கேள்வி:

சத்குரு, நாம் எதையும் வெறுமனே நம்பாமல், வாழ்க்கையில் பரிசோதித்துப் பார்த்து நீங்களே உணர வேண்டும் என்று நீங்கள் சொல்கிறீர்கள். அப்படி இருந்தாலும், ஆன்மீகத்தில் வளர்ச்சியடைய, ஒரு குருவின் மீது ஆழமான நம்பிக்கை அவசியம் என்று தோன்றுகிறது. அப்படியானால், வெறுமனே நம்புவது என்பதற்கும், நம்பி ஒப்படைப்பது என்பதற்கும் என்ன வித்தியாசம்?

சத்குரு:

நம்பிக்கை உங்கள் எதிர்பார்ப்பிலிருந்து பிறக்கிறது. "நான் உங்களை நம்புகிறேன்" என்று நீங்கள் சொன்னால், உங்களுடைய சரி, தவறுகளுக்கு ஏற்றவாறு நான் நடப்பேன் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். ஒருவேளை நான் செய்யும் ஏதோ ஒன்று உங்கள் சரி தவறு என்ற எல்லைக்குள் வரவில்லை என்றால், அப்போது நடக்கும் முதல் விஷயம், என்னிடம் வந்து, "நான் உங்களை நம்பினேன், ஆனால் இப்போது நீங்கள் இப்படி செய்துவிட்டீர்களே" என்று கேட்பீர்கள். உங்கள் குரு உங்களின் வரையறைகளுக்குள் அடங்கிவிடக் கூடியவர் என்றால், நீங்கள் அந்த மனிதரின் அருகில் போகாமல் இருப்பதே நல்லது, ஏனென்றால் அவர் உங்களுக்கு எந்த வகையிலும் உதவப் போவதில்லை. அவர் உங்களுக்கு ஆறுதல் தரலாம், அமைதியை தரலாம், ஆனால் அவரிடம் நீங்கள் அடிமைப்பட்டு இருப்பீர்கள். அவர் உங்கள் விடுதலைக்கான கருவி இல்லை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஒரு குரு தன் ஆளுமையை எப்படி உருவாக்குகிறார் என்றால், மக்கள் அவரை நேசிப்பதா அல்லது வெறுப்பதா என்றே தெரியாமல் குழம்பிப் போவார்கள்... இவர் ஒரு மனிதரே அல்ல. ஒன்று அவர் சாத்தானாக இருக்க வேண்டும் அல்லது அவர் கடவுளாக இருக்க வேண்டும்.

ஆனால் நம்பி ஒப்படைத்தல் என்பது வேறு. அது உங்களுடைய ஒரு குணம். அது வேறு எதற்கும் கட்டுப்பட்டதல்ல, அது உங்களுக்குள் இயல்பாகவே இருக்கிறது. “நான் நம்புகிறேன்” என்று நீங்கள் சொல்லும்போது அதற்கு, "நீங்கள் என்ன செய்தாலும் சரி, நான் நம்புகிறேன்" என்பது தான் அர்த்தம். அது உங்கள் கட்டுப்பாடுகள் என்ற கட்டமைப்பிற்குள் வரவில்லை.

என்னை நம்புங்கள் என்று நான் உங்களிடம் ஒருபோதும் கேட்கவில்லை. உண்மையில், மக்களிடம் “நம்பிக்கை” என்ற சொல்லையே நான் பயன்படுத்தாமல் இருப்பதற்குக் காரணம், அந்த வார்த்தை மிகவும் சிதைந்துவிட்டது. இங்கு யாராவது நம்பிக்கை பற்றி பேசினால், அது உங்களுடைய சொந்த விருப்பு வெறுப்புகள், உங்கள் எல்லைகள் இவற்றை தாண்டி நீங்கள் உயர வேண்டும் என்பதற்காகதான். "உன் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது" என்ற அந்த உணர்வே, விருப்பு வெறுப்புகள் என்ற மூட்டையை தாண்டி உங்களை உயர்த்துகிறது. "நீங்கள் என்ன செய்தாலும் சரி, நான் உங்களை நம்புகிறேன்” என்பதுதான் அதன் பொருள். குருவின் உயிர்சக்தியை நீங்கள் உண்மையாக பயன்படுத்திக்கொள்ள விரும்பினால், அந்த தன்மை உங்களை முழுமையாக ஆட்கொள்ளவும், உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தவும், ஒருவிதத்தில் உங்களை அழிக்கவும் அனுமதிக்க நீங்கள் தயாராக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் நீங்கள் அவருடன் இருக்கும் அந்த சில தருணங்களில், நீங்கள் நீங்களாக இருக்கக்கூடாது. உங்களை நீங்கள் என்னவாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ, அது அவர் முன்னிலையில் இல்லாமல் போய்விட வேண்டும்.

சுவர்களை உடைத்து எறிவது

மக்கள் நம்பிக்கை பற்றி பேசியபோது அவர்கள் சொல்ல நினைத்தது - வேறு ஒருவரை நமக்குள் அனுமதிப்பது என்பதைத்தான். வேறொருவரை உங்களுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்றால், நீங்கள் தற்காப்பின்றி திறந்த நிலையில் இருக்க வேண்டும். அவர் உங்களுக்குள் நுழைந்துவிட்டால், அவர் உங்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். உங்களை சுற்றி நீங்கள் கட்டிக்கொண்ட சுவர்கள் எதற்காக என்றால், முன்பு ஒருமுறை நீங்கள் உங்களைத் திறந்துவிட்டபோது, யாரோ ஒருவர் உங்கள் எதிர்பார்ப்பிற்கு அப்பாற்பட்டு எதையோ செய்ததுதான். நீங்கள் பயந்துவிட்டீர்கள், உங்களை சுற்றி சுவர்களையும் கட்டிக்கொண்டீர்கள். இப்போது, "உங்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது" என்று நீங்கள் சொன்னால், அந்த சுவரை உடைத்தெறிய நீங்கள் தயாராக இருக்கிறீர்கள். அதாவது, மற்றவர் உங்கள் எதிர்பார்ப்புகளின் வளையத்திற்குள் வாழ வேண்டியதில்லை என்று அர்த்தம். ஒரு அம்சம் என்னவென்றால், குரு இங்கு இருக்கும்போது அவருடைய தன்மை உங்களுக்குள் சில விஷயங்களை செய்கிறது. இன்னொரு அம்சம், உங்களுக்கு ஏதோ ஒன்று நடந்துவிடுமோ என்பதை பற்றி கவலைப்படாத ஒரு சூழ்நிலையை நீங்கள் உருவாக்கும் அந்த கணம், அதுவே ஒரு மிகப்பெரிய மாற்றமாகும்.

மக்களுடன் இருப்பதற்கு எனக்கு இருக்கும் கால அவகாசம் குறைவானது. அதனால் என்னை உயிர்நிலையில் அணுகும்படியாக வைத்துக்கொள்கிறேன், ஒரு தனிமனிதராக அல்ல. ஒரு தனிமனிதனாக நான், ஒரு குறிப்பிட்ட விதமான முகத்தை மட்டும் வைத்துக்கொள்கிறேன் - பலவிதங்களில் அது உங்களின் எதிர்பார்ப்புகளுக்கு பொருந்தும்படி இருக்கிறது. நான் எனும் தனிமனிதனையும் ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும் என்றால், அதற்கு இன்னும் அதிக நம்பிக்கை தேவைப்படும், அதிக காலமும் தேவைப்படலாம். என்னுடன் நீண்ட காலமாக இருப்பவர்கள், என்னை ஒரு சமாளிக்க முடியாத மனிதராக உணர்கிறார்கள்; ஆனால் உங்களுடன் நான் அப்படி இருப்பதில்லை.

விழிப்புணர்வுடன் உருவாக்கும் கலவை

இப்போது, "நான்" என்று நீங்கள் அழைக்கும் இந்த ஆளுமை, நீங்கள் எந்த மாதிரியான சூழ்நிலைகளைச் சந்தித்தீர்கள் என்பதை பொறுத்து, ஒரு வகையில் தற்செயலாக உருவானது. உங்கள் ஆளுமை வாழ்க்கையால் அலைக்கழிக்கப்பட்டு, தொடர்ந்து பரிணாம வளர்ச்சி அடைந்துகொண்டே இருக்கிறது. வாழ்க்கை உங்களை எந்தப் பக்கமாக அடிக்கிறதோ, அந்த மாதிரி ஒரு வடிவத்தையும் உருவத்தையும் நீங்கள் பெறுகிறீர்கள். உங்கள் ஆளுமை தொடர்ந்து வெளிசூழ்நிலைகளால் மட்டுமே கட்டமைக்கப்பட்டு வருகிறது. நீங்கள் 'குரு' என்று யாரை அழைக்கிறீர்களோ அவர் ஒரு நபர் அல்ல. தன்னை உணர்வது என்ற முழு செயல்பாட்டின் அர்த்தமே, ஒருவர் தன் ஆளுமையை கடந்து நின்று, அவர் செய்ய விரும்பும் செயல்களுக்கு ஏற்ப ஒரு ஆளுமையை கவனமாக செதுக்கிக் கொள்வதுதான்.

ஒரு சிறிய அளவில், நீங்களும் உங்கள் செயல்களுக்கு ஏற்ப ஒரு ஆளுமையை மேலோட்டமாக உருவாக்கிக் கொள்கிறீர்கள். இதையே, தன் எல்லைகளைத் தாண்டி தன்னை உணர்ந்த ஒரு மனிதர் மிக ஆழமான முறையில் செய்கிறார். அவர் தான் தேர்ந்தெடுத்த பாத்திரத்திற்கு ஏற்றவாறு தன் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் வடிவமைக்கிறார். இது விழிப்புணர்வுடன் செய்யும் கட்டமைப்பு. அப்படி விழிப்புணர்வுடன் கட்டமைக்கப்படும் போது, அது வெறும் ஒரு கருவியாக மட்டுமே செயல்படுகிறது, அது ஒருபோதும் அடிமைப்படுத்தும் ஒன்றாக மாறுவதில்லை. எந்த கணத்திலும், அவரால் அதை தகர்த்துவிட முடியும்.

இப்போதும் கூட, ஒரு நபராக நான் செயல்படும் விதம் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு மாதிரியாக இருக்கிறது. என்னை நீங்கள் வேறு சூழ்நிலைகளில் பார்க்கும்போது உங்களுக்கு அதிர்ச்சியாக கூட இருக்கலாம். ஏனென்றால், நீங்கள் என்னை ஒரு குறிப்பிட்ட நபராக பார்த்துப் பழகி அதிலேயே ஒரு சௌகரியத்தை உருவாக்கிக் கொண்டுவிட்டீர்கள்; அதனால் என்னுடைய வேறொரு பரிமாணத்தை பார்க்கும்போது, அதை உங்களால் கையாள முடிவதில்லை.

மக்கள் அவரை நேசிப்பதா அல்லது வெறுப்பதா என்று தெரியாதவாறு ஒரு குரு தன் ஆளுமையை உருவாக்கிக் கொள்கிறார். ஒரு கணத்தில், "ஆமாம், நான் இந்த மனிதரை உண்மையிலேயே நேசிக்கிறேன்" என்று நீங்கள் நினைக்கும்படியும், அடுத்த கணமே அவரைப் பற்றி முற்றிலும் மாறுபட்ட உணர்வைப் பெறும்படியும் அவர் தன் ஆளுமையை கவனமாக செதுக்குகிறார். இந்த இரண்டு உணர்வுகளும் ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்ட அனுமதிக்கப்படுவதில்லை. அந்த எல்லைகளுக்குள் நீங்கள் தொடர்ந்து அலைக்கழிக்கப்படுகிறீர்கள்; இதனால் சில காலத்திற்குப் பின், "இவர் ஒரு நபர் அல்ல, இவர் ஒரு மனிதர் அல்ல. ஒன்று இவர் சாத்தானாக இருக்க வேண்டும் அல்லது கடவுளாக இருக்க வேண்டும்" என்பதை நீங்கள் உணர்ந்துகொள்வீர்கள்.

குதிப்பதற்கு தயாராக இருங்கள்

உங்கள் அனுபவத்தில் இல்லாத ஒன்றை, அறிவுப்பூர்வமாக உங்களுக்கு கற்றுக் கொடுத்துவிட முடியாது. ஒரு அனுபவ பரிமாணத்திலிருந்து மற்றொரு அனுபவ பரிமாணத்திற்கு ஒருவரை கொண்டுபோக வேண்டும் என்றால், உங்களுக்கு இன்னும் அதிக தீவிரமும் சக்தியும் கொண்ட ஒரு கருவி தேவைப்படுகிறது. அந்த கருவியை தான் நாம் 'குரு' என்று அழைக்கிறோம். குரு-சிஷ்ய உறவு என்பது சக்தியின் அடிப்படையில் இருக்கிறது. வேறு யாராலும் தொடமுடியாத ஒரு பரிமாணத்தில் குரு உங்களைத் தொடுகிறார். உங்கள் சக்தியை ஆக்னா சக்கரம் வரை நகர்த்த பல வழிகள் உள்ளன. ஆனால், ஆக்னாவில் இருந்து சஹஸ்ராரத்திற்கு செல்ல குறிப்பிட்ட வழிமுறைகள் எதுவும் இல்லை. அது ஒரு பாய்ச்சல் அல்லது குதித்தல் போன்றது. இதனால் தான் நம் கலாச்சாரத்தில் குரு-சிஷ்ய உறவு என்பது மிகவும் புனிதமான உறவாக கருதப்படுகிறது. இப்படி நீங்கள் குதிக்க வேண்டும் என்றால் உங்களுக்கு ஆழ்ந்த விசுவாசம் தேவை - அது இல்லாமல் இது சாத்தியம் இல்லை.

குறிப்பு:

ஞானத்தின் பிரம்மாண்டம் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட பகுதி. மனவலிமை இல்லாதவர்களுக்கான புத்தகம் இதுவல்ல. நம்முடைய பயம், கோபம், நம்பிக்கை மற்றும் போராட்டங்களைக் கடந்து, யதார்த்தத்தைப் பற்றிய பதில்களுடன் நம்மை மிக திறம்பட இது வழிநடத்துகிறது. வாழ்க்கை, இறப்பு, மறுபிறவி, துன்பம், கர்மா மற்றும் ஆன்மாவின் பயணம் தொடர்பான கேள்விகளுக்கு சத்குரு அளிக்கும் பதில்கள், நம்மை தர்க்கத்தின் விளிம்பில் நிறுத்தி, நம் கவனத்தை ஈர்க்கின்றன.

இந்தப் புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.