ஆரோக்கியமாக இருந்தாலும் மரணம் ஏற்படுமா?
"சப்த ரிஷிகளுக்கு யோகாவை பரிமாறிய சிவன், பார்வதிக்கும் தேவ கணங்களுக்கும் எந்த விதமான யோகாவை வழங்கியிருப்பார்?" என்ற கேள்விக்கும், ஆரோக்கியம், மரணம் பற்றிய மேலும் இரண்டு கேள்விகளுக்கும் சத்குரு இங்கே பதில் அளிக்கிறார்....
"சப்த ரிஷிகளுக்கு யோகாவை பரிமாறிய சிவன், பார்வதிக்கும் தேவ கணங்களுக்கும் எந்த விதமான யோகாவை வழங்கியிருப்பார்?" என்ற கேள்விக்கும், ஆரோக்கியம், மரணம் பற்றிய மேலும் இரண்டு கேள்விகளுக்கும் சத்குரு இங்கே பதில் அளிக்கிறார்....
சத்குரு:
Subscribe
ஆரோக்கியம் சீர்கெடுவதால் மட்டும் இறப்பு நேர்வதில்லை, உங்கள் உயிர்சக்தி அதன் வீரியம் இழந்தாலும் மரணம் நேரும். உங்களுக்குள் இருக்கும் சாஃப்ட்வேர் ஒரு குறிப்பிட்ட விதத்தில் இருப்பதால், கர்ம நினைவுகள் ஒரு வகையில் இருப்பதால், உடலும் குறிப்பிட்ட விதத்தில் இயங்குகிறது. அந்த சாஃப்ட்வேர் ப்ரோகிராம் நிறைவடைகையில் உங்கள் சக்தி உடலும் பலவீனமடையும். ஒரு புள்ளிக்கு கீழ் சக்திநிலை செல்கையில் உங்களால் உடலுடன் இருக்க இயலாது. இதைத்தான் வயோதிகம் என்கிறோம். ஆனால், பெரும்பாலான மனிதர்கள் வயோதிகத்தால் இறக்காமல், தன் உடலை ஏதோ ஒருவிதத்தில் சிதைத்துக் கொண்டு ஹார்ட் அட்டாக்கோ, வேறெதாவது உறுப்பு பாழ்பட்டோ இறக்கிறார்கள். உயிர் அதற்கு மேல் அந்த உடலில் இருக்க முடியாத ஒரு நிலைக்கு வந்துவிட்டால் மரணம் நிச்சயமாக நிகழும். பிறப்பு மட்டுமல்ல, இறப்பும் உங்களுக்கு ஆரோக்கியமாய் இருக்கட்டும்.
சத்குரு:
சிவன் யோகம் சொல்லிக் கொடுத்தபோது, அவர் வெவ்வேறு விதங்களில் பேசினார், இது குழப்பத்தையே விளைவித்தது. அவருடைய முதல் சீடர், பார்வதி. பார்வதி, “நான் ஞானமடைவதற்கு என்ன வழி?” எனக் கேட்டு அவர் முன் சென்று சிஷ்யையாக அமர்ந்து கொண்டார். அதற்கு பலமாக சிரித்த சிவன், “நீ அதையெல்லாம் விடு, வா என் மடியில் அமர்ந்துகொள். அதுதான் யோகா,” என்றார். ஒரு ஆண், ஒரு பெண்ணை சதிசெய்து தன் மடியில் அமர்த்திக் கொண்டதுபோல் தோன்றினாலும், சிவன் பார்வதியை மடியில் மட்டும் அமர்த்திக் கொள்ளவில்லை, தன் உயிரின் சமபாகமாய் பார்வதியை இணைத்துக் கொண்டார். மற்றொரு மனிதரை உங்களுக்குள் ஒரு பாகமாய் ஆக்கிக் கொள்ள வேண்டுமென்றால், முதலில் உங்களுக்குள் இருக்கும் ஒரு பகுதியை கழட்டி வைக்க நீங்கள் துணிய வேண்டும். இதுதான் அவர் பார்வதிக்கு வழங்கிய யோகா. பார்வதி கடினமான பல விஷயங்களை கற்றுக்கொள்ள விழைந்தபோது, அது வேண்டாம், நீ என் மடியில் அமர்ந்துகொள் என்றார், பார்வதியும் ஞானமடைந்தார்.
சப்தரிஷிகள் சிவனிடம் ஞானம் தேடி வந்தபோது, பல சூட்சுமமான உண்மைகளை விளக்கினார். பல தீவிரமான பயிற்சிகளைச் சொல்லிக் கொடுத்தார். பிரம்மாண்டமான, உங்கள் கற்பனைக்கும் எட்டாத பல விஷயங்கள் பரிமாறப்பட்டன. அதுவே தன் நெருங்கிய சகாக்களான தேவ கணங்கள் அறிந்துகொள்ள விழைந்தபோது, அவர்களை மடியிலும் அமரச் சொல்லவில்லை, அவர்களுக்கு அவர் விளக்கங்களும் அளிக்கவில்லை மாறாக “வாருங்கள், நாம் அனைவரும் ஒன்றாக குடிப்போம்” என்று கூறி அவர்களுடன் சரிசமமாக அமர்ந்து குடித்தார். தேவ கணங்கள் விளக்க முடியாத பரவச, பேரானந்த அனுபவங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஒன்றாக ஆடினர், பாடினர். இது கணங்களுக்கு வழங்கப்பட்ட யோகா.
சத்குரு:
நீங்கள் ஒருசில ஆன்மீக பயிற்சிகள் செய்யும்போது முதலில் உங்கள் நாடித்துடிப்பு குறைவதை கவனிப்பீர்கள். பயிற்சி தொடங்கிய இரு வாரங்கள் கழித்துப் பாருங்கள் நாடித்துடிப்பு மேலும் குறைந்திருக்கும். ஷாம்பவி போன்ற பயிற்சியை செய்யும்போது ஆழமான ஓய்வுநிலைக்கு நீங்கள் சென்றால் உங்கள் நாடித்துடிப்பு மேலும் குறைவதை நீங்கள் பார்க்க முடியும். சில வருட பயிற்சிக்குப் பின் நாடித்துடிப்பை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் அதே சமயம் உடலை ஆழமான ஓய்வுநிலையில் வைத்திருக்க உங்களால் முடியும். இது நிகழும்போது இயல்பாகவே தூக்கத்திற்கான உங்கள் உடலது தேவை குறைவதை நீங்கள் அனுபவப்பூர்வமாக பார்க்க முடியும். சூன்ய தியானம் போன்ற பயிற்சிகளைச் செய்யும்போது இது இன்னும் ஆழப்படும். சூன்ய தியானம் செய்யும்போது உங்கள் உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றம் 24 சதவிகிதம் வரை குறையும். இதனால் வெறும் 15 நிமிட தியானத்தில் ஆழமான ஓய்வு நிலையினை எட்டுவீர்கள். இந்த ஓய்வு உடலிற்கு 2, 3 மணி நேர தூக்கத்திற்கு ஈடான பலனைக் கொடுக்கும். அதுமட்டுமல்ல, நாம் உண்ணும் உணவினையும் பார்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். உணவு உடலுக்கு மந்தத்தன்மையை விளைவிக்கக்கூடும். சமைத்த 2 மணி நேரத்திற்குள் உணவினை எடுத்துக் கொள்ள வேண்டும். என் தந்தை குளிர்சாதன பெட்டிக்குள் வைத்த பழங்களைக் கூட உண்ண மாட்டார். தினமும் மார்க்கெட்டிலிருந்து புதிதான பழம் வாங்கி வந்து உண்பதே அவர் வழக்கம். இதுபோல, நாம் உண்ணும் உணவுடன் சில யோகப் பயிற்சிகள், தியானப் பயிற்சிகள் மேற்கொள்ளும்போது நம் உறக்கத்தின் தரத்தை உயர்த்தி அதன் தேவையையும் குறைத்துக் கொள்ளலாம்.