சீத்தாப்பழம் (Seethapalam) சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள்?
சீத்தாப்பழம் (Seethapalam) கொண்டிருக்கும் சத்துக்களும், அதன் பலன்களும் மற்ற பழங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. அத்தகைய சீத்தாப்பழங்களின் சிறப்புகளை அறிந்துகொள்ளலாம் வாருங்கள்!
நில்... கவனி... சாப்பிடு! - பகுதி 13
ஸ்வீட் சாப்பிட பயமா? சீத்தாப்பழம் சாப்பிடுங்கள்!
சாப்பாடு சாப்பிட்ட பிறகு ஒரு ஸ்வீட் சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறதா? உடல் எடை கூடி விடும், கொழுப்புச் சத்து, சர்க்கரை ஏறி விடும் என்ற பயம் ஸ்வீட் சாப்பிட விடாமல் உங்களைத் தடுக்கிறதா? ஸ்வீட்டிற்குப் பதில் ஒரு சீத்தாப்பழம் சாப்பிடுங்கள். இனிப்பு சுவையும் கிடைக்கும், நார்ச்சத்து மிகுந்திருப்பதால் சர்க்கரை அளவும் கூடாது, நல்லதைப் பயக்கும் சத்துக்களும் கிடைக்கும்.
நச்சுப் பொருட்களை உடலிலிருந்து வெளியேற்ற உதவும் சீத்தாப்பழம்!
வைட்டமின்கள், புரதம், தாதுப் பொருட்கள், சக்தி தரும் இனிப்பு, கொழுப்புச் சத்து, நார்ச்சத்து என அனைத்தையும் கொண்டது சீத்தாப்பழம். நம் உடலில் உள்ள திசுக்களுக்கு பாதிப்பு தரக்கூடிய நச்சுப் பொருட்களை உடலிலிருந்து வெளியேற்ற ஆன்டிஆக்ஸிடென்ட் தேவை. இதை உடலுக்குத் தருவது வைட்டமின் சி தான். ஆனால் இந்த வைட்டமின் உடலில் அதிக நேரம் தங்குவதில்லை. அதனால் ஒருவர் தினமும் வைட்டமின் சி அடங்கிய உணவைக் கட்டாயம் சாப்பிட வேண்டும். சமைத்த உணவில் இந்த வைட்டமின் விரயமாகிவிடுவதால் பழங்களைச் சாப்பிடுவதன் மூலமே நாம் இந்த வைட்டமினை அன்றாடம் பெற முடியும்.
சமயத்தில் நம் உடலுக்கு வைட்டமின் சி அதிக அளவில் தேவைப்படுகிறது. நம் மனதில் அதிக அழுத்தம் ஏற்படும்போது, உடலில் ஏதேனும் தொற்றுநோய்(இன்பெக்ஷன்) ஏற்பட்டிருக்கும்போது, அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கும்போது, புகை பிடிப்பது அல்லது மது அருந்தும் பழக்கமிருக்கும்போது வைட்டமின் சி யின் தேவை அதிகமாகிறது. அந்த சமயத்தில், சமய சஞ்சீவினியாகக் கை கொடுக்கிறது சீத்தாப்பழம்.
Subscribe
ஜீரண சக்தியை அதிகரிக்கும் சீத்தாப்பழம் (Seethapalam)
சீதாப்பழம் ஜீரண சக்தியை அதிகரிப்பதால் பித்தம், வாந்தி, பேதி, தலைசுற்றல் ஆகியவற்றையும் குணப்படுத்தும்.
மன அழுத்தத்தை சரி செய்யும் சீத்தாப்பழம்
இரவில் ஒரு சீதாப்பழம் சாப்பிட்டுப் பாருங்கள், நல்ல ஆழ்ந்த தூக்கம் வரும். இதற்குக் காரணம் இப்பழத்தில் உள்ள கால்சியம் மற்றும் மக்னீசியம் தாதுப் பொருட்கள்தான். இவை இரண்டிற்குமே மன அழுத்தத்தை சரிப்படுத்தும் குணம் உண்டு. அதோடு இந்த தாதுப் பொருட்கள், நம் உடலிலுள்ள எலும்புகளுக்கும், தசைகளுக்கும், இருதயத்திற்கும் வலுவளிக்கக் கூடியவை.
சிலர் நிறைய பதப்படுத்தப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவார்கள். சிலருக்கு புகை பிடிக்கும் பழக்கமிருக்கும். அதிக அளவு டீ, காபி சாப்பிடுவர் சிலர். இன்னும் சிலருக்கு மது அருந்தும் பழக்கம் இருக்கும். இவர்கள் அனைவருக்குமே, இவற்றின் பாதிப்பு உடலில் ஏற்படாமலிருக்க பொட்டாசியம் சத்து அன்றாடம் தேவைப்படுகிறது. ஏனெனில் இந்த சத்தினையும் உடலில் தேக்கி வைக்க முடியாது. எனவே தினமும் சாப்பிட வேண்டியுள்ள போது, இந்த சத்தினை நிறைய கொண்டிருக்கும் சீதாப்பழத்தை சாப்பிடலாமே!
சீத்தாப்பழம் 'கஸ்டர்ட் ஆப்பிள்' என்று அழைக்கப்படுவதன் காரணம் என்ன?
நம் நாட்டில் சீதாப்பழம் என்று அழைக்கப்படும் இப்பழம் ஆங்கிலத்தில் 'கஸ்டர்ட் ஆப்பிள்' என்றழைக்கப்படுகிறது. 'கஸ்டர்ட்' என்ற ஐஸ்கிரீம் போன்ற சுவை இந்தப் பழத்திற்கு இருப்பதால் இதற்கு இப்பெயர் வந்தது.
சீத்தாப்பழம் - மேலும் சில சுவாரஸ்ய தகவல்கள்!
சீத்தாப்பழம் வருடம் முழுவதும் கிடைப்பதில்லை. குறிப்பிட்ட பருவத்தில்தான் மரத்தில் காய்க்கும். அடர்ந்து, உயரம் குறைவாக உள்ள சீதாப்பழ மரத்தின் முற்றிய கிளைகளில் காய்க்கும் காய்களை, நன்கு வளர்ந்த பிறகு காயாகவே பறித்து விடுவார்கள். பறித்த பிறகே பழுக்க வைப்பார்கள்.
சீதாப்பழத்தை பலர் சாப்பிடத் தயங்குவது அதில் அதிகமாக உள்ள விதைகளின் காரணமாகத்தான். இந்த விதைகளை விதைத்து மட்டுமல்லாமல், பதியன் வைத்தும் சீதாப்பழ மரங்களை வளர்க்கலாம். முதன் முதலில் மேற்கு இந்தியத் தீவினர்களால்தான் சீதாப்பழ மரங்கள் வளர்க்கப்பட்டன. இதன் சுவையும், மணமும் எல்லோரையும் கவரவே இன்று உலகில் எல்லா இடங்களிலும் இப்பழ மரம் வளர்க்கப்படுகிறது. இதன் மணமும் சுவையும் எல்லோருக்கும் பிடித்திருப்பதால், இதனை ஜாம், ஜெல்லி மற்றும் ஐஸ்கிரீம், பழரசங்கள் செய்யப் பயன்படுத்துகிறார்கள்.
அடுத்த வாரம்...
அடுத்த வாரம் ஏழைகளின் ஆப்பிள் என்று அறியப்படும் தக்காளி பற்றி தெரிந்துகொள்ளலாம்! காத்திருங்கள்!
நில்... கவனி... சாப்பிடு! தொடரின் பிற பதிவுகள்