அத்திப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள்? (Athipalam Nanmaigal)
உலர் அத்திப்பழம், அத்திப்பழம் ஜூஸ் (Athipalam Juice) என அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் உணவுப் பதார்த்தமாக இன்று அத்திப்பழம் மாறிவிட்டது. அத்திப்பழம் விலை சற்று அதிகமாயினும் பலன்களும் அதிகம். அத்திப்பழம் சாப்பிடும் முறை, அத்திப்பழத்தின் பயன்களைக் (Athipalam Benefits) கூறுவதற்காக இதோ வந்துவிட்டாள் உமையாள் பாட்டி!
கொல்லைப்புற இரகசியம் - பகுதி 3
டாக்டர். சாட்சி சுரேந்தர்,
ஈஷா ஆரோக்யா
"என்ன பாட்டி எங்க போனீங்க?! ஆளப் பாக்குறது அத்திப் பூத்தாப்போல இருக்கே?!" என்றேன். அப்படிச் சொன்னவுடன், ஏதோ ஞானியைப் போல சிரித்த பாட்டி, "அத்தி ஒன்னும் அபூர்வமா பூக்காதுடா. அது பூக்கலேன்னா எப்படி அத்திக்காயும் அத்திப்பழமும் நமக்குக் கிடைக்கும். அந்தப் பூ நம்ம கண்ணுக்கு அவ்வளவா தெரியறது இல்ல. ஏன்னா அது அடிமரத்திலயிருந்து உச்சி வரைக்கும் மரத்த ஒட்டியே காய்க்கும்." என்றாள்.
சாவகாசமாக ஆடி அசைந்து சென்று பாட்டி ஆசனத்தில் அமர்ந்த பாட்டி, வெற்றிலையை குதப்பியவாறே அத்தியைப் பற்றி அதுவரை நான் அறியாத பல தகவல்களை தொடர்ந்து சொல்லலானாள்.
அத்திப்பழம் நன்மைகள் (Athipalam Nanmaigal):
"அத்திப் பிஞ்ச சமைச்சு சாபிட்டேன்னா மூலக்கடுப்பு அண்டாது; அதுமட்டுமில்லாம வயிற்றுக் கடுப்பும் இரத்த மூலமும் காணாமப் போகும். அத்திப் பழம் ஒன்னும் லேசுப்பட்டது இல்ல, அத்திப் பழத்த மணப்பாகு செஞ்சும் காய வச்சு பொடியாக்கி சூரணமாவும் சாப்பிடலாம்."
"சரி..! அதுனால என்ன பலன் கிடைக்கும்"
Subscribe
அத்திப்பட்டையும் பசும் மோரும் :
"ம்... அப்புடி கேளு! இருதயத்த பலப்படுத்தி, இரத்தவிருத்தி செய்யும். அத்திப் பட்டையை பசும் மோர்விட்டு இடிச்சு பிழிஞ்சு சாறெடுத்து நிதமும் 3 முறை 20ml அளவு கொடுக்க பெரும்பாடு நின்னுடும்." எனக் கூறிய பாட்டி, கண்ஜாடையில் அருகில் அழைத்தாள், "என்ன பாட்டி?!" என்று ரகசியம் ஏதும் கூறப்போகிறாள் என நினைத்து காதைக் கூர்மையாக்கி அருகில் சென்றேன்.
"கள் சாப்பிட்டிருக்கியா?" என்றாள் ஒரு குறும்புச் சிரிப்புடன்.
பித்தம் தணிக்கும் அத்தி வேர் 'கள்' :
"அய்யோ... அந்த வாடையே ஆகாது பாட்டி. நான் ரொம்ப ஆச்சாரம்" என்றேன். "டேய் எல்லாம் தெரியும்டா நேக்கு! நான் சொன்னது அத்தி மர வேரிலிருந்து எடுக்குற கள்ளுடா. அந்தக் கள்ளோட சக்கரை சேர்த்து சாப்பிட்டா பித்தம் தணியும்டா" என்று சொல்லி அசர வைத்தாள்.
அசந்து நின்ற என்னிடம் தொடர்ந்து அடுக்கினாள் இப்படி, "அத்திப் பழத்தில பொட்டாசிய சத்து அதிகம். அதனால் இரத்த அழுத்தம் கட்டுப்படுது. நார்ச் சத்தும் அதிகமுள்ளதால உடல்பருமன குறைக்குது. அதோட கால்சியம் சத்தும் அதிகமிருப்பதால எலும்பு திடமாகவும் இருக்க உதவுது. அப்புறம்... அத்தி இலை இருக்குதில்ல?!"
"ஆமா பாட்டி இருக்குது!"
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் அத்தி இலைச் சாறு :
"ஆங்... அந்த அத்தி இலைச் சாறு சர்க்கரை நோயை கட்டுப்படுத்துது. சிலவகை புற்று நோய்கள தடுக்குதுனு கூட கண்டுபிடிச்சிருக்காங்க. அப்புறம் என்னமாதிரி வயசானவா இருக்கா இல்லயா!, அவங்களுக்கு கண் சம்பந்தமான நோய்கள தடுக்குது; சிறந்த ஆன்டி ஆக்சிடென்டா (anti oxidant) செயல்படுது."
"பாட்டி... பாட்டி... பாட்டி...!" அவள் சொன்ன வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் கொஞ்சம் நிறுத்தினேன்.
"இந்த 'கூகுல் கீகுல்'னு எதோ சொல்றாளே. அதுல போய் உக்காந்து ஆற அமர பாருடா! அதுல நெறைய தகவல் இருக்கும். ஆனா இந்தப் பாட்டி கிட்டதான் தகவலோட உண்மையான அக்கறையும் இருக்கும்" என்று சொல்லி விட்டு, ஓடிவந்த பேரப் பிள்ளைகளை மடியில் கிடத்திக் கொண்டாள் உமையாள் பாட்டி.
அத்திப்பழம் (ஒன்றின் சத்துகள்) - Athipalam Nutritional Benefits
(1 பழம் = 50gm)
(% சராசரி தினப்படி சத்து)
நார்ச்சத்து: 5.8%
பொட்டாசியம்: 3.3%
மாங்கனீசு: 3%
விட்டமின் பி6: 3%
கலோரி(37): 2%
- அத்தி பழத்தை காயவைத்து மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. அத்தி பழம் ஜாம் செய்தும், அத்திப்பழ டானிக் செய்தும் அருந்தலாம்.
- அத்திபழத்தில் chlorogenic acid உள்ளதால் BP & DM கட்டுப்படுத்துகிறது
- அத்தி பழமானது சாலட், கேக், ஐஸ்கிரீம், சான்ட்விச், ஸ்வீட், சூப் இவை தயாரிப்பதில் பயன்படுகிறது.
அத்திப்பழம் தீமை - யாருக்கு?
அத்தியில் ஆக்ஸலேட் உப்பு உள்ளதால் சிறுநீரக கல் உள்ளவர்கள் அத்தி பழத்தை தவிர்த்தல் நலம்.
கொல்லைப்புற இரகசியம் தொடரின் பிற பதிவுகள்
ஈஷா ஆரோக்யா மையங்கள்:
சென்னை: (044) 42128847; 94425 90099
சேலம்: (0427) 2333232; 94425 48852
கரூர்: (04324) 249299; 94425 90098
கோவை: 83000 55555