சிலர் கல்லை எறிந்தார்கள் சிலர் சொல்லை எறிந்தார்கள்
குருவோ மௌனமாய் இருக்கிறார் என அனைவரும் நினைத்தார்கள்
உண்மை வெகுநாள் உறங்காது, அது விழித்தால்
அதன் சக்தியினை இந்த உலகம் தாங்காது!

சத்குரு: அன்று அந்த யோகியின் வீடு உடைக்கப்பட்டது. ஊர்மக்கள் அனைவரும் சேர்ந்து அவரைக் கடினமான வார்த்தைகளால் ஏசினர். ஆனால், மென்மையான அந்த மனிதரோ, முகத்தில் ஆனந்தம் மாறாமல் இருந்தார். கௌதம புத்தரோ தனக்கென ஒரு கொள்கையை வைத்திருந்தார். அவர் அரசர்களுக்கும் சக்கரவர்த்திகளுக்கும் துறவறம் அளித்து கையில் திருவோடு ஏந்த வைத்தார். இதனால் மக்களுக்கு அவர் மீது வெறுப்பு இருக்கலாம். ஆனால், இந்த யோகியோ மென்மையான மனிதர். பொதுவாக மக்கள் இவரைப் பார்த்துச் சிரிக்கும் வகையில்தான் இவரது உருவம் இருக்கும். குண்டான தேகம் கொண்ட இவர் எருமையின் மீது அமர்ந்து ஊர் ஊராக சென்று கௌதம புத்தரின் செய்தியை வழங்குவார். கௌதமரின் செய்தியை மிகவும் வித்தியாசமான வகையில் வழங்கிடும் லாவோட்சுவைக் கண்டு மக்கள் சிரிப்பதுதான் வழக்கம்.

லாவோட்சு மீது வீண்பழி சுமத்தப்பட்டபோது

திருமணமாகாத அந்த இளம் பெண் அவரது வீட்டைச் சுத்தம் செய்யச் செல்வது வழக்கம். அவள் கருவுற்ற செய்தியை ஒரு நாள் கேட்டதும் அவளது தந்தைக்குக் கோபம் தலைக்கேறியது. “இதற்குக் காரணம் யார்?” எனக் கேட்டார். தன் தந்தையின் கோபத்தைக் கண்ட இவள் உண்மையைச் சொன்னால் பெரும் அசம்பாவிதங்கள் ஏற்படும் எனப் பயந்து குருவின் பெயரைக் கூறி தப்பித்து விட எண்ணினாள். அதனால், “குரு லாவோதான் இதற்குக் காரணம்,” என பொய் கூறினாள். இதனைக் கேட்ட ஊர் மக்கள் கொதித்தெழுந்தனர்.

லாவோட்சு, தன் வாழ்க்கையில் மிகக் கடினமான சூழ்நிலைகளை எதிர் கொண்டார். தான் செய்யாத குற்றத்தினைச் செய்ததாக பழி சுமத்தப்பட்டார். இத்தனை சம்பவங்களையும் தாண்டி அவர் எந்த எதிர்செயலும் செய்யாமல் அமைதியாக இருந்தார்.

ஊர் மக்களை அழைத்துக் கொண்டு அப்பெண்ணின் தந்தை குரு லாவோவிடம் வந்தார். “இதற்கு நீங்கள்தான் காரணம் என இவள் சொல்கிறாள். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என அவளது தந்தை கேட்க, “அட, அப்படியா?” எனச் சிரித்துக்கொண்டே பதில் கூறினார்.

நீங்கள் நல்லவரென நினைத்தோம். உங்களை மிகப் பெரிய மகான் என நினைத்தோம். சிறந்த குருவென நினைத்தோம். ஆனால், நீங்கள் இப்படி ஒரு பாதகச் செயலைச் செய்துவிட்டீர்களே எனச் சாடினர். பொதுமக்கள் அவர் வீட்டினை உடைத்தனர். அவரைக் கண்டபடி ஏசினர். “நீங்கள் ஞானோதயம் அடைந்தவரில்லை, பித்தலாட்டக்காரர்!” என்றனர்.

அதற்கு லாவோட்சு, “அப்படியா?” என்றார்.

அவ்விடத்திலிருந்த துறவிகளைத் துன்பப்படுத்தி அவ்விடத்தினை விட்டு வெளியேற்றினர். அனைத்துத் துறவிகளும் அங்கிருந்து சென்றுவிட்டாலும், லாவோட்சு அங்கேயே தொடர்ந்து வாழ்ந்து வந்தார். அந்தப் பெண்ணின் கர்ப்பத்தில் குழந்தையும் வளர ஆரம்பித்தது.

மறைக்கப்பட்ட உண்மை

உண்மை அவளுக்குள் உறுத்த ஆரம்பித்தது. குருவின் பெயரைக் கூறினால் அவரது பெயரில் இருக்கும் மரியாதை காரணமாக அனைவரும் அவரை ஒன்றும் செய்யமாட்டார்கள் என நினைத்தே அவரது பெயரை அவள் சொல்லி இருந்தாள். சந்தர்ப்ப சூழ்நிலையால் பொய் கூறிய அவள், தன் மனதினை ஆற்ற வழி இல்லாமல் உண்மையை தன் தந்தையிடம் சொன்னாள்.

“தந்தையே! இதற்குக் காரணம் லாவோ இல்லை” என்றாள். கரு வளர்ந்து அவள் பிரசவ காலத்தை நெருங்கிக் கொண்டிருந்த நேரமிது. மிகுந்த அதிர்ச்சி அடைந்த அவளது தந்தை, “இதனை இப்போது ஊர் மக்களிடம் கூற இயலாது. நான் அந்த குருவுக்கு மாபெரும் பாதகம் செய்தேன். அத்தனையையும் பொறுத்துக் கொண்டு அவர் அமைதியாக இருந்தார். நான் அவருக்குச் செய்ததை எண்ணிப் பார்த்தால் இப்போது அவர் மீது தவறில்லை எனத் தெரிய வந்தால் ஊர்மக்கள் என் தலையைத் துண்டித்து விடுவார்கள்,” என்றார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அதற்குள் அவளது பிரசவ காலம் நெருங்கியது. அவள் ஒரு அழகிய குழந்தையைப் பெற்றெடுத்தாள். அந்தக் குழந்தையும் வளர்ந்தது. ஊர் மக்கள் அனைவரும் இது, “லாவோவின் குழந்தை தானே! அதனால் இதனை லாவோவிடமே கொடுத்துவிடுங்கள்,” எனச் சொல்லி அவளிடமிருந்து குழந்தையைப் பிடுங்கி, “இது உங்கள் குழந்தை. நீங்கள்தான் இவனை வளர்க்க வேண்டும்,” என்று லாவோவிடம் கூறினர். லாவோ எந்தப் பதற்றமும் இன்றி, “அப்படியா? சரி!” என்றார்.

உண்மை வெளிப்பட்ட தருணம்

அந்தக் குழந்தையை அவர் வளர்த்தார். அந்தக் குழந்தை அவரது வளர்ப்பில் ஆனந்தமாக வளர்ந்தது. இப்படியே காலம் உருண்டோடியது. அத்தனை விஷயங்களையும் பார்த்து வந்த அந்தப் பெண்ணால் இதனைத் தாங்கிக்கொள்ள இயலவில்லை. நடந்த உண்மையை ஊர் முழுக்கச் சொன்னாள். “குழந்தைக்கு தந்தை குரு லாவோட்சு இல்லை. மீன் சந்தையில் இருக்கும் அவன்தான்!” எனத் தப்பட்டம் அடித்தாள். 

தங்கள் தவறை எண்ணி வருந்திய ஊர் மக்கள் அவரது காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டனர். “குருவே, இது உங்கள் குழந்தை இல்லை. உங்களுக்கு அவமதிப்பு செய்துவிட்டோம்,” என்றனர். லாவோ அப்போதும் எந்தப் பதற்றமும் இன்றி, “அப்படியா? சரி,” என்றார். குழந்தையை மறுபடியும் அவர்களிடம் அனுப்பிவிட்டு அவரது வாழ்க்கையை வழக்கம்போலத் தொடர்ந்தார்.

லாவோட்சு, தன் வாழ்க்கையில் மிகக் கடினமான சூழ்நிலைகளை எதிர் கொண்டார். தான் செய்யாத குற்றத்தினைச் செய்ததாக பழி சுமத்தப்பட்டார். இத்தனை சம்பவங்களையும் தாண்டி அவர் எந்த எதிர்செயலும் செய்யாமல் அமைதியாக இருந்தார். அவரது உயர்ந்த உள்ளத்தை ஊர்மக்கள் உணர ஆரம்பித்தனர். பின்னர் அந்தச் சமூகம் அவரை உயர்ந்த மனிதராக ஞானியாக ஏற்றுக்கொண்டது. பின்னாட்களில் நாடு முழுவதும் அவரது புகழ் பரவியது.

லாவோட்சுவை நீதிபதியாக்கிய அரசர்

லாவோட்சு, Lao Tsu

ஒரு நாள் அந்த தேசத்தின் அரசர் அவரை அழைத்து, தாம்தான் இந்த தேசத்தின் மிகச் சிறந்த ஞானி. அதனால் நீங்கள் இந்த தேசத்தின் தலைமை நீதிபதியாக இருக்க வேண்டும்,” எனக் கூறினார். அதற்கு லாவோ, “நீங்கள் உண்மையாகத்தான் சொல்கிறீர்களா? என்னுடைய ஞானமும் உங்களுடைய ஆர்வமும் ஒரே நேர்கோட்டில் இல்லாமல் போகலாம். என்னுடைய அறிவு உங்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாமல் போகலாம்,” என்றார். 

அதற்கு அரசர், “ஒரு திருடனைக் கையும் களவுமாக பிடித்து இவர் கையில் கொடுத்தால் இவர் அவனுக்கு செல்வத்தைக் கொடுக்கச் சொல்லி செல்வந்தருக்கு சிறை தண்டனை அளித்தாரா? இவரது மூளை வேலை செய்யவில்லையா என்ன?” என்று திகைத்துப் போனார்.

அதற்கு அரசர், “இல்லை இல்லை... தாங்கள்தான் இந்த நாட்டின் மிகச் சிறந்த ஞானி. எதுவும் தவறாகப் போக வாய்ப்பில்லை. நீங்கள் நீதிபதியாக இருப்பதுதான் சரியாக இருக்கும்,” என்று சொன்னார். 

இப்படி அவருக்கு நீதி கூற ஒரு வழக்கு வந்தது. ஒரு செல்வந்தரின் வீட்டில் சிறு கூலிக்காக வேலை செய்து வந்த ஒரு வேலையாள் இருந்தார். தன் குழந்தைப் பருவத்திலிருந்து அவர் அந்தச் செல்வந்தரின் வீட்டில் இருந்தார். அவரை அடிமையாக விலைக்கு வாங்கியிருந்தனர். அவருக்கு உணவைத் தவிர வேறு எதுவும் வழங்கப்படவில்லை. அந்த வீட்டிலேயே 30 ஆண்டுகளுக்கும் மேல் வளர்க்கப்பட்டார். ஒருநாள் அந்த வீட்டில் இருந்த எல்லா நகைகளையும் திருடிக்கொண்டு ஓடினார். 

வழக்குத்தொடுத்த அந்தச் செல்வந்தர், வேலையாளை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தார். செல்வந்தர் அவரை கடுமையான வார்த்தைகளால் ஏசினார். “இந்த முட்டாளை நான் சிறுவயதிலிருந்து வளர்த்தேன். நான் அவனுக்கு அனைத்தையும் அளித்தேன். அவனிடம் எதுவும் இல்லை. அவன் தெருவோரத்திலேயே இறந்திருப்பான். நான் அவனை ஒரு மனிதனாக இன்று வளர்த்திருக்கிறேன். நான் அவனுக்கு அனைத்தையும் அளித்தேன். அவனிடம் எதுவும் இருக்கவில்லை. ஆனால், இப்போது அவன் இங்கிருக்கும் அனைத்தையும் திருடிக் கொண்டு போய்விட்டான். நீங்கள் அவனுக்கு மரண தண்டனை அளித்திட வேண்டும்,” என்றார்.

திகைப்பில் ஆழ்த்திய லாவோட்சுவின் தீர்ப்பு

லாவோ இருதரப்பு வாதங்களையும் விசாரித்தார். தனது நீதியை வழங்கினார். “இவன், தான் திருடிய நகைகளில் பாதியை தானே வைத்துக்கொள்ளலாம். மீதிப் பாதி அரசரின் கிடங்கிற்கு அளித்திட வேண்டும். மேலும், அந்தச் செல்வந்தனுக்குப் பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்திட வேண்டும்,” என்றார். 

நீதிமன்றம் இந்த தீர்ப்பைக் கேட்டு அதிர்ந்தது. “இதுவா உங்கள் நியதி! இவர் பைத்தியமாகிவிட்டார் போலும்!” என்று பேச்சுக்கள் அடிப்பட்டன. அரசரிடம் தீர்ப்பைப் பற்றி புகார் செய்தனர்.

அதற்கு அரசர், “ஒரு திருடனைக் கையும் களவுமாக பிடித்து இவர் கையில் கொடுத்தால் இவர் அவனுக்கு செல்வத்தைக் கொடுக்கச் சொல்லி செல்வந்தருக்கு சிறை தண்டனை அளித்தாரா? இவரது மூளை வேலை செய்யவில்லையா என்ன?” என்று திகைத்துப் போனார்.

அரசர், லாவோவை அழைத்து, “நீங்கள் என்ன செய்தீர்கள்? நீங்கள் புத்திசாலி என நினைத்தேன். ஏன் இப்படிச் செய்தீர்கள்?” என்றார்.

“அந்தச் சிறுவன் அந்த வீட்டில் வளர்க்கப்பட்டான் - அவன் அந்த வீட்டுக் குழந்தையைப்போல! அவன் வேறெங்கோ பிறந்திருந்தாலும், அந்த வீட்டில்தான் வளர்க்கப்பட்டிருக்கிறான். அவன் தன் கண்முன்னே செல்வச் செழிப்பான வாழ்க்கையைக் கண்டிருக்கிறான். ஆபரணங்கள், நல்ல உணவு என பல்வேறு ஆடம்பரங்களைப் பார்த்திருக்கிறான். ஆனால், அவனுக்கு எதனையும் தொட அனுமதி அளிக்கப்படவில்லை. கடந்த 30 ஆண்டுகளாக அவன் இந்த வீட்டின் ஒரு பாகமாக இருந்திருக்கிறான்; எனினும் அவனை எதையும் தொட அனுமதிக்கவில்லை. இதனால் அவன் வேதனையில் இருந்திருக்கிறான். அதனால் அவன் செய்தது சரியே! 

அவன் எடுத்துக்கொண்டு சென்ற நகைகள், அவனுக்குச் சொந்தமானதே. ஆனால், வீட்டுச் சொந்தக்காரரிடம் சொல்லாமல் சென்றுவிட்டான். அதனால் அவனிடமிருந்து பாதிச் செல்வத்தைப் பறித்து அரசரிடம் கொடுக்க உத்தரவிட்டேன். ஒரு குழந்தையை தன் வீட்டில் வைத்து அந்தக் குழந்தைக்கு அவனது ஆசையைத் தூண்டிவிட்டு அவனுக்கு எதையும் கொடுக்காமல் இருந்ததனால் அந்த செல்வந்தனுக்குச் சிறைத் தண்டனை அளித்திட வேண்டும்!” என்றார்.

இதுபோன்றதொரு ஞானத்துடன் இன்று நாம் நீதி அளித்தால் இந்த உலகம் என்னவாகும் என்று நமக்குத் தெரியும்.

லாவோட்சுவின் இறுதி செய்தி

அவரது வாழ்வின் இறுதி நாட்களில் தனது 84 ஆவது வயதில் அவர் மரணப்படுக்கையில் இருந்தபோது, அவரது சீடர்கள் அவரிடம் வந்து அவரது இறுதிச் செய்தியைக் கேட்டனர். ஜென் மற்றும் தாய் (Thai) குரு-சிஷ்ய பாரம்பரியங்களில் குருவின் இறுதி நேரத்தில் அவர் அருகில் சென்று அவரது இறுதி செய்தியைக் கேட்பது வழக்கம். 

“உங்கள் வாழ்வில் மிகவும் கடுமையான சூழ்நிலைகளைச் சந்தித்திருக்கிறீர்கள்? ஆனால், உங்களை எப்போதும் ஆனந்தமாகவே பார்த்திருக்கிறோம். உங்கள் ஆனந்தத்தின் ரகசியம் என்ன?’’ அதற்கு லாவோ சொன்னார்: “ஓ அதில் ரகசியம் எதுவும் இல்லை. நான் ஒவ்வொரு நாளும் காலையில் விழித்தவுடன் இந்தக் கேள்வியை கேட்டுக்கொள்வேன். இன்று நான் ஆனந்தமாக இருக்கப் போகிறேனா? அல்லது துன்பமாக இருக்கப் போகிறேனா? இன்றுவரை நான் ஆனந்தத்தையே ஒவ்வொரு நாளும் தேர்ந்தெடுத்திருக்கிறேன், அவ்வளவுதான்!” என்றார்.

சாமான்ய மக்களால் ஒரு ஞானியைப் புரிந்துகொள்ள இயலாது. புரிந்து கொண்டவர்களால் அவரை விட்டு விலக இயலாது.

குறிப்பு:

இந்தக் கட்டுரை சத்குருவின் "யோகாவும் யோகிகளும்" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. புத்தகத்தை வாங்குவதற்கு இங்கே க்ளிக் செய்யுங்கள்!