IYO-Blog-Mid-Banner

கர்மா என்றால் என்ன? (Karma meaning in Tamil)

சத்குரு: கர்மா என்றால் என்ன என்பது பற்றி நிறையப் பேருக்கு குழப்பம் இருக்கிறது. உண்மையில் கர்மா என்றால் என்ன?

அடிப்படையில் கர்மா என்றால் செயல் என்று அர்த்தம். செயல் என்பது நான்கு விதமாக நடக்கிறது. உடலின் செயல், மனதின் செயல், உணர்வின் செயல், சக்தியின் செயல். உங்கள் தீர்மானத்துக்காகக் காத்திருக்காமல், ஒவ்வொரு கணத்திலும் ஏதோ செயல் நடந்து கொண்டேதான் இருக்கிறது.

 

ஆன்மிகப் பயிற்சிகள் சிலவற்றை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால், அந்த நினைவுகளுக்கும் உங்களுக்கும் ஓர் இடைவெளியை ஏற்படுத்திக்கொள்ள முடிவதை கவனிப்பீர்கள். உங்கள் தோற்றத்திலேயே ஒரு புதுப்பொலிவு வருவதை உணர்வீர்கள்.

 

இன்னொரு கோணத்தில் கர்மா என்பது நினைவுகளின் சேகரம். உங்கள் உடலின் ஒவ்வொரு செல்லும் அபாரமான நினைவாற்றல் மிக்கது. பல லட்ச வருடங்களின் நினைவுகளை அது சுமக்கிறது. உங்கள் சருமத்தின் நிறம், உங்கள் முகத்தின் வடிவம், உங்கள் உயரம், எல்லாமே நினைவுகளின் சேகரம்தான். உங்கள் மூதாதையர் எப்படித் தோற்றமளித்தார்கள், எப்படி வாழ்ந்தார்கள் என்ற நினைவுகளின் பதிவுகளை அடிப்படையாக வைத்து உங்கள் வாழ்க்கையை அது நடத்திக்கொண்டிருக்கிறது.

mother-and-daughter

 

உங்கள் மூதாதையரின் உருவம் பற்றிய நினைவுதான் உங்கள் கொள்ளுப்பாட்டிக்கு இருந்ததைப் போன்றதொரு மூக்கை உங்களுக்கு அளித்திருக்கிறது. நீங்கள் வசிக்கும் தேசத்தின் சீதோஷ்ணநிலைதான் உங்கள் சருமத்தின் நிறத்தைத் தீர்மானித்தது. நீங்கள் நாடு மாறிவந்து, வேறு தட்ப வெப்பநிலையில் தங்கினால் கூட, புதிய பகுதிக்கேற்ற சருமத்தின் நிறம் உங்களுக்குக் கிடைக்க அந்த நினைவு மறைய வேண்டும். அதற்கு சில லட்சம் வருடங்களாவது ஆகும். நினைவுகளின் தாக்கம் அந்த அளவுக்கு உங்களைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது.

நினைவுகளிலிருந்து விடுபடாவிட்டால், வாழ்க்கை ஒரேவிதமாக ஒரு வட்டத்துக்குள் சிக்கிச் சுழலும். முன்னேறும் பாதை அதற்கு விளங்காது. இன்னமும் உங்கள் கற்காலத்து மூதாதையர் பேராசையுடன் உங்கள் மூலம் தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தால், உங்களுடைய தனித்தன்மை கொண்ட வாழ்க்கையை நீங்கள் எங்கே வாழ்ந்து பார்ப்பது?

இதைத்தான், “இறந்தவர்கள் இறந்தவர்களாகவே இருக்கட்டும்” (“Leave the dead to the dead”) என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அவர்களை இறக்கவிட்டால்தான், உங்கள் உயிர் முழுமையாக மலர முடியும். புதிய வாய்ப்புகளைக் காண முடியும். ஆனால், அவ்வளவு சுலபத்தில் அவர்கள் உங்களிடமிருந்து விலகிவிட மாட்டார்கள். அப்படி அவர்களைக் குறைத்து மதிப்பிட்டுவிடாதீர்கள்.

ஒருவர் சந்நியாசம் வாங்கிக்கொள்ள முடிவு செய்தால், அந்த நபர் அவருடைய மூதாதையருக்கும், தாய் தந்தையருக்கும் கர்மச் சடங்குகளை நிகழ்த்துவார். அவர்களில் யாராவது உயிரோடு இருந்தாலும், இது நிகழும். அதற்காக சந்நியாசம் பெறுபவர் அவர்களுடைய மரணத்தை விரும்புகிறார் என்று அர்த்தமில்லை. அவர்களுடைய நினைவுகளின் தளைகளை முழுவதுமாக அறுக்கிறார்கள் என்றே அர்த்தம்.

உங்கள் உடல் மட்டுமல்ல, அறிவு என்பதும் நினைவுகளின் சேமிப்புதான். மற்றவருக்குத் தெரியாத நினைவுகளை வைத்துக்கொண்டு, உங்களை அவர்களிடம் புத்திசாலியாக்கிக் காட்டிக்கொள்ள முடிகிறது. இந்த வசதியால்தான், பல பள்ளி ஆசிரியர்களின் பிழைப்பு இன்றைக்கு ஓடிக்கொண்டிருக்கிறது.

புதிய வாழ்க்கையை வாழ்வதற்குத்தான் கவனமும் புத்திசாலித்தனமும் அவசியம். ஒரேவிதமான வாழ்க்கையை வாழ்வதற்கு நினைவுகள் போதும். பல பணியிடங்களில் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

உண்மையில், சுயநினைவு மங்கிய நிலையில், புத்திசாலித்தனமற்ற ஒரு செயலைத் திரும்பத் திரும்பச் செய்வது சுலபம்.

ரஷ்யாவில் மந்தமாகத் தெரிந்த தொழிலாளி ஒருவரை தொழிற்சாலை ஆய்வாளர் அருகே அழைத்தார்.

“வோட்கா ஒரு மடக்கு குடித்தால் உன்னால் தொடர்ந்து வேலை செய்ய முடியுமா?”

“முடியும் என்று நினைக்கிறேன்..” என்று பதில் வந்தது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

“ஐந்து மடக்கு குடித்தால்?”

“ஏன், அதற்கென்ன? இப்போது கூட வேலை செய்துகொண்டுதானே இருக்கிறேன்?” என்றார், அந்தத் தொழிலாளி.

இப்படித்தான், பல லட்சம் மடக்கு வோட்காவைக் குடித்தவர்கள் போல் நீங்களும் மறுபடி மறுபடி ஒரேவிதமாகவே இயங்கிக் கொண்டிருக்கிறீர்களே, அதுதான் கர்மா.

சுழற்சியை உடைப்பதுதான் ஆன்மீகம்

செக்குமாடு சுற்றி சுற்றி வருவதுபோல மீண்டும் மீண்டும் சுழல்கிறீர்கள். குழந்தையாக இருக்கும்போது விளையாட்டு, இளமையில் வேறு நாட்டம்… நாற்பது வயதைத் தாண்டினால், குழப்பமான மனநிலை. அறுபது வயதில் ‘என்ன நடக்கிறது எனக்கு? எதற்காக இந்த வாழ்க்கை?’ என்ற கேள்வி. இதைப்போய் ஒருசிலர் ஆன்மீகம் என்று நினைத்துக் கொண்டு விடுகிறார்கள். அப்படியல்ல, இது வெறும் சுழற்சிதான்.

இப்படித்தான் உங்கள் மூதாதையர்களின் அதே பழைய சக்கரம் உங்கள் மூலமாக இப்போது சுழன்று கொண்டிருக்கிறது.

ஆன்மீகம் என்றால் உங்கள் தாத்தாவும், அப்பாவும், அம்மாவும் உங்கள் மூலமாக ஜீவிப்பதற்கு அனுமதிக்காமல் உங்களது வாழ்க்கையை ஒரு புத்தம்புது உயிராக, ஒரு புதிய சாத்தியமாக நீங்களாகவே உருவாக்கிக்கொள்வதுதான் – இதுதான் ஆன்மீகம். இந்த சுழற்சியை உடைப்பதுதான் ஆன்மீகம்.

வட்டங்களில் சுழலும்போது முன்னோக்கி நகரமாட்டீர்கள் அல்லவா? வட்டங்களில் சுழல்கிறீர்கள் என்றால் எங்கும் சென்று சேராமல் ஒரே இடத்தில் தேங்கி இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

‘புனரபி ஜனனம், புனரபி மரணம்’ என்ற சுழற்சியில் சிக்கிக்கொள்வதால் என்ன பலன்?

உங்களுக்கு சாதகமாக அமைந்தது என்னவென்றால் ஒவ்வொரு சுழற்சியின்போதும் முந்தைய சுழற்சியை மறந்துவிடுகிறீர்கள். அதைப்பற்றி நினைவிருந்தால் உங்களுக்கு நீங்களே ஒரு முட்டாளாகத் தோன்றுவீர்கள். நூற்றுக்கணக்கான முறைகள் அதே சுழற்சி, ஒரே விஷயத்தை செய்துகொண்டு இருந்து ஒவ்வொரு முறையும் அதில் கிளர்ச்சி கொண்டேன் என்று புரிந்தால் உங்களை நீங்கள் அடிமுட்டாளாகவே உணர்வீர்கள் இல்லையா?

இந்த நினைவுகள் தவணைகளிலேயே வருகின்றன, மொத்தமாக திறப்பதில்லை.

இயற்கை உங்களுக்காக வைக்கும் ஒரு தூண்டில்

நினைவுகளின் சேகரம் இருபகுதிகளாக உங்களைச் செலுத்துகின்றன. இதைத்தான் சஞ்சித கர்மா என்றும், பிராராப்த கர்மா என்றும் சொல்கிறோம். நினைவுகள் மொத்தமாக ஒரே ஒரு சுழலாக மட்டுமே வந்தால், உடனடியாக நீங்கள் விடுதலை பெறுவீர்கள். ஏனென்றால், அதே விஷயத்தை மறுபடி மறுபடி செய்ய நீங்கள் நிச்சயம் விருப்பப்பட மாட்டீர்கள். இந்த முட்டாள்தனத்தை தவிர்த்து முன்னோக்கி நகரவே முயல்வீர்கள். ஆனால் ஆயிரம்முறை அதே வட்டத்தில் பயணித்தாலும், நினைவுகளை மறந்துவிட்டதால் இதை புதியது என்று நினைத்துக்கொள்கிறீர்கள்.

அமெரிக்காவில் முதியோருக்கான ஒரு மருத்துவமனையில் 90 வயது மூதாட்டி ஒருவரைப் பற்றிச் சொன்னார்கள். அல்ஸிமர் என்கிற மறதி நோயால் பாதிக்கப்பட்டு, பெரும்பாலான நினைவுகளை இழந்து விட்டநிலையில் அவள் சக்கர நாற்காலியில் வாழ்கிறாள். திடீர் திடீரென்று இளவயதின் நினைவுகள் அவளுக்கு மீள்வதுண்டு. அந்த நேரத்தில் யாராவது ஆண்கள் கடந்து போனால், அவள் முகம் வெட்கத்தில் சிவக்கிறது. தன்னை அழகானவளாகக் காட்டிக்கொள்ள விரும்பி, கூந்தலை சரிசெய்கிறாள். உடலளவில் அவளுக்கு இளமையின் அந்த இச்சை இப்போதில்லை. ஆனால், நினைவுகளின் தாக்கம் அவள் செயல்களைக் குழப்புகிறது.

இந்த நினைவுகளின் தாக்கம் தீவிரமாகும்போது, அதற்கேற்ற உடலை நீங்கள் மீண்டும் தேர்ந்தெடுப்பதால்தான் பிறவிகள் தொடர்கின்றன. அதற்காக, ஒவ்வொரு முறையும் அந்தத் தூண்டிலில் நீங்கள் சிக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

 

கர்மா என்றால் தலைவிதி என்று அர்த்தம் இல்லை, அப்படி ஆக்கிவிட்டீர்கள். உங்கள் தலைவிதியும் கூட உங்களுடைய செயல்தான். இதை உணர்ந்தால் இப்போது கர்மா என்பது உங்களை சிக்க வைக்கும் ஒன்று கிடையாது. உங்களை விடுவிக்கும் ஒன்றாக மாறிவிடும். நிச்சயமாக இதை நீங்கள் உணர்ந்திட வேண்டும்.

 

இயற்கை உங்களுக்காக ஒரு தூண்டிலை எதிர்வைக்கிறது. ஆனால் அதில் நீங்கள் ஒவ்வொரு முறையும் மாட்டிக்கொள்ளத் தேவையில்லை.

நல்ல கர்மா எது? கெட்ட கர்மா எது?

ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பின்விளைவு உண்டு. உங்கள் செயலுக்கான விளைவு எப்படியிருந்தாலும், அதை நீங்கள் சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளத் தயாரானால், அது நல்லதா கெட்டதா என்ற கேள்வியே வராது. கர்மவினைகள் பற்றிய கவலையே இராது.

மற்றபடி, பாவம், புண்ணியம் என்பதெல்லாம் சொர்க்கம் பற்றிப் பேசுபவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள்.

இயற்கை என்பது கொடூரமானதும் இல்லை. கருணையானதும் இல்லை. நல்லது கெட்டது என்பதெல்லாம் மனிதரின் பார்வையில் உள்ள கோணம்தான்.

இந்த மலை நல்லதா? கெட்டதா? “ஆஹா மலை எவ்வளவு அற்புதமாக இருக்கிறது!”. சரி, மலை உச்சிக்கு சென்று குதியுங்களேன். “ஐய்யோ அற்புதமான மலையில் கொடூரமான விபத்து நடந்துவிட்டதே!” எதுவும் அற்புதமானதும் இல்லை, கொடூரமானதும் இல்லை. அது எப்படி இருக்கிறதோ, அப்படிதான் இருக்கிறது. வாழ்க்கையில் ஒவ்வொன்றும் அப்படித்தான் இருக்கிறது.

நினைவுகளின் தாக்கத்தால் ஏற்படும் பாரபட்சம் சில விஷயங்களை நல்லது என்றும் சில விஷயங்களைக் கெட்டது என்றும் உங்களை உணர வைக்கிறது. அதுதான் உங்கள் கர்மா.

கர்மா - உங்களுடைய செயல்

அதாவது உங்கள் கர்மா என்றால் உங்கள் செயல், உங்களுடைய செயல் மட்டுமே. அதை உருவாக்குபவர் நீங்கள்தான், நீங்கள் மட்டும்தான்.

உங்களுடைய கர்மா, உங்களுடைய செயல், உங்களுடைய அனுபவம் ஒவ்வொன்றும் உங்களுடைய செயல்தான்.

கர்மா என்றால் தலைவிதி என்று அர்த்தம் இல்லை, அப்படி ஆக்கிவிட்டீர்கள். உங்கள் தலைவிதியும் கூட உங்களுடைய செயல்தான். இதை உணர்ந்தால் இப்போது கர்மா என்பது உங்களை சிக்க வைக்கும் ஒன்று கிடையாது. உங்களை விடுவிக்கும் ஒன்றாக மாறிவிடும். நிச்சயமாக இதை நீங்கள் உணர்ந்திட வேண்டும். எப்பொழுது இதை உணர்ந்துவிட்டீர்களோ, இப்போது இது என்னுடைய செயல்தான் என்று உணர்ந்தபின் வாழ்வில் சிக்கிக்கொள்ள மாட்டீர்கள். சிக்கிக்கொள்ள பயம் இல்லாதபோது வாழ்வின் ஒவ்வொரு கணமும் 100% முழுமையாக ஈடுபடுவீர்கள். இப்போது உங்கள் வாழ்க்கை நீங்கள் விரும்பியபடி நடக்கிறது.

ஒவ்வொன்றிலும் முழுமையாக ஈடுபடும்பொழுது முழு உயிராக இயங்குகிறீர்கள். ஈடுபாடு இல்லாத வாழ்க்கை ஒரு ஜடம்போல்தானே?

உங்கள் நினைவுகள் என்பது உங்களுடைய பாரபட்சமான முடிவுகள்தான். கர்மா என்றால் நீங்கள் வண்ணம் பூசிய கண்ணாடி வழியாக பார்க்கிறீர்கள் என்று அர்த்தம்.

color-glasses

 

நீங்கள் வண்ணக் கண்ணாடி வழியே பார்த்தால், அவற்றின் உண்மையான நிறம் எப்படி உங்களுக்குப் புலப்படும்?

ஒரு நிலைக்கண்ணாடி உங்கள் பிம்பத்தைக் காட்டுகிறது. நீங்கள் நகர்ந்த பின்னும் அந்த பிம்பம் அங்கேயே ஒட்டிக் கொண்டிருந்தால் எப்படியிருக்கும்? அந்தக் கண்ணாடியைக் கடந்து போவதன் பிம்பங்கள் எல்லாம் அப்படியே ஒன்றன்மீது ஒன்றாக அங்கேயே ஒட்டிக்கொண்டால், அந்தக் கண்ணாடியின் நிலை என்னாகும்?

கர்மா என்பது கண்ணாடியில் பிம்பங்களை ஒட்டும் அந்தப்பசைதான். அது நல்லதும் அல்ல கெட்டதும் அல்ல. உங்களை உங்கள் உடலுடன் பிணைத்துப் பிடித்து வைத்திருப்பது உங்கள் கர்மாதான். அது உங்கள் விழிப்புணர்வுடன் நடந்திருக்கிறதா அல்லது தற்செயலாக நடந்திருக்கிறதா என்பதுதான் கேள்வி.

உங்கள் உடல் முழுவதும் ஒருவிதமான பசையைத் தடவிக்கொண்டு உலகத்தில் நடக்கிறீர்கள். நீங்கள் தொடுவதெல்லாம் உங்கள் மீது ஒட்டிக்கொண்டால், நீங்கள் என்ன ஆவீர்கள்?

மிகச் சொற்பமான நேரத்திலேயே மலைபோல் ஆகிவிடுவீர்கள். அந்த பாரத்தைச் சுமந்து கொண்டு இயங்குவது எவ்வளவு கடினமாக இருக்கும்? உங்கள் நினைவுகள் அப்படித்தான் மலையைப் போல், ஏன் மலையைவிடக்கூட பாரமாக உங்களை அழுத்துகின்றன. அவற்றைச் சுமந்து கொண்டு இயங்கப் பார்க்கிறீர்கள்.

விழிப்புணர்வுடனோ, அல்லாமலோ உங்கள் உடலின் ஒவ்வொரு செல்லும் அது கடந்து வந்த ஒவ்வொரு நொடியின் நினைவுகளையும் அப்படித்தான் சுமக்கிறது.

‘இதையெல்லாம் இது வரை யாரும் சொல்லவில்லையே?’ என்பீர்கள். கணத்துக்குக் கணம் வாழ்க்கை இதைத்தான் தலையில் தட்டி சொல்லிக் கொண்டேயிருக்கிறது. பக்கத்து வீட்டுக்காரர்கள் பேசுவதையும். உங்கள் நினைவுகள் பேசுவதையும்தான் சதா கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால், வாழ்க்கையின் குரலை எங்கே செவிமடுத்தீர்கள்?

இதற்கு போதனைகள் தேவையில்லை. புனிதநூல்கள் அவசியமில்லை. வாழ்க்கையின் குரலைக் கவனித்தால் போதும், தெளிவாக அது புரிந்துவிடும். கர்மா என்பது மாபெரும் இரைச்சலாகத்தான் இருக்கிறது. ஆனால், அது வெளியிலிருந்து வரவில்லை. உள்ளேயிருந்து வருகிறது. அதனால் கவனிக்கத் தவறிவிடுகிறீர்கள்.

கர்மா என்பது உங்கள் பிழைப்பு. அது உங்களை விலங்கிடும் தளை. அதை சரியாகக் கையாண்டால், அதிலிருந்து விடுபட்டு சுதந்திரமாகலாம்.