி பரவலாக அதிகரித்ததன் காரணமாக, துரதிருஷ்டவசமாக தினையின் சாகுபடி குறைந்தது. எதிர்காலத்தில், புவி வெப்பமடைதல் காரணமாக உலகின் பல பகுதிகளில் சுற்றுச்சூழல் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படும் நிலையில், தினை போன்ற வறட்சி தாங்கும் பயிர்கள் நமது உணவுத் தேவைகளுக்கு தீர்வாக இருக்கும்.

சர்க்கரை நோய்க்கு தினை நல்லதா?

தினை சாதம், Thinai sadham

தினை குறைந்த கிளைசெமிக் அளவைக் கொண்டுள்ளது. அதாவது இரத்த சர்க்கரை அளவை அதிகப்படுத்தும் வாய்ப்பு தினையில் குறைவு. இது நீரிழிவு நோயாளிகளுக்கும், உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கும் ஒரு நல்ல தேர்வாக அமைகிறது. இதற்கு இன்னும் கூடுதல் ஆராய்ச்சி தேவைப்பட்டாலும், குளுக்கோஸ் டாலரன்ஸ் குறைபாடு உள்ளவர்களின் குளுக்கோஸ் அளவை குறைப்பதாக குறிப்பிடத்தக்க ஆய்வுகள் உள்ளன.

எடை குறைப்புக்கு தினை பலன் தருமா?

அதன் குறைந்த கிளைசெமிக் அளவும், நார்ச்சத்து அதிகம் உள்ளதாலும் இது எடைக் குறைப்புக்கு உதவும். இதிலுள்ள நார்ச்சத்து, நீண்ட நேரம் பசியின்றி நிறைவாக உணர உதவுகிறது. மேலும், இது ஒரு முழுமையான தானியமாக இருப்பதால், அதிக கலோரிகள் இல்லாமல் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. தினை எடை குறைப்பு செயல்முறைக்கு பயனுள்ளதாக இருந்தாலும், ஆரோக்கியமான எடையை தொடர்ந்து பராமரிப்பதற்கு ஒரு சமச்சீரான உணவும் தொடர்ச்சியான உடல் பயிற்சிகளும் முக்கியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தினை கர்ப்பிணிப் பெண்களுக்கு நல்லதா?

தினை கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகச்சிறந்த உணவு என்று கூறப்படுகிறது. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவுவதோடு, கர்ப்ப காலத்தில் ஏற்படும் பொதுவான பிரச்சனையான மலச்சிக்கலைத் தடுக்கவும் தினை உதவுகிறது. தினை மெக்னீசியத்தின் சத்தினைக் கொண்டுள்ளதால் (100 கிராமில் 81 மி.கி), ஆரோக்கியமான எலும்புகளைப் பராமரிக்கவும், இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் துணைநிற்கிறது. கூடுதலாக, இதில் இரும்புச்சத்தும் வைட்டமின் B உட்பட பிற அத்தியாவசிய தாதுக்களும் நிறைந்திருப்பதால், தாய்க்கும் வளரும் குழந்தைக்கும் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும் நினைவில் கொள்ளுங்கள், கர்ப்ப காலத்தில் எந்த உணவுமுறை மாற்றத்தையும் மேற்கொள்ளும் முன், உங்களது சுகாதார ஆலோசகரை முறையாக அணுகுவது நல்லது.

தினை தக்காளி சாதம், Thinai Tomato Rice

தினையை எப்படி சமைப்பது?

அரிசியைப் போல சமைத்து உண்ணலாம், அல்லது மாவாக அரைத்து Baking செய்து பயன்படுத்தலாம். சமைக்கும் முன் தண்ணீரில் ஊறவைத்து மென்மையாக்கிவிட்டு, பிரஷர் குக்கரில் வேக வைக்கலாம். பல்வேறு பலன்கள் கொண்ட தினை, எண்ணற்ற சமையல் ரெசிபிகளாகவும், பல்வேறு உணவுப் பதார்த்தங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன.

தினை ரெசிபிகள் (Thinai Recipes in Tamil)

1. தினை பிரியாணி

தினை பிரியாணி, Thinai Biriyani

நீங்கள் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த ஒரு பிரியாணியைத் தேடுகிறீர்களென்றால், தினை பிரியாணியைத் தவிர வேறு எதையும் நாட வேண்டாம்! ஆராய்ச்சியின் படி, வழக்கமான அரிசி பிரியாணியுடன் ஒப்பிடும்போது, இந்த தினை பிரியாணி அதன் நிறம், தோற்றம், அமைப்பு, சுவை என அனைத்து விதத்திலும் அதிக Ratingsஐ பெற்றுள்ளது. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்!

தேவையான பொருட்கள்

1½ கப் தினை

2 கப் தண்ணீர்

சமையல் எண்ணெய் 1 மேசைக்கரண்டி

சீரகம் 1 தேக்கரண்டி

அரைத்த இஞ்சி 1 தேக்கரண்டி

1 கப் காய்கறிகள், (பட்டாணி, கேரட் மற்றும் குடைமிளகாய் போன்றவை) நறுக்கியது

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மஞ்சள் தூள் ½ தேக்கரண்டி

சிவப்பு மிளகாய் தூள் ½ தேக்கரண்டி

கரம் மசாலா ½ தேக்கரண்டி

சுவைக்கேற்ப உப்பு

½ கப் தயிர்

½ கப் நறுக்கிய தக்காளி

½ கப் நறுக்கிய கொத்தமல்லி

½ கப் நறுக்கிய புதினா

¼ கப் வெட்டப்பட்ட பாதாம் பருப்பு

¼ கப் உலர் திராட்சை

2 தேக்கரண்டி நெய்

¼ கப் தண்ணீர்

பிரியாணி செய்வதற்கு கீழ்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்:

 1. தினையை இரண்டு முறை நன்கு கழுவி, 45 முதல் 60 நிமிடங்கள் ஊற வையுங்கள்.
 2. ஒரு பெரிய பாத்திரத்தில் எண்ணெயை மிதமான சூட்டில் வைத்து சீரகம் தாளித்து, அதில் நறுக்கிய தக்காளி, உப்பு, கரம் மசாலா மற்றும் சிவப்பு மிளகாய் தூள் சேருங்கள். தக்காளி மென்மையாக வேகும் வரை மூடி வைத்து சமைத்திடுங்கள்.
 3. இஞ்சியைச் சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்குங்கள்.
 4. இதனுடன் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து மென்மையாகும் வரை வதக்குங்கள்.
 5. தண்ணீரை வடித்துவிட்டு, தினையையும் அந்த பாத்திரத்தில் சேர்த்து கிளறுங்கள்.
 6. பின்னர் இதில் தயிர் சேருங்கள்.
 7. கொத்தமல்லி, புதினா, பாதாம் மற்றும் உலர் திராட்சையையும் சேர்த்து கிளறுங்கள்.
 8. நெய் சேர்த்து, பின் தேவையான தண்ணீர் சேர்த்துக் கிளறுங்கள்.
 9. தீயைக் குறைத்து, பாத்திரத்தை ஒரு மூடியால் மூடுங்கள். 15-20 நிமிடங்களுக்கு வேக வைக்கலாம் அல்லது தினை வேகும் வரை, பிரியாணி வாசம் வரும் வரை சமைக்கலாம்.
 10. தீயை அணைத்து 5 நிமிடம் மூடி வையுங்கள்.
 11. விரும்பினால், கொத்தமல்லி, புதினா, பாதாம், உலர் திராட்சைகளைத் தூவி பிரியாணியை அலங்கரித்து சூடாகப் பரிமாறி, ருசித்து மகிழுங்கள்!

2. தினை இட்லி

தினை இட்லி, Thinai Idli

தேவையான பொருட்கள்:

1 கப் தினை

½ கப் உளுத்தம் பருப்பு

½ தேக்கரண்டி வெந்தயம்

ருசிக்கேற்ப உப்பு

செய்முறை:

 1. தினையையும் உளுத்தம் பருப்பையும் நன்கு தண்ணீரில் கழுவுங்கள். தினையையும் உளுத்தம் பருப்பையும் தனித்தனியாக, குறைந்தது 6 மணிநேரம் அல்லது இரவு முழுக்க ஊற வைத்திடுங்கள்.
 2. தண்ணீரை வடித்து எடுத்து, தனித்தனியாக நன்றாக விழுதாக அரைத்திடுங்கள். தினை மாவில் பருப்பு மாவைக் கலந்து சுவைக்கேற்ப உப்பு சேருங்கள்.
 3. பாத்திரத்தை ஈரமான துணியால் மூடி, புளிக்க வைக்க வெதுவெதுப்பான இடத்தில் 8-12 மணி நேரம் வைத்திடுங்கள்.
 4. மாவு புளித்த பிறகு, வெந்தயத்தை சேருங்கள்.
 5. இட்லி அச்சுகளில் எண்ணெய் அல்லது நெய் தடவி, மாவை நிரப்பி, ஒரு ஸ்டீமரில் வைத்து, இட்லிகளை 10-15 நிமிடங்களுக்கு அல்லது வேகும் வரை ஆவியில் வேக வைத்திடுங்கள்.
 6. இட்லிகளை சட்னி அல்லது சாம்பாருடன் சூடாகப் பரிமாறி, ருசித்து மகிழலாம்.

3. தினை ரொட்டி

தேவையான பொருட்கள்:

1 கப் தினை மாவு

½ கப் கோதுமை மாவு

¼ தேக்கரண்டி உப்பு

¼ கப் நெய்

½ கப் சூடான தண்ணீர்

செய்முறை:

 1. ஒரு கிண்ணத்தில் தினை மாவு, கோதுமை மாவு மற்றும் உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலக்குங்கள்.
 2. இந்த மாவு கலவையில் நெய் சேர்த்து, உதிரியாக இருக்கும்படி கலக்குங்கள்.
 3. பின்னர் அதில் வெதுவெதுப்பான நீரை சிறிது சிறிதாக சேர்த்து, மாவு உருண்டையாகப் பிடிக்கும் பதத்திற்கு வரும்வரை கலக்குங்கள். மாவு மென்மையாகவும் நெகிழ்வாகவும் இருக்க வேண்டும், ஆனால் கையில் ஒட்டாமல் இருக்க வேண்டும். மாவு மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள். அது மிகவும் ஒட்டும் தன்மையுடையதாக இருந்தால், இன்னும் சிறிது மாவு சேருங்கள்.
 4. மாவை ஒரு எலுமிச்சை அளவில் சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளுங்கள்.
 5. லேசாக மாவு தடவப்பட்ட ஒரு பலகையில் வைத்து, வட்டமாக தேய்த்துக்கொள்ளுங்கள்.
 6. ஒருதவா அல்லது வாணலியை மிதமான சூட்டில் வைத்து, ரொட்டியை 1-2 நிமிடங்களுக்கு வேக வைத்திடுங்கள். பின், ரொட்டியை புரட்டிப் போட்டு, 1-2 நிமிடங்களுக்கு லேசாக பழுப்பு நிறமாக மாறும் வரை சமைத்திடுங்கள்.
 7. ரொட்டி மீது சிறிது நெய் தடவி சூடாக பரிமாறலாம்!

4. தினை உப்புமா

தினை உப்புமா, Thinai Upma

செய்முறை: 

 1. தினையை நன்கு கழுவுங்கள்.
 2. ஒரு பாத்திரத்தில் நெய் அல்லது சமையல் எண்ணெயை மிதமான சூட்டில் வைத்து சூடாக்குங்கள். அதில் கடுகு சீரகம் சேர்த்து தாளித்திடுங்கள்.
 3. நறுக்கிய தக்காளி, நறுக்கிய கேப்சிகம் மற்றும் இஞ்சி சேர்த்து வதக்குங்கள்.
 4. கேரட், பட்டாணி மற்றும் பச்சை பீன்ஸ் சேர்த்து, மேலும் 2-3 நிமிடங்களுக்கு அல்லது காய்கறிகள் சிறிது மென்மையாகும் வரை வதக்குங்கள்.
 5. பின்னர் அதில் தினையைச் சேர்த்து, காய்கறிகளுடன் சேர்த்துக் கிளறலாம்.
 6. தண்ணீர் சேர்த்து கொதிக்க வையுங்கள். வெப்பத்தை குறைத்து மூடி வைத்து, 15-20 நிமிடங்கள் அல்லது தண்ணீர் வற்றி, தினை நன்கு வேகும் வரை வைத்திருங்கள்.
 7. சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லியையும் சேர்த்து கிளறுங்கள்.
 8. விரும்பினால் கூடுதலாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து அலங்கரித்து தினை உப்புமாவை சூடாகப் பரிமாறி, ருசித்து மகிழுங்கள்!

5. தினை லட்டு

தேவையான பொருட்கள்:

1 கப் தினை

1 கப் பனை சர்க்கரை / வெல்லம்

½ கப் நெய்

½ கப் நறுக்கிய கொட்டை வகைகள் (பாதாம், முந்திரி மற்றும் பிஸ்தா)

1 தேக்கரண்டி ஏலக்காய் பொடி

 செய்முறை: 

 1. தினையை மிதமான தீயில் வைத்து, அது லேசான பழுப்பு நிறமாகி நறுமணம் வரும் வரை வறுத்து, அதை ஆற வையுங்கள்.
 2. வறுத்த தினையை ஒரு food processor அல்லது மிக்ஸியில் நைசாக அரைத்திடுங்கள்.
 3. ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு மிதமான தீயில் சூடாக்கி, அதில் அரைத்த தினை மாவை சேர்த்திடுங்கள். கலவை சிறிது பழுப்பு நிறமாகி, வறுத்த வாசனை வரும் வரை தொடர்ந்து அதைக் கிளறுங்கள்.
 4. அடுப்பிலிருந்து கடாயை இறக்கி, பனை சர்க்கரை / பொடித்த வெல்லம் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளறுங்கள்.
 5. அதை ஒரு கைப்பிடி அளவு எடுத்து லட்டு உருண்டையாக பிடிக்கவும்.
 6. லட்டுகளின் மேற்பரப்பில் ஓட்டிக்கொள்ளும் விதமாக, நறுக்கிய கொட்டை வகைகளை போட்டு உருட்டுங்கள்.
 7. லட்டுகளை இனிப்பு பலகாரமாக அல்லது சிற்றுண்டியாகப் பரிமாறலாம்.

குறிப்பு: விரும்பினால், உலர்ந்த பழங்கள் அல்லது தேங்காய் துருவல் போன்ற பிற பொருட்களையும் லட்டுகளில் சேர்த்து, மேலும் சுவைகூட்டி ருசித்து மகிழுங்கள்!

6. தினை குடைமிளகாய் ரெசிபி

தினை குடைமிளகாய் ரெசிபி, Thinai Kudaimilagai Recipe

தேவையான பொருட்கள்:

குடைமிளகாய் 6 (2 பச்சை, 2 சிவப்பு, 2 மஞ்சள் மிளகாய்கள் இருந்தால் நன்றாக இருக்கும்!)

தினை 3 கப் (சாதமாக சமைத்தது)

கருப்பு சுண்டல் ½ (வேகவைத்தது)

தக்காளி ½ கப் (நறுக்கியது)

பச்சை பீன்ஸ் ½ கப் (நறுக்கியது)

மிளகு சேர்த்த பாலாடைக்கட்டி (Pepper Jack cheese) ¾ கப்

ஆலிவ் எண்ணெய் 3 மேசைக்கரண்டி

எலுமிச்சை சாறு 2 மேசைக்கரண்டி

கொத்தமல்லி இலை 1 கைப்பிடி (நறுக்கியது)

சீரகப்பொடி 1 தேக்கரண்டி

மிளகுத்தூள் 2 தேக்கரண்டி

உப்பு 2 தேக்கரண்டி

செய்முறை:

 1. Oven அடுப்பை 176°C/350°F வெப்பநிலைக்கு முன்கூட்டியே சூடாக்குங்கள்.
 2. குடைமிளகாய்களின் மேற்பகுதியை வெட்டி, உள்ளேயிருக்கும் வெள்ளையான தண்டு பகுதியையும் விதைகளைகளையும் அகற்றுங்கள்.
 3. ஒரு கிண்ணத்தில் மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து, ஒன்று அல்லது இரண்டு முறை லேசாக கிளறுங்கள்.
 4. கிளறி வைத்துள்ள பொருட்களை ஒவ்வொரு மிளகாயிலும் நிரப்புங்கள்.
 5. மேற்புறத்தில் பாலாடைக்கட்டியைத் (Cheese) தூவுங்கள்.
 6. ஒரு பேக்கிங் தாளில் வைத்து, மிளகாய்கள் மென்மையாக வேகும் வரை சுமார் 25-30 நிமிடங்கள் பேக் செய்யுங்கள்.
 7. சூடாகப் பரிமாறலாம்.

எதிர்காலத்தில் சிறுதானியங்களின் பங்கு

தொடர்ந்து மாறிக்கொண்டே வரும் நம் உலகில் எதிர்வரும் ஆண்டுகளில் தினை போன்ற சிறுதானியங்கள் முக்கிய பங்கை வகிக்கப் போகின்றன. பெருகிவரும் உலக மக்கள்தொகையாலும் காலநிலை மாற்றத்தின் விளைவுகள் அதிகமாகி வருவதாலும், ஆரோக்கியமான சத்தான உணவு ஆதாரங்களின் தேவை அதிகரிக்கிறது. இந்த சூழலில், அனைத்து மக்களும் தங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதை உறுதி செய்வதில், தினைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

எதிர்காலத்தில், மனித நாகரிகத்தின் முக்கிய அங்கமாக தினைகள் இருக்கும் என்பது தெளிவாகிறது. சத்தான உணவு ஆதாரமாகவும், பலவகையான உணவுகளில் சுவையான மூலப்பொருளாகவும், சவாலான காலநிலையில் வாழும் மக்களுக்கு ஆரோக்கியமான விருப்பத் தேர்வாகவும், பல சூழல்களில் இந்த சிறுதானியம் மனிதகுலத்திற்கு தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கும்.

ஆசிரியர் குறிப்பு: : சிறுதானியத்தை முயற்சி செய்ய விரும்புகிறீர்களா? இங்கிருந்து தொடங்குங்கள்!