ஆகாஷிக் பதிவுகள்: அந்தப் புதிரின் பொருளைத் தேடி... (Akashic Records in Tamil)
பஞ்சபூதங்களில் ஐந்தாவதாக இருக்கும் ஆகாசம் பற்றிய மர்மங்களை விளக்கும் சத்குரு, “ஆகாஷிக் பதிவுகள்” என்றால் என்ன என்பதையும் விளக்குகிறார். மேலும் யோக அறிவியலில் ஆகாசத்திற்கு இருக்கும் முக்கியத்துவத்தை விளக்கி, அந்த ஆகாச மனதுடன் தொடர்புகொள்ள ஒரு எளிய கருவியையும் நமக்கு வழங்குகிறார்.

- “ஆகாஷிக் பதிவுகள்” என்பதன் அர்த்தம் என்ன?
- “ஆகாஷிக் மனம்” என்றால் என்ன?
- ஆகாஷிக் மனதுடன் தொடர்புகொள்வதற்கான ஒரு எளிய செயல்முறை
- ஆகாச தத்துவம் - வெற்று வெளியா அல்லது ஈதரா?
- அன்னபூரணேஸ்வரி கோவில்
- யோக விஞ்ஞானத்தில் ஆகாசத்தின் முக்கியத்துவம்
“ஆகாஷிக் பதிவுகள்” என்பதன் அர்த்தம் என்ன?
கேள்வியாளர்: “ஆகாஷிக் பதிவுகள்” பற்றி எங்களுக்கு கொஞ்சம் சொல்ல முடியுமா?
சத்குரு:இதைத்தான் இன்று நாம் ‘இன்டர்நெட்’ என்று சொல்கிறோம்! வாழ்க்கையில் நீங்கள் பல வழிகளில் தீவிரமாக செயல்பட முடியும். நீங்கள் உடல்ரீதியான செயல் செய்யலாம், மனரீதியான செயல் செய்யலாம் அல்லது உங்கள் பிராணாவைக் கொண்டு செயல் செய்யலாம். உங்கள் உடலை வைத்து நீங்கள் ஒரு விஷயத்தை செய்தால், அதற்கு குறிப்பிட்ட ஆயுட்காலம் தான் இருக்கும். மனதை கொண்டு நீங்கள் செய்யும் விஷயங்களுக்கு, ஆயுட்காலம் இன்னும் கொஞ்சம் அதிகமாக இருக்கும். அதுவே உங்கள் பிராணாவை வைத்து ஒரு விஷயத்தை செய்தால், அதன் ஆயுட்காலம் மிக மிக அதிகம். எப்போது இந்த பொருள்தன்மை சார்ந்த பரிமாணத்தைத் தாண்டி நீங்கள் ஒரு விஷயத்தை செய்கிறீர்களோ, அது என்றென்றும் நிலைத்திருக்கும், அதை யாராலும் அழிக்க முடியாது.
நான் எந்த ஆன்மீகத்தையும் படித்ததில்லை, ஆனால் மனித விழிப்புணர்வு சம்பந்தப்பட்ட எந்த ஒரு விஷயத்திலும் எனக்கு தெளிவான புரிதல் இருக்கிறது. எனக்கு தெரிந்த எல்லா விஷயங்களும், உண்மையில் எனக்குத் தெரியாது! நான் தெருவில் நடக்கும்போது, அவற்றையெல்லாம் சுமந்துகொண்டு போவதில்லை. ஆனால் எனக்கு எப்போது தேவையோ, அது எப்போதும் அங்கே இருக்கிறது. அது எப்படியும் எல்லா நேரத்திலும் கிடைக்கும் என்கிறபோது, நான் ஏன் வீணாக அதை சுமந்து என்னை வருத்திக்கொள்ள வேண்டும்? இன்றைக்கு மக்கள் இன்டர்நெட்டை அப்படித்தான் பயன்படுத்துகிறார்கள். எல்லா தகவல்களையும் நீங்கள் உங்களுடன் சுமந்து கொண்டிருக்க வேண்டியதில்லை. எல்லாமே அங்கே இருக்கிறது. உங்களுக்கு எப்போது தேவையோ, அப்போது அதை பயன்படுத்திக்கொள்ளலாம்.
என்னை பொறுத்தவரை, கிருஷ்ணரோ, கௌதம புத்தரோ அல்லது கடந்த காலத்தில் வாழ்ந்த வேறு பல யோகிகளோ கடந்த காலத்தை சேர்ந்தவர்கள் கிடையாது. அவர்கள் எனக்கு இந்த க்ஷணத்தில்தான் இருக்கிறார்கள். உடல்ரீதியாக அவர்கள் எப்போதோ இறந்திருக்கலாம், ஆனால் அவர்கள் செய்த செயல்களின் சாரத்தை பொறுத்தவரை, அது எப்போதுமே நிகழ்காலமாகத்தான் இருக்கிறது. கௌதமர் அந்த தருணத்தில் விஷயங்களை எப்படி செய்தாரோ, அதை இப்போதும் கூட உங்களால் அப்படியே அணுக முடியும். என்னை பொறுத்தவரை, கௌதமர் 2500 வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர் அல்ல, அவர் இப்போதையவர்.
தங்களுக்குள் இருக்கும் தடைகளின் எல்லா பரிமாணங்களையும் உடைத்து எறிந்து, உச்சபட்ச நிலையை தொட்டவர்கள் - அவர்கள் எதை உணர்ந்தார்களோ, எதை கிரகித்துக் கொண்டார்களோ, எதை உள்வாங்கிக் கொண்டார்களோ, அது என்றும் நிலைத்திருக்கும் ஒன்று. அது 'இன்னர் நெட்' (inner net) அல்லது 'யோகிக் நெட்'டில் (Yogic net) இருக்கிறது. நீங்கள் அதோடு தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள வேண்டும், அவ்வளவு தான். அதற்கு உங்களுக்கு ஒரு Wi-Fi கூடத் தேவையில்லை! உங்களுக்கு தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருந்தால், கிருஷ்ணருக்கு தெரிந்த விஷயங்கள், புத்தருக்கு தெரிந்த விஷயங்கள், வேறு யாருக்கோ தெரிந்த விஷயங்கள் என எல்லாமே அங்கே இருக்கிறது.
Subscribe
“ஆகாஷிக் (ஆகாச) மனம்” என்றால் என்ன?
தனிமனித மனம் என்று ஒன்று இருக்கிறது, பிரபஞ்சத்தின் மனம் என்றும் ஒன்று இருக்கிறது. இவை இரண்டுமே ஒன்றை ஒன்று பிரதிபலிக்கிறது. ஆனால் தனிமனித மனம் அதிக குழப்பத்தில் இருப்பதால், அதனால் எல்லாவற்றையும் கிரகித்துக்கொள்ள முடியாமல் போகலாம். ஒருவர் தன் தனிப்பட்ட மனதின் மூலமாக அணுகாமல், ஆகாச மனதின் மூலமாக வாழ்க்கையை அணுக முடிந்தால், ஆகாச மனதை நீங்கள் தெளிவாக பார்த்தால், உங்களுக்கு சாத்தியமான சூழ்நிலைகளை மட்டுமில்லாமல், மற்ற எல்லா விஷயங்களுக்கும் சாத்தியமான சூழ்நிலைகளையும் உங்களால் பார்க்க முடியும்.
ஆனால் இதில் சிக்கல் என்னவென்றால், இந்த விஷயங்களைப் பற்றி நாம் மேலோட்டமாக பேசினாலே, பலவிதமான மக்கள் தாங்கள் வேறு யாரிடமிருந்தோ விதவிதமான அபத்தங்களை 'பெறுவதாக' கற்பனை செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். தங்களை சுற்றியுள்ள மனிதர்களுடன் பேசுவதற்கு கூட இணக்கமான சூழலில் இல்லாதவர்கள், எல்லோரிடமும் தொடர்புகொள்ள' ஆரம்பித்து விடுவார்கள். அதே சமயம், நாம் இப்படி ஒரு சாத்தியத்தை மறுத்துவிட்டால், மனித குலத்திற்கு இப்படி ஒரு வாய்ப்பு இருக்கிறது என்று தெரியாமலேயே போய்விடும்.
ஆகாஷிக் மனதுடன் தொடர்புகொள்வதற்கான ஒரு எளிய செயல்முறை
இன்றைக்கு நவீன அறிவியலும் கூட 'ஆகாஷிக் இன்டெலிஜென்ஸ்' என்று ஒன்று இருப்பதை அங்கீகரிக்கத் துவங்கியிருக்கிறது, அதாவது இந்த வெற்றிடத்திற்கு என்று ஒரு குறிப்பிட்ட புத்திசாலித்தனம் இருக்கிறது. இந்த புத்திசாலித்தனம் உங்களுக்கு சாதகமாக செயல்படுகிறதா அல்லது எதிராக செயல்படுகிறதா என்பதுதான் உங்கள் வாழ்க்கையின் தன்மையை தீர்மானிக்கிறது. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்ட ஒருவராக வாழப் போகிறீர்களா அல்லது வாழ்நாள் முழுவதும் வாழ்க்கையிடம் அடிபட்டு தடுமாறப் போகிறீர்களா என்பதை அதுதான் முடிவு செய்கிறது. சிலர் எந்த காரணமுமே இல்லாமல் வாழ்க்கையினால் அலைக்கழிக்கப்படுவது போலத் தோன்றும், வேறு சிலருக்கோ எல்லாமே கிடைத்து ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் போல தோன்றுவார்கள். இது காரணம் இல்லாமல் நடப்பது இல்லை. இயங்கிக் கொண்டிருக்கும் இந்தப் பேரறிவின் ஒத்துழைப்பைப் பெறும் உங்கள் திறனைப் பொறுத்தே இது அமைகிறது - இதனை நீங்கள் விழிப்புணர்வுடனோ அல்லது விழிப்புணர்வற்ற நிலையிலோ செய்திருக்கலாம்.
இதற்கு நீங்கள் செய்யக்கூடிய ஒரு எளிய பயிற்சி சூரிய உதயத்திற்கு பின், முப்பது டிகிரி கோணத்தை சூரியன் கடப்பதற்கு முன், வானத்தை ஒருமுறை பார்த்து, இன்றைக்கு உங்களை இங்கு தாங்கி பிடித்திருக்கும் அந்த ஆகாசத்திற்கு தலைவணங்குங்கள். சூரியன் முப்பது டிகிரியை கடந்த பிறகு, பகலில் ஏதாவது ஒரு நேரத்தில் - எப்போது வேண்டுமானாலும் சரி - மீண்டும் ஒருமுறை மேலே பார்த்து தலைவணங்குங்கள். சூரியன் மறைந்த பிறகு, மறுபடியும் ஒருமுறை மேலே பார்த்து தலைவணங்குங்கள். மேலே இருக்கும் ஏதோ ஒரு கடவுளுக்கு அல்ல, இன்றைக்கு உங்களை இங்கு பத்திரமாக தாங்கி பிடித்திருக்கும் அந்த வெற்று வெளிக்கு. இதை மட்டும் செய்து பாருங்கள், உங்கள் வாழ்க்கை வியக்கத்தக்க வகையில் மாறிவிடும்.
ஆகாச தத்துவம் - வெற்று வெளியா அல்லது ஈதரா?
கேள்வி: இந்த ஆகாசம் என்பதும் வெற்று வெளி என்பதும் ஒன்றா?
சத்குரு:
நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகியவற்றைப் போல ஆகாசமும் பஞ்சபூதங்களில் ஒன்று. இந்த பஞ்சபூதங்கள் என்பது வெற்று வெளி கிடையாது, அவை ஒவ்வொன்றுமே ஒருவகையான மூலப்பொருள்தான். எனவே ஆகாசத்தை ஏதோ ஒன்றுமில்லாத வெற்று வெளி என்று தவறாக புரிந்துகொள்ள வேண்டாம். அது 'ஈதர்'. 'ஈதர்' என்பதும் இதற்கு சரியான வார்த்தை கிடையாது. ஆனால் ஆகாசத்தை குறிக்கும் மிக நெருக்கமான ஆங்கில வார்த்தை அதுதான்.
ஈதர் என்பது வெற்று வெளி கிடையாது, அது பிரபஞ்சத்தின் மிக சூட்சுமமான ஒரு பரிமாணம். வெளி என்பது 'காலா', அதாவது ஒன்றும் இல்லாத தன்மை. அதுதான் 'ஷி-வா' - 'எது இல்லையோ அது'. ஆனால் ஆகாசம் என்பது, 'எது இருக்கிறதோ அது'.
பொருள் சார்ந்த படைப்பின் மிக நுட்பமான ஒரு பரிமாணம்தான் ஆகாசம். இந்த ஹாலில் இருக்கும் காற்றை உங்களால் பார்க்க முடியாது, ஆனாலும் அது இங்கே இருக்கிறது, அது உங்கள் வாழ்வின் மிக முக்கியமான ஒரு அங்கமாக இருக்கிறது. அதேபோலதான், உங்கள் உயிர் என்பது எல்லா இடங்களிலும் பரவி இருக்கிறது. இந்த உடலில் ஸ்தூலமான கூறுகளும் இருக்கின்றன, சூட்சுமமான கூறுகளும் இருக்கின்றன. உங்களுக்கு மலச்சிக்கல் இருக்கிறது என்றால், உங்களுக்குள் ஏதோ ஸ்தூலமான ஒன்று இருக்கிறது என்று அர்த்தம்! அதையும் தாண்டி பார்த்தால், உடலில் இன்னும் பல நேர்த்தியான பரிமாணங்கள் இருக்கின்றன. அதையும் தாண்டி, நுரையீரல் நிறைய காற்று இருக்கிறது, அதையும் தாண்டி மூளை, எண்ணங்கள், உணர்ச்சிகள் மற்றும் பல விஷயங்கள் இருக்கின்றன. இதற்கு நடுவில், உயிர் என்பது உள்ளேயும் வெளியேயும் நகர்ந்து கொண்டிருக்கிறது. புரியும்படி சொல்ல வேண்டுமானால் வாழ்க்கை எப்போதுமே கடினமான பண்படாத தன்மையில் இருந்து நுட்பமான நிலைக்கு போவது தான். எந்த அளவிற்கு உங்கள் சிறகுகள் பரந்து விரிந்து இருக்கிறதோ, அந்த அளவுக்கு நுட்பமானவைகள் உங்கள் வாழ்க்கையில் இருக்கும்.
அன்னபூரணேஸ்வரி கோவில்
ஆகாசம் இல்லாமல் உங்களால் இங்கே இருக்க முடியாது. இந்த ஹாலில் இருக்கும் காற்று இல்லாமலும் உங்களால் இங்கே இருக்க முடியாது. பெரும்பாலான நேரங்களில், காற்று இருக்கிறதா இல்லையா என்கிற விழிப்புணர்வுகூட உங்களுக்கு இருப்பதில்லை, ஆனால் அது இல்லாமல் ஒரு க்ஷணம்கூட உங்களால் உயிர்வாழ முடியாது. அதேபோலதான், ஆகாசம் இல்லாமலும் ஒரு க்ஷணம்கூட உங்களால் உயிர்வாழ முடியாது.
தென்னிந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் அன்னபூரணேஸ்வரிக்கு என்று ஒரு கோவில் இருக்கிறது. அந்த கோவிலின் பின்பகுதியில் ஒரு கல்வெட்டு இருக்கிறது. அது சில ஆயிரம் வருடங்கள் பழமையான 'ஹலே கன்னடா' என்கிற பண்டைய கால கன்னட மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. அதில் ஒரு விமானத்தை வடிவமைப்பது எப்படி என்பது பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. அதை எப்படி உருவாக்குவது என்று அதில் விளக்கப்பட்டிருக்கிறது, ஆனால் அதேசமயம், அப்படி ஒரு இயந்திரத்தை நீங்கள் பறக்கவிட்டால், அது 'ஈதரை' தொந்தரவு செய்யும் என்றும் அதில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகாசத்தை அப்படி நீங்கள் தொந்தரவு செய்தால், மனிதர்களால் மன அமைதியோடு வாழமுடியாது என்று சொல்லியிருக்கிறார்கள். ஆகாசம் ஒருமுறை பாதிக்கப்பட்டுவிட்டால், மனிதர்களின் மனதளவில் ஏற்படும் குழப்பங்கள் மிக மிக அதிகமாகிவிடும். இன்றைக்கு உலகத்தில் இப்படி நடப்பதை தான் நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.
யோக விஞ்ஞானத்தில் ஆகாசத்தின் முக்கியத்துவம்
கேள்வியாளர்:
ஆனால் சத்குரு, ஆகாசத்தினால் ஏற்படும் உடல்ரீதியான, மனரீதியான தாக்கங்களைத் தாண்டி, அதற்கு என்று ஆன்மீக அல்லது மறைஞானம் தொடர்பான பரிமாணமும் இருக்கிறதா?
சத்குரு:
இந்த பஞ்சபூதங்களை தான் உயிரின் அடிப்படை மூலப்பொருட்களாக பார்க்கிறோம். இதை நான் பஞ்சபூதங்களின் 'மேஜிக்' என்று சொல்வேன். ஏனென்றால், வெறும் ஐந்தே ஐந்து விஷயங்களைக் கொண்டு இங்கு மிகப்பெரிய பிரம்மாண்டமே நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இந்த ஐந்து விஷயங்களைக் கொண்டு, உயிராக, நாம் பார்க்கும், கேட்கும், நுகரும், சுவைக்கும் மற்றும் தொட்டு உணரும் எல்லாமாகவும் வெளிப்பட்டுக் கொண்டிருப்பது, நாம் கற்பனை செய்து பார்க்கக்கூடிய கணக்குகளையும் சேர்க்கைகளையும் விட பல மடங்கு பிரம்மாண்டமான விஷயம். ஏதோவொன்று நாம் போடும் அத்தனை கணக்குகளையும் தாண்டி நடக்கிறது என்றால், அது வெறும் கணிதமாக இருக்க முடியாது, அது ஒரு 'மேஜிக்'.
யோகாவின் மிக அடிப்படையான பரிமாணம், ‘மேஜிக்’ போல செயல்படும் இந்த பஞ்சபூதங்களின் மீது ஆளுமை பெறுவது தான். பொதுவாக, ஒருவர் உடல்ரீதியாக நல்ல வலுவாக இருக்க வேண்டும் என்று நினைத்தால், அவருக்கு 'நிலம்' முக்கியமானதாக இருக்கும். ஆனால் ஆன்மீகப் பாதையில் இருப்பவருக்கு, விஷயங்களை உள்ளபடி உணர்ந்துகொள்ள விரும்புபவருக்கு, மிக முக்கியமானது இந்த 'ஆகாசம்' தான். இந்த மனித உடலின் உருவாக்கத்தில், 72 சதவீதம் நீர், 12 சதவீதம் நிலம், ஆறு சதவீதம் காற்று, நான்கு சதவீதம் நெருப்பு என்பது பெரும்பாலும் தீர்மானிக்கப்பட்டவை. மீதமிருப்பது ஆகாசம். இங்கே "மீதம்" என்று நான் சொல்வது மிச்சமிருக்கும் ஆறு சதவீதத்தை அல்ல, மீதமிருக்கும் எல்லாவற்றையும் சொல்கிறேன்!
நமக்குள்ளும், நாம் யார் என்ற பரந்த தன்மையிலும், ஆகாசத்தின் விகிதத்தை நாம் அதிகமாக்கினால், நம்முடைய கிரகிக்கும் திறன் பெருமளவில் அதிகரிக்கும். இந்த விகிதம், குறைவாக இருந்தால் அல்லது ஒருவரின் உருவாக்கத்தில் ஆகாசம் மிக மிகக் குறைந்த அளவே இருந்தால், அவர்களின் கிரகிக்கும் திறனும் மிக மிகக் குறைவாகவே இருக்கும். அவர்களிடம் மிகச் சிறந்த புத்திசாலித்தனம் இருந்தாலும், அந்த புத்திசாலித்தனம் சாதாரண, அன்றாட விஷயங்களைச் சுற்றி மட்டுமே இருக்கும். அதை தாண்டி இருக்கும் ஏதோ ஒன்றை உணரும் அளவிற்கு அது ஒருபோதும் உயராது. இந்த அடிப்படையில் பார்த்தால், ஆன்மீக வளர்ச்சியின் மிக முக்கியமான ஒரு அம்சம், அதாவது 'விக்யான்' அல்லது 'விசேஷ ஞானம்' என்று சொல்லப்படுவதன் அடிப்படை என்னவென்றால், நமக்குள் ஆகாசத்தின் தன்மையை மேம்படுத்துவதுதான். பொருள்தன்மையற்ற பரிமாணங்களை ஐம்புலன்களையும் தாண்டி உணர்வதற்கும், நாம் இங்கிருப்பதன் ஆன்மீக இயல்பை உணர்ந்துகொள்வதற்கும் இதுவே அடிப்படை.
ஆகாசம் என்பது எல்லைகள் இல்லாத பரிமாணம். உங்களுக்குள் ஆகாசத்தின் தன்மை அதிகமாகும்போது, இந்த எல்லையற்ற தன்மை ஒருவருடைய இயல்பாக மாறிவிடுகிறது. எல்லையற்ற தன்மை இல்லை என்றாலும், குறைந்தபட்சம் உங்கள் கண்களுக்கோ உணர்வுக்கோ தெரியாத ஒரு எல்லையாக அது விரிந்துவிடும். இது ஒரு தனிமனிதருக்கு எதனுடனும் பிணைக்கப்படாத ஒரு மகத்தான சுதந்திர உணர்வைத் தருகிறது. ஒருவர் இந்த ஐந்து பூதங்களின் மீது ஆளுமை பெற விரும்பினால், அவருக்குள் இந்த கட்டுப்பாடற்ற நிலை எனும் அத்தியாவசியமான ஒரு வெற்றிடம் தேவைப்படுகிறது. நம்முடைய உடலமைப்பை மிகவும் திறமையாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருப்பதும், அதேசமயம் அதோடு நம்மை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் இருப்பதும், ஒருவர் பஞ்சபூதங்களின் மீது ஆளுமை பெற விரும்பினால் எடுக்க வேண்டிய மிக முக்கியமான படியாகும்.
குறிப்பு:
உங்களுக்குள் இருக்கும் பஞ்சபூதங்களை தூய்மை செய்துகொள்வதற்காக, சத்குருவால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டதுதான் 'பூதசுத்தி' பயிற்சி’.


