கேள்வி:

சத்குரு, நான் எனது சாதனாவை செய்யும்போது கட்டாயத்தன்மைகள் மேலெழும்புவதைப் பற்றி மனம் வருந்துகிறேன்.

சத்குரு:

நீங்கள் உங்கள் கட்டாயத்தன்மைகளுடன் மகிழ்ச்சியாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். எப்படியோ உங்களுக்கு கட்டாயத்தன்மை இருக்கிறது. நீங்கள் அதனுடன் மகிழ்ச்சியாக இல்லை என்றால், இப்போது உங்களுக்கு இரண்டு பிரச்சனைகள் - கட்டாயத்தன்மையும் மகிழ்ச்சியின்மையும்! ஏற்கனவே உங்களுக்கு ஒரு பிரச்சனை இருக்கிறது, அடுத்து ஒன்றையும் உருவாக்காதீர்கள். உங்களுக்கு ஒரு பிரச்சனை மட்டும் இருந்தால், அதை சமாளிப்பது எளிதாக இருக்கும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
நீங்கள் எந்த முட்டாள்தனத்துடன் இருந்தாலும், மகிழ்ச்சியாகவும் அன்பாகவும் இருக்கக் கற்றுக்கொள்வதே நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம்.

மகிழ்ச்சியின்மை என்பது இனிமையற்ற நிலை. நாம் ஏன் எப்போதும் ஆனந்தம் மற்றும் அன்பைப் பற்றி பேசுகிறோம் என்றால், உங்கள் மனதையும் உணர்வுகளையும் இனிமையாக வைத்திருக்கவே. இவை இனிமையாக இருக்கும்போது, நீங்கள் நெகிழ்வுத்தன்மையுடன் இருப்பீர்கள், மேலும் உங்களுடன் பல விஷயங்களை நாம் செய்ய முடியும். உங்கள் மனமும் உணர்வுகளும் இனிமையற்றதாக இருக்கும்போது, நீங்கள் இறுக்கமாகிவிடுகிறீர்கள்; உங்களிடம் எதுவும் செய்ய முடியாது. நீங்கள் இனிமையான நிலையில் இருக்கும்போது, வேறொரு வடிவத்திற்கு முழுமையாக மாற்றப்படுவதற்கு நீங்கள் விருப்பமுடன் இருப்பீர்கள். நீங்கள் இனிமையற்ற நிலையில் இருக்கும்போது, நீங்கள் தொடப்படுவதைக் கூட விரும்பமாட்டீர்கள்.

மகிழ்ச்சியுடன் உங்கள் கட்டாயத்தன்மைகளை கவனியுங்கள்

உங்களிடம் உள்ள கட்டாயத்தன்மைகளை விட மகிழ்ச்சியின்மையே பெரிய பிரச்சனை. இது மிகப் பெரிய பிரச்சனை, ஏனெனில் இப்போது உங்களைத் தொடமுடியாது, வடிவமைக்க முடியாது, உங்களுக்கு உதவவும் முடியாது. நீங்கள் எந்த முட்டாள்தனத்துடன் இருந்தாலும், மகிழ்ச்சியாகவும் அன்பாகவும் இருக்கக் கற்றுக்கொள்வதே நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம். உங்களிடம் கட்டாயத்தன்மைகள் உள்ளன - அவற்றை மகிழ்ச்சியுடன் பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள். பின்னர் உங்களை வடிவமைப்பது, உங்களுக்கு உதவுவது, உங்களை அணுகுவது - உங்கள் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட விஷயங்களைச் செய்வது என அனைத்தும் எளிதாக இருக்கும். உங்கள் விருப்பு வெறுப்புகளே மிக அடிப்படையான கட்டாயங்கள்; இவற்றிலிருந்து உங்களுக்கு உதவ வேண்டுமெனில், நீங்கள் இனிமையான நிலையில் இருக்க வேண்டும்.

நீங்கள் இனிமையற்ற நிலையில் இருந்தால், உங்களுக்குப் பிடிக்காத ஒன்றை உங்களைச் செய்ய வைக்க முடியாது; நீங்கள் உங்களுக்குப் பிடித்ததை மட்டுமே செய்வீர்கள். மக்கள் எவ்வளவு துக்கமாக இருக்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக, "நான் இதை மட்டுமே செய்வேன். நான் இப்படித்தான்!" என்று இருப்பார்கள். மகிழ்ச்சியான மனிதர்கள் நெகிழ்வானவர்கள் - அவர்களை நடனமாட வைக்கலாம், அழ வைக்கலாம், குதிக்க வைக்கலாம், வேடிக்கையான விஷயங்களைச் செய்ய வைக்கலாம், தரையில் ஊர்ந்து செல்லச் சொல்லலாம்; அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது எல்லாவற்றையும் செய்வார்கள். அவர்கள் நெகிழ்வுத்தன்மை கொண்டவர்கள்.

உங்கள் நெகிழ்வுத்தன்மையை இழக்க வேண்டாம். அதுதான் மிக முக்கியமானது. மனதிலோ அல்லது உணர்விலோ ஏதோ விதமான துன்பமான நிலையில் இருக்கும்போது நெகிழ்வுத்தன்மை சாத்தியமில்லை. இந்த காரணத்திற்காகவே மகிழ்ச்சியாக, அன்பாக மற்றும் அமைதியாக இருப்பது முக்கியமானது - ஏனெனில் உங்களிடம் பல கட்டாயத்தன்மைகள் உள்ளன.

கர்ம உருளைக்கிழங்குகள்

கர்மா என்பது ஒரு மூட்டை உருளைக்கிழங்குகளைப் போன்றது. இந்த கட்டாயத்தன்மைகளை நீங்கள் எவ்வளவு ஆழமாகப் புதைக்கிறீர்களோ, அவை அவ்வளவு அதிகமாக வளரும். சாதனா என்பது அவற்றை வெளியே இழுத்து, மீண்டும் வளர முடியாத வகையில் உலர வைப்பது. நீங்கள் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு உங்களை தீவிரமான சாதனாவிற்கு உட்படுத்தினால், நீங்கள் உலகத்திற்கு திரும்பிச் செல்லும்போது, உங்களது பல எளிய கட்டாயத்தன்மைகள் மறைந்துவிட்டதை காண்பீர்கள். ஆனாலும் இன்னும் நிறைய உருளைக்கிழங்குகளை வெளியே இழுக்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு நாளும் அவற்றை வெளியே இழுத்து, மீண்டும் முளைக்க முடியாத அளவிற்கு உலர வைக்க வேண்டும்.

அதே உருளைக்கிழங்கு ஒரு மில்லியனாக வளர்ந்தால், அது மிகைப்படுத்தப்பட்ட உருளைக்கிழங்கு. வலி, பயம், சித்திரவதை அனுபவம் அல்லது அருவருக்கத்தக்க ஏதோ ஒரு உணர்வின் ஐந்து நிமிட தீவிர அனுபவத்தை நீங்கள் அனுபவிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த ஐந்து நிமிட உருளைக்கிழங்குகள், பெருகி பெருகி உங்கள் வாழ்க்கை முழுவதையும் ஆட்சி செய்யும். நீங்கள் எங்கு சென்றாலும், அதைப் பற்றித்தான் நினைப்பீர்கள், அதைப் பற்றித்தான் பேசுவீர்கள். நீங்கள் அவற்றைப் புதைத்தீர்கள், அவை பெருகிக்கொண்டிருக்கின்றன. அவை அதே வெறுக்கத்தக்க வகையில் மில்லியன் கணக்கான உருளைக்கிழங்குகளாக மாறும். இப்போது நீங்கள் இந்த உருளைக்கிழங்கை உலர வைத்து அங்கே வைத்திருந்தால், அது ஒரு நல்ல அனுபவம். நீங்கள் மிகவும் மோசமான அனுபவத்தை கடந்து சென்றிருந்தாலும், அது ஒரு நல்ல அனுபவம், ஏனெனில் உங்கள் வாழ்க்கையில் இனிமையற்ற தருணங்களில் நீங்கள் கற்றுக்கொள்வது விலைமதிப்பற்றது. மறக்க முயற்சிப்பவன் முட்டாள்தான். நீங்கள் புத்திசாலியாக இருந்தால், வெறுப்போ கோபமோ இல்லாமல் - உங்களுக்கு ஏற்பட்ட ஒவ்வொரு இனிமையற்ற அனுபவத்தையும் நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும், இதனால் நீங்கள் மீண்டும் அதேவிதமான சூழ்நிலைகளில் சிக்கிக்கொள்ள மாட்டீர்கள்.

நாம் உருளைக்கிழங்குகளை அகற்ற விரும்பவில்லை; நாம் உருளைக்கிழங்குகளை வெளியே எடுத்து, அவை முளைக்க முடியாத வகையில் உலர வைக்க மட்டுமே விரும்புகிறோம். நாங்கள் உருளைக்கிழங்குகளைப் பாதுகாக்க விரும்புகிறோம்; இல்லையெனில் நாம் அதே விஷயங்களை மீண்டும் மீண்டும் செய்யும் முட்டாள்களாக இருப்போம். வாழ்க்கை அனுபவத்தின் மதிப்பை தூக்கி எறிய முடியாது. ஆனால் அதை உங்களுக்குள் வளரவிட்டால், அது உங்கள் முழு வாழ்க்கையையும் நஞ்சாக்கிவிடும். கர்மா அல்லது அனுபவத்தின் நினைவு மட்டுமே உங்களுக்கு ஞானத்தைக் கொண்டுவரக்கூடிய ஒரே விஷயம், ஆனால் அதுவே உங்களைக் கட்டுப்படுத்தக்கூடிய ஒரே விஷயமும் கூட - உங்கள் வாழ்க்கையை அழிக்கும் அளவுக்கு கடுமையாக நஞ்சாக்கக்கூடியது. எனவே, கர்மா பிரச்சனை அல்ல; நீங்கள் அதை எப்படி சுமக்கிறீர்கள் என்பதுதான் ஒரே பிரச்சனை.

குறிப்பு: ஈஷா க்ரியா என்பது சத்குருவால் வடிவமைக்கப்பட்ட ஒரு எளிய யோகப் பயிற்சி. இணையத்தில் இலவசமாக குறிப்புகளுடன் கூடிய தியானமாகக் கிடைக்கிறது. இந்த பயிற்சி, தினமும் சில நிமிடங்கள் செலவிட விரும்பும் அனைவரது வாழ்க்கையையும் மாற்றும் வல்லமை கொண்டது.