செய்வினை என்பது உண்மையா? அதை அகற்றுவது எப்படி? (Black Magic in Tamil)
கோவில், தெய்வசக்தி என நேர்மறையான சக்திகள் நல்வாழ்வை வழங்குவதற்காகவே இருக்க, மறுபுறம் பில்லி சூனியம், ஏவல், செய்வினை என்று சொல்லப்படும் எதிர்மறை ஆற்றலை பிரயோகிப்பதும் பரவலாக பேசப்படுகிறது. செய்வினை உண்மையாகவே செயல்படுமா? மற்றவர்கள் நமக்குச் செய்யக்கூடிய செய்வினை குறித்துக் கூறும் சத்குரு, அதை அகற்றுவதற்கான எளிய வழிமுறையையும் இங்கே நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

கேள்வி:
ஆற்றலை எதிர்மறையான முறையில் பயன்படுத்த முடியுமா? உதாரணமாக, செய்வினை செய்வதற்குப் பயன்படுத்த முடியுமா?
சத்குரு:ஆற்றல் என்பது வெறுமே ஒரு சக்தியாக மட்டுமே இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்; அது தெய்வீகமானதும் அல்ல, தீயதும் அல்ல. அதைக் கொண்டு எதை வேண்டுமானாலும் - ஒரு கடவுளையோ அல்லது ஒரு பிசாசையோ - நீங்கள் உருவாக்க முடியும். இது மின்சாரத்தைப் போன்றது. மின்சாரம் என்பது தெய்வீகமா, பிசாசா? உங்கள் வீட்டிற்கு ஒளியூட்டி பிரகாசிக்க வைக்கும்போது, மின்சாரம் தெய்வீகமாகிறது. ஆனால், மின்சார நாற்காலியாக உபயோகப்படுத்தும்போது, அது தீய சக்தியாக மாறுகிறது. அந்தக் கணத்தில் அதை இயக்குபவர் யார் என்பதை சார்ந்தே ஆற்றல் செயல்படுகிறது.
Subscribe
செய்வினை என்றால் என்ன?
உண்மையில், ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அர்ஜுனன் கிருஷ்ணனிடம் இதே கேள்வியைக் கேட்டான்: "எல்லாமே ஒரே சக்திதான், எல்லாமே தெய்வீகம்தான் என்று சொல்கிறாயே கிருஷ்ணா, துரியோதனனுக்குள்ளும் அதே கடவுள் தன்மைதானே இருக்கிறது, ஆனால் அவன் ஏன் இப்படிச் செயல்படுகிறான்?" கிருஷ்ணர் சிரித்தார், ஏனென்றால் எல்லா போதனைகளுக்குப் பிறகும், அர்ஜுனன் மீண்டும் அதே எளிய, அடிப்படையான, குழந்தைத்தனமான கேள்வியோடு நிற்கிறான். கிருஷ்ணர் பதிலளித்தார், "கடவுள் நிர்குணமானவர், தெய்வீகம் என்பது நிர்குணமானது. அவருக்கென்று சுயமான குணங்கள் கிடையாது." இதன் பொருள் என்னவென்றால், அது வெறுமே தூய்மையான சக்தியாக இருக்கிறது. அதிலிருந்து நீங்கள் எதை வேண்டுமானாலும் உருவாக்கலாம். ஒரு புலி உங்களை விழுங்க வருகிறது என்றால், அதிலும் அதே சக்திதான் இருக்கிறது, ஒருவேளை உங்களை புலியிடமிருந்து காப்பாற்றலாம் என்று வரக்கூடிய கடவுளிடமும் அதே சக்திதான் இருக்கிறது. ஆனால் அந்த சக்தி செயல்படுவதுதான் வெவ்வேறு வழிகளில் இருக்கிறது. நீங்கள் உங்களது காரை ஓட்டும்போது, அது நல்லதா, கெட்டதா? அது உங்கள் வாழ்க்கையை உருவாக்கவும் முடியும் அல்லது எந்த நேரத்திலும் உங்கள் உயிரைப் பறிக்கவும் முடியும், அந்த சாத்தியம் அதில் இருக்கிறது அல்லவா?
எனவே மக்களால் செய்வினை செய்ய முடியுமா? நிச்சயமாக முடியும். நேர்மறையான பயன்பாடுகள் இருந்தால், எதிர்மறையான பயன்பாடுகளும் இருக்கிறது. நான்கு வேதங்களுள் ஒன்றாகிய 'அதர்வண வேதம்' முழுக்க முழுக்க, சக்திகளை நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் பயன்படுத்துவதற்கே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஆனால் நான் பார்த்தவரையில், பெரும்பாலான நேரங்களில் இந்த விஷயங்கள் மனரீதியானதாக இருக்கிறது. செய்வினை என்பது சிறிதளவுக்கு ஏதோ செய்யலாம், ஆனால் பெரும்பாலும் உங்கள் மனமே உங்களைப் பைத்தியமாக்குகிறது. உங்களை பயமுறுத்தி உங்கள் மனதை கலைக்க வேண்டும் என்று விரும்பினால், நான் உண்மையிலேயே எந்த செய்வினையும் செய்ய வேண்டியதில்லை. நாளை காலை நீங்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது, அங்கே ஒரு மண்டை ஓடும், சுற்றிலும் ரத்தமும் கிடப்பதாக வைத்துக்கொள்வோம்; அதைப் பார்த்துவிட்டால், அவ்வளவுதான்! உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும், உங்கள் தொழில் நஷ்டமடையும், ஒருவித பயம் உங்களைப் பற்றிக்கொள்வதால் உங்களுக்கு எல்லாமே எதிர்மறையாக நடக்கும். அங்கே எந்தச் செய்வினையும் செய்யப்படவில்லை. ஏதோ செய்வினை போலத் தோன்றக்கூடிய சில அடையாளங்களே உங்கள் மனதை உருக்குலைத்துவிடும்.
எனவே பெரும்பாலான நேரங்களில் இது வெறும் மனரீதியானதுதான். உங்களுக்கு செய்வினை செய்யப்பட்டிருந்தாலும் கூட, அதில் பத்து சதவீதம் மட்டுமே உண்மையான விஷயமாக இருக்கும். மீதமுள்ளவை உங்களை நீங்களே அழித்துக் கொள்வதுதான். அதனால்தான் அது சில அடையாளங்களோடு வருகிறது. உங்கள் உளவியல் உங்கள் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை அவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். எனவே அந்த அடையாளங்கள் உருவாக்கப்பட்டதும், நீங்களே உங்களை அழித்துக்கொள்கிறீர்கள்.
செய்வினையை அகற்றுவது எப்படி?
ஆனால், செய்வினை என்பது இருக்கிறது. ஒருவர் தனது சக்திகளை எதிர்மறையாகப் பயன்படுத்தி வேறு யாரோ ஒருவருக்குத் தீங்கு விளைவிக்கும் ஒரு அறிவியல் இருக்கத்தான் செய்கிறது. அதிலிருந்து எப்படி பாதுகாத்துக் கொள்வது? ஒரு விஷயம் என்னவென்றால், நீங்கள் ஆன்மீக சாதனாவில் இருக்கிறீர்கள் என்றால், அதைப் பற்றியெல்லாம் நீங்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை. அந்த விஷயங்களைப் பற்றி நீங்கள் சிந்திக்கக் கூடத் தேவையில்லை. மற்றொரு வழி, ருத்ராட்சம் போன்ற குறிப்பிட்ட பாதுகாப்பு கவசங்களை நீங்கள் அணியலாம்; இது எந்தவிதமான எதிர்மறைத்தன்மைக்கும் எதிரான ஒரு பாதுகாப்பாக இருக்கும். ஆனால் அத்தகைய விஷயங்களைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. உங்கள் வாழ்க்கையில் கவனத்தைச் செலுத்தி முன்னேறிச் செல்லுங்கள். நீங்கள் சாதனாவில் இருந்தால், நீங்கள் கவலைப்படவே வேண்டியதில்லை; அது கவனித்துக்கொள்ளப்படும்.
செய்வினையை செயலிழக்கச் செய்யும் தியானலிங்கம்

நீங்கள் அத்தகைய தாக்கங்களுக்கு உள்ளாகியிருந்தால், தியானலிங்க வளாகத்திற்குள் வந்து அமரலாம்; ஏனெனில் தியானலிங்கத்திற்கு இவை அனைத்தையும் செயலிழக்கச் செய்யும் குறிப்பிட்ட பரிமாணங்கள் உள்ளன. உங்களுக்கு அப்படி ஏதேனும் செய்யப்பட்டிருப்பதாக நீங்கள் அஞ்சினால், இங்கே வந்து ஒரே ஒரு நாள் மட்டும் அமர்ந்துவிட்டுச் செல்லுங்கள். தேவையானதை தியானலிங்கம் பார்த்துக்கொள்ளும். ஆனால், இத்தகைய விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்தாமல் இருப்பதே நல்லது; ஏனெனில் வேறு எவரும் செய்வதைவிட உங்கள் மனம் உங்களுக்கு அதிகப்படியான 'செய்வினையைச்' செய்கிறது.
தியானலிங்கத்தின் நுழைவாயிலில் வனஸ்ரீ மற்றும் பதஞ்சலி சன்னதிகள் உள்ளன. அவை தியானலிங்கத்திலிருந்து சரியாக பதினைந்து டிகிரி கோணத்தில் அமைந்துள்ளன. அதனால்தான் அவை அந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இல்லையெனில், கட்டிடக்கலை ரீதியாக அவற்றை இன்னும் நெருக்கமாக அமைக்கவே நான் விரும்பியிருப்பேன். பொதுவாக, ஆவிகளால் பீடிக்கப்பட்டவர்கள் அல்லது மாந்திரீகம் மற்றும் அதுபோன்ற பிரச்சனைகளின் தாக்கத்தில் இருப்பவர்களை, அவர்களுக்கு இருக்கும் பிரச்சனையின் விதத்தைப் பொறுத்து, தியானலிங்கத்திற்கு முன்புறம் உள்ள பதினைந்து டிகிரி கோணத்திலோ அல்லது பின்புறம் உள்ள பதினைந்து டிகிரி கோணத்திலோ அமர்ந்திருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
எதிர்மறை தாக்கங்களை உதிர்க்கும் இடம்
மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே அந்த இடம் தனித்துவமாக அதைப்போல் உருவாக்கப்பட்டுள்ளது. உங்களுக்குத் தெரிந்திருந்தாலும் தெரியாவிட்டாலும், செய்வினை போன்று சக்தியின் எதிர்மறைப் பயன்பாடுகள் இருக்கவே செய்கின்றன. தியானலிங்கத்திலிருந்து பதினைந்து டிகிரி கோணம் அமையுமிடத்தில்தான் நுழைவாயில் உள்ளது. உங்களுக்குத் தெரியுமோ இல்லையோ, தியானலிங்கத்திற்குள் நுழையும் ஒவ்வொருவரும், தாங்கள் சுமந்து வரும் எதிர்மறைத் தாக்கங்களை அங்கே விட்டுச் செல்கிறார்கள். அத்தகைய தாக்கங்களை அங்கே விட்டுச்சென்றுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் உள்ளனர். அதனால்தான், தியானலிங்கத்திற்குச் சென்றவர்கள் தங்கள் வாழ்க்கை திடீரென்று மாறிவிட்டதை உணர்கிறார்கள். ஏனெனில் அவர்களது வாழ்க்கையின் மீதான எதிர்மறைத் தாக்கங்கள் நீங்கியிருக்கிறது.
எதிர்மறை தன்மைகள் எப்படி ஒருவரிடம் ஏற்படுகிறது?
'எதிர்மறைத் தாக்கங்கள்' என்று நாம் கூறும்போது, அது யாரோ ஒருவர் உங்களுக்கு எதிர்மறையாக எதையோ செய்வது என்பது மட்டுமல்ல. எத்தனையோ பல வழிகளிலும் நீங்கள் எதிர்மறைத் தன்மைகளை உள்வாங்கியிருக்கலாம். யாரோ ஒருவர் பழத்தில் விஷம் கலந்து உங்களிடம் கொடுக்க வேண்டும் என்று அவசியமில்லை; அந்தப் பழத்திலேயே இயற்கையான விஷத்தன்மை இருந்து, அதை உண்ணும்போது அது உடலுக்குள் நுழையக்கூடும். அதுபோலவே, வாழ்வின் எதிர்மறை அம்சங்கள் பல வழிகளில் உங்களுக்குள் நுழையமுடியும். யாரோ ஒருவர் உட்கார்ந்து கொண்டு உங்களுக்கு எதிராகச் சதி செய்யவேண்டிய தேவையில்லை. எனவே, தியானலிங்கத்தின் நுழைவாயில், அந்த முதல் பதினைந்து டிகிரி கோணம், இந்த நோக்கத்துக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. மக்களின் வேறு எந்த தேடுதலுக்கும் முன்னதாகவே, இத்தகைய விஷயங்கள் அங்கே கவனித்துக் கொள்ளப்படுகின்றன. அவர்கள் அந்த இடத்தில் சுமார் அறுபது அல்லது எழுபது அடி தூரம் நடந்தாலே போதும், அதுவே எதிர்மறைத் தன்மைகளை பார்த்துக்கொள்கிறது.
குறிப்பு:
ஞானத்தின் பிரம்மாண்டம் புத்தகத்தில், மனித சக்தி அமைப்பு குறித்த சத்குருவின் ஆழமான இன்னும் பல நுட்பமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்கள்!