நில்... கவனி... சாப்பிடு! - பகுதி 9

பள்ளிப் பருவத்தில் கடைவாயின் ஒருபக்கத்தில் கோலிக்குண்டு போல ஒதுக்கி வைத்து, சுவைக்கப்பட்ட நெல்லிக்கனியை பெரியவராய் ஆன பின்பு ஏன் மறந்துவிட்டோம்?! சரி...! இப்போது இந்த கட்டுரையைப் படித்தபின்பு மீண்டும் சுவைக்கலாம் நெல்லிக்கனியை, அதே ரசனையோடு! நெல்லிக்கனியின் சுவை மட்டுமல்லாது, அதன் மருத்துவ குணங்களும் நம்மை கவனிக்க வைக்கிறது!

நெல்லிக்கனி... இயற்கை அன்னை மனிதனுக்கு அளித்த வரப்பிரசாதம். இதனைப் பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேத, யுனானி மருத்துவங்களில் பெரிதளவில் பயன்படுத்தி வருகிறார்கள். உங்கள் வீட்டில்கூட உங்கள் பாட்டி நெல்லிக்காய் ஊறுகாய், நெல்லி மொரப்பா போன்றவற்றை உங்களுக்குச் செய்து தந்திருப்பார்களே! வைட்டமின் ‘சி’ நிரம்பிய நெல்லிக்காயில் அடங்கியுள்ள மருத்துவக் குணங்கள் கணக்கில் அடங்காதவை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய், நோய் தீர்க்கும் நிவாரணி. உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் ஒரு சிறந்த ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்!

நெல்லி மரத்தின் ஒவ்வொரு பாகமும் மருத்துவக் குணத்துடன் இருந்தாலும், அதில் காய்க்கும் காய்தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. நெல்லிக்கனி, வியக்கத்தகுந்த கனி. இதில் கரிப்புத்தன்மை தவிர, மற்ற ஐந்து சுவைகளும் உண்டு. நெல்லிக்காயைச் சாப்பிடும்போது ஒருபுறம் இனிப்பு, ஒருபுறம் கசப்பு, துவர்ப்பு என்றிருந்தாலும் புளிப்புச்சுவை மேலோங்கியிருக்கும்.

நெல்லிக்கனியில் உள்ள சத்துக்கள்!

நெல்லிக்கனியில் 80% நீர் சத்தும், புரதம், மாவுச் சத்து, நார் சத்து, வைட்டமின் மற்றும் தாதுப் பொருட்களும் உள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, கரோடின், வைட்டமின் பி மற்றும் சி கொண்டதோடு காலிக் அமிலமும் பாலிபீனாலும் உள்ளது.

இன்று ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் நெல்லிக்காய், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் மருத்துவ ரிஷிகளான சரகராலும் சுஸ்ருதராலும் தமது மருந்துகளில் பயன்படுத்தப்பட்டது.

நம் உடலுக்குள் உணவு மூலமாகச் செல்லும் கொழுப்புச் சத்தில் தேவையான அளவு ஈர்த்துக்கொள்ளப்பட்டு, மீதம் உள்ளவை உடலில் கொழுப்பாகச் சேர்ந்து விடுகிறது. ரத்தக் குழாயில் தேங்கும் இந்தக் கொழுப்பினால் இருதயப் பாதிப்பு ஏற்படுகிறது. நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி இந்தக் கொழுப்பினைக் கரைத்து, உடலின் ரத்த அழுத்தத்தையும் குறைத்துக் குணப்படுத்துகிறது.

கொலஸ்ட்ரால் கட்டுப்பட...

உலர்ந்த நெல்லிக்காயைப் பொடி செய்து சர்க்கரைப் பொடியுடன் கலந்து கொள்ளுங்கள். காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி அளவு பொடியை ஒரு தம்ளர் நீரில் கரைத்து அருந்தினால் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு நல்ல கட்டுப்பாட்டில் இருக்கும்.

நெல்லிக்காய், பலவிதமாக, பல நிறங்களில் அரை நெல்லிக்காய், முழு நெல்லிக்காய், இளஞ்சிவப்பு நிற அரை நெல்லிக்காய் என்று கிடைக்கும். அதில் உள்ள கசப்புத்தன்மை மாறுபடும். சற்றே புளிப்பும் இனிப்புமாக உள்ள அரை நெல்லிக்காய், சாலட்களில் சேர்க்கப்பட்டு சாப்பிடப்படுகின்றன. அதிக இனிப்பாக உள்ள பழங்கள் ஃப்ரூட் சாலட் செய்வதில் சேர்க்கப்படுகிறது. நெல்லிக்காயை முள்கரண்டியால் ஆங்காங்கே குத்திய பிறகு, சர்க்கரைப்பாகில் கொதிக்கவைத்துச் சாப்பிடலாம். வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய், நோய் தீர்க்கும் நிவாரணி. உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் ஒரு சிறந்த ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்!

நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள்!

நோய் நம்மைத் தாக்காதவண்ணம், உடலில் எதிர்ப்புசக்தியை வளர்க்கும் திறனும் நெல்லிக்காய்க்கு உண்டு.

  • உலர்ந்த நெல்லிக்காய்ப் பொடி வயிற்றில் உள்ள புண்கள், ஹைபர் அசிடிடி மற்றும் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்க வல்லது.
  • உடல் பலகீனம், இருதயம், மூளையில் சோர்வு ஏற்பட்டால் உணவுக்கு இடையே நெல்லிக்காய் ஜூஸ் சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
  • கண் பார்வையைக் கூர்மையாக்கும் சக்தி நெல்லிக்காய்க்கு உண்டு. நெல்லிக்காயை ஊறவைத்த நீரால் கண்களைக் கழுவுவதாலும் ஊறவைத்த நீரைக் காலையில் பருகுவதாலும், கண் பார்வை தீர்க்கமடையும். மலச்சிக்கலும் நீங்கும்.
  • நெல்லிக்காய் தைலத்தை தலையில் தேய்த்தால், முடி நன்கு வளரும். இளநரை கட்டுப்படும். நல்ல தூக்கம் வரும்.
  • மூக்கிலிருந்து ரத்தம் கசிந்தால் ஒவ்வொரு நாசித்துளையிலும் இரண்டு மூன்று சொட்டு நெல்லிக்காயின் ஜூஸைவிட்டால், கசியும் ரத்தம் நின்றுவிடும்.
  • நெல்லிக்காய் நம் உடலில் ஏற்படும் பலவித உபாதைகளுக்குத் தீர்வாக இருக்கிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையையும் கட்டுப்படுத்தும்.
  • உடலில் ஏற்படும் வீக்கத்தை நீக்கும்.
  • ரத்தத்தில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும். கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும். ரத்தச் சோகையை நீக்கி, சிவப்பணுக்களை அதிகரிக்கும். இருமல், ஆஸ்துமா, ப்ராங்கைடிஸ் நோய்களை நீக்கும். வாய் துர்நாற்றத்தை தடுத்து, பற்களை உறுதியாக்கும்!

அடுத்த வாரம்...

பப்பாளி பழங்களில் உள்ள சத்துக்கள் என்னென்ன? பப்பாளி வாங்கும்போது கவனிக்க வேண்டியவை என்ன? அறிந்துகொள்ள காத்திருங்கள் வரும் வாரம்வரை!

நில்... கவனி... சாப்பிடு! தொடரின் பிற பதிவுகள்