பிராணாயாமம் என்னவெல்லாம் செய்யும்?!
"மூச்ச சும்மா இழுத்து விட்டுட்டா பெருசா என்ன நடந்திரும்?" இப்படிப் பிராணாயாமத்தை சாதாரணமாகப் பார்க்கும் நிலை பரவலாக உள்ளது. பிராணாயாமம் பற்றியும், 6 மாதங்கள் தொடர்ந்து அதனைப் பயிற்சி செய்தால், நிகழக் கூடிய அற்புதங்களைப் பற்றியும் விளக்குகிறார் சத்குரு.
"மூச்ச சும்மா இழுத்து விட்டுட்டா பெருசா என்ன நடந்திரும்?" இப்படிப் பிராணாயாமத்தை சாதாரணமாகப் பார்க்கும் நிலை பரவலாக உள்ளது. பிராணாயாமம் பற்றியும், 6 மாதங்கள் தொடர்ந்து அதனைப் பயிற்சி செய்தால், நிகழக் கூடிய அற்புதங்களைப் பற்றியும் விளக்குகிறார் சத்குரு.
சத்குரு:
நீங்கள் இப்போதிருக்கும் நிலைக்கு அடுத்த உயர்வான விழிப்புணர்வு நிலையை, புரிதலை, அடையவேண்டும் என்ற விருப்பம் இருந்தால், அதற்கு உங்கள் உடல், மனம் மற்றும் சக்தி நிலையை தயார்படுத்த வேண்டும். யோகாவின் அடிப்படைக் கொள்கைகள் உங்களது மனதை ஒரு குறிப்பிட்ட வகையில் தயார்படுத்தி, முதிர்ச்சியடைய வைக்கும். யோக ஆசனங்கள், உங்கள் உடல் உயர்ந்தநிலை சக்திகளை பெறுவதற்கு உதவி செய்யும். பிராணாயாமா உங்கள் சுவாசத்தோடு தொடர்புடைய முக்கியமான சக்தியான பிராணசக்தியைத் தீவிரப்படுத்தி, நெறிப்படுத்துகிறது. பிராணாயாமா உங்களை ஆரோக்கியமாக, துடிப்பாக, விழிப்புடையவராக ஆக்குகிறது. ஆனால் அத்துடன் அதன் பயன்கள் முடிந்துவிடவில்லை.
Subscribe
பிராணாயாமா ஒரு சக்தி வாய்ந்த பயிற்சி. அது உங்களை ஒரு உயர்ந்த நிலை அனுபவத்துக்கு மெதுவாகவும் இயல்பாகவும் நகர்த்திச் செல்கிறது. அது உங்கள் வாழ்க்கை அனுபவத்தையே மாற்றிவிடும் ஒரு கருவியாகும். பிராணாயாமா உங்களை உங்களது உடலின் கட்டுப்பாடுகளைத் தாண்டி, உங்கள் உள்ளே அடியாழத்தில் இருக்கும் உள்பரிமாணத்தை உணரச் செய்கிறது. பிராணாயாமா சுய விழிப்புணர்வை அடைவதற்கான ஒரு முழுமையான பாதை. யோகாவின் எட்டு பிரிவுகளான யாமா, நியமா, ஆசனா, பிராணாயாமா, ப்ரதியஹாரா, தாரணா, தியானா, சமாதி ஆகியவற்றில் பிராணாயாமா என்பதும் ஒரு பிரிவு.
முதல் இரண்டு பிரிவுகளும், ஒரு தொடக்க நிலை சாதகர் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதை போதிக்கின்றன. அவை பெரும்பாலும் ஒருவரின் வளர்ச்சிக்கு உதவும் ஒழுக்க விதிகளைப் போன்றவை. நிறைய பேருக்கு யோகா என்றாலே ஆசனங்கள்தான் என்ற எண்ணம் இருக்கிறது. ஆசனா என்பது உடலுக்கானது. உடல் என்பது மக்களிடம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. அது அவர்களை பல விதங்களில் ஆட்சி செய்கின்றது. உங்கள் உடலை ஆரோக்கியமாகவும், துடிப்பாகவும் வைத்துக் கொள்ளவில்லை என்றால், உங்களால் உங்கள் உடலைத் தாண்டி சிந்திக்க முடியாது. இப்போது உங்கள் காலில் வலி இருக்கிறதென்றால், நான் உங்களிடம் ஞானமடைவதைப் பற்றியோ அல்லது கடவுளைப் பற்றியோ பேசினாலும், நீங்கள் என்னிடம் உங்கள் கால் வலிக்கான நிவாரணத்தைப் பற்றித்தான் கேட்பீர்கள். உங்கள் உடலுக்கு உங்கள் மேல் அத்தனை ஆதிக்கம் இருக்கிறது. அப்படியென்றால் ஆசனா என்பது வெறும் உடல் வலிமை பெறுவதற்கு மட்டும்தானா? இல்லை. அது உங்கள் உடலை இப்போதிருக்கும் நிலையிலிருந்து இன்னும் சூட்சுமமான நிலைக்கு நகர்த்திச் செல்வதற்கு உதவுகிறது.
அதேபோல, ஒரு மனிதனின் சக்திநிலை மந்தமாகவோ அல்லது சூட்சுமமாகவோ இருக்கலாம். உங்களைச் சுற்றியிருக்கும் படைப்புகளைப் பார்த்தால், இன்றைய நவீன விஞ்ஞானம் ஒப்புக் கொள்வதைப் போல, இந்த பிரபஞ்சம் முழுவதும் ஒரே சக்திதான் நிரம்பியுள்ளது. அந்த சக்திதான் இங்கே மண்ணாகவும், கீழே ஊர்ந்து கொண்டிருக்கும் எறும்பாகவும், அங்கு நிற்கும் மரமாகவும், எங்கும் இருக்கும் மனிதர்களாகவும் மாறியிருக்கிறது. அதே சக்தியைத்தான் நீங்கள் கடவுள் என்று சொல்கிறீர்கள். அந்த ஒரே சக்தி தன்னை பல விதங்களில் வெளிப்படுத்திக் கொள்கிறது. அந்த சக்தி மிகவும் மந்தமான நிலையிலிருந்து, உச்சநிலை வரை பரந்துள்ளது. அதில் மிகவும் மந்தமான சக்தியை, நீங்கள் உயிரற்ற அஃறிணை பொருட்கள் என்றும், உச்சநிலை சக்தியை கடவுள் என்றும் அழைக்கிறீர்கள்.
ஈஷா யோகாவின் முழுச் செயல்பாடுமே உங்களுக்குள் இருக்கும் அந்த சக்தியை மிகவும் சூட்சுமகாக ஆக்கி, இப்போது மனிதராக இருக்கும் நீங்கள், தெய்வீக நிலையை அடைவதற்கு உதவுவதுதான். உங்களுடைய சக்தியை உங்களுக்குள்ளாகவே இன்னும் சூட்சுமமான நிலைக்குக் கொண்டு செல்வதற்கு, உங்கள் உடலும், மனமும், சக்திகளும் ஒத்துழைக்க வேண்டும். இல்லாவிட்டால் அது சாத்தியமில்லை. இதைத்தான் நாம் ஈஷா யோகா பிராணாயாமா பயிற்சியில் செய்கிறோம். ஆறு மாதங்கள் பிராணாயாமா பயிற்சி செய்த பின் பார்த்தால், நீங்கள் முன்பிருந்ததை விட அனைத்து விதங்களிலும் இன்னும் சூட்சுமமான மனிதராக ஆகியிருப்பீர்கள். வாழ்க்கையை இன்னும் அதிக புத்திசாலித்தனத்துடன் உணர்ந்து, அனுபவிப்பீர்கள்.