சத்குரு:

நான் மைசூரு நகரத்திற்குப் போயிருந்தேன். அங்கு எனக்கு தெரிந்த ஒருவரை சந்திக்க அவர் அப்பார்ட்மெண்ட்டுக்கு சென்றேன். 75 வயதுக்கு மேல் இருக்கும் ஒரு பெண்மணி, முகத்தில் பெரிய புன்னகையுடன், ஏற்கனவே அறிமுகமானவர் போல என்னிடம் வந்து, "நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்" என்று கேட்டார். நான், "அம்மா, நான் நன்றாக இருக்கிறேன்" என்று சொன்னேன். பொதுவாக நான் பார்க்கும் மனிதர்களின் முகங்களை மறக்கமாட்டேன். நான் மைசூரை விட்டு வந்து நீண்ட காலம் ஆகிவிட்டது. இந்த பெண்மணி யார்? எனக்குத் தெரிந்தவராக இருப்பாரோ என்று யோசித்தேன். என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. நான் நமஸ்காரம் என்று சொல்லிவிட்டு தெரிந்தவரை பார்க்க போய்விட்டேன். சிறிது நேரம் கழித்து அவர்களுடன் கீழே வந்தேன். நான் நடைபாதைக்கு வந்தபோது, மீண்டும் அதே பெண்மணி வந்து, "ஹலோ, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?" என்று கேட்டார். இவர் சில நிமிடங்களுக்கு முன்பு தான் என்னிடம் வந்து இதையே கேட்டார். இப்போது மீண்டும் கேட்கிறாரே என்று யோசித்தேன். அங்கிருந்தவர்கள் என்னிடம், "பாவம், அந்தப் பெண்மணி தன் ஞாபக சக்தியை இழந்துவிட்டார்" என்று சொன்னார்கள். "அவர் நினைவுகளை இழந்தும் நன்றாக இருக்கிறாரே" என்று நான் சொன்னேன். நினைவுகளை சுமந்து கொண்டு இருக்கும் மனிதர்களோ தங்களையே கொடுமைப்படுத்திக் கொள்கிறார்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உங்கள் நினைவுகளை எப்படி வைத்துக்கொள்வது என்று உங்களுக்குத் தெரியவில்லை. அதனால் நீங்கள் எல்லாவற்றையும் மறக்க நினைக்கிறீர்கள்.

இந்த பெண்மணி Mr.அல்சைமருடன் நன்றாக தான் இருக்கிறார். நீங்கள் அல்சைமருடன் நன்றாக இணைந்துகொள்ள முடியும். அது ஒரு மனிதரின் பெயர் என்று உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்கு ஞாபக மறதி இருந்தால் யாரையும் மன்னிக்க வேண்டிய நிலையே வராது. அதனால், நீங்கள் ‘மறக்க வேண்டும்’ என்று சொன்னால், Mr.அல்சைமரை அழைக்கிறீர்கள் என்று அர்த்தம். அவரும் வந்துவிடலாம். இதுபோன்ற விஷயங்களுக்கு ஆசைப்படாதீர்கள். 'நான் இதை மறக்க விரும்புகிறேன், நான் அதை மறக்க விரும்புகிறேன்' என்று நீங்கள் சொல்கிறீர்கள். அந்த விருப்பமும் நிறைவேறலாம். நீங்கள் ஏன் ஏதோ ஒன்றை மறக்க வேண்டும்? நீங்கள் ஏன் மறக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், உங்கள் நினைவுகளால் தான் துன்பப்படுகிறீர்கள் என்று புரிந்துகொள்ளும் சாதாரண அறிவு கூட உங்களுக்கு இல்லை. நீங்கள் துன்பத்தை அனுபவிப்பது உங்கள் வாழ்க்கையினால் அல்ல, உங்கள் நினைவுகளால் தான்.

நினைவுகளை இழந்துவிட்டால்..

நீங்கள் உங்கள் நினைவுகளை இழந்துவிட்டால் என்ன ஆகும்? நேற்று ஒருவர் ஆசிரமத்தில் ஓடி சென்று ஒரு கல் தூணில் மோதிக்கொண்டார் என்று வைத்துக்கொள்வோம். முழு வேகத்தில் ஓடிப்போய் மோதிக்கொண்டார். நீங்கள் அதை மறந்துவிட்டால், நீங்கள் ஒவ்வொரு நாளும் அதில் போய் மோதிக்கொள்வீர்கள். ஒரு கல் தூணில் நீங்கள் அடிபட்டுக்கொள்ளும் போது தூண் உங்கள் பின்னால் வரவில்லை. அது அங்கேயேதான் நின்று கொண்டிருக்கிறது. நீங்கள் அதை மறந்துவிட்டால், ஒவ்வொரு நாளும் அது உங்கள் முகத்தில் அடிக்கும். நீங்கள் ஒரு கல் தூணில் அடிபட்டுக்கொண்டால், அதை எப்போதும் மறக்கக்கூடாது. அந்த கல் தூண் உண்மையில் கல் தூணாக இருக்கலாம் அல்லது உங்கள் மாமியாராக இருக்கலாம், யார் என்று எனக்குத் தெரியாது. மாமியார் உங்கள் பின்னால் வரவில்லை, அவர் உங்கள் கணவர் பிறந்தபோது நின்ற அதே இடத்தில்தான் நின்று கொண்டிருக்கிறார். நீங்கள் உங்கள் வழியில் நிற்கிறார் என்று நினைக்கிறீர்கள், ஆனால் அவர் அங்கேயே தான் நிற்கிறார். “என் மகன், என் மகன், என் மகன்”, என்று அங்கேயே தான் நிற்கிறார். அவர் உங்கள் பின்னால் வரவில்லை, நீங்கள் தான் அங்கே போய் முட்டிக்கொள்கிறீர்கள்! எனவே, உங்கள் வாழ்க்கையில் எதை சந்தித்தாலும், நீங்கள் அதை மறந்துவிட்டால் அதையே தொடர்ந்து செய்வீர்கள். உங்கள் வாழ்க்கையில் நடக்கும் எந்த ஒரு விஷயத்தையும் மறக்காதீர்கள். குறிப்பாக, அவை கசப்பான அனுபவங்களாக இருந்தால், நீங்கள் எப்போதும் அதை மறக்கக்கூடாது. ஆனால் நீங்கள் அதை உங்களுக்குள்ளேயே கெட்டுப் போகும் அளவிற்கு ஊறவிடுகிறீர்கள்.

நினைவுகள் நம் பயன்பாட்டிற்காக மட்டுமே இருக்கின்றன. ஆனால் நீங்கள் அந்த நினைவுகளை உங்களுக்குள் ஊறவிடுகிறீர்கள். அது அங்கேயே ஊறி, கொஞ்சம் கொஞ்சமாக கெட்டுப்போய் உங்களுக்குள் கசப்பை உண்டாக்கும் அளவிற்கு மாறிவிடுகிறது. நினைவுகள் என்பவை ஒரு சிறிய 'சிப்'பில் சேமித்து வைக்கப்பட வேண்டியவை. சேமித்து வைக்கக்கூடிய 'ஸ்டிக்' எல்லாம் போய்விட்டது, இப்போது சிப் தான். ஆனால் இந்த மனித அமைப்பு அதிநவீனமானது. இந்த தொழில்நுட்பம், அது ஒரு சிப் கூட இல்லை. அது உடலில் வெறுமனே எங்கோ இருக்கிறது, மிக சிறிய அளவு ரசாயனம் அதை பிடித்து வைத்திருக்கிறது. அது அங்கேயே இருந்து விட்டு போகட்டும். நீங்கள் அதை கெட்டுப்போக விட்டால் அது உங்களுக்கு போதையை கொடுக்கும். பல வழிகளில் உங்களுக்கு விஷத்தையும் கொடுத்துவிடும். உங்கள் நினைவுகளை எப்படி வைத்துக்கொள்வது என்று உங்களுக்குத் தெரியவில்லை. அதனால் நீங்கள் எல்லாவற்றையும் மறக்க நினைக்கிறீர்கள்.

மறக்க நினைத்தால் மறந்துவிட முடியுமா?

ஒருவேளை Mr.அல்சைமர் உங்களை பார்க்க வந்தால்? உங்கள் கசப்பான அனுபவங்களை மறந்துவிட்டதால் நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்களா? மறதி தான் வாழ்க்கைக்கான தீர்வாக இருந்தால், முக்கால்வாசி நினைவுகளை வைத்திருக்கும் உங்கள் மூளையின் ஒரு பகுதியை நாம் எடுத்துவிடலாம். உங்களுக்கு எந்த ஒரு விஷயமும் நினைவில் இருக்காது. நீங்கள் இப்படியே இருக்கலாம். நேற்று நடந்ததைப் பற்றி எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்கலாம். அது தான் உங்களுக்கு வேண்டுமா? நீங்கள் அப்படி ஆகிவிட்டால் உங்களை வளர்ச்சி குறைபாடு உள்ள மனிதர் என்று சொல்வோம். ஞானோதயம் அடைந்தவர்கள் என்று சொல்லமாட்டோம். பல பிறவிகளின் நினைவுகள் உங்களிடம் இருக்கின்றன. இந்த ஒரு பிறவியின் நினைவுகள் மட்டுமல்ல, பல பிறவிகளின் நினைவுகள். இதில் கசப்பான அனுபவங்கள் நிறைய இருக்கின்றன. கசப்பான அனுபவம் உங்களுக்கு நடக்கும்போது, நீங்கள் காயப்படலாம் அல்லது விவேகமாக ஆகலாம். அது உங்கள் விருப்பம். ஆனால் நீங்களோ காயப்பட விரும்புகிறீர்கள், அந்த காயத்தை மறக்கவும் முயற்சி செய்கிறீர்கள். நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள விரும்பும் ஒன்றை உங்களால் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது, நீங்கள் மறக்க விரும்பும் ஒன்றை உங்களால் மறக்க முடியாது, அப்படித்தான் நடக்கிறது.

ஏதோ ஒன்றை மறக்க முயற்சி செய்து பாருங்கள், அது எப்போதும் உங்களுடனேயே இருக்கும். எதையாவது நினைவில் வைத்துக்கொள்ள முயற்சி செய்து பாருங்கள், இரண்டு நிமிடங்களில் அது மறந்து போய்விட்டது போல இருக்கிறது. அதனால்தான் நீங்கள் உங்கள் மனதை சரியாக ஒழுங்குபடுத்தவில்லை என்று சொல்கிறேன். உங்கள் கம்ப்யூட்டரை சரியாக புரோகிராம் செய்யவில்லை. நீங்கள் “ஞாபகம் வைத்துக்கொள்” என்று சொன்னால் அது மறந்துவிடுகிறது, நீங்கள் மறந்துவிடு என்று சொன்னால் அது எல்லா நேரத்திலும் நினைவில் வைத்திருக்கிறது. உங்கள் கனவுகளில் கூட அதே மனிதர்கள் வருகிறார்கள். நீங்கள் யாரோ ஒருவரை பார்த்து, 'நான் இந்த முகத்தை மறக்க விரும்புகிறேன்' என்று சொன்னால் போதும், அந்த முகம் மட்டும் தான் உங்கள் மனதில் வரும். நீங்கள் எங்கு பார்த்தாலும் - மரங்களில், வானத்தில் இருந்து கூட அது உங்களிடம் வரும். இதுதான் மனதின் இயல்பு.

உங்களைப் பற்றி ஒரு சிறு விஷயத்தைக்கூட புரிந்துகொள்ளாமல், நீங்கள் வாழ்க்கையில் தடுமாறிக் கொண்டிருக்கிறீர்கள், அதுதான் பிரச்சனை. பிரச்சனை உங்கள் வாழ்க்கை சூழ்நிலைகளில் இல்லை. பிரச்சனை என்னவென்றால், இந்த உடல் மற்றும் மனதை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும் என்ற கையேட்டை படிக்காமல் நீங்கள் வாழ முயற்சி செய்கிறீர்கள். அதற்கு ஒரு விலை கொடுத்து தான் ஆகவேண்டும். நீங்கள் எந்த விலையும் கொடுக்கவில்லை என்றால் எனக்கு ஏமாற்றமாகிவிடும். ஏனென்றால் உடல் மற்றும் மனம் எப்படி செயல்படுகிறது என்பதை கூர்ந்து கவனித்து புரிந்துகொள்ள பல ஜென்மங்கள் ஆகியிருக்கிறது. எதுவும் தெரிந்துகொள்ளாமல் நீங்களும் என்னைப் போலவே வாழ முடிந்தால் நான் மிகவும் ஏமாற்றமடைவேன். இது நியாயமே இல்லை என்று நினைப்பேன். நீங்கள் ஏதோ ஒரு இடத்திற்கு போக முயற்சி செய்கிறீர்கள். ஆனால் மற்றொருவர் அந்த இடத்திற்கு எப்படியோ வந்துவிடுகிறார். இது அநியாயம் என்று உங்களுக்கு தோன்றும், இல்லையா? அதேபோலத்தான் இதுவும். விஷயம் என்னவென்றால், எதையும் மறக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் எல்லாவற்றையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

மற்றவரை மன்னிக்க வேண்டுமா?

நாம் பார்க்க வேண்டிய மற்றொரு விஷயம் மன்னிப்பு. நீங்கள் முதலில் ஒருவர் மிக மோசமான விஷயத்தை செய்துவிட்டார் என்று நினைக்கிறீர்கள். அதனால் அவரை மன்னிக்க முயற்சிக்கிறீர்கள். நீங்கள் அவரை மோசமானவர் என்று முத்திரை குத்தவில்லை என்றால், மன்னிக்க வேண்டிய அவசியம் எங்கே இருக்கிறது?

நீங்கள் மனிதர்களை அப்படியே ஏற்றுக்கொண்டால் - ஒவ்வொருவரும் வித்தியாசமாகத்தான் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் இப்போது எப்படி இருக்கிறார்களோ அப்படியே ஏற்றுக்கொண்டால், எந்த அளவிற்கு அவர்களுடன் செயல்பட வேண்டும் என்பதை நீங்கள் கற்றுக்கொள்வீர்கள். நீங்கள் நல்ல மனிதர்களுடன் மட்டும்தான் வேலை செய்து வாழவேண்டும் என்று நினைத்தால், உங்களுக்கு இந்த யோக மையத்தில் கூட அப்படி யாரும் கிடைக்கமாட்டார்கள் என்று தான் சொல்வேன். பல தன்னார்வலர்கள் தினமும் என்னிடம் வந்து, "அவர் மிகவும் மோசமானவர். என்னால் அவருடன் வேலை செய்ய முடியாது. அவர் இப்படி இருக்கிறார், அவர் அப்படி இருக்கிறார். என்னால் இந்த மனிதர்களுடன் வேலை செய்ய முடியாது" என்று சொல்கிறார்கள். நான் சொல்வது என்னவென்றால், இந்த உலகத்தில் இதுபோன்ற மோசமான மனிதர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள். நீங்கள் செய்யும் செயல் முக்கியமானது என்று நீங்கள் நினைத்தால், இந்த மோசமான மனிதர்களுடன் தான் நீங்கள் வேலை செய்ய வேண்டும். நீங்கள் சிறந்த மனிதர்களுடன் வேலை செய்ய விரும்பினால், நீங்கள் சொர்க்கத்திற்கு தான் போகவேண்டும். அதுவும் இன்றே போகவேண்டும்.

சிறந்த மனிதர்கள்! பொதுவாக சிறந்த மனிதர்கள் எல்லோருமே இறந்துபோன மனிதர்கள் தான். இப்படி உங்களுக்கு நடந்திருக்கிறதா? உங்களுக்கு ஒருவருடன் பல பிரச்சனைகள் இருக்கிறது. ஆனால் அவர் இறந்த கணமே எவ்வளவு நல்லவராக மாறிவிடுகிறார். இறந்தவர்கள் எப்போதுமே அற்புதமானவர்கள் தான். உயிரோடு இருப்பவர்கள் பல இயல்புகளின் கலவையாக இருக்கிறார்கள். அந்த கலவையில் இருந்து எதை எடுத்துக்கொள்ளலாம், அதிலிருந்து சிறப்பானதை எப்படி உருவாக்கலாம் என்பதுதான் வாழ்க்கையின் பெரிய சவால்.