கொல்லைப்புற இரகசியம் - பகுதி 25

ஒரு வாரம் வாட்டிய வைரஸ் காய்ச்சலால் உடல் பலவீனமாகி, சற்று தேறியதும் அன்று என் பைக்கை எடுத்துக்கொண்டு வெளியில் கடைத்தெருப்பக்கம் விரைந்தேன். வழியில் உமையாள் பாட்டி ஒரு பெரிய தூக்குப் பாத்திரத்தை சுமந்தபடி தெருவில் நடந்து சென்று கொண்டிருப்பதைப் பார்த்ததும், அப்படியே பைக்கில் ஒரு ‘U turn’ போட்டு, பாட்டியிடம் சென்று வண்டியை நிறுத்தினேன். என்னைப் பார்த்ததும் “வாப்பா நல்ல நேரத்துல வந்தெ! ஒரு வார காய்ச்சல்ல ரொம்ப மெலிஞ்சிட்டியே?! சரி... என்ன கொஞ்சம் வீட்டுல இறக்கி விட்டுட்டுப் போயேன்!” என்றாள் பாட்டி.

கோதுமைக் கஞ்சி , கோதுமை அடை உடலுக்கு பலத்தைக் குடுக்கும். கோதுமை நொய் கஞ்சி, காய்ச்சலால் இழந்த பலத்தை மீட்டெடுக்கும். அசிடிட்டி, அஜூரணம் உள்ளவங்களுக்கு கோதுமை ரவைக் கஞ்சி நல்ல பலன் தரும். கபம் நோய் உள்ளவங்க ‘கோதுமைப் பால்’ செஞ்சு குடிச்சா ரொம்ப நல்லது.

“எனக்கு தல போகுற வேலை இருந்தா கூட உங்களுக்கு உதவி செய்யுறதுதான் எனக்கு முதல் வேலை பாட்டி! ஆனா... எனக்கு இப்போ வேற வேலை ஏதும் இல்ல, உங்களுக்கு உதவி செய்யுறதுதான் எனக்கு வேலையே!” நான் கொஞ்சம் எள்ளல் தொனியில் கூறினாலும் அதுதான் உண்மையும் கூட! பல நேரங்களில் பாட்டியின் கை வைத்திய குறிப்புகள் எனக்கு பேருதவியாய் இருந்திருப்பதை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது!

“சரி சரி... ஓவரா சாம்பிராணி போடாதப்பா!” என்று என்னை மட்டம் தட்டியபடி பைக்கில் ஏறி அமர்ந்தாள் பாட்டி!

“என்னது பாட்டி தூக்குச் சட்டியில?” பாட்டி வீட்டு அடுப்பங்கரையில் தூக்குப் பாத்திரத்தை இறக்கி வைத்தபடி கேட்டேன்.

என் கேள்விக்கு பதிலேதும் சொல்லாமல், “நீ போயி சத்த அப்படி உக்காரு, நாங் இதோ வர்றேன்!” என்று பீடிகை போட்டாள் பாட்டி!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சற்று நேரத்தில் ஒரு செப்புக் குவளையில் சூடாக ஒரு கஞ்சியைக் கொண்டுவந்து கையில் கொடுத்து, “இந்தா கோதுமை நொய் கஞ்சி, குடி! சுரம் வந்தவுகளுக்கு இந்த கஞ்சி நல்ல மருந்து!” என்று பாட்டி சொன்னதும் அந்த தூக்குப் பாத்திரத்தில் இருந்தது ‘கோதுமை நொய்’ (நொய்-குறுணை) என்பதை புரிந்துகொண்டேன்.

அந்த கோதுமை நொய் கஞ்சியை குடித்ததும் சற்று கூடுதல் புத்துணர்ச்சி கிடைக்க, தொடர்ந்து இன்னும் சில கேள்விகளை பாட்டியிடம் கேட்கத் தயாரானேன்!

கோதுமை மாவுடன் பச்சைப் பயறு மாவும் தயிரும் கலந்து முகத்தில் பூசி, காய்ந்தபின் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் முகச்சுருக்கம், கரும்புள்ளி, முகத்திலுள்ள மாசு மறையும்.

“கோதுமையில சப்பாத்தியை தவிர எனக்கு வேறெந்த பதார்த்தமும் தெரியாது பாட்டி! கோதுமையில இப்போதான் கஞ்சி குடிக்குறேன். கோதுமையோட மருத்துவ பயன்கள் என்னென்னனு சொல்லுங்க பாட்டி!”

“கோதுமைக் கஞ்சி , கோதுமை அடை உடலுக்கு பலத்தைக் குடுக்கும். கோதுமை நொய் கஞ்சி, காய்ச்சலால் இழந்த பலத்தை மீட்டெடுக்கும். அசிடிட்டி, அஜூரணம் உள்ளவங்களுக்கு கோதுமை ரவைக் கஞ்சி நல்ல பலன் தரும். கபம் நோய் உள்ளவங்க ‘கோதுமைப் பால்’ செஞ்சு குடிச்சா ரொம்ப நல்லது. கெமிக்கல், உலோகம் சம்பந்தமான தொழில்ல இருக்குறவங்க தொழிற்சாலை நஞ்சு உடல்ல கலந்துருச்சுன்னா, கோதுமை மாவை நீர்ல கலந்து குடிச்சு வந்தா, நல்ல பலன் கிடைக்கும். இதெல்லாம் உட்பிரயோக பலன்கள்... கோதுமைய உடல்ல வெளிப்பிரயோகமாவும் பல பிரச்சனைகளுக்கு பயன்படுத்தலாம்!”

“ஓ கோதுமைய வெளிப்பிரயோகமாவும் பயன்படுத்தலாமா? அதெல்லாம் என்னென்ன பலன்கள் பாட்டி?”

“கோதுமை மாவை காடியில் (Vinegar) கலந்து பூசினா வியர்க்குரு குணமாகும். கோதுமை மாவை களியா செஞ்சு சுளுக்கு உள்ள இடத்துல கட்டினா வலி குறையும். அக்கி, நெருப்பு பட்ட இடம், மேல்தோல் உரிஞ்ச இடத்தில எல்லாம் கோதுமை மாவ பூசி வந்தா, அந்த இடத்துல உள்ள எரிச்சல் தணியும். நெஞ்சு சளிக்கும் கப பிரச்சனைக்கும் கோதுமை தவிட ஒற்றடமா உபயோகிச்சா நோய் வீரியம் குறையும்.”

பாட்டி கோதுமையின் வெளிப்பிரயோக பலன்களை அடுக்கிக்கொண்டே போக, கேட்டுக்கொண்டிருந்த எனக்கு எனர்ஜி லெவல் கம்மியாக, மீண்டும் ஒரு டம்ளர் கோதுமை நொய் கஞ்சியை பாட்டியிடம் கேட்டு வாங்கி குடித்துவிட்டு வீட்டிற்கு கிளம்பினேன். எனக்கு மட்டும் பிரத்யேகமாக பாட்டி கூறிய அந்த அழகுக்குறிப்பை வீட்டில் சென்று செய்து பார்க்க மும்முரமானேன். சரி... இப்போது உங்களுக்கும் அதை சொல்லிவிடுகிறேன்! கோதுமை மாவுடன் பச்சைப் பயறு மாவும் தயிரும் கலந்து முகத்தில் பூசி, காய்ந்தபின் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் முகச்சுருக்கம், கரும்புள்ளி, முகத்திலுள்ள மாசு மறையும்.

குறிப்பு:

கோதுமையை வறுத்து, அதோடு தேன் கலந்து 1 கிராம் வீதம் இருவேளை சாப்பிட மூட்டுவலி தீவிரம் குறையும்!

கோதுமைப் பால் செய்யும் முறை:

30 கிராம் கோதுமை நொய்யை முந்தின நாளே நீரில் ஊற வைத்து, காலையில் நன்றாய் அடித்து பசையாக்கி, மெல்லிய துணியால் வடிகட்டி பிழிந்தெடுத்தால் ‘கோதுமைப்பால்’ கிடைக்கும்.

கொல்லைப்புற இரகசியம் தொடரின் பிற பதிவுகள்