நில்... கவனி... சாப்பிடு! - பகுதி 10

இன்று பப்பாளிப் பழங்கள் தெருவோரங்களில் வண்டிக்கடைகளில் ஆங்காங்கே கிடைக்கின்றன. இப்படி மலிவாகக் கிடைக்கும் ஒன்றுக்கு மதிப்பிருக்காது என்று நினைத்துக்கொள்வது தவறான மனநிலையாகும். பப்பாளிப் பழங்களின் மதிப்பை உணர்த்தும் பதிவாக இது அமைகிறது. பப்பாளிப் பழங்களை எப்படி வாங்குவது என்றும் தெரிந்துகொள்ளுங்கள்!

“சாப்பாட்டில் காரட்டைச் சேர்த்துக்கிட்டா, கண்ணுக்கு நல்லது!’’ - எல்லா அம்மாக்களும் தங்கள் குழந்தைகளிடம் சொல்வது இது!

பப்பாளிப் பழத்துக்கு மற்ற பழங்களை மென்மையடையச் செய்யும் சக்தியும் உள்ளது.

ஆனால், கண் தொடங்கி இதயம் வரை எல்லாவற்றுக்கும் சிறந்தது மூன்று வேளை பழங்கள் சாப்பிடுவது. வளரும் குழந்தைகளுக்கு மட்டுமல்ல; வயதானவர்களுக்கும் இது பொருந்தும். பழங்களை தினமும் மூன்று வேளையும் சாப்பிடுவதால் வயதாவதால் குறையும் கண் பார்வைக் குறைபாடு தடுக்கப்படுகிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

காரணம், காய்கறிகளிலும் பழங்களிலும் உள்ள வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ சத்துக்கள். ARMD (Age Related Mascular Degeneration) என்ற நிலை நீடித்தால் கண் பார்வை இழக்கும் வாய்ப்பு உள்ளது. இதனைத் தடுக்கிற சக்தி பழங்களில் உண்டு!

மூன்று வேளையும் பழங்களை எப்படிச் சாப்பிடுவது..? அதுவும் பழங்கள் விற்கும் விலையில் என்கிறீர்களா?

உங்களுக்குக் கை கொடுக்கிறது பப்பாளிப் பழம். காலை டிபனுடன் அல்லது கஞ்சி, தானிய மாவுடன் ஒரு துண்டு, மதிய உணவின் சாலட்களில் அல்லது இரவு உணவில் தயிருடன் சாப்பிடுவது மிகவும் சுலபம்.

ஒரு பப்பாளியை இரண்டு பேர், மூன்று வேளைகள் சாப்பிடலாம். முதலில் பப்பாளியைச் சாப்பிடுவதற்கேற்ப எப்படி வாங்க வேண்டும் என்று பார்ப்போம்.

இளம் சிவப்பு நிறத்தில் தொட்டால் மென்மையாக இருக்கும் பப்பாளிப்பழம் உடனே சாப்பிட உகந்தது. ஆங்காங்கே இன்னும் மஞ்சள் திட்டுக்கள் உள்ள பழத்தை ஓரிரண்டு நாட்கள் பழுக்கவைத்துச் சாப்பிடலாம். பச்சை நிறப் பப்பாளியை வாங்கவே கூடாது. அதை கூட்டாகச் சமைக்கலாம். அல்லது சிலவகை சாலட்களில் சேர்க்கலாம். ஆனால், இனிப்பான சுவை இருக்காது. அதேபோல, அதிக அளவில் பழுத்த பப்பாளியும் வாங்கக் கூடாது.

பப்பாளியின் பலன்கள்

இத்தனை தேர்ந்தெடுத்து வாங்கிச் சாப்பிடும் பப்பாளிப் பழத்தால் நாம் அடையும் பயன்கள் என்னென்ன?

  • பப்பாளிப்பழம், இனிப்பான சுவையைத் தருவதோடு, கரோட்டின்ஸ், வைட்டமின் ஏ, பி, சி, ஈ, ஃப்ளாவனாய்ட்ஸ், இரும்புச் சத்து, பொட்டாசியம், மக்னீசியம் போன்ற தாதுப் பொருட்கள் மற்றும் நார்ச் சத்தினைத் தருகிறது.
  • இருதயம் வலிமை பெறத் தேவையான சத்துக்களையும், ஆசனவாயில் ஏற்படக்கூடிய புற்றுநோயைத் தடுக்கும் எதிர்ப்புச் சக்தியையும் தருகிறது.
  • நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்கக்கூடிய வல்லமை பொருந்திய பப்பாயின் என்ற என்சைமினையும் தருகிறது.
  • பப்பாளியில் உள்ள வைட்டமின் ஏ, சி, மற்றும் ஈ சத்துக்கள் உடலில் உள்ள நச்சுத்தன்மைகளை வெளியேற்ற உதவுகின்றன. இதனால் கொலஸ்ட்ரால் உடலில் சேர்வதைத் தடுத்து ரத்தக் குழாய்களில் கொழுப்பு சேராமல் தடுத்து, இருதயம் பாதிப்பில்லாமல் இயங்கவும் உதவுகிறது.
  • பப்பாளியில் உள்ள நார்ச் சத்து, கொழுப்பை உடலில் சேரவிடாமல் தடுக்கிறது.
  • பப்பாளியில் உள்ள வைட்டமின்கள், பீடாகரோடின் போன்றவை புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்க உதவுகின்றன.
  • பீடாகரோடின், உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஜலதோஷம், ஜுரம் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கின்றன.

பப்பாளிப் பழத்தினை நேடியாக வெட்டிச் சாப்பிடுவதே சிறப்பு. அதை இன்னும் சுவையாகச் சாப்பிட, அதன் மேல் சிறிதளவு எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம். பப்பாளிப் பழத்துக்கு மற்ற பழங்களை மென்மையடையச் செய்யும் சக்தியும் உள்ளது. அதனால் பழ சாலட்கள் தயாரிக்கும்போது, அவசியம் பப்பாளியையும் சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் எல்லாப் பழங்களும் கனிந்துவிடும். பப்பாளியின் கறுப்பு நிறக் கொட்டைகளைக்கூட சாலட்களில் சேர்க்கலாம். அதற்கு மிளகைப் போன்ற சுவையும் நறுமணமும் உண்டு.


அடுத்த வாரம்...

வாழைப்பழங்கள் குறித்து நாம் அறியாத தகவல்கள் காத்திருக்கின்றன!


நில்... கவனி... சாப்பிடு! தொடரின் பிற பதிவுகள்