பச்சை குத்துதல் ஆன்மீகத்திற்கு அவசியமா? (Tattoo in Tamil)
நம் அன்பை, காதலை, பக்தியை வெளிப்படுத்த உடலில் அந்த உருவங்களையோ அல்லது பெயர்களையோ பச்சை குத்திக்கொள்வதால் என்ன நடக்கிறது? அதில் ஏதேனும் பலன் உண்டா? சத்குருவின் பார்வை இங்கே!

கேள்வி:
நமஸ்காரம் சத்குரு, எதற்காக உடம்பில் பச்சை குத்திக்கொள்ள வேண்டும்? ஆன்மீகப் பாதையில் இருக்கிறவர்கள் அதை குத்திக்கொள்வதால் ஏதாவது உதவி இருக்குமா? குறைந்தபட்சம் எதிர்மறை இல்லாமல் உதவி இருக்குமா? அதுவும் ஏன் நிறைய கோவில்களில், அதுவும் மலையடிவாரத்தில் இருக்கிற கோவில்களில் எல்லாம் இந்த பச்சை குத்திக்கொண்டு இருக்கிறார்கள்?
சத்குரு:நாமும் மலையடிவாரத்தில்தான் இருக்கிறோம், அப்படியானால் நமக்கும் license இருக்கிறது குத்துவதற்கு. ஏதோ ஒன்று குத்திக்கொள்ள வேண்டும்தானே? மக்கள் ஏதோ ஒன்று குத்திக்கொண்டிருக்க வேண்டும். அவ்வப்போது. குத்திக்கொள்ளவில்லை என்றால் எப்படி? நாமும் அதுபோல லிங்கபைரவி கோவிலில் ஒன்று ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறோம் (சிரிப்பலை).
Subscribe
என்ன பச்சை குத்தலாம்…?
இங்கே வந்தவர்களுக்கு எல்லாமே நெற்றியின் மேல், 'நான் முட்டாள்', என்று ஒரு பச்சை குத்திவிடுவது. அப்படியானால், உங்களைப் பற்றி இல்லை. யார் படிக்கிறார்களோ அவருக்கு. அவர் ஏதாவது உங்களை கிண்டல் பண்ணினால், என்ன எழுதியிருக்கிறது சொல் எனக்கு என்று சொன்னால், அவர் படிப்பார்கள், அதே போதும் நமக்கு. இது ரொம்ப முக்கியமான ஒரு செய்தி உலகத்தில். நமக்கு நான் முட்டாள் என்று புரிந்திருந்தால், நான் நினைக்கிற எண்ணத்திற்கு, என் மனத்தில் இருக்கிற முட்டாள்…. என்னென்னமோ இருக்கிறதே?! அதற்கெல்லாமே மதிப்பில்லாமல் போய்விடும். நான் ரொம்ப பெரிய ஆள் என்று நினைத்ததனால்தானே அதற்கெல்லாம் ரொம்ப மதிப்பு.
இப்போது திருநீறு போட்டதும் அப்படித்தான். ஆனால், இப்போது அதே ரொம்ப பெருமையாக போட ஆரம்பித்துவிட்டீர்கள். அதனால் எழுதிவிட்டால் நன்றாக இருக்கும். திருநீறு என்றால் என்ன? மசி (கரித்துகள்) பூசிக்கொள்வது போலதானே? பஸ்பம்தானே? யாருக்கு முகத்தில் மசி பூசுகிறார்கள், சொல்லுங்கள். எதற்கும் நான் பிரயோஜனம் இல்லை என்று இருந்தால் அவனுக்கு மசி பூசுகிறார்களா, இல்லையா? அது நாமே பூசிக்கொள்வது. ''ஐயா, நான் எதற்கும் பிரயோஜனம் இல்லை, ஏதோ பண்ணுப்பா எனக்கு'' என்று. அது இப்போது நாம் பெருமையாக இப்படி போடுவது மாதிரி ஆகிவிட்டோம். அதனால், எழுதிவிடலாமா பச்சையில்? எழுதிவிட்டால் நன்றாக இருக்கும். உங்களுக்கும் நன்றாக இருக்கும், படித்தவர்களுக்கு எல்லாமே புத்தி வருமே?
நமக்கு புத்தி மலரவேண்டும் என்றால், நாம் கொஞ்சம் முட்டாளாக இருக்கிறோம் என்று நாம் உணர்ந்தால்தானே புத்தி மலரும்… நான்தான் உலகத்தில் எல்லாருக்கும் புத்திசாலி என்று நினைத்துவிட்டால் ஒன்றும் மலராது, அப்படித்தானே? அப்படி ஆகிவிட்டது நமக்கு.
பச்சையை நீக்கும் தொழில்
இப்போது இங்கே எல்லாம் நீங்கள் சின்னதாக குத்தியிருக்கிறீர்கள். வெளிநாட்டில் போய் பார்த்தால், உடலே, மேலிருந்து கீழ் வரைக்கும் குத்திக்கொள்கிறார்கள். இது எதற்கென்றால், குத்திக்கொள்ள வேண்டும், மனம் அதுபோன்ற நிலையில் இருக்கிறது. குத்திக்கொள்ளவில்லை என்றால் ஆகாது, ஏதோ ஒன்று குத்திக்கொள்ள வேண்டும். இப்போதே பலவிதமான ஊனங்கள் இருக்கிறது. யாரோ ஒருவர் தங்கத்தில் 'ஓம்' என்று இங்கே போட்டுக்கொள்கிறார். தங்கத்தில் இல்லை என்றால், இன்னொருவர் செம்பில் போட்டுக்கொள்வார். அதற்கும் நமக்கு பணம் இல்லை என்றால், இங்கே எழுதிவிடலாம் 'ஓம்' என்று. ஆனால், நாளைக்கு ஏதாவது மாறிவிட்டால், 'ஓம்'ல் இருந்து நீங்கள் இன்னொன்று ஆகிவிட்டீர்கள் என்றால், அப்போது... இப்போது பச்சையை எடுப்பது ஒரு பெரிய தொழில் அமெரிக்காவில். இது தெரியுமா? எதற்கென்றால், எல்லாம் ஏதேதோ போட்டார்கள்.
எனக்குத் தெரிந்தது போல, நான் காலேஜில் இருக்கிறபோது, நம்மோடு அவன் காலேஜ் வரைக்கும் வரவில்லை, ஸ்கூலில் இருந்தே அவன் வெளியே போய்விட்டான். அவனுக்கு பதினேழு வயது இருக்கிறபோது அவனுக்கு ரொம்ப காதல் ஆகிவிட்டது யாருடனோ. இவ்வளவு பெரிதாக அவள் பெயரை ரீனா என்று போட்டான் கலர் கலராக, சிவப்பு, கருப்பில்! அவன் எப்படி போட்டான் என்று எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. ரீனா என்று இப்படி போட்டான். அந்த ரீனா ஆறு மாதத்தில் எங்கேயோ போய்விட்டது (சிரிப்பலை).
இப்போது என்ன பண்ணிக்கொள்வது, எங்கே போனாலும்? அப்போதெல்லாம் Tattoo removal எல்லாம் கிடையாது அவனுக்கு. நீங்கள் போட்டீர்களா? (சிரிப்பலை) அதற்கு அந்த கோபத்தில் போய் அவன் தீ சூடாக வைத்து இது எல்லாம் சுட்டுக்கொண்டான். இது எல்லாம் அப்படி ஆகிவிட்டது. இப்படி எல்லாம் பெரிய காயம் ஆகிவிட்டது. அதோடு வருகிறான். என்னவென்றால், அந்த ரீனாவை எடுப்பதற்கு (சிரிப்பலை).
ஈடா, பிங்களா பற்றி படிக்கவே வேண்டாம் புத்தகத்தில். நாம் வகுப்பில் கூட சொல்லக்கூடாது, உணர வைக்க வேண்டும். இங்கே எழுதிவிட்டால் ஈடா, பிங்களா ஆகிவிடுமா? அப்படி எல்லாம் ஆகாது. இங்கே எல்லாம் எழுதிவிட்டால் ஈடா, பிங்களா எல்லாம் ஆகாது. உணர்வுப்பூர்வமாக ஈடா, பிங்களா உணர்ந்தால் என்னென்னவோ செய்ய முடியும். இது வைத்து இந்த யந்திரம் இருக்கிறதே, இதற்குள் இருக்கிற பாகம் இது. ஈடா, பிங்களா என்பது இந்த யந்திரத்தில் ஒரு முக்கியமான பாகம். இது நாம் புரிந்துகொண்டால் நாம் இந்த யந்திரத்தை நன்றாக ஓட்டிக்கொள்ள முடியும். நீங்கள் ஒரு வண்டி ஓட்டுகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதில் எஞ்சின் இல்லை. எஞ்சின் என்று எழுதிவிட்டால் ஓடுமா அது? இப்போது நிறைய பேர் இப்படித்தான் (சிரிப்பலை).