பழ ஆகாரம் உட்கொள்வது ஏன் உங்களுக்கும், இந்த பூமிக்கும் நன்மையானது?

போதுமான அளவுக்குப் பழங்களை உண்பது உடலுக்கு அற்புதங்களை நிகழ்த்த முடியும் என்பதை சத்குரு விளக்குகிறார். ஒருவரது உணவில் அதிகளவு பழங்களை இடம்பெறச் செய்வது அல்லது பழ அடிப்படையிலான உணவை முதன்மைப்படுத்துவது அல்லது முற்றிலுமாக எடுத்துக்கொள்வதன் பலன்களையும், அது குறித்து ஒருவர் மேற்கொள்ள வேண்டிய சில முன்னெச்சரிக்கைகள் பற்றியும் அவர் உரையாடுகிறார்.
ফল আহার ভাল কেন - আপনার এবং পৃথিবীর জন্য ?
 

கே: நாம் எடுத்துக்கொள்ளும் உணவினால் நமது மனநிலை மீது தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று கூறியுள்ளீர்கள். பழ ஆகாரமானது மன நலத்தை எப்படி முன்னெடுத்துச் செல்கிறது என்பதைக் குறித்து மருத்துவ விஞ்ஞானம் பேசிக்கொண்டிருக்கிறது. இதற்கு ஏதேனும் முக்கியத்துவம் உள்ளதா?

சத்குரு: எந்த ஒரு இயந்திரத்திலும், நாம் எந்த விதமான எரிபொருளைப் பயன்படுத்தினாலும், எரிபொருளின் சக்தியானது அது எவ்வளவு எளிதில் எரிகிறது என்பதைப் பொறுத்தே இருக்கிறது. உதாரணத்திற்கு, ஒரு பந்தயக்கார் அல்லது விமானத்தில் பயன்படுத்தப்படும் எரிவாயுவானது, ஒரு ஆட்டோ வாகனத்தின் எரிவாயுவில் இருந்து வேறுபட்டது. ஏனென்றால், எளிதாக எரியும் அதன் தன்மையில் இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது. எரிவாயு நிலையங்களில் நீங்கள் அதன் ஆக்டேன் அளவீடுகள் எண்பத்தி ஏழு, எண்பத்தி ஒன்பது, தொண்ணூறு, தொண்ணூற்று ஒன்று, தொண்ணூற்று மூன்று, தொண்ணூற்று ஆறு என்று பலவாறாக இருப்பதைக் கண்டிருக்கக்கூடும். நான் மோட்டார்பைக் ஓட்டிய காலங்களில், மூன்று மடங்கு பணம் கொடுத்து நூறு ஆக்டேன் எரிபொருள் பயன்படுத்தியதுண்டு. ஏனென்றால், இது அசாதாரணமாக எரிபொருள் சக்தியைக் கொடுக்கும்.

பழ ஆகாரங்கள் எளிதில் ஜீரணிப்பவை

அதைப்போன்று, பழங்கள் மிக எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவாக இருக்கின்றன. ஜீரணம் என்றால் ஜடராக்கினி என்பது பொருள் - ஜீரணத்திற்கான நெருப்பு. இந்த நெருப்பு மிகுதியான திறனுடன் எரியவேண்டுமென்றால், நிச்சயமாக பழம் சிறந்த தேர்வு. துரதிருஷ்டவசமாக, பெருந்திரளான மக்கள் சோம்பல் மற்றும் மந்தத்தன்மையை அனுபவிப்பவர்களாக இருக்கின்றனர். அவர்களை உயிர்த்தன்மை தொடவில்லை. எனவே அவர்களின் ஒரு பகுதி உயிரற்று இருப்பதை அனுபவிக்கின்றனர். உயிரோட்டமாகவும், சுறுசுறுப்பாகவும், செயலூக்கத்துடனும் இருப்பதைவிட உறக்கம், மயக்கம், அளவுக்கு மீறிய உணவினால் படுத்திருப்பதை, மேலாக உணருகின்றனர். இப்படிப்பட்ட ஒரு நபருக்குத்தான் பழம் ஒரு பிரச்சனையாக இருக்கக்கூடும். ஏனென்றால், அது உங்களைக் கவனமுடனும், விழிப்புடனும் வைத்திருக்கும். அது புளிப்பேறினால் தவிர, உங்களை கிறக்கத்தில் ஆழ்த்துவதில்லை! மேலும் ஒருவரால் அளவுகடந்த ஆனந்தத்தை, போதையை, ஆழமான இன்பத்தை உயர்ந்த விழிப்புணர்வு நிலைகளிலும் அறிந்துகொள்ள முடியும். ஆனால், பழம் சாப்பிட்டும் நம்மால் சாதாரணமாக இருக்க முடியுமா என்பதுதான் தற்போதைய கேள்வி.

பழ ஆகாரம்தான் இயற்கையின் விருப்பமா?

உங்களுடைய வாழ்க்கையின் பொதுவான வழக்கத்திலேயே ஒரு எளிய விடை இருக்கிறது. நீங்கள் மருத்துவமனையில் படுத்திருந்தால், யாரும் உங்களுக்குக் கோழி பிரியாணி வாங்கி வரமாட்டார்கள். அவர்கள் பழங்களை கொண்டு வருவது ஏனென்றால், “பிறவற்றை சாப்பிட்டு நீங்கள் உடல் நலிவடைந்துவிட்டீர்கள், இப்போதாவது புத்திசாலித்தனமாகச் சாப்பிடுங்கள்,” என்பதை உங்கள் நண்பர்களும், உறவினர்களும் புரிந்துகொண்டுள்ளனர்.

நீங்கள் மருத்துவமனையில் படுத்திருந்தால், யாரும் உங்களுக்குக் கோழி பிரியாணி வாங்கி வரமாட்டார்கள். அவர்கள் பழங்களை கொண்டு வருவது ஏனென்றால், “பிறவற்றை சாப்பிட்டு நீங்கள் உடல் நலிவடைந்துவிட்டீர்கள், இப்போதாவது புத்திசாலித்தனமாகச் சாப்பிடுங்கள்,” என்பதை உங்கள் நண்பர்களும், உறவினர்களும் புரிந்துகொண்டுள்ளனர்.

ஆதாம் துவங்கியதும் ஒரு பழத்துடன்தான் என்பது நீங்கள் அறிந்ததே. இயற்கையே உணவாக இருப்பதற்கு விரும்பும் ஒரு அம்சமாக பழம் இருக்கிறது. விதை, மாம்பழத்தின் முக்கியமான பகுதி. அதன் சதைப்பகுதி ஒரு ஈர்ப்பாக மட்டுமே இருக்கிறது. அதனால் விலங்குகளும், பறவைகளும் விரும்பி உண்பதால், விதையானது தொலைதூரங்களுக்கு எடுத்துச் செல்லப்படும்.

பருவ நிலைக்கேற்ப, பலவிதமான பழங்கள் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உடலுக்கு மிகவும் பொருத்தமான விதங்களில் பழங்களை நிலம் விளைவிப்பது என்பது மிகவும் ஆச்சரியத்திற்குரியது. குளிராக இருக்கும் பருவ நிலைகளில், வெப்பக் காலங்களில் மற்றும் ஈரப்பதம் மிகுந்திருக்கும் நாட்களில் அந்தந்தப் பகுதிகளில் விளைவதை நீங்கள் உண்பவரா? – இது குறித்து அதிகமாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் நீங்கள் இப்போது நியூசீலாந்து நாட்டிலிருந்து வரும் பழத்தைச் சாப்பிடுகிறீர்கள். இது வேறு விஷயம். உங்களைச் சுற்றியிருக்கும் மண்ணிலிருந்து விளைவதை நீங்கள் சாப்பிடுபவர் என்றால், சரியான பருவகாலத்தில் சரியான விதத்தில் பழம் வருவதை நீங்கள் காண்பீர்கள். அந்த நேரத்திற்கு அதை உண்பதுதான் சிறந்தது.

பழ ஆகாரம் உட்கொள்ளும்போது எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கைகள்

பழமானது உடலுக்கு அற்புதமான விஷயங்களைச் செய்யமுடியும். உங்களுடைய வாழ்க்கை முறை என்னவாக இருந்தாலும், நீங்கள் உயிரோட்டத்துடனும், சுறுசுறுப்புடனும் இருக்கமுடியும். ஆனால் நீங்கள் அதிகமான உடலுழைப்பு தேவைப்படும் பணியில் இருந்தால் – உதாரணமாக, தினமும் மண்ணைத் தோண்டி எடுக்கும் மிகக் கடினமான வேலை செய்தால் – உங்களுக்கு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை பசி எடுக்கலாம். உங்களால் அந்த அளவுக்கான பழங்களைத்தான் சாப்பிடமுடிகிறது, ஆனால் அது வேகமாக ஜீரணமாவதால் உங்கள் வயிறு காலியாக இருப்பதாக உணரக்கூடும்.

நீங்கள் முழுமையான பழ ஆகாரம் எடுத்துக்கொண்டால், மதிய உணவுக்கென்று நீங்கள் சற்று கூடுதலாக நேரம் செலவழித்து மெதுவாக சாப்பிடுவதால், போதுமான பழம் உட்கொள்வீர்கள். பொதுவாக பழம் இனிப்பாக இருக்கும் காரணத்தால், சிறிதளவு பழம் சாப்பிட்டாலும் நீங்கள் நிறைவாக உணரலாம் என்பதால், நீங்கள் காத்திருந்து மெதுவாக சாப்பிடவேண்டும். நமக்குள் உடலியல் கடிகாரம் ஒன்றும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. சாதாரணமாக சமைக்கப்பட்ட உணவைச் சாப்பிடுவதற்கு நீங்கள் பத்திலிருந்து பன்னிரண்டு நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் பழம் சாப்பிட்டாலும், பத்திலிருந்து பன்னிரண்டு நிமிடங்கள் கடந்துவிட்டால், நீங்கள் போதுமான உணவைச் சாப்பிட்டுவிட்டதாக உங்கள் உடல் கூறும். ஆகவே நீங்கள் கவனித்து அதிக அளவு சாப்பிடவேண்டும். ஏனென்றால் வயிறு நிரம்புவதை உடல் பார்ப்பதில்லை, அது நேரத்தை மட்டுமே அளவீடு செய்கிறது.

 

நீங்கள் பழ ஆகாரத்தில் மட்டும் இருந்துகொண்டு, உடலளவில் அதிகமாக செயல் செய்பவர் என்றால், ஒரு நாளில் மூன்று முறை ஆகாரம் உங்களுக்குத் தேவைப்படலாம். நீங்கள் ஆறிலிருந்து எட்டு மணி நேரம் தூங்கினால், மீதமுள்ள பதினாறிலிருந்து பதினெட்டு மணி நேரத்திற்கு, மூன்று முறை பழ ஆகாரம் உட்கொள்ளுவது தேவைக்கும் அதிகமானதுதான். ஆனால் இரண்டு மணி நேரத்திற்குள் வயிறு காலியாக இருப்பதாக உணர்வீர்கள், ஆகவே மிகுந்த சக்தியுடன் ஆனால் காலி வயிற்றுடன் தொடர்ந்து இருப்பதற்கு நீங்கள் பழகவேண்டும். இந்த நேரத்தில் உங்களது மூளையும் சிறப்பாக செயல்படும். ஒரு மனிதராக சிறப்பான முறையில் நீங்கள் இயங்குவீர்கள்.

நீங்கள் மூளைத்திறனைப் பயன்படுத்த வேண்டும் என்றாலும் அல்லது உடல்தன்மையான செயலில் ஈடுபட்டாலும், பழ ஆகாரம் மிகச்சரியாக நல்லவிதத்தில் செயல்படும். ஆனால் இன்றைக்கு சந்தையில் உங்களுக்குக் கிடைக்கும் பழத்தில் என்ன நிரம்பியிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது. அது சற்று பிரச்சனைக்குரிய ஒன்றுதான். இதை நான் தெளிவாக கவனிக்கிறேன்: நாங்கள் இளவயதில் இருக்கும்போது சாப்பிட்ட நாட்டுப்பழங்களும், இன்றைக்கு நமக்குக் கிடைக்கும் பண்ணையில் விளைந்த பழங்களும் ஒன்றல்ல. இன்றைக்கு சந்தையில் உள்ள பழங்கள் பெரியதாக, உருண்டையாக, அழகாக இருக்கிறது. ஆனால் இது ஒப்பனையான மேற்பூச்சு போன்றது!

நீங்கள் மூளைத்திறனைப் பயன்படுத்த வேண்டும் என்றாலும் அல்லது உடல்தன்மையான செயலில் ஈடுபட்டாலும், பழ ஆகாரம் மிகச்சரியாக நல்லவிதத்தில் செயல்படும்.

அதே அளவுக்கான சக்தியும், உயிரோட்டமும் இன்றைய பழங்களில் இல்லை என்பதை என்னால் தெளிவாக உணரமுடிகிறது. இந்தப் பழங்கள் முக்கியமாக சந்தைக்கானவை, மனிதனுக்கானவை அல்ல. அவைகள் முற்றிலும் பயனற்றவை என்பது இதன் பொருளல்ல, ஆனால் முன்பிருந்த அதே ஊட்டச்சத்து இப்போதிருக்கும் பழங்களில் இல்லை. எனவே பழங்களுடன் சிறிதளவு மற்ற உணவுகளை நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பழ ஆகாரம் பூமிக்கு நன்மையானது

ஒவ்வொருவரும் தங்களது உணவில் குறைந்தபட்சம் முப்பது சதவிகிதத்தை பழங்களாக உட்கொள்ளவேண்டும். உங்களது உணவின் முப்பது சதவிகிதம், உழுத நிலத்தில் இருந்தும், பயிரிலிருந்தும் வராமல், மரங்களிலிருந்து வந்தால், சுற்றுச்சூழலின்படி, உலகத்திற்கு அது பெருமளவு மாற்றத்தை ஏற்படுத்தும்.

அனைத்துக்கும் மேல், இது சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு உண்பதற்கான மிக அறிவுபூர்வமான ஒரு வழி. ஒவ்வொருவரும் தங்களது உணவில் குறைந்தபட்சம் முப்பது சதவிகிதத்தை பழங்களாக உட்கொள்ளவேண்டும். உங்களது உணவின் முப்பது சதவிகிதம், உழுத நிலத்தில் இருந்தும், பயிரிலிருந்தும் வராமல், மரங்களிலிருந்து வந்தால், சுற்றுச்சூழலின்படி, உலகத்திற்கு அது பெருமளவு மாற்றத்தை ஏற்படுத்தும்.

வயிற்றுக்குச் சுமையான இறைச்சி சாப்பிடுவதிலிருந்து பழ ஆகாரத்திற்கு நீங்கள் மாற முயற்சித்தால், எதுவுமே சாப்பிடாதது போன்று நீங்கள் உணரக்கூடும். ஏனென்றால், வயிற்றுக்கு அதிக சுமை உண்டாக்கும் உணவை சாப்பிடுவதன் மூலம் மண்ணின் மீது சாய்ந்திருப்பதற்குப் பழக்கப்பட்டுவிட்டீர்கள். எப்படியும் நீங்கள் இறக்கும்போது மண்ணுக்குள் இழுக்கப்படுவீர்கள். ஆனால் தற்போது, நாம் மண்ணுக்கு உரியவர்கள் அல்ல என்பதைப் போன்று, உயிரோட்டமாக இருக்கும்போது அதை உயிர் என்றே நாம் அழைக்கிறோம். விண்ணில் உயர உயர செல்லும் பறவையும் மண்ணால் உருவானதுதான். ஆனால் உயரமாகப் பறக்கும்போது அது மண்ணைப் போலத் தெரிவதில்லை. ஒவ்வொரு உயிரும், அது வெளிப்படும்போது, நாம் மண்ணால் உருவாக்கப்படுபவர்கள் என்றாலும், அது மண்ணைப்போலத் தோன்றக்கூடாது.

நாம் உயிரோட்டமாக இருக்கவேண்டுமென்றால், நாம் சாப்பிடும் உணவானது விரைவில் எரிக்கக்கூடியதாகவும், மிக எளிதாக எரியக்கூடியதாகவும் இருக்கவேண்டும். அதுதான் சிறந்த உணவு. சந்தேகமில்லாமல், நமது வயிற்றில், பழம் மிக விரைவில் எரிந்துவிடுகிறது. இதன் பொருள் என்னவென்றால், அது குறைந்தபட்ச சக்கையைக் கொண்டது என்பதுடன் உடலுக்குக் குறைந்தபட்ச சுமையை வழங்குகிறது.