பொருளடக்கம்
1. உறங்கும் நேரம், உணவருந்தும் நேரம்
2. உறங்கும் முன் குளிக்கலாம்
3. விளக்கேற்றி வையுங்கள்
4. தலையை வடக்கு நோக்கி வைக்கக்கூடாது
5. நேரம் குறைந்துகொண்டே செல்கிறது
6. சேகரித்த அனைத்தையும் ஒதுக்கிவைப்போம்
7. அலாரம் சத்தம் கேட்டு பதறி எழாதீர்கள் 
8. வலதுபுறம் திரும்பி எழுதல்
9. உள்ளங்கைகளை தேய்த்துக் கண்களின் மேல் வைத்தல்
10. புன்னகையுடன் எழுந்திருங்கள்

சத்குரு: உங்களில் எத்தனை பேர், ஒருநாள் காலையில் எழுந்தவுடனே, காரணமே இல்லாமல் அசிங்கமாக உணர்ந்திருக்கிறீர்கள்? ஒரு ஆண்டில் இரண்டு, மூன்று முறை இப்படி நடந்தால் கூட, நீங்கள் உறங்கப்போவதற்கு முன்னால் சில விஷயங்களை செய்யத் தேவை இருக்கிறது, இது மிக மிக முக்கியம். ஏனென்றால், விழிப்புணர்வில்லாமல், தூக்கத்தில் நீங்கள் நிறைய எதிர்மறையான உணர்வுகளை அல்லது நேர்மறையான உணர்வுகளை அடைகாத்து வளர்க்கமுடியும்.

இனிமையான உணர்வு அல்லது கசப்பான உணர்வை, தூக்கத்தில் நீங்கள் தடையில்லாமல் மிகவும் நன்றாக வளர்க்கமுடியும். பகலிலும் இதை நீங்கள் அடைகாத்து வளர்க்கமுடியும், ஆனால் அதற்கு நிறைய தடைகள் ஏற்படுவதால், அது திறம்பட நடக்க வாய்ப்பில்லை.

இனிமையான உணர்வு அல்லது கசப்பான உணர்வை, தூக்கத்தில் நீங்கள் தடையில்லாமல் மிகவும் நன்றாக வளர்க்கமுடியும். பகலிலும் இதை நீங்கள் அடைகாத்து வளர்க்கமுடியும், ஆனால் அதற்கு நிறைய தடைகள் ஏற்படுவதால், அது திறம்பட நடக்க வாய்ப்பில்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட விதமாக உறங்கப் போகிற பழக்கம் உங்களுக்கு இருந்தால், காலையில் நீங்கள் ரொம்ப மோசமான மனநிலையில எழுந்தால், காரணமே இல்லாமல் இப்படி எழுந்தால், இரவில் ரொம்ப திறம்பட, சில உணர்வுகளை நீங்கள் அடைகாத்து வளர்க்கிறீர்கள் என்று அர்த்தம். மோசமான முட்டைகள்! இது வெறும் மனோரீதியான சஞ்சலங்கள் பற்றியது மட்டும் இல்லை. இது காலப்போக்கில் பெரிய உடல் உபாதைகளை உருவாக்க முடியும். உங்கள் வாழ்க்கையில் இதுபோன்ற அம்சங்களை இல்லாமல் செய்வது மிக முக்கியம்.


இரவில் நல்ல தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்? (Sleep in Tamil)

1. உறங்கும் நேரம், உணவருந்தும் நேரம்

இரவு உணவு, Dinner

நீங்கள் இரவு தூங்கப் போவதற்கு முன்னால், சில விஷயங்களை கவனிக்கத் தேவையாக இருக்கிறது. நீங்கள் மாமிசமோ, இல்லை வேறுவிதமான உணவோ சாப்பிட்டு இருந்தால், தூங்கப் போவதற்கு மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் முன்னாலேயே உண்பது சிறந்தது. அப்போது தான் உறங்குவதற்கு முன்னால் ஜீரணமாகியிருக்கும். உறங்குவதற்கு முன்னால் கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு உறங்கப்போகலாம். இதுவே உங்கள் தூக்கத்தைப் பராமரிக்கும்.

2. உறங்கும் முன் குளிக்கலாம்

குளியல், Bath

நீங்கள் செய்யக்கூடிய ஒரு எளிய செயல், குளிப்பது. தூங்குவதற்கு முன்னால் குளிப்பது மிகப் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். குளிரான தட்பவெட்பத்தில் பச்சைத்தண்ணீரில் குளிப்பது சிரமமாக இருந்தால், வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். இரவு நேரத்தில் சுடுநீரில் குளிக்கவேண்டாம், வெதுவெதுப்பான நீரில் குளித்தால், அது உங்களை விழிப்பாக்கும். அதனால் பிரச்சனை ஒன்றும் இல்லை. நீங்கள் 15 - 20 நிமிடங்கள் அல்லது அரை மணிநேரம் தாமதமாக தூங்கலாம், ஆனால் நன்றாக தூங்குவீர்கள். ஏனென்றால், இது சில விஷயங்களை நீக்கிவிடும். நீங்கள் குளிக்கும்போது தோலில் இருக்கும் அழுக்கை மட்டும் எடுக்கவில்லை. நீங்கள் இதை கவனித்திருக்கிறீர்களா? நீங்கள் மிகவும் இறுக்கமாக அல்லது பதற்றமாக இருந்தீர்களானால், குளித்துவிட்டு வெளியே வந்தால், ஏதோ பெரிய சுமை நீங்கியது போல இருக்கும். இதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? அதனால் இது தோலை கழுவுவது பற்றி மட்டுமில்லை, உங்கள் உடல் மேல் தண்ணீர் ஓடுகின்றபோது, நிறைய விஷயங்கள் நடக்கின்றது. இந்தக் குளியல் ரொம்ப அடிப்படையான பூதசுத்தி! ஏனென்றால், உங்கள் உடலில் 70 சதவீதத்துக்கும் மேல் தண்ணீர் தான் இருக்கிறது. இந்த உடல் மேல் தண்ணீரை ஓடவிட்டால், ஒருவிதமான சுத்திகரிப்பு நடக்கிறது, இது தோலை சுத்தப்படுத்துவதையும் தாண்டி வேலைசெய்கிறது.

3. விளக்கேற்றி வையுங்கள்

விளக்கு, தீபம், Oil Lamp

நீங்கள் செய்யக்கூடிய இன்னொரு விஷயம், இயற்கையான எண்ணெயை பயன்படுத்தி விளக்கேற்றலாம், பருத்தித் திரி பயன்படுத்தி ஏதோவொரு எண்ணெய். இந்த தேசத்தில் என்ன எண்ணெய் பயன்படுத்துகிறீர்கள்? எல்லாம் சமையல் எண்ணெய்தானா? ஆளிவிதை எண்ணெய், அரிசி தவிட்டு எண்ணெய், நல்லெண்ணெய், என்ன எண்ணெய் பயன்படுத்துகிறீர்கள்? ஆலிவ் எண்ணெய். ஏதோ ஒரு இயற்கையான எண்ணெயில் பருத்தி திரி சேர்த்து விளக்கேற்றுங்கள். நீங்கள் தூங்குகிற அறையில் எங்கேயாவது ஒரு சின்ன விளக்கு எரியட்டும். இந்த விஷயங்கள் எல்லாம் அப்போது காணாமல் போவதை கவனிப்பீர்கள்.

ஏதாவது உச்சாடனம் கொண்டுவர முடியுமானால் செய்யலாம், இல்லையென்றால் இரவு நேரங்களில் செய்யக்கூடிய யோகப்பயிற்சிகள் இருக்கிறது. தூங்கப் போவதற்கு முன்னால், உங்கள் படுக்கையில் உட்கார்ந்து இந்த பயிற்சியை செய்யலாம். நீங்கள் ஈஷா கிரியா செய்ய விரும்பினால், அது இணையதளத்தில் இருக்கிறது.

4. தலையை வடக்கு நோக்கி வைக்கக்கூடாது

தூங்கும்போது தலை வைக்கும் திசை, Sleeping direction

பொதுவாக இந்தியாவில், தலையை வடக்கு பக்கமாக வைத்து தூங்கக்கூடாது என்று சொன்னார்கள். இது உங்களுக்கு தெரியுமா? தலையை வடக்கு பக்கமாக வைத்து தூங்கினால், இதுபோன்று கிடைமட்டமாக இருக்கும்போது, மெதுமெதுவாக ரத்தம் மூளை நோக்கி ஈர்க்கப்படும். மூளையில் ரத்த ஓட்டம் அதிகப்படியாக இருந்தால், நீங்கள் அமைதியாக தூங்கமுடியாது. உங்களுக்கு மூளையில் ஏற்கனவே ஏதாவது பலவீனம் இருந்தாலோ அல்லது முதுமையில் இருந்தாலோ, தூக்கத்திலேயே இறந்து போவதற்கு வாய்ப்பிருக்கிறது. அப்போது ஒருவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால், கூடுதல் ரத்தம் மூளைக்கு செல்கிறது. அங்கே ரத்தநாளங்கள் மயிரிழை போல மெல்லியதாக இருக்கிறது. பூமியின் காந்தசக்தி, கூடுதல் ரத்தத்தை மூளைநோக்கி ஈர்க்கும்.

நீங்கள் நேராக இருக்கும்போது இப்படி நடக்காது, நீங்கள் கிடைமட்ட நிலைக்கு போனவுடனேயே, தலைநோக்கி இந்த காந்தசக்தி அதிகமாக செயல்படும், மெதுவாக ரத்தம் மூளைநோக்கி நகரப்பார்க்கும். இது வடதுருவத்தில் மட்டும்தான் பொருந்தும், நீங்கள் ஆஸ்திரேலியா போனால், தென்திசையில் தலை வைத்து தூங்கக்கூடாது. நீங்கள் இந்தியாவில இருந்தால், வடதிசை நோக்கி தலை வைக்கக்கூடாது. வேற எந்த திசையில் தலையை வைத்துக் கொண்டாலும் பரவாயில்லை.

5. நேரம் குறைந்துகொண்டே செல்கிறது

நேரம் குறைந்துகொண்டே செல்கிறது, Hour glass

உங்கள் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்; நீங்கள் ஒருநாள் இறப்பீர்கள்! இது வெறும் வார்த்தை இல்லை. உண்மையாகவே நீங்கள் இப்போதுகூட இறந்து விழுந்துவிடலாம். நீங்கள் இளமையாக இருக்கலாம், முதுமையாக இருக்கலாம், அது விஷயமில்லை. நீங்கள் இப்போதே இறந்து விழுந்துவிடலாம், ஆமாவா, இல்லையா? நீங்கள் தூங்கப் போவதற்கு முன்பு, படுக்கையில அமர்ந்தபடி, 'இது உங்கள் மரணப்படுக்கை' என்று நினைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு வாழ்வதற்கு இன்னும் ஒரு நிமிடம்தான் இருக்கிறது. இன்றைக்கு என்னென்ன செய்தீர்கள் என்று திரும்பிப்பாருங்கள்! அது அர்த்தமுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்கள். இந்த ஒரு எளிய செயலை செய்யுங்கள்.

மரணம் உண்மையாகவே எப்படி நடக்கும் என்று உங்களுக்கு தெரியாது. நீங்கள் மரணப்படுக்கையில் உட்கார்ந்திருப்பீர்களா அல்லது மருத்துவமனையில் எல்லாவிதமான டியூபும் இணைத்திருப்பார்களா, எப்படி நடக்கும் என்று யாருக்குத் தெரியும்? அதனால் தினமும் இதை செய்யவும். நீங்கள் உங்கள் மரணப்படுக்கையில் உட்கார்ந்து திரும்பிப் பார்த்தால், நான் இந்த 24 மணி நேரத்தை கையாண்ட விதம் அர்த்தமுள்ளதா? என்று பார்க்க வேண்டும். ஏனென்றால் இப்போது நான் இறந்து கொண்டு இருக்கிறேன்! இப்படி செய்தால், நீங்கள் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வீர்கள்!

6. சேகரித்த அனைத்தையும் ஒதுக்கிவைப்போம்

 சேகரித்த அனைத்தையும் ஒதுக்கிவைப்போம், Keep Things Aside

தினமும் இரவு நீங்கள் தூங்கப் போவதற்கு முன்னால் இதை செய்ய வேண்டும். கடைசி 3 நிமிடங்கள், நீங்கள் சேகரித்த எல்லாமே, உடலில், மனதில் சேர்த்த பொருட்கள்... சின்ன சின்ன விஷயங்களை கவனிக்காமல் விடாதீர்கள், சின்ன விஷயங்கள் தான் பெரிய விஷயங்களாகும்! மக்கள் அவர்களுடைய தனி தலையணையை எப்படி சுமக்கிறார்கள் என்று பார்த்திருக்கிறேன். அது அவர்களுக்கு ரொம்ப முக்கியமாக இருக்கிறது.

அதனால் உங்கள் தலையணை, உங்கள் காலணி, உங்களுடைய உறவுகள், இப்படி நீங்கள் சேகரித்த எல்லாவற்றையுமே ஒரு ஓரமாக வைத்துவிட்டு, பிறகு தூங்குங்கள். அதுபோன்ற ஒரு நிலையில் நீங்கள் தூங்கினால், இன்னும் அதிக ஒளியுடன் எழுவீர்கள், அதிக சக்தியுடன் எழுவீர்கள். நீங்கள் ‘சாத்தியம்’ என்று நினைத்ததை விட அதிக சாத்தியங்களோடு எழுந்திருப்பீர்கள். சும்மா ஒரு உயிராகத் தூங்குங்கள். ஒரு ஆணாக இல்லை, பெண்ணாக இல்லை, இதுவாக அதுவாக இல்லை. எல்லாவற்றையும் கீழே வைத்துவிடுங்கள். இது மிக சுலபமாகிவிட்டது, தூங்குகிற சாதனா! இதையாவது நீங்கள் செய்யவேண்டும்!

நல்லபடியாக எழுவதற்கான டிப்ஸ்

1. அலாரம் சத்தம் கேட்டு பதறி எழாதீர்கள்

அலாரம் சத்தம் கேட்டு பதறி எழாதீர்கள், Don’t Get Alarmed

எப்படிப்பட்ட சத்தங்களை கேட்டு நாம் எழுந்திருக்கிறோம் என்பதுதான், அந்த நாள் எப்படி அமையப்போகிறது என்பதையும், உங்கள் வாழ்க்கையின் வருங்காலத்தையும் பலவிதங்களில் நிர்ணயிக்கும். அதனால் அலாரம் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்திருப்பது, உங்கள் வாழ்க்கையை நடத்துவதற்கு சிறந்த வழி இல்லை. உங்களுக்கு கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டால், உங்கள் உடல் – ‘நீங்கள் சாப்பிடுகிற உணவு, உங்களுக்குள் நீங்கள் உருவாக்குகிற சிந்தனைகள் மற்றும் உணர்வுகளைப் பொறுத்து உங்கள் உடல் எவ்வளவு உயிரோட்டமாக இருக்கிறது, உங்களுக்கு எவ்வளவு தூக்கம் தேவைப்படுகிறது' என்று நிர்ணயிக்கும்.

உங்களுக்கு 3... மன்னித்து விடுங்கள்... 8ல் இருந்து 12 மணி நேரம் தான் தூக்கம் உங்களுக்கு தேவைப்படுகிறது என்று வைத்துக்கொள்ளலாம் - நான் முன்பு தவறான எண்ணிக்கையை சொல்லிவிட்டேன். உங்களுக்கு எவ்வளவு நேரம் தூக்கம் தேவைப்பட்டாலும், அது எவ்வளவு என்று உங்களுக்கு தெரியும். அதனால், அதற்குத் தகுந்தவாறு நீங்கள் தூங்க வேண்டும். அப்போது இயற்கையாகவே முழித்துக் கொள்வீர்கள். நீங்கள் இயற்கையாகவே விழிக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் நேரத்திற்கு விழிப்பீர்களா என்று சந்தேகம் இருந்தால், வைராக்கியா மந்திர உச்சாடணங்களில் இருந்து ஒன்றை தேர்ந்தெடுத்து, அதை நீங்கள் பயன்படுத்தலாம்.

2. வலதுபுறம் திரும்பி எழுதல்

தூக்கத்திலிருந்து எழுந்திருக்கும் முறை, Best way to wake up

உடலியக்க அளவில் உங்களுடைய ஒரு முக்கியமான அம்சம், உங்கள் இதயம்! உங்கள் ரத்த ஓட்டத்திற்கு, உடல் முழுக்க உயிர்த்தன்மையை பம்ப் செய்கிற உறுப்பு அது. இந்த ஒரு விஷயம் நடக்கவில்லை என்றால் எதுவுமே நடக்காது. இது இடது பக்கத்தில் இருந்து துவங்குகிறது. அதனால் உங்களுக்கு இப்படி சொன்னார்கள். உங்களுக்கு தெரியுமா? இந்தியாவில் இப்படி சொல்லியிருப்பார்கள், காலையில் எழும்போது வலதுபக்கமாக திரும்பி எழவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்களா? இடது பக்கமாக திரும்பி எழுந்தால் கெட்ட விஷயங்கள் உங்களுக்கு நடக்கும், இது கெட்ட விஷயங்களைப் பத்தினது இல்லை.

நீங்கள் தளர்வான நிலையில் இருக்கும்போது, உடல் நன்றாக தளர்வாக இருக்கும்போது வளர்சிதை மாற்றம் குறைவாக இருக்கும். நீங்கள் எழும்போது உடல்செயல் திடீரென்று அதிகரிப்பதால், இந்தியாவில் இப்படி சொன்னார்கள். இதையெல்லாம் உங்கள் வாழ்க்கை முறையிலேயே கொண்டுவந்தார்கள். ஆனால் அதை இப்போது நீங்கள் தூக்கியெறிகிறீர்கள். அறிவியல் முழுவதும் உங்கள் வாழ்க்கை முறையிலேயே கட்டமைக்கப்பட்டு இருந்தது.

3. உள்ளங்கைகளை தேய்த்துக் கண்களின் மேல் வைத்தல்

காலையில் எழுந்தவுடன், ‘உங்கள் கைகளை எடுத்து இப்படி பார்க்கவேண்டும்' என்று சொன்னார்கள். இப்படி பார்ப்பது இல்லை, உங்கள் கண்கள் மேல் வைக்கவேண்டும். கண்கள் மேல் வைத்தால், கடவுளைப் பார்ப்பீர்கள், இது கடவுளைப் பார்க்கிறது இல்லை! இரண்டு கைகளையும் ஒன்றுடன் ஒன்று தேய்த்தீர்கள் என்றால், நரம்பு முடிவுகள் எல்லாமே... அதாவது உள்ளங்கைகளில் நரம்பு முடிவுகள் அடர்த்தியாக இருக்கிறது, இப்படி செய்தீர்கள் என்றால், உடல் உடனடியாக விழிப்புநிலைக்கு வருகிறது.

நீங்கள் தூக்கத்தில் இருக்கும்போது, இதை செய்து பாருங்கள், எல்லாம் விழிப்பாகிவிடும். அதனால் காலையில், உங்கள் உடலை அசைப்பதற்கு முன்னால், முதலில் உடலை விழிப்பாக்க வேண்டும், அதற்கு, இப்படி கைகளை ஒன்றுடன் ஒன்று தேய்த்து கண்கள் மேல் வைத்தால், உடனடியாக அதிகப்படியான நரம்புகள், உங்கள் கண்கள் மற்றும் புலனுறுப்புகளோடு தொடர்புடைய மற்ற நரம்புகள் எல்லாம் உடனே விழிப்பாகும். உங்கள் உடலை அசைப்பதற்கு முன்னால் உங்கள் உடலும், மூளையும் துடிப்பாக இருக்க வேண்டும். நீங்கள் மந்தமாக இருக்கக்கூடாது. அதுதான் நோக்கம், புரிகிறதா? அதனால் இதை செய்துவிட்டு, வலதுபக்கமாக திரும்பி எழவேண்டும்.

4. புன்னகையுடன் எழுந்திருங்கள்

புன்னகையுடன் எழுந்திருங்கள், Wake Up With a Smile

இன்றைக்கு நாம் எல்லோருமே தூங்கப்போனால், நாளைக்கு காலையில் கிட்டத்தட்ட ரெண்டரை லட்சம் மக்கள் எழமாட்டார்கள். உலகத்தில் நடக்கிற இயற்கையான மரணம் இது. ஒருவேளை நீங்கள் நாளைக்கு காலையில் எழுவதற்கு உத்தரவாதம் இருக்கிறதா? நீங்கள் உத்தரவாதத்துடன் வந்திருக்கிறீர்களா என்ன? கேரண்டி கார்டு இல்லை! நீங்கள் எழுந்திருப்பீர்கள் என்று வைத்துக்கொள்ளலாம், இந்த அளவுக்காவது நீங்கள் செய்ய வேண்டும்.

இது உங்கள் ஆன்மீக செயல்முறைக்கான முதல் படி! நாளைக்கு காலையில் நீங்கள் விழிக்கும்போது, 'நீங்கள் உண்மையாகவே விழித்திருக்கிறீர்களா, இல்லை இறந்துவிட்டீர்களா' என்று சோதித்துப்பாருங்கள். நீங்கள் விழித்திருந்தால், ஒரு சின்ன கொண்டாட்டம் வேண்டாமா? நீங்கள் எழுந்து நடனமாடத் தேவையில்லை, ஒரு புன்னகையாவது செய்யலாமே? இன்னும் இது உயிரோடு இருக்கிறதே! ரெண்டரை லட்சம் மக்கள் இறந்துவிட்டார்கள், அவர்கள் எல்லாம், உங்களை, என்னைப் போன்ற மக்கள். ஆனால் இப்போது காணாமல் போய்விட்டார்கள்! எங்கே தேடினாலும் அவர்கள் இல்லை! ஆனால், இங்கே நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன்! இதற்காக ஒரு பெரிய புன்னகை செய்வீர்களா?

நான் மேனேஜ்மென்ட் பற்றி பேசுகிறேன். ரெண்டரை லட்சம் மக்கள் இறந்துவிட்டார்கள் என்றால் 30ல் இருந்து 50 லட்சம் மக்கள் அவர்களுக்குப் பிரியமானவர்களை இழந்திருப்பார்கள்! உங்களுக்கு முக்கியமான மூன்று, நான்கு, ஐந்து பேர் இருக்கிறார்களா என்று பாருங்கள்! அவர்கள் எல்லோருமே இன்றைக்கு உயிரோடு இருக்கிறார்கள்! இன்னொரு பெரிய புன்னகை செய்வீர்களா, மாட்டீர்களா? உயிரோடு இருக்கிறீர்கள்! ஒருவேளை இப்போது உங்கள் தலைமேல் துப்பாக்கி வைத்தால்? இதை ஒரு நிவாரணமாக நினைப்பீர்களா? இல்லை, நீங்கள் பயந்துபோவீர்கள்!

உயிரோடு இருப்பது அந்த அளவு விலைமதிப்பில்லாதது, இல்லையா? நீங்கள் உயிரோடு இருப்பது அந்த அளவு விலைமதிப்பில்லாதது! ‘ரெண்டரை லட்சம் மக்கள் இரவில் இறந்து போகிறார்கள், ஆனால் நீங்கள் இன்னும் உயிரோடு இருக்கிறீர்கள், இதற்கு ஒரு பெரிய புன்னகையாவது செய்ய வேண்டாமா என்று நான் கேட்கிறேன்? உங்களுக்கு முக்கியமானவர்கள் எல்லோருமே உயிரோடு இருக்கிறார்கள், இன்னொரு பெரிய புன்னகை!’

கேள்வி: எனக்கு உறக்கத்தில் நிறைய காட்சிகள் வருகின்றன. அதைப் பற்றி நாம் பேசலாமா?

சத்குரு: ஒருமுறை, திருடன் ஒருவன், திருடும்போது பிடிக்கப்பட்டு கோர்ட்டிற்கு கொண்டு செல்லப்பட்டான். அவன் பார்ப்பதற்கு சற்று வசதி வாய்ந்தவனாகத் தென்பட்டதால், அந்த நீதிபதி அவனிடம், “உனக்கு வாழ்க்கையில் தேவைப்பட்டது எல்லாம் இருக்கின்றன, இருந்தும் நீ ஏன் மற்றவர்களிடம் இருந்து திருடிகிறாய்?” என்று கேட்டார். அந்த திருடன் உடனே, “உங்களுக்கு இது தெரியும் என்று நினைக்கிறேன், அறிஞர்களின் வாக்குப்படி, “ஒரு மனிதனுக்கு எவ்வளவு தான் இருந்தாலும், அவன் இன்னும் நிறைய வேண்டும் என்று நினைக்கிறான்.” அந்த நீதிபதி அவனைப் பார்த்து, “சரி, நான் உனக்கு 10 வருடம் தண்டனை தருகிறேன். உனக்கு இன்னும் வேண்டுமென்றால், என்னிடம் சொல்” என்றார்.

தூக்கத்தில் மட்டுமாவது இன்னும் கொஞ்சம் தேடாதீர்கள். நீங்கள் விழித்திருக்கும்போதும், இன்னும் கொஞ்சம் தேடாமல் இருந்தால், மிகவும் அற்புதமாக இருக்கும் - சும்மா இருங்கள். தற்போது இது உங்களுக்கு முடியாமல் போனால், தூக்கத்திலாவது இன்னும் கொஞ்சம் கேட்காதீர்கள் - சும்மா உறங்குங்கள். உங்களுக்கு குறைந்த அளவே தூக்கம் தேவைப்படுகிற அளவிற்கு, தூக்கத்தை ஒரு தனித்துவமான உற்பத்தி செயல்முறையாக நீங்கள் உருவாக்கலாம். நீங்கள் முற்றிலும் ஓய்வான நிலையில் தூங்கினால், உங்கள் உடலில் உள்ள மரபணுக்களின் வெளிப்பாடும், மற்ற செயல்பாடுகளும் இன்னும் வேகமாகவும், திறனுடனும் நடக்கும்.

நீங்கள் விழித்திருக்கும்போது திறனற்று இருந்தால், அது நல்லதல்ல என்றாலும், பரவாயில்லை என்று பொறுத்துக் கொள்கிறோம். ஆனால், நீங்கள் உறக்கத்திலும் திறனற்று இருந்தால், இறப்புதான் ஒரே விடையாக இருக்க முடியும். ஏனென்றால், அந்த ஒரே இடத்தில் தான் நீங்கள் திறனற்று இருக்க முடியாது. நீங்கள் இறந்தால், அது இறப்பு. நீங்கள் சும்மா உறங்கக் கற்றுக்கொண்டால், விழித்திருக்கும் போது “சும்மா இருப்பது,” அடுத்த படியாகும்.

சப்தங்களின் உலகிற்கும், நிசப்தத்தின் உலகிற்கும் இடையே நீங்கள் இருக்கும் ஓர் விளிம்புதான் உறக்கம் என்னும் நிலை. நீங்கள் விழிப்புணர்வு நிலையில் இருந்தால்தான், நிசப்தத்தின் உலகிற்குள் நுழைய முடியும். உங்களால் விழிப்புணர்வு இல்லாமல் சப்தங்களின் உலகிற்குள் போக முடியும், ஆனால் அதிர்வுகள் இல்லாத, வடிவங்கள் இல்லாத நிசப்தத்தின் உலகிற்குள், உங்களால் விழிப்புணர்வில்லாமல் போக முடியாது.

உறக்கத்தின் திறனை எப்படி அதிகரிப்பது:

நாம் விழிப்புணர்வடைய, உறக்கத்தை ஒரு மேடையாக உபயோகிக்க வேண்டும், உண்மையான எல்லாவற்றுடனும் ஒன்றியிருப்பதற்காக – திறனற்று, இறந்து, உண்மையிலிருந்து விலகியிருப்பதற்காக அல்ல. உறக்கத்தின் திறனை அதிகரிப்பதென்றால், கல்லைப் போல உறங்குவது அல்ல. ஆனால், கல்லை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வது தவறானதாகும். ஏனென்றால், என்னுடைய அனுபவத்தில் கற்கள் மிகவும் உயிர்தன்மையுடன் இருப்பவை – மனிதர்களை விட பன்மடங்கு உயிர்தன்மையுடன் இருப்பவை. “மரக்கட்டையைப் போல” என்பது அதை விடச் சிறந்த வெளிப்பாடாக இருக்கும், ஏனென்றால், மரக்கட்டை என்பது இறந்த ஒன்று – அது இனி ஒரு மரம் அல்ல. இது மரக்கட்டையைப் போல உறங்குவதல்ல, ஆனால் உயிர்தன்மையுடன் உறங்குவது – ஒரே நேரத்தில் விழிப்புடனும், உறக்கத்திலும் இருப்பது. நீங்கள் இதில் ஒரு சிறு சதவிகிதத்தையாவது உங்கள் உறக்கத்தில் கொண்டு வந்தால், சிறிது காலத்திற்குப் பின், நீங்கள் இயல்பாகவே தியானத் தன்மையுடன் இருப்பீர்கள். தியானத்தன்மை ஒரு வேஷமாக அல்லாமல், அது உங்கள் இயல்பாகவே, இருப்பின் பாகமாகவே ஆகிவிடும்.

ஷாம்பவி மஹாமுத்ரா

மக்களின் வாழ்க்கையில் இந்த அம்சங்களை, பல்வேறு வழிகளில் கொண்டு வருவதற்காக நாம் ஷாம்பவி மஹாமுத்ராவில் இருந்து துவங்கினோம். ஷாம்பவி என்றால் சந்தியாகாலம் – நீங்கள் பகலும், இரவும் சந்திக்கும் நேரத்தில் அல்லது இரவும், பகலும் சந்திக்கும் நேரத்தில் இருப்பீர்கள். சந்தியாகாலம் என்றால் நீங்கள் உறங்கிவிட்டீர்கள், ஆனால் விழித்திருப்பீர்கள்; நீங்கள் விழித்திருப்பீர்கள், ஆனால் உறங்கிவிட்டீர்கள். நமது உறக்கத்தின் தன்மையை மாற்றுவது – அளவை அல்ல – இதுதான் ஒருவர் ‘யோகி’ ஆவதற்கு ஒரு தேவையான அடித்தளம். நீங்கள் விழித்திருக்கும் போது, நீங்கள் முழுமையாக விழித்திருக்க வேண்டும்; ஆனால் உடலின் அளவுருக்களை சரிபார்க்கும்போது, அது உறக்கத்தில் இருக்க வேண்டும். நீங்கள் உறங்கும்போது, உங்கள் உடல் உறங்கவேண்டும், உங்கள் மனம் உறங்கவேண்டும், ஆனால் நீங்கள் விழித்திருக்க வேண்டும்.

உறக்கம் - உயிரோட்டத்துடன் இருக்கும் வழி

உயிரோட்டம் என்பது கிடைக்கப்பெற்ற நிலை அல்ல – அது உங்களது இயல்பு. “சும்மா இருப்பது” என்றால் முற்றிலும் உயிர்ப்புத் தன்மையுடன் இருப்பது – மனம் அல்ல, எண்ணம் அல்ல, உணர்வு அல்ல, சித்தாந்தம் அல்ல, தத்துவம் அல்ல, நம்பிக்கை சார்ந்த அமைப்பு அல்ல, பாலினம் அல்ல, இனம் அல்ல, ஜாதி அல்ல, மதம் அல்ல – சும்மா ஒரு உயிர். நீங்கள் வாழ்க்கையை இந்த அளவிற்கு உணர்ந்தால், உயிரும், உயிரின் மூலமும் ஒன்றுக்குள் ஒன்று பொதிந்து இருப்பதை உங்கள் அனுபவத்தில் தெரிந்துகொள்வீர்கள்.

நீங்கள் இங்கே சும்மா ஒரு உயிராக உட்கார்ந்தால், தெய்வீகத்திற்கும், உங்களுக்கும் இடையே எந்தவொரு பிரிவும் இல்லை. உங்களால் ‘சும்மா இருக்க’ முடியாவிட்டால், நீங்கள் தூங்கும் போதாவது, ‘சும்மா தூங்குங்கள்’. இது பல அற்புதங்களை நிகழ்த்தும். உங்களால் ஒரே நேரத்தில் விழித்திருக்கவும், உறங்கவும் முடிந்தால், நீங்கள் எப்போதும் தெய்வீகத்தின் மடியில் இருப்பீர்கள்.

நிர்குணம்

என்னுடையதென நான் மெய்யாய் அழைப்பது
எதுவுமில்லாததால், இவ்வுடலில்லை,
வேறு எவருமில்லை, இவ்வுலகுமில்லை,
வேறு உலகுமில்லை
நண்பர்களும் எதிரிகளும் சொந்தமில்லை.
இழப்பது பற்றி பயமில்லை, இலாபம் குறித்த
எதிர்பார்ப்பில்லை. நான் இங்கே பொருளற்ற
ஒரு வெற்றிடமாய். ஆளுமையற்ற
ஓர் இருப்பாய். சுயமற்ற
ஓர் உயிராய்.

அதனால் செயல்
நிச்சலனமாகிவிட்டது
உலகின் இரைச்சல் என் அமைதியாக
இந்த அண்டவெளியே என் உயிராகிவிட்டது.

Love & Grace

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.