அன்னாசிப் பழம் சாப்பிடுவதன் அவசியங்கள்!
அன்னாசிப் பழங்கள் உருவாவதில் உள்ள சிறப்பம்சத்தைப் பற்றியும் அதில் நிறைந்துள்ள அதிசயிக்க வைக்கும் சத்துக்களைப் பற்றியும் கேட்கும்போது, அவை நம்மை யோசிக்காமல் சாப்பிட வைக்கின்றன. அன்னாசிப் பழங்களின் சிறப்புகளை முழுமையாய் உணர்த்துவதாக அமைகிறது இந்த பதிவு!
நில்... கவனி... சாப்பிடு! - பகுதி 12
அன்னாசிப் பழங்கள் உருவாவதில் உள்ள சிறப்பம்சத்தைப் பற்றியும் அதில் நிறைந்துள்ள அதிசயிக்க வைக்கும் சத்துக்களைப் பற்றியும் கேட்கும்போது, அவை நம்மை யோசிக்காமல் சாப்பிட வைக்கின்றன. அன்னாசிப் பழங்களின் சிறப்புகளை முழுமையாய் உணர்த்துவதாக அமைகிறது இந்த பதிவு!
சிறு வயதில் உங்கள் அம்மா, "காரட் நிறைய சாப்பிட்டால் கண் நல்லா தெரியும்" என்று சொல்லியிருப்பார்கள். ஆனால் நீங்கள் வளர்ந்த பிறகு அதே போல் சாப்பிட்டால் சரி வருமா? கண் பார்வை என்பது ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு எல்லோருக்குமே குறையத் தொடங்கும். இதனைக் கட்டுப்படுத்தக்கூடிய சக்தி பழங்களுக்கு மட்டுமே உள்ளது.
ஒரு சில பழங்களையே எந்த வேளையிலும் சாப்பிட முடியும். அதில் நிறைய வைட்டமின் சத்துக்கள் நிரம்பியும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட அருமையான ஒரு பழம் அன்னாசிப்பழம். பார்க்க கரடுமுரடாக இருக்கலாம். தோல் சீவி இதனை நறுக்குவதும் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் அதன்பின் கிடைக்கும் பழம் சுவையானது மட்டுமல்ல, அளவில்லாத நற்குணங்களைக் கொண்டது.
Subscribe
பல்வேறு பூக்களின் மகரந்தங்கள் இணைந்து உருவாகும் பழம்தான் அன்னாசிப்பழம். அதனால்தானோ என்னவோ இப்பழத்திற்குப் பலவித உடல்நலக் குறைவுகளைச் சரி செய்யும் தன்மை உள்ளது.
அன்னாசிப்பழத்தின் சிறப்பு... 'ப்ரோமிலைன்' என்ற காம்ப்ளெக்ஸ் பொருள். இதற்குப் பல வகை என்சைம்கள் இணைந்து செய்யக்கூடிய செயல்களின் ஆற்றல் உள்ளது. 'ப்ரோமிலைன்' உடல் எடையைக் குறைக்கும் சக்தி கொண்டது. ஜீரண சக்தியை நன்கு தூண்டக்கூடியது. அதோடு உடலில் ஏதேனும் இரத்தக்கட்டு, வீக்கங்கள் ஏற்பட்டிருந்தாலும் அவற்றை சீர் செய்யும் தன்மை 'ப்ரோமிலைனு'க்கு உண்டு.
அன்னாசிப் பழத்தைத் தோல் சீவிய பிறகு வில்லைகளாக நறுக்கிச் சாப்பிடுவோம். அப்போது வில்லைகளின் நடுப்பாகத்தை, கட்டையாக உள்ளது என்று சாப்பிடாமல் எறிந்து விடாதீர்கள். அந்த நடுப்பகுதியில்தான் அதிக அளவில் 'ப்ரோமிலைன்' உள்ளது.
நம் உடலின் நச்சுப் பொருட்களை நீக்கும் 'ஆன்டிஆக்சிடன்ட்' வைட்டமின் 'சி' சத்தில் உள்ளது.
அன்னாசிப்பழத்தில் வைட்டமின் 'சி' சத்து நிறைய இருப்பதால் இதனைச் சாப்பிடுவதால், நீரிழிவால் ஏற்படும் இருதய பாதிப்பு, ஆஸ்துமாவினால் ஏற்படும் மூச்சுத் திணறல், ஆசனவாயில் ஏற்படக்கூடிய புற்றுநோய் ஆகியவை நிகழாமல் இருக்கும். வைட்டமின் 'சி' யுடன் 'மாங்கனீஸ்' தாதுப்பொருள், வைட்டமின் 'பி', தையாமின் போன்றவையும் இப்பழத்தில் உள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ள க்வீன் ஸ்டான்ட் மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தில் நடத்திய ஆராய்ச்சியில் அன்னாசிப்பழம் மார்பகம், சுவாசப்பை, ஆசனவாய், ஓவரிகளில் ஏற்படும் புற்றுநோய் கட்டிகளை உருவாகாமல் கட்டுப்படுத்த பெரிதளவில் உதவுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அன்னாசிப்பழம் உடல் சூட்டினை அதிகரிக்கக்கூடியது. அதனால் இதனை அளவாகச் சாப்பிடலாம். தயிருடன் சேர்த்துச் சாப்பிடலாம். பழரசமாக, நீர் சேர்த்துச் சாப்பிடலாம். மற்ற காய்கறி சாலட்களுடன் சேர்த்துச் சாப்பிடலாம். கர்ப்பிணிப் பெண்களும், மூல நோய் உள்ளவர்களும் இப்பழத்தைத் தவிர்ப்பது நல்லது.
அடுத்த வாரம்...
அடுத்த வாரம் நாம் பார்க்கவிருப்பது கஸ்டர்டு ஆப்பிள் பற்றித்தான்... என்ன புரியவில்லையா? அட... நம்ம 'சீதா பழம்' பற்றித்தான்! காத்திருங்கள்!