உங்கள் கர்ம தொழிற்சாலையை மூடுங்கள் – பகுதி 2
எப்படி கர்மா என்பது பலருக்கான மாயை என்பதையும், கிரியாக்களும் பிராணாயாமாக்களும் நமது பிராண உடலை வலுப்படுத்தவும், கர்மாவிலிருந்து நம்மை விலக்கிக்கொள்ளவும் உதவும் ஒரு செயல்முறை என்பதையும் சத்குரு விளக்குகிறார்.

உங்கள் கர்ம தொழிற்சாலையை மூடுங்கள் – பகுதி 1
சத்குரு:கர்மா என்பது அடிப்படையில் பலவற்றின் மாயை. "மாயை" என்பது பொதுவாக "பொய்த்தோற்றம்" என மொழிபெயர்க்கப்படுகிறது, ஆனால் அந்த வார்த்தை அனைத்தையும் உணர்த்துவதில்லை. ஆனால் மாயை என்றால் பொய்த்தோற்றம் என்று வைத்துக்கொள்வோம். பலவற்றின் மாயத் தோற்றமே கர்மப் பொருளின் அடித்தளம். "இது நான், அது நீ" என்ற நிலையில் நீங்கள் நிலைத்திருக்கும் வரை, கர்மா என்பது நன்கு உறுதிப்படுத்தப்பட்ட ஒரு உண்மை. அது ஒரு உறுதியான, உண்மையான, இரும்பாலான அமைப்பை ஒத்தது.
எனினும், "எது நான், எது நான் அல்ல?" என்று நீங்கள் உங்களையே குழப்பிக்கொண்டால், கர்மா திடீரென தன் அடித்தளத்தை இழக்கிறது. சுற்றிலும் பார்க்கும்போது எது நீங்கள், எது நீங்கள் அல்ல என்று உங்களுக்கு தெரியவில்லை என்றால், இந்த குழப்பத்தில் கர்மாவின் அடித்தளம் நிலைக்க முடியாமல் நொறுங்கிவிடுகிறது.
ஒரு கணம் குழப்பத்தில், திடீரென, கர்மாவின் முழு கட்டமைப்புகளும் சரிந்துவிடுகின்றன. நீங்கள் கவனித்திருக்கிறீர்களா, யாரையாவது காதலித்திருந்தால், உங்கள் விருப்பு வெறுப்புகள், நீங்கள் யார், உங்களுக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என அனைத்தும் சிறிது குழம்பிவிடும் - குறைந்தபட்சம் சில நாட்களுக்காவது, அதன் பிறகு மீண்டும் திரும்பவும் வந்திருக்கலாம்! நீங்கள் யார் என்பது சிறிது குழம்பியிருந்ததால், உங்களால் செய்யமுடியாது என நினைத்தவற்றை எல்லாம் செய்யத் தொடங்கினீர்கள். இரண்டு நபர்களுக்கிடையே சிறிதளவு ஒருமை வந்ததால் பன்மையின் மாயை குழம்பியது, அதனால் திடீரென கர்மா தன் அடித்தளத்தை இழந்து நொறுங்கியது.
Subscribe
பலரின் பிரச்சனை
இப்படி நடந்தது - 1944 காலகட்டத்தில், ஹிட்லர் போன்ற எட்டு போலிகள் ஒரு பாதுகாப்பான வீட்டில் வைக்கப்பட்டிருந்தனர். அனைத்து மக்களிலும், இவர்கள்தான் சிறப்பாக உணவளிக்கப்பட்டவர்கள், சிறப்பாக பராமரிக்கப்பட்டவர்கள், மேலும் எப்போதாவது தவிர மற்ற நேரங்களில் இவர்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. அவர்கள் ஹிட்லரைப் போலவே இருப்பதற்கு பயிற்சி பெற்றனர். அவரைப் போல உடை அணிந்தனர், அவரைப் போல உணவருந்தினர் - அவர்கள் நடிக்க வேண்டிய நேரத்தில், யாரும் கண்டுபிடிக்காத வகையில் நடிக்க வேண்டியிருந்ததால், ஹிட்லர் என்னவெல்லாம் செய்தாரோ அதை அவர்களும் செய்ய வேண்டியிருந்தது. எனவே, இந்த நபர்கள் உண்மையிலேயே சிறந்த நேரத்தை அனுபவித்துக் கொண்டிருந்தனர்.
பிறகு ஹிட்லரின் நம்பிக்கைக்குரிய உதவியாளர்களில் ஒருவரான ஹெய்ன்ரிச் ஹிம்லர் வந்தார். யார் வந்தாலும் அவர்கள் ஹிட்லருக்கு வணக்கம் செலுத்துவது போலவே இந்த போலிகளுக்கும் வணக்கம் செலுத்த வேண்டும் என்பது வழக்கமான நடைமுறையின் ஒரு பகுதியாக இருந்தது, ஏனெனில் அவர்கள் அதற்கும் பழக்கப்பட வேண்டியிருந்தது. எனவே, ஹிம்லர் வந்து "ஹிட்லருக்கு வணக்கம்!" என்றார். பிறகு அவர், "என்னிடம் நல்ல செய்தியும் கெட்ட செய்தியும் உள்ளது" என்றார்.
அவர்கள் அனைவரும் சேர்ந்து, "முதலில் நல்ல செய்தியைச் சொல்லுங்கள்" என்றனர். "நம் தலைவர் உயிருடன் நலமாக இருக்கிறார்."
"கெட்ட செய்தி...?"
"துரதிருஷ்டவசமாக, அவர் தனது இடது கண்ணை இழந்துவிட்டார்," என்று சொல்லி அவர் ஒரு கார்க் ஸ்க்ரூவை வெளியே எடுத்தார்.
கர்மா என்பது அப்படித்தான். இது பலருடைய பிரச்சனை. ஆகவே, முதல் விஷயம் என்னவென்றால், புதிதாக உருவாக்குவதை நிறுத்துவது - வாழ்க்கை அதைப் பார்த்துக்கொள்ளும். அல்லது நீங்கள் விரும்பினால், உங்கள் அனைத்து கர்மாக்களையும் ஒரே நேரத்தில் விட்டுவிட முடியும். ஆனால் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், கர்மா வெறும் கட்டுப்பாடு மட்டுமல்ல, அது ஒரு பாதுகாப்பும் கூட.
இது உங்களை உடலுடன் பிணைக்கும் சிமெண்ட் போன்றது. எல்லா கர்மாவும் கரைந்துவிட்டால், நீங்கள் உங்கள் உடலைப் பிடித்து வைத்திருக்க முடியாது - நீங்கள் அதை விட்டுவிடுவீர்கள். நீங்கள் இதை உணராவிட்டால், பெரும்பாலான நபர்களுக்கு, ஞானோதயம் பெறும் தருணமும் உடலை விட்டு நீங்கும் தருணமும் ஒன்றாகவே இருக்கும். கிரியாவின் பாதையில் இருப்பவர்கள் மட்டுமே, உடல் இயங்கும் விதத்தையும் அதன் நுணுக்கங்களையும் அறிந்தவர்கள் மட்டுமே அதைப் பிடித்துவைத்திருக்க முடியும்.
பிராண உடலை பயிற்றுவித்தல்
யோகாவில், நாம் ஒரு மனிதனை ஐந்து உறைகள் அல்லது உடல் அடுக்குகளாக பார்க்கிறோம். பௌதீக உடல், மன உடல் மற்றும் சக்தி உடல் ஆகிய மூன்றும் உடல் ரீதியான உண்மைகள்; சூட்சுமமாக இருந்தாலும் உடல் ரீதியானவையே. பிராண மற்றும் ஆனந்த உடல் ஆகிய இரண்டும் வேறொரு பரிமாணத்தில் உள்ளன. பிராண உடல் என்பது உடல் ரீதியானதில் இருந்து உடல் ரீதியற்றதற்கான மாற்றம். ஆனந்த உடல் முற்றிலும் உடல் ரீதியற்றது.
பௌதீக உடல், மன உடல் மற்றும் சக்தி உடல் கர்மாவைச் சுமக்கின்றன. ஆனால் பிராண மற்றும் ஆனந்த உடலில் எந்த கர்ம பொருளும் இல்லை, ஏனெனில் அவை உடல் ரீதியற்றவை.
இருப்பின் பௌதீக ரீதியான பரிமாணம் செயல் விளைவுளுக்கு இடையே நடக்கிறது. ஆனால் பௌதீகத்திற்கு அப்பாற்பட்டது செயல் மற்றும் விளைவுக்கு இடையே நடப்பதில்லை. எனவே, நீங்கள் தெய்வீகத்தை ருசிக்க ஆரம்பிக்கும் தருணத்தில், உங்களிடம் எவ்வளவு கர்மக் குவியல்கள் இருந்தாலும், திடீரென்று அது உங்கள் மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது, ஏனெனில் கர்ம பொருள் இல்லாத பௌதீகம் சாராத பரிமாணத்திற்குள் நீங்கள் நுழைய ஆரம்பிக்கிறீர்கள்.
கிரியாக்கள் மற்றும் பிராணாயாமாக்கள் போன்ற விழிப்புணர்வுடனான சுவாசப் பயிற்சிகளை நீங்கள் செய்யும்போது, உங்களது பிராண உடலை பயிற்றுவிக்கிறீர்கள். இந்த பிராண உடல் என்பது பௌதீக ரீதியான கூறுகளைக் கொண்டிருந்தாலும், பௌதீக ரீதியானது அல்ல. நீங்கள் யார் என்ற உங்களது பௌதீகமற்ற பரிமாணத்திற்கு இந்த பிராண உடல் ஒரு தடையாக இல்லாமல், ஒரு பாலமாக அமைய வேண்டும் என்பதற்காக இந்த பயிற்சிகள் மூலம் அதனை வலுப்படுத்துகிறீர்கள்.
இதன் உடலியல் மற்றும் உளவியல் நன்மைகள் ரீதியான மற்றும், ஆன்மீகப் பரிமாணம் போன்ற மற்ற பல அம்சங்களும் உள்ளன. ஆனால் ஒரு எளிய அம்சம் என்னவென்றால், உடல் மற்றும் படைப்பின் மூலமாக இருக்கும் பௌதீகமற்ற பரிமாணத்திற்கு இடையேயான இணைப்பாக இருக்கும் இந்தப் பரிமாணம், தானாக ஒரு வலுவான சக்தியாக மாறும்போது, நீங்கள் யாராக இருக்கிறீர்களோ அந்த உடல்ரீதியான தன்மையும், "நான்" என்று நீங்கள் அழைக்கும் உளவியல் கட்டமைப்பும், இவை அனைத்திற்கும் மூலமாக இருக்கும் அந்தப் பரிமாணமும் இயல்பாகவே எப்போதும் இணைந்தே இருக்கும்.
தெய்வீகம் என்பது உங்கள் வாழ்க்கையில் ஒரு கருத்தாகவோ அல்லது நம்பிக்கையாகவோ இல்லாமல், உங்கள் வாழ்க்கையில் ஒரு உயிர்ப்பான யதார்த்தமாக வேண்டும் என்பதே நோக்கம். இந்த மூன்று பரிமாணங்களும் ஒவ்வொரு க்ஷணமும் நன்கு ஒருங்கிணைந்து இணைக்கப்பட்டிருப்பதே பயிற்சியின் அடிப்படை. நாம் உச்சநிலைகளையோ அல்லது அவ்வப்போது கிடைக்கும் அனுபவங்களையோ தேடவில்லை, அந்தப் பரிமாணத்துடன் தொடர்ச்சியான தொடர்பையேத் தேடுகிறோம். அப்போது மட்டுமே அது நீங்கள் வாழும் முறையில், நீங்கள் இருக்கும் விதத்தில், நீங்கள் செய்யும் செயல்களில் என எல்லாவற்றிலும் வெளிப்படும்.
குறிப்பு:
சத்குரு அவர்களின் ஆழமான புரிதலில் கர்மா செயல்படும் விதம் மற்றும் அதன் சூட்சுமங்களை விரிவாக விளக்கும் 'கர்மா - விதியை வெல்லும் சூத்திரங்கள்' என்ற புதிய புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இதனை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.