குரு பௌர்ணமியின் கதை: ஆதியோகி தோன்றியது முதல் இன்று வரை
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியப் பாரம்பரியத்தில் குரு பௌர்ணமி கொண்டாடப்பட்டும் போற்றப்பட்டும் வருகிறது. முதல் குருவான ஆதிகுரு சப்தரிஷிகளுக்கு யோக அறிவியலை பரிமாறியதில் துவங்கி, கௌதம புத்தர் அவரின் சீடர்களுக்கு கொடுத்த போதனை மற்றும் இந்த காலகட்டத்தில் சாதகர்கள் மேற்கொள்ளும் பயணங்கள் என குரு பௌர்ணமி பற்றிய சுவாரஸ்யமான கதைகளை சத்குரு நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

வடக்கிலிருந்து தென்திசைக்கு பயணிக்கும் சூரியன், பூமியின் மீது ஏற்படுத்தும் மாற்றத்தை உணரும் காலமான தக்ஷிணாயண காலத்திற்குள் நாம் அடியெடுத்து வைத்திருக்கிறோம். இந்த காலகட்டத்தில் மனித உடலில் ஏற்படும் மாற்றமானது, சாதனாவிற்கும், இலக்குகளை நிர்ணயிக்கவும் உகந்ததாக கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில் தான் விவசாயிகள் தங்கள் நிலத்தை உழ துவங்குகிறார்கள். தான் சுமக்கும் பாக்கியம் பெற்ற இந்த பூமியின் சிறு பகுதியை - தன் உடலை - ஒரு யோகி பக்குவப்படுத்தத் துவங்கும் காலமும் இது தான். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், இதே காலகட்டத்தில்தான் மகத்துவம் வாய்ந்த ஆதியோகியின் பார்வை மனித உயிரின் மீது பதிந்தது.
முதல் குரு பௌர்ணமி தோன்றிய கதை
யோக மரபில், சிவன் கடவுளாக பார்க்கப்படுவதில்லை, அவர் முதல் யோகி - ஆதியோகியாகவே பார்க்கப்படுகிறார். 15000 வருடங்களுக்கு முன், இமாலயத்தின் மேற்சிகரங்களில், யோகி ஒருவர் தோன்றினார். அவர் எங்கிருந்து வந்தார், அவரின் முன்னோர்கள் யார் என்பது யாருக்கும் தெரியவில்லை. அவர் தன்னை அறிமுகமும் செய்துகொள்ளாததால் அவரின் பெயரும் தெரியவில்லை. அதனால் அவரை முதல் யோகி, அதாவது ஆதியோகி என்று குறிப்பிட்டார்கள்.
எங்கிருந்தோ வந்த அவர் எதுவும் பேசாமல், எதுவும் செய்யாமல் அப்படியே சும்மா உட்கார்ந்திருந்தார். அவர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கு ஒரே அறிகுறியாக இருந்தது அவரது கண்களில் இருந்து வழிந்த ஆனந்த கண்ணீர் மட்டுமே. அதைத் தவிர, அவர் சுவாசிக்கிறாரா என்று கூட தெரியவில்லை. தங்களால் புரிந்துகொள்ள முடியாத வகையில் அவர் ஏதோ ஒன்றை அனுபவித்துக் கொண்டிருப்பதை மக்கள் பார்த்தார்கள். தன் முன் மற்றவர்கள் இருப்பதைக்கூட அவர் கவனிப்பது போல் தெரியாததால், மக்கள் பலரும் வந்தார்கள், காத்திருந்தார்கள், பிறகு கிளம்பினார்கள்.
ஏழு பேர் மட்டும் அங்கேயே இருந்தார்கள். ஆதியோகியிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் இந்த ஏழு பேரும் தீர்க்கமாக இருந்தார்கள். ஆதியோகி அவர்களை புறக்கணித்தார். “நீங்கள் எதை உணர்ந்திருக்கிறீர்களோ அதை நாங்களும் உணர வேண்டும்” என்று அவர்கள் கெஞ்சினர். “முட்டாள்களே, நீங்கள் இப்போது இருக்கும் நிலையில் பல லட்சம் ஆண்டுகள் ஆனாலும் உங்களால் உணர முடியாது. நீங்கள் உங்களை தயார் செய்துகொள்ள வேண்டும், நீங்கள் தயாராவதற்கே நீண்ட காலமாகும். இது வெறும் பொழுதுபோக்கு அல்ல” என்று கூறி ஆதியோகி அவர்களை நிராகரித்தார்
ஆனால் அவர்கள் உறுதியாக நின்றதால், ஏழ்வரும் தயாராவதற்கு சில தயார்நிலை பயிற்சிகளை கொடுத்தார். அவர்கள் தயாராக துவங்கினார்கள் - நாட்கள் வாரங்களாக, வாரங்கள் மாதங்களாக, மாதங்கள் வருடங்களாக உருண்டோட - ஏழு பேரும் தொடர்ந்து தங்களை தயார் செய்து கொண்டிருந்தார்கள். ஆதியோகி அவர்களை கண்டுகொள்ளாமல் இருந்தார். அவர்கள் 84 ஆண்டு காலம் சாதனாவில் இருந்தார்கள் என்று கூறப்படுகிறது. 84 வருடங்களுக்கு பின் ஒரு பௌர்ணமி நாளில், நம் கலாச்சாரத்தில் தக்ஷிணாயணம் என்று அழைக்கப்படும் - வடதிசையிலிருந்து தென்திசை நோக்கி சூரியன் பயணிக்கத் துவங்கும்போது, ஆதியோகி இவர்கள் ஏழு பேரையும் பார்த்தார். ஏதோ ஒன்றை உணர்வதற்கு தயாராகி அவர்கள் ஜொலித்தார்கள். முழுமையாக உள்வாங்கிக் கொள்வதற்கு அவர்கள் கனிந்திருந்தார்கள். இதற்கு மேலும் ஆதியோகியால் அவர்களை புறக்கணிக்க முடியவில்லை.
ஆதியோகி அவர்களை கவனமாக கூர்ந்து பார்த்து, வானில் அடுத்த முழு நிலவு மலரும் வேளையில் குருவாக அமர தீர்மானித்தார். அந்த பௌர்ணமி நாள் தான் குரு பௌர்ணமி என்று அறியப்படுகிறது. முதல் யோகியான ஆதியோகி, முதல் குருவாக - ஆதிகுருவாக உருவெடுத்த நாள் தான் குரு பௌர்ணமி. அவர் தென்திசையை நோக்கி அமர்ந்து, யோக அறிவியலை ஏழு சீடர்களுக்கும் பரிமாறத் துவங்கினார். தென்திசையை நோக்கி அமர்ந்ததால் அவர் தக்ஷிணாமூர்த்தி என்று அறியப்படுகிறார். ஆகவே தக்ஷிணாயணத்தின் முதல் பௌர்ணமி குரு பௌர்ணமி - முதல் குரு தோன்றிய நாள்.
குரு பௌர்ணமி: தற்போதைய நிலையிலிருந்து உயர்வதற்கான சாத்தியம்
இந்த பரிமாற்றம் - உலகின் முதல் யோகா நிகழ்ச்சி - கேதார்நாத்தில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் காந்த்திசரோவர் என்னும் ஏரியின் கரையில் நிகழ்ந்தது. “யோகா”என்று குறிப்பிடும்போது உடலை வளைப்பதைப் பற்றியோ, மூச்சை பிடித்து வைத்திருப்பதைப் பற்றியோ நாம் பேசவில்லை. உயிர் எப்படி இயங்குகிறது என்பதை பற்றியும், படைப்பின் இந்த சிறு துளியை - அதாவது உங்களை - அதன் உச்சபட்ச சாத்தியத்திற்கு எடுத்து செல்வது எப்படி என்பதை பற்றி தான் பேசுகிறோம். மனித விழிப்புணர்வின் இந்த மகத்தான பரிமாணம், ஒரு மனிதன் இந்த பிரபஞ்சத்தின் வாசலாக மாறும் சாத்தியம் இந்த நாளில் திறந்து வைக்கப்பட்டது.
Subscribe
மனிதகுல வரலாற்றின் மகத்தான தருணங்களில் ஒன்று தான் குரு பௌர்ணமி. மனிதர்கள் அதுவரை அறிந்திராத சாத்தியங்களான தங்களுக்குள் இருக்கும் எல்லைகளைக் கடப்பது, முக்தி அடைவது இவைகளை பற்றியது தான் குரு பௌர்ணமி. நீங்கள் எந்த மரபில் பிறந்தவர், உங்கள் தந்தை யார், நீங்கள் எந்தவிதமான குறைகளுடன் பிறந்தீர்கள் அல்லது இருக்கிறீர்கள் என்பது ஒரு பொருட்டே இல்லை, நீங்கள் முயற்சி செய்யும் விருப்பத்துடன் இருந்தால் உங்களால் அனைத்தையும் கடந்து உயர முடியும். மனிதகுல வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு மனிதன் விழிப்புணர்வுடன் பரிணாம வளர்ச்சி அடைய முடியும் என்பதை ஆதியோகி அறிவித்தார்.
சில வருடங்களுக்கு முன் ஒரு அமெரிக்க பத்திரிக்கை என்னை பேட்டி எடுத்த போது, “மேற்கத்திய நாடுகளில் மனித விழிப்புணர்வுக்காக உழைத்தவர்களில் யாருடைய பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது?” என்று கேட்டார்கள்.
சிறிதும் தயங்காமல், “சார்ல்ஸ் டார்வின்” என்றேன்.
“ஆனால் சார்ல்ஸ் டார்வின் ஒரு பயாலஜிஸ்ட் ஆயிற்றே!” என்றார்கள்.
"ஆமாம்" என்றேன்.
ஏனென்றால் அவர் தான் முதன்முதலில் மக்களிடம் பரிணாம வளர்ச்சி என்பது சாத்தியம் என்றும், இப்போது இருக்கும் நிலையை விட இன்னும் சிறந்தவராக மாறும் சாத்தியம் உங்களுக்குள் இருக்கிறது என்றும் கூறியவர்.
மேற்கத்திய நாட்டு சமுதாயங்களில் யாரெல்லாம் பரிணாம வளர்ச்சி தத்துவத்தை ஏற்றுக்கொண்டார்களோ அவர்கள் தான் இன்று ஆன்மீகத்திற்கு திறந்த நிலையில் இருக்கிறார்கள். கடவுள் எங்களை இப்படித்தான் படைத்தார், அவ்வளவுதான் என்று நம்புகிறவர்கள் - எந்த ஒரு சாத்தியத்தையும் ஏற்க திறந்த நிலையில் இல்லை.
உயிரியல் பரிணாம வளர்ச்சி பற்றி டார்வின் 200 ஆண்டுகளுக்கு முன் பேசினார். ஆன்மீகப் பரிணாம வளர்ச்சி பற்றி ஆதியோகி 15000 ஆண்டுகளுக்கு முன் பேசினார். அவருடைய போதனையின் சாராம்சம் இதுதான் - இந்த படைப்பில் இருக்கும் ஒவ்வொரு அணுவும் - சூரியன் மற்றும் கோள்கள் உட்பட - தனக்கென ஒரு விழிப்புணர்வைக் கொண்டுள்ளது; ஆனால் அவைகளுக்கு பகுத்தறியும் மனம் இல்லை. எப்போது பகுத்தறியும் மனதில் விழிப்புணர்வு உதயமாகிறதோ, அதுதான் மிகவும் சக்திவாய்ந்த ஒரு சாத்தியம். மனித உயிரை தனித்துவமானதாக மாற்றுவது இதுதான்.
குரு பௌர்ணமி கதையில் மழைக் காலத்தின் பங்கு என்ன?
ஆதியோகி யோக அறிவியலை பரிமாறிய பின், சப்தரிஷிகள் யோக அறிவியலை உலகம் முழுவதும் பரப்புவதற்கு தங்கள் பயணத்தைத் துவங்கினர். அவர்களில் ஒருவரான அகத்திய முனிவர் இந்தியாவின் தென்திசைக்கு பயணமானார். அகத்தியர் வாழ்ந்த வாழ்க்கை அசாதாரணமான மனித வாழ்க்கையாக கருதப்படுகிறது. இமாலயத்தின் தென்பகுதியில் வாழும் ஒவ்வொரு மனித சமுதாயமும் ஒரு ஆன்மீக செயல்முறையை கொண்டிருப்பதை அகத்தியர் உறுதி செய்தார். நாம் இன்று இங்கு செய்யும் எல்லா விஷயங்களும், ஈஷா யோகா என்று நாம் அழைப்பதும் அகத்தியர் மேற்கொண்ட செயல்களின் ஒரு சிறிய விரிவாக்கம் தான்.

தென்திசை நோக்கி அகத்தியர் மேற்கொண்ட இந்த பயணம், பருவ கால மாற்றத்திற்கேற்ப யோகிகளும் ஆன்மீக சாதகர்களும் இமயமலையில் இருந்து தென்திசை நோக்கி பயணித்து, பிறகு மீண்டும் வடக்கே திரும்பும் பாரம்பரியத்தை துவங்கி வைத்தது. இந்தத் தொடர் பயணம் ஆயிரக்கணக்கான வருடங்களாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கோடை காலத்தில் இமயமலையின் குகையில் இருப்பார்கள், குளிர்காலம் துவங்கியதும் தெற்கு நோக்கி வருவார்கள். அவர்களில் பலர் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களை நடந்தே கடந்து பாரத துணை கண்டத்தின் தென்முனையான ராமேஸ்வரம் வரை வந்துவிட்டு, மீண்டும் வடக்கு நோக்கி திரும்புகின்றனர்.
அகத்தியரின் காலத்தில் இருந்து, வருடத்திற்கு ஒருமுறை தெற்கு நோக்கி பயணித்து மீண்டும் வடக்கே திரும்பும் இந்த பாரம்பரியம் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. இன்று இந்த பயணத்தை செய்பவர்கள் சொற்பமாகி விட்டாலும், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான யோகிகள் கூட்டமாக பயணித்த ஒரு காலம் இருந்தது. அப்படி அவர்கள் பெரும் எண்ணிக்கையில் பயணித்தபோது, பருவமழையின் காரணமாக இந்த மாதம் அவர்களுக்கு சவாலாக இருந்தது.
பாரம்பரியமாக கடும் சீற்றத்துடன் இருந்த பருவமழைக்காலத்தை இப்போது நாம் பெரிதாக எதிர்கொள்வதில்லை. இயற்கை சீற்றமடையும்போது, நடந்து செல்வது கடினமான ஒன்றாக இருந்தது. எனவே இந்த மாதத்தில் எல்லோருமே எங்கு இடம் கிடைக்கிறதோ அங்கே தங்கிக்கொள்ளும் பொதுவான நடைமுறை வழக்கத்தில் இருந்தது.
அன்றிலிருந்து பல காலங்களுக்கு பின், வானிலை காரணமாக பயணம் செய்வது மக்களுக்கு கடினமாக இருக்கும் காரணத்தால் கௌதம புத்தரும் இந்த ஒரு மாதம் ஓய்வு எடுக்கும்படி தனது சீடர்களுக்கு பரிந்துரைத்தார். அவர்கள் ஒரே இடத்தில் தங்கியிருந்ததால், இந்த ஒரு மாதம் தொடர்ந்து குருவின் நினைவாகவே இருப்பது என்று ஏற்பாடாயிற்று.
மதங்கள் பிறப்பதற்கு முன்னரே தோன்றிய குரு பௌர்ணமி
ஆயிரமாயிரம் ஆணடுகளாக புதிய சாத்தியங்கள் மனித இனத்திற்கு திறந்த நாளாக அடையாளப்படுத்தி குரு பௌர்ணமி கொண்டாடப்பட்டு வருகிறது. ஆதியோகி என்ன வழங்கியிருக்கிறாரோ, அது எல்லா மதங்களும் பிறப்பதற்கும் முற்பட்டது. பல்வேறு பிரிவினைகளை வகுத்து மனித சமுதாயத்தை உடைத்து இதை இனி சரிசெய்யவே முடியாதோ என்று தோன்றும் நிலைக்கு மக்கள் கொண்டுபோவதற்கு முன்பே, மனித விழிப்புணர்வை உயர்த்த தேவையான மிகவும் சக்திவாய்ந்த கருவிகள் கண்டறியப்பட்டு பரப்பப்பட்டது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன், மனித உடல் அமைப்பை அதன் உச்சபட்ச சாத்தியத்திற்கு நீங்கள் எப்படி கொண்டுசெல்ல முடியும், எப்படி மாற்றத்தை கொண்டுவர முடியும் என்பதற்கான ஒவ்வொரு சாத்தியத்தையும் ஆதியோகி ஆராய்ந்திருந்தார்.
இதன் நுணுக்கங்கள் நம்பமுடியாத வகையில் இருக்கிறது. அந்த காலத்தில் மக்கள் இவ்வளவு நுட்பமான விஷயங்களை புரிந்துகொள்ளும் வகையில் இருந்தார்களா என்ற கேள்வியே இங்கு பொருந்தாது. ஏனென்றால் இது குறிப்பிட்ட நாகரிகத்தில் இருந்தோ, எண்ணங்களில் இருந்தோ வரவில்லை. இது உள்நிலையை உணர்ந்ததால் வெளிப்பட்டு இருக்கிறது. அவரை சுற்றி நடப்பவைகளுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. அவர் தன்னையே முழுமையாக கொடுத்திருக்கிறார். அவர் மனித உடலமைப்பிலுள்ள ஒவ்வொரு புள்ளியுடனும் நாம் என்ன செய்ய முடியும் என்பதன் அர்த்தத்தையும் சாத்தியத்தையும் ஆழமாகவும் விரிவாகவும் விளக்கியுள்ளார்.
இன்று கூட அவர் வழங்கியதில் ஒரு விஷயத்தை கூட உங்களால் மாற்ற முடியாது. ஏனென்றால், சொல்லக்கூடிய அனைத்தையும் அவர் மிகவும் அழகாகவும் புத்திசாலித்தனமாகவும் சொல்லிவிட்டார். அதை புரிந்து கொள்வதற்குதான் நீ்ங்கள் உங்கள் மொத்த வாழ்நாளையும் செலவழிக்க வேண்டும்.
குரு பௌர்ணமி இப்போது ஏன் கொண்டாடப்படுவதில்லை?
மனிதர்கள் அதுவரை அறிந்திராத சாத்தியங்களான தங்களுக்குள் இருக்கும் எல்லைகளைக் கடப்பது, முக்தி அடைவது என்பதை பற்றியது தான் குரு பௌர்ணமி. உங்கள் மரபுவழி என்ன, உங்கள் தந்தை யார், நீங்கள் எந்தவிதமான குறைகளுடன் பிறந்தீர்கள் அல்லது இருக்கிறீர்கள் என்பது ஒரு பொருட்டே இல்லை, நீங்கள் முயற்சி செய்ய விருப்பத்துடன் இருந்தால் அவை அனைத்தையும் உங்களால் தாண்டிப்போக முடியும். அப்படித்தான் இந்த நாள் அறியப்பட்டது என்பதோடு, இந்த கலாச்சாரத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த கொண்டாட்டமாக ஆயிரமாயிரம் வருடங்களாக இருந்து வந்துள்ளது.
ஆனால் கடந்த 300 வருடங்களாக இந்த நாட்டை ஆண்டவர்கள் வேறு திட்டங்களை வைத்திருந்தார்கள். இங்குள்ள மக்கள் ஆன்மீகத்தில் வலுவாக வேரூன்றி இருக்கும் வரை அவர்களை ஆளமுடியாது என்பதை புரிந்துகொண்டனர். குரு பௌர்ணமிக்கு விடுமுறை தராமல் ஏன் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும்? நீங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் என்ன செய்கிறீர்கள்? சிப்ஸ் சாப்பிட்டுக்கொண்டே டிவி பார்க்கிறீர்கள். உங்களுக்கு என்ன செய்வது என்று கூட தெரியவில்லை! ஆனால் பௌர்ணமி மற்றும் அமாவாசை தினத்தன்று விடுமுறை இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்று நமக்கு தெரியும்.
ஒவ்வொருவரும் இதை கையில் எடுக்க வேண்டும். இந்த குரு பௌர்ணமியன்று அலுவலகத்திற்கு செல்லாதீர்கள். விடுமுறைக்கு விண்ணப்பித்து, “இன்று குரு பௌர்ணமி அதனால் நான் வரவில்லை” என்று கூறுங்கள். குரு பௌர்ணமி என்பதால் உங்கள் நண்பர்கள் அனைவரையும் விடுப்பு விண்ணப்பிக்க சொல்லுங்கள். அன்று நீங்கள் என்ன செய்ய வேண்டும்? இந்த நாளை உங்கள் உள்நலனிற்காக அர்ப்பணியுங்கள். லேசாக உணவு எடுத்துக் கொள்ளுங்கள், இசையை கேளுங்கள், தியானம் செய்யுங்கள், பௌர்ணமி முழுநிலவை பாருங்கள். இது உங்களுக்கு அற்புதமான வாய்ப்பாக இருக்கும், ஏனென்றால் இது கோடைக்கால கதிர்திருப்ப நாளுக்கு அடுத்து வரும் முதல் பௌர்ணமி. குறைந்தபட்சம் பத்து பேரிடமாவது இந்த நாளின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசுங்கள்.
ஒரு விடுமுறை நாள், நமக்கு முக்கியத்துவம் மிக்க நாளாக இருப்பதற்கான நேரம் வந்துவிட்டது. குறைந்தபட்சம் குரு பௌர்ணமி விடுமுறையாக அறிவிக்கப்பட வேண்டும், அப்போது தான் இதன் முக்கியத்துவம் மக்களுக்கு தெரிய வரும். ஒரு மகத்துவம் மனித உயிரினத்தோடு தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது, அது வீணாகிப் போய்விடக்கூடாது.
குறிப்பு:
சத்குருவுடன் ஆதியோகி முன்னிலையில் குரு பௌர்ணமியை கொண்டாடுங்கள்.


