கேள்வி:

வெவ்வேறு நபர்களுடன் உடல்ரீதியான நெருக்கமான உறவுகள் வைத்துக்கொண்டால், அது நம் உயிர்சக்தியை சீர்குலைத்துவிடும் என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். நான் இப்போது அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இருக்கிறேன். நான் ஒரு உறவிலிருந்து விலகி, இப்போது வேறு ஒரு உறவில் இருக்கிறேன், ஆனால் எனக்கு இதைப்பற்றி குற்ற உணர்ச்சியும் குழப்பமும் இருக்கிறது...

சத்குரு:

உங்கள் குற்ற உணர்ச்சியும் குழப்பமும் உங்கள் மனதில்தான் உள்ளது. எந்தவொரு உடல்ரீதியான தொடர்பும் இல்லாமல்கூட, அது உங்களுக்கு நடக்கலாம். குற்ற உணர்ச்சி என்பது சமுதாயம் சார்ந்த ஒன்று. நீங்கள் வாழும் சமூகத்தில், உங்களைச் சுற்றியுள்ள மக்கள் எதை சரி, எதை தவறு என்று உங்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே, அடிப்படையில் நீங்கள் எதற்காக குற்றவுணர்ச்சி அடைகிறீர்கள் என்பது அமைகிறது. ஒரு சமூகத்தில் உங்களுக்கு குற்றவுணர்ச்சியைத் தரும் ஒரு விஷயம், மற்றொரு சமூகத்தில் குற்றவுணர்வை உங்களுக்கு தராது.

நீங்கள் வாழும் சமூகத்தில், உங்களைச் சுற்றியுள்ள மக்கள் எதை சரி, எதை தவறு என்று உங்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே, அடிப்படையில் நீங்கள் எதற்காக குற்றவுணர்ச்சி அடைகிறீர்கள் என்பது அமைகிறது.

இந்த பின்னணியில் நான் குறிப்பிட்ட விஷயம் தான் 'ருணானுபந்தம்'. இது ஒரு வகையான உடல் சார்ந்த ஞாபகம். நீங்கள் பல வழிகளில் ருணானுபந்தத்தை ஏற்படுத்திக்கொள்கிறீர்கள். ஆனால் வேறு எந்த வகையான தொடுதல் அல்லது நீங்கள் தொடர்புகொள்ளும் எந்தவொரு பொருளையும் விட, பாலியல் உறவுகள் விட்டுப் போகும் ஞாபகங்கள் தான் அதிகபட்ச தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இது குற்றவுணர்ச்சி அல்லது குற்றவுணர்ச்சியில் இருந்து உங்களை விடுவித்துக் கொள்வது பற்றிய கேள்வி அல்ல. இது சமூகக் கட்டமைப்புகள் பற்றியதும் அல்ல - நாம் வாழ்க்கையின் அம்சங்களை மட்டுமே இங்கு பார்க்கிறோம். உடலுக்கு ஒரு தனிப்பட்ட நினைவாற்றல் இருக்கிறது. இன்று, இதை பற்றி பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன. இதை புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், உதாரணமாக, உங்கள் தந்தை ஒரு குழந்தையாக இருந்தபோது, உருண்டையான பொருட்கள், உருண்டையான கூழாங்கற்கள் போன்ற விஷயங்களுடன் விளையாட விரும்பினார், அவற்றுடன் ஒரு குறிப்பிட்ட அளவு ஈடுபாட்டை வளர்த்துக் கொண்டார் என்று வைத்துக்கொள்வோம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அவருடைய குழந்தையான நீங்கள், ஏன் என்றே தெரியாமல், அதேபோன்ற விஷயங்களை தேர்ந்தெடுப்பீர்கள். இதுபோன்ற செயல்கள் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு குறிப்பிட்ட மரபணுவை சுமந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதே இதற்கு காரணம்.

ஆண்கள் மற்றும் பெண்களின் ருணானுபந்தம்

ருணானுபந்தம் என்பது உங்களுக்குள் நீங்கள் சுமந்து கொண்டிருக்கும் உடல் சார்ந்த ஞாபகங்கள். இந்த ஞாபகங்களை இரத்த உறவுகள் அல்லது உடல் சார்ந்த உறவுகள் மூலம் பெறமுடியும். உடல் சார்ந்த உறவுகளைப் பொறுத்தவரை, ஒரு பெண்ணின் உடல் மிக அதிக ஞாபகங்களை கொண்டுள்ளது. மரபணுவைப் பொறுத்தவரை, ஒரு ஆணின் உடல் அதிக ஞாபகங்களை கொண்டுள்ளது.

பொதுவாக, 18 முதல் 21 வயதிற்கு மேல், ஒரு ஆணின் உடலை விட பெண்ணின் உடல் குறைவான உடல் சார்ந்த ஞாபகங்களை சுமக்கிறது. இயற்கை இதை இப்படி அமைத்ததற்கு முக்கிய காரணம் என்னவென்றால், ஒரு பெண் மரபணு ரீதியாக அவளுக்கு தொடர்பில்லாத ஒரு ஆணிடமிருந்து ஒரு குழந்தையைத் தன் வயிற்றில் சுமக்க வேண்டியிருக்கிறது. அவள் அந்தக் குழந்தையை முழு பேறு காலத்துக்கு சுமந்து பெற்றெடுக்க, அவளுடைய மரபணு ரீதியான ஞாபகம் குறைவாக இருப்பது மிகவும் முக்கியம்.

பெண்கள் பலரும் இதை ஒப்புக்கொள்வார்கள் - நீங்கள் கர்ப்பமடையும் தருணத்தில், காரணம் தெரியாமலே, உங்கள் பெற்றோர்கள் மற்றும் பிற இரத்த உறவினர்கள் மீதான உங்கள் உணர்வுகள் ஓரளவுக்கு குறைந்துவிடும். குறைந்தபட்சம் இந்தியாவில், நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது, நடைமுறைத் தேவைகளுக்காக உங்கள் தாயிடம் திரும்பிச் செல்கிறீர்கள். ஆனால் அவர்களுடனான உணர்வுபூர்வமான தொடர்பு பெருமளவு குறைந்துவிடும். குழந்தையின் தந்தையின் மரபணுவை ஒரு தாய் தன் உடலமைப்பிற்குள் எவ்விதச் சிரமுமின்றி ஏற்றுக்கொள்ள உதவுவதற்காக இயற்கை இப்படியொரு அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அப்படி இல்லாதபோது, தாயின் உடலில் அவளுடைய குடும்பத்தின் ஞாபகங்கள் மிக அதிகமாக இருந்தால், வேறொரு மரபணுவை சுமந்து கொண்டிருக்கும் அந்த பிறக்காத குழந்தை உள்ளே போராட வேண்டியிருக்கும்.

நீங்கள் ஒருவருடைய கையை தொட்டுப் பிடித்தால் கூட, நீங்கள் ருணானுபந்தத்தை உருவாக்குகிறீர்கள். இதனால்தான் இந்தியாவில், மக்கள் உங்களைக் கூப்பிய கரங்களுடன் வரவேற்கிறார்கள்.

ருணானுபந்தத்தை, பெற்றோரிடமிருந்து குழந்தைக்கு பரிமாற்றப்படும் மரபணு காரணிகளுடன் ஒப்பிட முடியாது. நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என்பதற்கான ஒரு உடல் சார்ந்த ஞாபகம் இது. இது உங்கள் தோலின் நிறம், மூக்கின் வடிவம் உங்கள் உடல் அமைப்பு போன்றவற்றுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நீங்கள் ஒருவருடைய கையை தொட்டு பிடித்தால் கூட, உங்களுக்குள் ருணானுபந்தம் உருவாகிறது. இதனால்தான் இந்தியாவில், மக்கள் உங்களைக் கூப்பிய கரங்களுடன் வரவேற்கிறார்கள். அவர்கள் புதிய ருணானுபந்தத்தை சேர்த்துக்கொள்ள விரும்புவதில்லை.

உப்பு, எள் அல்லது மண் போன்ற சில பொருட்களைப் பரிமாறிக்கொள்ளும் போதும் இது பொருந்தும் - ருணானுபந்தம் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக, மக்கள் இவற்றை ஒருபோதும் மற்றவர்களின் கைகளில் இருந்து நேரடியாக வாங்கமாட்டார்கள். இந்தக் கலாச்சாரம் அடிப்படையில் முக்தியை நோக்கி இருப்பதால், வாழ்க்கையில் பந்தங்களை வளர்த்துக் கொள்ளாமல், அவசியமான அளவிற்கு மட்டுமே அதை வைத்துக்கொள்ள இந்த விழிப்புணர்வும் நுட்பமான உணர்திறன்களும் இங்கு இருக்கிறது.

எந்தவொரு நெருக்கத்தையும் உடல் ஞாபகத்தில் வைத்துக்கொள்கிறது - மற்றொரு உடலுடன் இருக்கும் நெருக்கத்தை மட்டுமல்ல, எந்தவொரு பொருளுடனும் ஏற்படும் நெருக்கத்தையும் கூடத்தான். சில குறிப்பிட்ட வகையான பொருட்கள் மற்றவற்றை விட அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

நீங்கள் கவனித்திருக்கலாம், ஒரு யோகி எங்காவது உட்காருவதற்கு வந்தால், அவர் அங்கும் இங்கும் நடப்பார், இங்கும் அங்கும் பார்ப்பார், வெவ்வேறு இடங்களைத் தொட்டு உணர்வார், அதன் பிறகே ஒரு குறிப்பிட்ட இடத்தில் உட்கார்ந்து கொள்வார். ஏனென்றால், அவர்களின் உடலமைப்பிற்கு எது உகந்தது என்பதில் அவர்கள் மிகுந்த உணர்திறன் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

உங்கள் உடலமைப்போடு நீங்கள் ஒரு குறிப்பிட்ட விதத்தில் வேலை செய்தால் மட்டுமே, உங்களால் இந்த விஷயங்களைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருக்க முடியும். அப்படி இல்லாமல் போனால், உங்களுக்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் ஒவ்வொரு நாளும் எல்லா வகையான உணவுகளையும் நீங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தால்; நீங்கள் நிறைய பயணம் செய்பவராக இருந்தால், உங்களால் இதையெல்லாம் பராமரிக்க முடியாது. ஆனால் பொதுவாக, முந்தைய காலங்களில் நீண்ட வருடங்களாக மனிதர்கள் எங்கும் போகாமல் ஒரே இடத்தில் இருந்தார்கள். இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு கூட, பெரும்பாலான மக்கள் ஒரே வீட்டில் பிறந்து, வாழ்ந்து, அங்கேயே மரணமடைந்தார்கள்.

இன்று, நீங்கள் பலவகையான மனிதர்களுடனும் பொருட்களுடனும் தொடர்புகொள்ள வேண்டியிருக்கிறது, எனவே அதிகப்படியான ருணானுபந்தத்தை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது பற்றி விழிப்புணர்வுடன் இருப்பது இப்போது முன்பை விட மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது.

ருணானுபந்தத்தை களைதல்

பொங்கல் அல்லது போகி போன்ற சில பண்டிகைகள், உங்கள் மனரீதியான சுமைகள், உணர்வுரீதியான சுமைகள் மற்றும் உங்கள் ருணானுபந்தத்தை அகற்றுவது பற்றியது தான். லிங்கபைரவியில், நாம் 'க்லேஷ நாஷன கிரியா' செய்கிறோம். உங்களை தூய்மையாக்க ஒரு சாதாரணக் குளியல் போதாதபோது, சடங்கு ரீதியாக, நெருப்பைக் கொண்டு செய்யும் ஒரு குளியலாக இதை நீங்கள் கருதலாம். க்லேஷ நாஷன கிரியா என்பது நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் உடல் சார்ந்த ஞாபகங்களை எரிப்பதற்கு ஒரு வழி. இந்த ஞாபகங்கள் உறவுகளின் மூலமாக மட்டுமே வந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மனிதர்கள், சூழ்நிலைகள், சுற்றுச்சூழல் என பல்வேறு விஷயங்களுடன் எதேச்சையாக தொடர்பில் வருவதன் மூலமாக, உடல் இந்த ஞாபகங்களை தனக்குள் சேர்த்துக் கொள்கிறது.

க்லேஷ நாஷன கிரியா என்பது நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் உடல் சார்ந்த ஞாபகங்களை எரிப்பதற்கு ஒரு வழி - இந்த ஞாபகங்கள் உறவுகளின் மூலமாக மட்டுமே வந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

நெருப்பைக் கொண்டு செய்யும் குளியல் இருக்கிறது, அதேபோல் ஒவ்வொரு நாளும் நீரைக் கொண்டு செய்யும் குளியலும் இருக்கிறது. என் வாழ்க்கையில் நான் தீவிரமான சாதனாவில் இருந்த காலத்தில், ஒரு நாளைக்கு 5 முதல் 7 முறை குளிப்பேன், ஏனென்றால் அந்த அளவிற்கு உங்கள் உடல் மிக நுட்பமான உணர்திறன் கொண்டதாக மாறிவிடுகிறது. உதாரணமாக, நீங்கள் ஒரு குறிப்பிட்ட இருக்கையில் உட்கார்ந்து கொண்டால், அந்த இருக்கை உங்கள் உடலுக்குள் என்ன செய்கிறது என்பதை நீங்கள் விழிப்புணர்வுடன் உணர்வீர்கள், எனவே குறைந்தபட்சம் உங்கள் உடலின் மீது தண்ணீரை ஓட விட்டாவது அதை தூய்மைப்படுத்த விரும்புவீர்கள். நான் கணக்குப்பார்த்து ஒரு நாளைக்கு 5 அல்லது 7 முறை குளிக்கவில்லை - எனக்கு எப்போதெல்லாம் அப்படித் தோன்றியதோ அப்போதெல்லாம் குளித்தேன்.

பெரும்பாலான யோகிகள் ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது குளிப்பார்கள். பொதுவாக, ஒரு ஓடும் நதியில் மூழ்கி எழுவார்கள் - நீங்கள் ஓடும் நீரில் மூழ்கி எழும்போது, நீங்கள் முழுமையாக தூய்மை அடைகிறீர்கள்.

சூரியன் தெற்கு அரைக்கோளத்திலிருந்து வடக்கு அரைக்கோளத்திற்கும், மீண்டும் வடக்கிலிருந்து தெற்கிற்கும் மாறும் சில குறிப்பிட்ட பருவ காலங்களில், இந்தியத் துணைக்கண்டத்தில் காற்று பலமாக வீசும். நீங்கள் முறையான ஒரு காற்றுக் குளியலைப் பெற, வெளியில் சென்று அந்த காற்றில் நிற்பது ஒரு எளிய செயல்முறை. இது உங்களுக்குள் அற்புதங்களை நிகழ்த்தும்.

இதை முயற்சி செய்து பாருங்கள் - பலத்த காற்று வீசும்போது, தளர்வான ஆடைகளை அணிந்து கொண்டு, உங்கள் கண்களை மூடி, அதை முழு விழிப்புணர்வுடன் உணர்ந்தபடி சும்மா ஒரு அரை மணி நேரம் அங்கே நில்லுங்கள். காற்று உங்கள் உடலின் முன்பக்கமும் பின்பக்கமும் சீராகப் பாயும்படி இரண்டு பக்கமும் திரும்பி நில்லுங்கள். நீங்கள் மிகவும் லேசாகவும் புத்துணர்ச்சியுடனும் இருப்பதை உணர்வீர்கள்.

ஆசிரமத்தில், பிரம்மச்சாரிகள் அனைவரும் தங்களுடைய துணிகளைத் தனித்தனியாகவே துவைக்கிறார்கள். இதற்குக் காரணம், அவர்கள் அனைவரும் சாதனாவில் இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட தனித்தன்மை இருக்கும் - அது மற்றொருவருடன் கலந்துவிடக் கூடாது என்று நாம் விரும்புகிறோம்.

இப்படி தனித்தன்மைகள் கலந்துவிடுவதைத் தடுப்பதற்கான இன்னொரு வழி, ஒவ்வொரு முறை துவைக்கும்போதும் துணிகளின் மீது மண்ணைப் பூசுவது. சாதுக்களும் சந்நியாசிகளும் அவர்கள் துணிகளுக்கு நிறமேற்றுவதற்கு எப்போதும் நன்றாக சலிக்கப்பட்ட செம்மண்ணையே பயன்படுத்துகிறார்கள். அந்தத் துணிகள் ஆரம்பத்தில் வெள்ளையாகத்தான் இருக்கும், ஆனால் அவர்கள் தொடர்ந்து வடிகட்டப்பட்ட மண்ணைக் கொண்டு அவற்றைத் துவைப்பதால், அவை செம்மண் நிறத்திற்கு மாறிவிடுகின்றன.

அதேபோல, ஆசிரமத்தில் உள்ள கட்டிடங்களுக்கு மண்ணையும், அது பெயிண்ட் போல ஒட்டிக்கொள்வதற்கு ஒரு குறிப்பிட்ட ஒட்டும் பொருளையும் கொண்டு பூச்சு பூசப்படுகிறது. தீவிரமான சாதனாவில் இருப்பவர்கள், அவர்களின் துணிகளைத் தனித்தனியாக துவைக்க வேண்டும் அல்லது ஒவ்வொரு முறை துவைக்கும் போதும் துணிகளின் மீது கொஞ்சம் மண்ணை பூசவேண்டும். இதனால் உங்களுக்கு இருக்கும் ஒரே ருணானுபந்தம் பூமியுடன் மட்டும்தான் - உங்களைச் சுற்றியுள்ள மனிதர்கள் அல்லது பொருட்களுடன் அல்ல.

செம்மண்ணில் நனைக்கப்பட்ட துணிகளை நீங்கள் அணியும்போது, ஒருவகையில் அது இந்த உடல் எங்கிருந்து வந்தது எங்கு போகப்போகிறது என்பதை உடலுக்கு நினைவூட்டுவதாக அமைகிறது. இதைச் செய்வதற்கான இன்னொரு வழி, நாம் ஈஷா புத்துணர்வு மையத்தில் செய்வது போல மண் குளியல் எடுப்பது. மண் குளியலின் நோக்கமே எல்லாவற்றையும் சுத்தப்படுத்துவதுதான்.