நில்... கவனி... சாப்பிடு! - பகுதி 14

தக்காளி நாம் அன்றாடம் பார்க்கும் பழங்களில் ஒன்று. ஆனாலும், அதன் தனிச்சிறப்புகளும் அதில் அடங்கியுள்ள சத்துக்களும் நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. இப்பதிவினைப் படித்த பிறகு தக்காளியின் தனித்தன்மைகளை உணர்ந்துகொள்ளமுடியும்!

ஒவ்வொரு வீட்டின் அன்றாடச் சமையலிலும் இடம் பெறும் முக்கியமான பழம் தக்காளி. இதன் நிறமும், சுவையும் இதனை சமையலில் சேர்க்கத் தூண்டினாலும், அதன் விலை அவ்வப்போது நம்மைப் பயமுறுத்துகிறது. எந்த ஊரிலும், எல்லா நாட்களிலும் கிடைக்கும் தக்காளி எந்த அளவிற்கு உடலுக்கு நல்லது? அல்லது வெறும் அழகான பொருள்தானா? பார்ப்போம்!

தக்காளி சேர்த்து சமைத்த உணவை அதிகம் சாப்பிடுபவர்களின் சருமத்தை சூரிய ஒளியில் உள்ள 'அல்ட்ராவைலட்' கதிர்கள் பாதிப்பதில்லை.

அழகான, மென்மையான சருமத்தை விரும்பாதவர்கள் உண்டா? தக்காளிப்பழம் போல் தளதள என்றிருக்கிறார் ஒருவர் என்றால் அவரது உணவில் நிறைய தக்காளி சேர்த்துக் கொள்கிறார் என்றறியலாம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தக்காளியின் பலன்கள்

  • தக்காளி சருமப் பாதுகாப்புக்கு அத்தனை நல்லது.
  • உடலில் ஓடும் இரத்தத்தை சுத்திகரிக்க தக்காளி பெரிதும் உதவுகிறது.
  • அதோடு கல்லீரலில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் (சிரோஸிஸ்), கால்பிளாடரில் ஏற்படும் 'கால்ஸ்டோன்ஸ்' என்னும் கற்களை கரைக்கவும் வல்லது.
  • இருதயத்தைப் பாதிக்கக்கூடிய அதிக கொலஸ்ட்ராலை குறைக்கவும், உடலில் ஏற்பட்டிருக்கும் தொற்று நோய்களை சீர் செய்யவும் தக்காளியில் உள்ள நிகோடினிக் அமிலம் உதவுகிறது.

தக்காளியில் உள்ள சத்துக்கள்

தக்காளிப் பழத்தில் இல்லாத சத்துக்களே இல்லை எனலாம். இதில் வைட்டமின் ஏ, பி, சி, கே, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் புரதச்சத்து நிரம்பியிருக்கிறது. கண்களுக்கு மிகவும் நல்லதான வைட்டமின் ஏ சத்தினை அதிக உணவுகளில் பெற முடியாது. அதேபோல் வைட்டமின் கே சத்தும் அரிதான ஒன்று. இந்த வைட்டமின் இரத்தக் கசிவுகளை கட்டுப்படுத்த உதவுகிறது.

கேன்சரை தடுக்கும் தக்காளி

தக்காளியில் மிக மிக அதிக அளவில் உள்ள பொருள் 'லைகோபீன்' என்ற சத்துதான். உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றவும், புற்றுநோய் பாதிப்படைந்துள்ள திசுக்களுடன் போராடவும் 'லைகோபீன்' உடலுக்கு மிக அவசியமாகிறது. எனவேதான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தக்காளி உணவில் அதிகம் சேர்க்கப்படுகிறது.

உங்கள் குழந்தைகள் தக்காளி சாஸ், கெச்சப் என்று கேட்டால் கோபித்துக் கொள்ளாதீர்கள். வாரத்திற்கு இருமுறை தக்காளி சேர்த்த உணவு, சாஸ், கெச்சப் சாப்பிட்டால் பிற்காலத்தில் ஏற்படக்கூடிய 'பிராஸ்ட்ரேட் கேன்சரை' இருபது முதல் நாற்பது சதவிகிதம் தடுக்கலாம். இதற்கு இதில் உள்ள 'லைகோபீன்'தான் காரணம்.

தக்காளி சேர்த்த உணவை சாப்பிடும் பெண்களுக்கு 'சர்விகல் கேன்சர்' எனப்படும் கருப்பைவாய் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இதுமட்டுமல்ல, மார்பகப் புற்றுநோய், கருப்பையில் ஏற்படும் 'எண்டோமெட்ரியல் கேன்சர்', சுவாசப்பை புற்றுநோய் ஆகியவற்றிலிருந்தும் தடுக்க தக்காளி உதவுகிறது.

வயதாவதால் ஏற்படும் கண் பார்வைக் குறைவை தடுக்க தக்காளியில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் 'லைகோபீன்' பெரிதும் உதவுகிறது. தக்காளி சேர்த்து சமைத்த உணவை அதிகம் சாப்பிடுபவர்களின் சருமத்தை சூரிய ஒளியில் உள்ள 'அல்ட்ராவைலட்' கதிர்கள் பாதிப்பதில்லை.

தக்காளி வகைகள்

தக்காளியில் இரு வகைகள் உண்டு. ஒன்று நாட்டுத் தக்காளி. மற்றொன்று 'ஹைப்ரிட்' வகை. 'ஹைப்ரிட்' வகையில் விதைகள் இல்லாததால் அவற்றை சமைக்காமல் சாலட், ஜுஸ் மற்றும் எல்லா உணவுகளிலும் தாராளமாகச் சேர்க்கலாம். நாட்டு தக்காளி புளிப்பு சுவையும், விதைகளும் நிரம்பியது. இதை சமைக்கும்போது விதைகளை வடிகட்டிய பிறகே சமைக்க வேண்டும். இல்லாவிடில் அவை சிறுநீரகத்தில், குறிப்பாக ஆண்களுக்கு கற்களை உருவாக்கக்கூடும். தக்காளியின் அருமை பெருமை புரிந்ததல்லவா, இனி என்ன விலை விற்றால் என்ன? தினமும் சமையலில் தக்காளிதான்!

அடுத்த வாரம்...

திராட்சைப் பழங்கள் குறித்து உங்களுக்குத் தெரிந்தது-தெரியாதது என அனைத்தும் அறியலாம்! காத்திருங்கள்!

நில்... கவனி... சாப்பிடு! தொடரின் பிற பதிவுகள்