யோகா என்ற பெயரில் இன்று உலகில் பல கூத்துக்கள் நடந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, இதைச் சுற்றி பல கட்டுக்கதைகளும் வலம் வந்து கொண்டிருக்கிறது. 'எது யோகா? எது யோகா இல்லை' என்பதே புரியாமல் அவ்வார்த்தை பல தரப்பிலும் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. இக்குழப்பங்களை நீக்கி, உண்மையில் 'எது யோகா, எது யோகா இல்லை' என்ற தெளிவுரை, சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இதோ சத்குருவின் வார்த்தைகளில், உங்களுக்காக...

கட்டுக்கதை 1: யோகா இந்து மதம் சார்ந்தது, தெரியுமா?

சத்குரு:

பூமியின் புவியீர்ப்பு எந்த அளவிற்கு கிறிஸ்தவ மதம் சார்ந்ததோ, அந்த அளவிற்கு யோகா என்பதும் இந்துக் கலாச்சாரத்தை சார்ந்தது. புவியீர்ப்பு விதிகளை வழங்கிய ஐசாக் நியூட்டன் யூத மதத்தைச் சார்ந்தவர் என்பதால், புவியீர்ப்பு அம்மதத்தை சார்ந்தது என்றாகிவிடுமா? யோகா என்பது ஒரு தொழில்நுட்பம். அதை பயன்படுத்திக் கொள்ள விரும்புபவர்களுக்கு அது வேலை செய்யும்.

யோகா இந்துக்களைச் சார்ந்தது என அறியாமையில் சிலர் வழங்கக் காரணம், இந்த விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் இந்த கலாச்சாரத்திலே தழைத்து வளர்ந்து, இந்துக்களின் வாழ்வோடு ஒன்றிவிட்டதனால் தான். 'இந்து' என்ற சொல் சிந்து நதியைக் குறிக்கும் 'சிந்து' என்ற சொல்லில் இருந்து மறுவி வந்தது. இக்கலாச்சாரம் சிந்து நதிக் கரையிலே வளர்ந்ததால், இங்கு வாழ்ந்தவர்களை இந்துக்கள் என்று வழங்கினார்கள். உண்மையில் இந்து என்பது மதம் அல்ல. அது ஒரு நிலப்பரப்பின் அடையாளம். ஒரு கலாச்சாரத்தின் குறியீடு.

கட்டுக்கதை 2: உடலை கடினமாக வளைப்பதுதான் யோகா

சத்குரு:

யோகா என்றாலே பலரும் உடலை வளைத்துச் செய்யும் ஆசனங்கள் என்றே எண்ணுகிறார்கள். யோகா என்பது பல பரிமாணங்கள் கொண்டது. ஆனால், இன்றைய உலகோ, யோகத்தின் உடலளவிலான பரிமாணத்தை மட்டுமே பரைசாற்றுகிறது. யோக முறையில் ஆசனங்களுக்கான முக்கியத்துவம் மிகக் குறைவு. கிட்டத்தட்ட இருநூறுக்கும் மேற்பட்ட யோக சூத்திரங்கள் உள்ளது. அதில் ஒன்றே ஒன்று மட்டும்தான் ஆசனங்களைப் பற்றிப் பேசுகிறது. ஆனால், எப்படியோ, இந்த ஒன்று மற்ற எல்லாவற்றையும் விட அதிக முக்கியத்துவத்தைப் பெற்றுவிட்டது.

இது பல வழிகளில் இன்று உலகம் சென்று கொண்டிருக்கும் திசையை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. இன்றைய நவீன உலகம், ஆழமான பரிமாணங்களை விடுத்து, மேலோட்டமான நிலைகளை விரும்புவதையே இது காட்டுகிறது. இந்நிலையை மாற்றி, மேலோட்டமான உடலளவிலான கவனத்தில் இருந்து, மனிதர்களை அவர்களின் உள்நோக்கி பயணப்பட வழி செய்ய வேண்டும்.

சோகத்தில் ஆழ்ந்து, உளச்சோர்வில் உறைந்து போய் எனக்கு பழக்கமில்லை. இல்லையெனில் இன்று 'ஹட யோகா' என்ற பெயரில் உலகில் சொல்லித் தரப்படும் பயிற்சிகளையும், யோகத்தின் சாரமே இவ்வளவுதான் என்று மக்கள் நிர்ணயித்திருப்பதையும் பார்த்து நான் உறைந்து போயிருப்பேன். இங்கே கற்றுத் தரப்படும் பயிற்சிகள், அந்தச் செயல்முறைகள் வெறும் உடலைப் பற்றியதாகவே இருக்கின்றன. அவற்றின் உயிரோட்டம் தொலைந்து போய், அதுவும் ஏதோ உடற்பயிற்சி போல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதனால் தான் நம் பாரம்பரியத்தில், இப்பயிற்சிகளை வாழும் ஒரு குருவிடம் இருந்து நேராகக் கற்பது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டது. அவர் இப்பயிற்சிகளை அதற்கே உரித்தான உயிரோட்டத்துடன் வழங்குவார்.

இந்த யோக முறைகள் உங்கள் உடலை மிக நாசுக்காக ஊக்குவித்து, அதை முற்றிலும் வேறு நிலையில் செயல்படத் தூண்டிடும். யோகா என்பது, உங்கள் உச்சநிலையை அடைய உதவும் கருவி. ஒவ்வொரு ஆசனாவும், ஒவ்வொரு முத்ராவும், ஒவ்வொரு சுவாசிக்கும் முறையும், யோகத்தின் ஒவ்வொரு அம்சமும் இது ஒன்றை நோக்கித்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கட்டுக்கதை 3: சிக்ஸ்-பேக் உடற்கட்டு வேண்டுமா? யோகா பெஸ்ட் வழி

சத்குரு:

உங்களுக்கு அற்புதமான உடற்கட்டு, சிக்ஸ்-பேக்கோ ஏதோ ஒரு பேக்கோ வேண்டுமெனில், டென்னிஸ் விளையாடச் செல்லுங்கள், அல்லது மலையேறி உடலை உறுதி பெறச் செய்யுங்கள். யோகா என்பது வெறும் உடற்பயிற்சி இல்லை, அதற்கு வேறு பரிமாணங்கள் உண்டு. யோகத்தில் ஆரோக்கியம் கிட்டும்தான், ஆனால் அது சிக்ஸ்-பாக் உருவாக்குவது போன்ற பயிற்சியல்ல. யோகா செய்து உடலில் அதிகமாக உள்ள 'கலோரி'களை எரித்தாலோ, உங்கள் தசைகள் மேலும் வலுப்பெறச் செய்தாலோ, நீங்கள் தவறான யோகமுறைகளை பின்பற்றுகிறீர்கள் என்பதில் சந்தேகமேயில்லை. உங்களுக்கு அதுதான் வேண்டுமெனில், 'ஜிம்'மிற்குச் செல்லுங்கள். யோகா என்பது மிக நுட்பமாக, மென்மையாக செய்யப்படவேண்டிய ஒன்று. அதை இறுக்கமாக, தசைகளை வளர்ப்பதற்காக செய்யக் கூடாது, ஏனெனில், அது உடற்பயிற்சி இல்லை.

இந்த உடலிற்கென தனியாக ஞாபகசக்தி உள்ளது. இதைப் படிக்க நீங்கள் முற்பட்டால், ஒன்றுமற்ற நிலையிலிருந்து, இந்தப் பிரபஞ்சம் எப்படி உண்டாயிற்று என்பது முதல், உங்களுக்குத் தெரியவேண்டிய ஒவ்வொன்றும் இதில் செதுக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் ஆசனங்கள் செய்யும்போது, அந்தப் பதிவுகளைத் திறந்து, உங்களின் இவ்வாழ்வை உச்சபட்ச சாத்தியத்திற்கு மாற்றியமைக்க முற்படுகிறீர்கள். சரியான முறையில் மட்டும் ஹட யோகா கற்பிக்கப்பட்டது என்றால், தெய்வீகத்திற்கே அழைப்புவிடும் வகையில், உங்கள் உடலை மிகப் பிரமாதமான, அற்புதமான ஒரு வஸ்துவாய் உருவாக்கிவிடலாம்.

கட்டுக்கதை 4: கடந்த 100 ஆண்டுகளில் மட்டுமே யோகா உலகெங்கும் பரவியிருக்கிறது.

சத்குரு:

பலவாறாக மாற்றங்கள் செய்யப்பட்டு, அதன் அடிப்படைகள் புரியாது, அதை அதிகம் திரித்திருந்தாலும், 'யோகா' என்ற சொல் இன்று உலகின் பல இடங்களிலும் பரவி இருக்கிறது. அதைப் பரப்புவதற்கு எந்த இயக்கமும் ஒரு ஒருங்கிணைந்த முயற்சியை எடுக்கவில்லை என்றாலும், மனிதனுக்கு நல்வாழ்வினை வழங்குவதில் யோகா அளவிற்கு வேறு எதுவும் செயல்படவில்லை என்பதால்தான், காலத்தால் மறையாது அது இன்றும் நிலைத்திருக்கிறது.

பல்லாயிரம் பேர் யோகாவை பின்பற்றி வருகிறார்கள். ஆனால், அது எங்கிருந்து வந்தது? அதைத் தோற்றுவித்தது யார்? இது பல வருடங்களுக்கு முந்தைய கதை. அதன் பழமை காலத்தின் நடுவே புதைந்துவிட்டது. யோகக் கலாச்சாரத்தில், சிவனை தெய்வமாகப் பார்க்கமாட்டோம். அவர் ஆதியோகி, முழுமுதற் யோகி. யோகத்தைத் தோற்றுவித்தவர் அவர். இப்படி ஒரு சாத்தியம் மனிதனுக்கு இருக்கிறது என்ற விதையை மனித மனத்தில் பதித்தவர்.

முதன்முதலில் அவரிடம் ஞானம் பெற்றது அவரது மனைவி, பார்வதி. அதைத் தொடர்ந்து அவரிடம் ஞானம் பெற்றவர்கள், அவரது ஏழு சீடர்கள். கேதார்நாத்தில், காந்த்திசரோவர் ஏரிக்கரையிலே, இவர்களுக்குத்தான் உலகின் முழுமுதற் யோக வகுப்பு எடுக்கப்பட்டது.

பல காலம் நீடித்த இந்த போதனை நிறைவுற்றபோது, இன்று உலகம் சப்தரிஷிகள் என்று போற்றி வணங்கும் அந்த ஏழு ஞானமடைந்த மனிதர்களும் உருவானார்கள். ஆதியோகி இவர்கள் எழுவரிலும், யோகத்தின் வெவ்வேறு பரிமாணங்களை நிலைநிறுத்தினார்.

சப்தரிஷிகள் ஏழ்வரையும் உலகின் வெவ்வேறு மூலைகளுக்குச் சென்று, ஒரு மனிதன் தன் கட்டுப்பாடுகளையும், தடைகளையும் தாண்டி மலரமுடியும் என்ற சாத்தியத்தை எல்லோருக்கும் வழங்குமாறு பணித்தார் ஆதியோகி.

அந்த ஏழ்வரில், ஒருவர் 'கஜகஸ்தானை'ச் சுற்றி இருக்கும் 'சென்ட்ரல் ஆசியா'விற்குச் சென்றார். ஒருவர் வட ஆப்பிரிக்கா, மற்றும் 'மிடில் ஈஸ்ட்' பகுதிக்குச் சென்றார். ஒருவர் தென் அமெரிக்காவுக்குச் சென்றார். ஒருவர் ஆதியோகியுடன் அங்கேயே உட்கார்ந்துவிட்டார். ஒருவர் இமாலயமலை இறங்கி, அதன் அடிவாரத்தில், இன்று 'காஷ்மீரி ஷைவிஸம்' என்றழைக்கப்படும், சைவ முறையை ஸ்தாபித்தார். ஒருவர் சீனா, ஜப்பான் உள்ளடங்கிய 'கிழக்கு ஆசியப்' பகுதிக்குச் சென்றார். ஏழாமவர் இந்தியாவின் தென் பகுதிக்கு வந்தார். காலம், இவர்களின் வேலைகள் பலவாறாக திரித்திருந்தாலும், இவர்கள் சென்ற இடங்களின் கலாச்சாரத்தை உற்று நோக்கினால், அங்கு இவர்கள் செய்த வேலையின் அடையாளங்கள் இன்றளவிலும் தென்படுகின்றன.

கட்டுக்கதை 5: இசையுடன் யோகா - செம்ம காம்பினேஷன்!

சத்குரு:

யோகப் பயிற்சிகள் செய்யும் இடத்தில் உருவத்தை பிரதிபலிக்கும் கண்ணாடிகள் இருக்கக்கூடாது. பின்னணியில் இசையும் இருக்கக்கூடாது. ஹடயோகப் பயிற்சிகள் செய்யும்போது, உங்கள் உடல், மனம், சக்திநிலை மற்றும் உங்கள் உள்நிலையோடு ஒரு ஆழ்ந்த ஈடுபாட்டோடு செய்யவேண்டும். அதை ஒரு மரியாதையோடு, தக்க கவனத்தோடு அணுகவேண்டும். ஏதோ ஒன்றைச் செய்தோமா, இசையோடு அனுபவித்தோமா என்பதுபோல் அல்ல. நடனப்பயிற்சிக் கூடங்கள் போல், யோகப் பயிற்சிக் கூடங்கள் வைத்து நடத்துவதில் ஒரு பெரும் பிரச்சினை, ஆசனங்கள் செய்து காண்பித்துக் கொண்டே, ஆசிரியர் குறிப்புகளைக் கொடுக்கிறார். இப்படிச் செய்வது உங்களுக்கு நிச்சயம் பெரும் பிரச்சனைகளை வரவழைக்கும்.

ஆசனங்கள் செய்யும்போது ஒரு வார்த்தை கூட பேசக் கூடாது என்பது நன்னெறி என்றல்ல. அது கண்டிப்பாய் பின்பற்றப்பட வேண்டிய சட்டம். ஏதோ ஒரு ஆசன நிலையில் இருக்கும்போது கண்டிப்பாக எதுவும் பேசக்கூடாது. ஒவ்வொரு ஆசனத்தை செய்யும்போதும், அந்நிலையில் உங்கள் சுவாசம், உங்கள் மனதின் கவனம், சக்தியின் நிதானம் மற்றும் ஸ்திரம் மிகமிக முக்கியம். பேசும்போது இவை அனைத்தும் நிலைகுலைந்து போகும். இதனால் உண்டான சமனற்ற நிலையில் இருந்து விடுபட இதுவரை எட்டில் இருந்து பத்து பேர் என்னிடம் தீர்வு நாடி வந்திருப்பார்கள். அதில் நான்கு பேர், அவர்கள் செய்து கொண்டிருந்த முட்டாள்தனத்தின் ஆழம் புரிந்து, அவர்கள் யோகம் சொல்லிக்கொடுப்பதை நிறுத்திக் கொண்டனர்.

சில வருடங்களுக்கு முன்பு நான் அமெரிக்காவில் இருந்தபோது, ஒரு யோகப்பயிற்சிக் கூடத்தில் உரையாற்ற என்னை அழைத்திருந்தார்கள். அங்கு நான் சென்றபோது, அவ்விடத்தில் எல்லோரையும் ஊக்குவிக்க 'சங், சங், சங்' என்று ஏதோ ஒரு இசை ஒலித்துக் கொண்டிருந்தது. அந்த வகுப்பை எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியை, அர்த்தமத்ஸ்யேந்திராஸனாவில் அமர்ந்துகொண்டு, தன்னை சுற்றி இருப்பவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்தவுடன், என்னிடம் ஓடிவந்து பேசத் துவங்கினார்.

அவரை தனியே அழைத்துச் சென்று, "இப்படி நீ செய்தால், வெகு சீக்கிரம் உன்னில் ஒரு சமனற்ற நிலை உண்டாகும். எத்தனை ஆண்டுகளாக இதை நீ செய்து கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டேன். ஒரு பதினைந்து, பதினாறு வருடங்களாக என்று அவர் பதிலளித்தார். "இதை பதினாறு வருடங்களாக செய்து கொண்டிருக்கிறாய் என்றால், உனக்கு இது, இது, இதுபோன்ற பிரச்சினைகள் உண்டாகி இருக்கவேண்டும்" என்றேன். என்னைப் பார்த்து அரண்டுபோன அந்த நபர் அடுத்த நாளே என்னைச் சந்திக்க வந்தார்.

வந்து, "சத்குரு, நீங்கள் சொன்ன அனைத்துப் பிரச்சினைகளுமே எனக்கு இருக்கிறது. மருத்துவர்களிடம் இதற்கான சிகிச்சை மேற்கொண்டு வருகிறேன்" என்றார். அதற்கு நான், "இதை சரிசெய்ய மருத்துவர்கள் தேவையில்லை. இதை நீ தான் உண்டுசெய்து கொண்டிருக்கிறாய். நீ நிறுத்தினால், தானாக அப்பிரச்சினைகளும் போய்விடும்" என்றேன். அதற்குப்பின் ஒரு ஒன்றரை ஆண்டுகளில் யோகா சொல்லித் தருவதையே அவர் முற்றிலுமாய் நிறுத்திக் கொண்டார்.

தவறான முறையில் யோகா செய்து மனநலன் பாதிக்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள். இது யோகா அபாயகரமானது என்பதால் அல்ல. இவ்வுலகில் என்றுமே முட்டாள்தனம் தான் ஆபத்து விளைவிப்பதாய் இருந்திருக்கிறது. முட்டாள்தனமாய் ஏதேனும் செய்தால், அதன் விளைவுகளை நிச்சயம் நீங்கள் சந்திக்கத்தான் வேண்டும்!

கட்டுக்கதை 6: புத்தக யோகா - யோகம் கற்க எளிய வழி

சத்குரு:

ஒரு பெரும் புத்தகக் கடையினுள் நுழைந்தால், அங்கு நிச்சயம் 15 - 20 வகையான யோகப் புத்தகங்கள் இருக்கும். 7 நாளில் யோகா கற்பது எப்படி? 21 நாளில் யோகியாவது எப்படி?... புத்தகம் வழியாக யோகா கற்று, தனக்குத்தானே பெருமளவில் பாதிப்பு விளைவித்துக் கொண்டவர்கள் பலர். இப்பயிற்சிகள் மிக எளிமையாகத் தோன்றலாம். ஆனால், அது மிக நுட்பமான முறையில் செயல்படும் என்பதால், சரியான புரிதலோடு, முறையான வழிநடத்துதலோடு தான் அவற்றை பயிற்சி செய்யவேண்டும். இல்லையெனில், விளைவுகள் மிக மோசமாக இருக்கும். புத்தகத்தின் வாயிலாக ஊக்கம் பெறலாம், ஆனால், அவற்றைக் கொண்டு கற்பதோ, பயிற்சி செய்வதோ கூடாது.

கட்டுக்கதை 7: தினமும் காலை மாலை செய்வதே யோகா

சத்குரு:

யோகா என்பது காலையும் மாலையும் மற்றும் செய்யும் பயிற்சியல்ல. வாழ்வை வாழும் நிலை யோகா. பயிற்சி செய்பவர் யோகாவாகவே மாறிட வேண்டும். காலையும் மாலையும் யோகா செய்துவிட்டு, மற்ற நேரம் எல்லாம் எதிலோ சிக்கிக் கொள்வது யோகா அல்ல, இது யோகப் பயிற்சி.

யோகக் கலாச்சாரத்தில் வாழ்வின் எந்தவொரு அம்சத்தையும் விட்டு வைக்கவில்லை. உங்கள் வாழ்க்கையே யோகாவானால் உங்களால் எல்லாவற்றையும் செய்ய முடியும். நீங்கள் குடும்பத்தை நடத்தலாம், வேலைக்குப் போகலாம், தொழில் செய்யலாம், நீங்கள் செய்ய விரும்பும் எதையும் செய்யலாம். வாழ்வின் எந்தவொரு அம்சத்திலும் நீங்கள் சிக்கிப் போகலாம் அல்லது அதைப் பயன்படுத்தி ஆன்ம விடுதலை அடையலாம். வாழ்க்கைச் சூழ்நிலைகளில் நீங்கள் சிக்கிப் போனால் அதனை நாம் கர்மா என்கிறோம். அந்த சூழ்நிலையினால் நீங்கள் வளர்ந்து, ஆன்ம விடுதலை அடைந்தால் அதனை யோகா என்கிறோம்.