அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்த என்ன வழி என்றுதான் நம்மில் நிறைய பேர் யோகாவைத் தேர்ந்தெடுப்போம். உண்மையில் இந்த மனதைக் கட்டுப்படுத்த முடியுமா? இதற்கு சத்குரு சொல்லும் பதில் இங்கே...


Question: "என் மனம் திருப்தியில்லாமல் அலைகிறதே?"

சத்குரு:

"அப்படியா? பத்து நிமிடங்களுக்குத் தொடர்ந்து உங்கள் மனதை கவனியுங்கள். அங்கு உற்பத்தியாகி அலைபாய்கிற எண்ணங்களை எல்லாம் நேர்மையாக ஒரு காகிதத்தில் பட்டியல் போட்டுக் கொண்டே வாருங்கள்.

ஓர் இடைவெளிவிட்டு அதை உங்கள் நண்பரிடம் காட்டுங்கள் அல்லது நீங்களே படித்தாலும் சரி... இன்னும் உங்களுக்குப் பைத்தியம் பிடிக்காமல் எப்படி இருக்கிறது என்று உங்களுக்கே ஆச்சரியம் வந்துவிடும்

இப்போது உங்களுக்கும், மனநோயாளிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

ஒரே ஆறுதல், உங்கள் பைத்தியக்காரத்தனத்தை சமூகம் வரையறுத்துள்ள எல்லைகளுக்குள் வைத்திருக்கிறீர்கள். வெளியே தெரியாமல் மறைத்து ஒளித்து நாடகமாடும் தந்திரம்தான் உங்களைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.

பைத்தியக்காரத்தனத்தை ஒளித்து வைப்பது உங்கள் பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டு வந்துவிடாது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

முழுமையான விழிப்பு உணர்வு இல்லாமல் உங்கள் வாழ்க்கை தன்பாட்டுக்குத் தற்செயலாக நடக்கவிட்டுக் கொண்டு இருந்தால், மனதுக்கு என்றைக்கும் திருப்தி கிடைக்காது. வாழ்க்கையை ஒவ்வொரு கணமும் முழுமையாக வாழுங்கள். மனம் வீணாக அலைபாய்வதை நிறுத்திவிடும்.

Question: "கடவுளுக்கு நெருக்கமாக இருக்க வேண்டுமென்றால், அற்பமான அன்றாடக் காரியங்களையெல்லாம் உங்களைப் போல் துறந்து விட வேண்டுமா?"

சத்குரு:

"என் துணிகளை நானே துவைத்துக் கொள்கிறேனே, அது அன்றாடக் காரியமில்லையா? தென்னை மரங்களுக்குத் தண்ணீர் ஊற்றி கவனித்துக் கொள்கிறேன். எனக்கான உணவைத் தயாரித்துக் கொள்கிறேன்... இவையெல்லாம் அற்பக் காரியங்களா? இதையெல்லாம் தவிர்த்துவிட்டு இந்த உலகத்தில் எப்படி வாழப் போகிறீர்கள்?

நீங்கள் அரசியலில் இருக்கலாம். கணக்கெழுதுபவராக இருக்கலாம். பெரிய நிர்வாகியாக இருக்கலாம். தெருவைச் சுத்தம் செய்பவராகக்கூட இருக்கலாம். என்ன வேலை செய்பவராக இருந்தாலும் இந்த உலகில் வாழ்வதென்றால் சில காரியங்களைச் செய்துதான் ஆக வேண்டும். அவற்றை அற்பமென்று நினைத்துக் கொள்வதால்தான் வருகிறது ஆபத்து!

உங்களுக்குப் பிரியமான காரியம் எதுவோ, அதை முழுமையாகச் செய்தால், கடவுளுக்கு நெருக்கமாக இருக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம்.

இன்னொருவரைப்போல வாழ வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு வீணாக வேதனைகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள்!"

Question: "மிகைப்படுத்தும் விளம்பரங்கள் இல்லாமல் வியாபாரம் செய்ய முடியாதா?"

சத்குரு:

"ஒரு குறிப்பிட்ட உணவு விடுதி. பளபள மேஜை, சீருடை அணிந்த பணியாளர்கள், சீரியல் பல்புகள். ஆனால், அங்கே சமையலில் ஈடுபட்டிருப்பவரோ, சாப்பிடுபவர்களைப் பற்றிய கவலை இன்றி, தரமற்ற பொருட்களை உணவில் சேர்ப்பவர்.

இன்னொரு விடுதி. மின் அலங்காரங்கள் இல்லை. கவர்ச்சிகரமான வார்த்தைகள் இல்லை. ஆனால், அங்கே சமைப்பவரோ, சாப்பிடுபவர்களின் உடல் நலத்தைப் பற்றிய அக்கறை கொண்டவர். தரமற்ற பொருட்களை ஒருபோதும் உணவில் சேர்க்க மாட்டார்.

இரண்டில் எந்த உணவு விடுதிக்கு நீங்கள் போவீர்கள்?

வாடிக்கையாளர் மீது உண்மையான அக்கறையுடன் செயல்படும் விடுதிக்கா? பகட்டான வார்த்தைகளைச் சொல்லி தரமற்ற உணவுகளை விற்கும் விடுதிக்கா?

தரமில்லாத பொருளைத் தயாரித்து, விளம்பரத்தால் ஏமாற்றி, அதை வாடிக்கையாளர் தலையில் கட்டுவது மொத்த உலகத்தையும் கொள்ளையடிப்பதற்குச் சமம்.

விளம்பரம் என்பது உண்மையைச் சொல்வதாக, இன்ன இடத்தில் இன்னது கிடைக்கிறது என்பதை ஜனங்களுக்குத் தெரியப்படுத்தும் அறிவிப்பாக மட்டுமே இருக்க வேண்டும். மக்களை ஏய்த்து விற்பனை செய்வதற்காக இருக்கக்கூடாது. வாடிக்கையாளரையும் தன்னைப்போலவே மதித்தால், குற்ற உணர்வுகள் சேராது. தானாகவே வியாபாரம் பெருகும். தொழிலும் நீண்ட காலம் நிலைத்து நிற்கும்!"