யோகா - ஒரு பார்வை

"உங்கள் விதியை நீங்களே நிர்ணயிக்கும் ஆற்றலை, சுதந்திரத்தை உங்களுக்கு வழங்கும் உள்நிலை விஞ்ஞானமான யோக விஞ்ஞானத்தின் வல்லமையை நீங்கள் உணர வேண்டும் என விரும்புகிறேன்.-சத்குரு"  

யோகா என்றால் என்ன? (Yoga in tamil)

சத்குரு: யோகா என்ற வார்த்தைக்கு ஒன்றிணைதல் என்று பொருள். எல்லாமே உங்கள் அனுபவத்தில் ஒன்றாகும்போது முழுப்பிரபஞ்சத்தையும் உங்களுக்குள் ஒரு பகுதியாக நீங்கள் உணரத் தொடங்கும்போது நீங்கள் யோகத்தில் இருக்கீறீர்கள். யோகா என்பது பயிற்சி அல்ல. உங்கள் உடலை முறுக்கிக்கொள்வது, மூச்சைப்பிடித்துக் கொள்வது, தலையில் நிற்பது இவையெல்லாம் யோகா அல்ல. எல்லாமே உங்கள் அனுபவத்தில் ஒன்றாகும்போது உங்களுடைய இயல்பான தன்மையை நீங்கள் உணரும்போது யோகா என்று சொல்கிறோம். அதை அந்த நிலையை அடைவதற்கு பல வழிமுறைகள் உள்ளன. அது எப்படிப்பட்ட வழிமுறையாக இருந்தாலும் சரி, அந்த நிலையை அடைவதற்கு ஒரு வழிமுறை பயன்படுமானால் அதை யோகா என்று சொல்ல முடியும்.

புதிதாக யோகா செய்பவர்களுக்கு எளிமையான ஆரம்ப யோகப் பயிற்சிகள்

உப-யோகா (Upa-Yoga)

சத்குரு:

உபயோகா என்பது, ஒருவரின் ஆன்மீக பரிமாணத்தில் அதிகம் சார்ந்திராமல், உடல்நிலை, மனநிலை மற்றும் சக்திநிலையில் சார்ந்துள்ளது. ஒருவர் முழுமையான வாழ்க்கை வாழ்வதற்கான ஒரு வழிமுறையாகும். உடல்நிலை என்று நான் குறிப்பிடும்போது, அதில் மனநிலையும், உணர்ச்சிநிலையும் சேர்த்துதான் குறிப்பிடுகிறேன். சிலர் யோகாவை வெறுமனே கடுமையான உடற்பயிற்சி போல செய்வதற்கு பதிலாக, உபயோகா செய்யலாம். ஏனென்றால் அது ஒரு சக்திவாய்ந்த வழிமுறை. அதனால் ஈர்க்கப்பட்ட பிறகு வேண்டுமானால், அவர்கள் யோகாவில் ஈடுபடலாம்.

yoga-in-tamil-yoga-namaskar

நீங்கள் இரவு உறங்கும் போது, தட்டையான நிலையில் படுத்து அசைவில்லாமல் இருக்கிறீர்கள். அப்போது உங்கள் சக்திநிலையிலும், மூட்டு இணைப்புகளிலும் ஒரு செயலின்மை உருவாகிறது. அதனால் இயல்பான நிலையைவிட, உங்கள் மூட்டுக்களில் உயவுத்தன்மை (lubrication) இல்லாமல் போகிறது. அப்படி அந்த உயவுத்தன்மை இல்லாமல் உங்கள் மூட்டுக்களை நீங்கள் நகர்த்தினால், அது அதிக நாட்களுக்கு தாங்காது. ஒருவர், எந்த மாதிரியான மூட்டு இணைப்புகளைக் கொண்டுள்ளார் என்பதைப் பொறுத்தே உடல்நிலையில் விடுதலை என்பதற்கு வாய்ப்புள்ளது.

உடலின் நாடிகள், இந்த மூட்டுப் பகுதிகளில் மட்டும் ஒரு குறிப்பிட்ட விதமாக இயங்குவதால், அனைத்து மூட்டுக்களும் சக்தியின் சேகரிப்பு மையங்கள் போன்று உள்ளன. இந்த உபயோகாவின் குறிப்பிட்ட அம்சம் மூட்டு இணைப்புகளில் உயவுத் தன்மையை (lubrication) வழங்குவதோடு சக்தி முனைகளையும் இயக்கச் செய்வதால் உடலின் மற்ற சக்தி மண்டலங்களும் செயல்படத் துவங்குகின்றன.

வழிகாட்டுதலுடன் கூடிய எளிமையான 5 நிமிட இலவச யோகப் பயிற்சிகள்:

யோக நமஸ்காரம் (Yoga to relieve back pain in tamil, Yoga for overall well-being in tamil)

 

கையசைவுப் பயிற்சி (Yoga to relieve joint pain in tamil)

 

நாடிசுத்தி (Yoga to relieve stress in tamil)

 

கழுத்துப் பயிற்சி (Yoga to relieve neck pain in tamil)

 

நாத யோகா (Yoga for happiness in tamil)

 

நமஸ்காரம் செயல்முறை (Yoga for better relationships in tamil)

 

ஷாம்பவி முத்ரா (Yoga to receive grace in tamil)

 

யோகா நன்மைகள் (Benefits of Yoga in Tamil):

"ஆனந்தமாக இருக்க தேவையான இரசாயனத்தை உங்களுக்குளேயே உருவாக்க யோகா ஒரு வழி. இயல்பிலேயே நீங்கள் ஆனந்தமாக இருக்க முடிந்தால், வெளி சூழ்நிலையை கையாள்வது என்பது மிகச் சாதாரணமானது.-சத்குரு"

உப-யோகா நன்மைகள்:

உடல் ரீதியான பலன்கள் (Physical Benefits):

 • மூட்டுகள் மற்றும் தசைகளுக்கு பயிற்சி
 • ஓய்வு நிலையில் இருந்து திரும்பும் உடலுக்கு புத்துணர்வு அளிக்கிறது.
 • நாட்பட்ட நோய்களில் இருந்து விடுவித்து, ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
 • முதுகுத்தண்டை (Spine) வலுவூட்டி உறுதியாக்குகிறது. முதுகுவலி (Back pain), உடல் சோர்விலிருந்து விடுவிக்கிறது.

 மன ரீதியான பலன் கள் (Mental Benefits):

 • ஞாபக சக்தி (Memory), மனக்குவிப்புத் திறன் (Focus / Concentration) மற்றும் செயற்திறனை அதிகரிக்கிறது. உடல், மனம் மற்றும் உணர்வுகளை நிலைப்படுத்துகிறது.
 • மன அழுத்தம் (Depression) , படபடப்பு, மனத்தவிப்பு (Anxiety) ஆகியவற்றிலிருந்து விடுவிக்கிறது.
 • பலருடன் சேர்ந்து ( அனைவருடனும் இணைந்து ) செயல்படும் திறனையும், பழகும் முறையையும் மேம்படுத்துகிறது.
 • ஆழ்ந்து உணரும் ஆனந்தம், அமைதி, நிறைவை வழங்கிடும்.

ஷாம்பவி மஹாமுத்ரா (ISHA YOGA / Shambavi Mahamudra):

" வாழ்வின் அனைத்து பரிமாணங்களிலும், சமநிலையையும் ஆற்றலையும் புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்வதே யோகா"-சத்குரு

அறிமுகம்:

சத்குரு:

ஷாம்பவி மஹாமுத்ரா என்பது உயிரோடு இருக்கின்ற ஒரு தொழில்நுட்பம். இது வெறும் பயிற்சி அல்ல. இது உயிரோடு இருக்கின்ற ஒரு தன்மை. தினசரி பயிற்சி செய்து வந்தால் கற்பனை செய்ய இயலாத அளவிற்கு உள்ளேயிருந்து ஆனந்த நிலை பொங்கிப் பிரவாகிக்கும். அது மட்டுமல்ல. வாழ்க்கையை நாம் உருவாக்கிக் கொள்வதற்குத் தேவையான திறமை, புத்திசாலித்தனம், சக்தி என்று நமக்குத் தேவையான அனைத்தையும் பிரமாதமாக நாம் வளர்த்துக் கொள்ள முடியும்.

 எல்லாவற்றிற்கும் முக்கியமாக, நம்முடைய வாழ்க்கையை இலகுவாக நடத்திக் கொள்கின்ற அளவுக்குத் தேவையான சூழ்நிலை உங்களுக்குள்ளே வரும். சிறிது கவனம் செலுத்தி பயிற்சி செய்பவர்களுக்கு உயிர்த்தன்மை பிரமாதமாக செயல்படும். உங்களுக்குள்ளே இருப்பதை உணர்ந்துவிட்டால், பிறகு நீங்கள் வாழ்க்கையில் இதுவரைக்கும் கற்பனை செய்தேயிராத ஒரு மனிதராக வாழ முடியும்.

 

பயன்கள்:

 • நாள் முழுவதும் ஆற்றல் மற்றும் விழிப்புணர்வுடன் இருக்க உதவுகிறது
 • தகவல் பரிமாற்றம் மற்றும் பிறருடன் பழகுவதில் மேம்பட்ட நிலை
 • மனத்தெளிவு, உணர்ச்சிகளில் சமநிலை மற்றும் உற்பத்தி திறன் மேம்படுகிறது
 • மன அழுத்தம், பயம் மற்றும் படபடப்பிலிருந்து விடுவிக்கிறது
 • நாட்பட்ட நோய்களான ஒவ்வாமை, தூக்கமின்மை, உயர் இரத்த அழுத்தம், உடற்பருமன், சர்க்கரை நோய் முதுகுவலி போன்றவற்றிற்கு சிறந்த பலனளிக்கிறது.
 • உள்நிலையில் அமைதி, ஆனந்தம் மற்றும் நிறைவை வழங்குகிறது
 • மனம் குவிப்பு திறன் அதிகரிக்கிறது
 • தன்னம்பிக்கை ஏற்படுத்துகிறது
 • ஆஸ்த்துமா,
 • தலைவலி / ஒற்றைத் தலைவலி,
 • முதுகு / கழுத்து வலி,
 • அஜீரண கோளாறுகள் சீரடைகிறது.
 • தூங்கும் முறை - ஷாம்பவி பயிற்சி செய்யும் வழக்கம் இருந்தவர்களிடம், தூக்கத்தில் மூளையின் ஓய்வு நிலை படிவம் மிகச்சிறப்பாக அதிகரித்திருந்தது. சாதாரணமாக ஆழமான தூக்க நிலையில் கிடைக்கக்கூடிய ஓய்வு, ஓய்வின் தரம் மற்றும் புத்துணர்வை ஷாம்பவி பயிற்சி வழங்குவதை காண முடிந்தது. 

மாதவிடாய் கோளாறுகள்

 • ஒழுங்கற்ற சுழற்சி குறைகிறது
 • மருத்துவ உதவி எடுத்துக்கொள்வது குறைகிறது.
 • வேலை தடைபடுவது குறைகிறது
 • Dysmenorrhea எனப்படும் அதீத தசைப்பிடிப்பு குறைகிறது.
 • PMS எனப்படும் மனநலம் சார்ந்த அறிகுறிகள் குறைகிறது.
 • சினைப்பை நோய்
 • மனச்சோர்வு அகல்கிறது.

ஆராய்ச்சி முடிவுகள்: https://www.innerengineering.com/research

தமிழ்நாட்டில் அடுத்து வரும் ஈஷா யோகா வகுப்புகள்

ஹடயோகா (Hatha yoga in tamil)

ஹடயோகா என்பது உடலை திருகிக்கொள்ள அல்ல. உங்கள் எண்ணம், உணர்வு மற்றும் வாழ்க்கையை புரிந்து கொள்ளும் தன்மையை உங்கள் பொறுப்பில் எடுத்துக் கொள்வதைப் பற்றியது இது.-சத்குரு

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பாரம்பரிய ஹட யோகா என்பது உங்கள் உடல் மற்றும் மனதை தயார் செய்யும் வழிமுறை. அனைத்திற்கும் மேலாக உங்கள் சக்தி நிலையை பலப்படுத்தி, எப்பேர்ப்பட்ட அனுபவத்தையும் தாங்கிக் கொள்ளும் திறத்தை வழங்குகிறது. நீங்கள் வாழ்க்கை என்று எதை அழைக்கிறீர்களோ அதை கையாளும் திறன் படைத்ததாக உங்கள் சக்தி உடல் இருக்கும்.

இனிமையானதோ இனிமையற்றதோ, எது நிகழ்ந்தாலும் அதை உங்கள் நலனுக்காகவே மாற்றும் திறன் கொண்ட உடல் கட்டமைப்பை உருவாக்குவதே ஹட யோகா. வாழ்க்கை உங்கள் மீது எதை வீசப் போகிறது என்று உங்களுக்கு தெரியாது. ஆனால் அதிலிருந்து நீங்கள் எதை உருவாக்கலாம் என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியும். இது நிகழ, உங்களுக்கு சரியான உடல், மனம், மற்றும் சக்தி நிலை தேவை. இவை இல்லாதபட்சத்தில், வாழ்வின் முறைகள் உங்களை முழுவதுமாக அழித்துவிட முடியும். மிகவும் நல்லவராக, இனிமையானவராக உங்களை நீங்களே நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் யாராவது ஏதாவது ஒன்று உங்களுக்கு செய்துவிட்டால், நீங்கள் நொறுங்கிப் போவீர்கள்.

ஹட என்பதன் இன்னொரு அர்த்தம் பிடிவாதம். நீங்கள் பிடிவாதமாய் இருக்கிறீர்கள், எதையும் சுலபமாய் விட்டுவிடும் ரகம் அல்ல. ஆனால் வேறு சிலர் இருக்கிறார்கள், அவர்கள் பாதையில் மலர்களை வீசினால் மட்டுமே தொடர்ந்து செல்வார்கள், அசிங்கத்தை வீசினால் ஓடி விடுவார்கள். ஆனால் நீங்கள் பிடிவாதமானவர் என்றால் வாழ்க்கையில் பூ, புழுதி என்று எதை வீசினாலும் பொருட்படுத்தாது எங்கு செல்ல வேண்டுமோ அங்கு செல்வீர்கள். இந்த உலகம் உங்கள் மேல் எதை வீசினாலும் அது உங்களை பாதிக்காது. நீங்கள் அதுபோன்ற மனிதராய் உருவாக வேண்டுமென்றால் ஹட யோகா ஒரு நல்ல முறை. உங்கள் விதியை தீர்மானித்து, அதை செயல்படுத்த ஹட யோகா ஒரு சக்தி வாய்ந்த கருவி.

யோகாசனம் (yogasana in tamil)

வெளி சூழ்நிலையில் நல்வாழ்வை ஏற்படுத்த ஒரு விஞ்ஞானம், தொழில்நுட்பம் இருப்பதை போலவே, உள் நிலையில் நல்வாழ்வை அமைத்துக் கொள்ள ஒரு முழுமையான விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் இருக்கிறது.-சத்குரு

ஒரு ஆசனம் (Asana) என்பது உடல் இருக்கும் ஒரு நிலை. உங்களது உடல் எண்ணற்ற நிலைகளை எடுக்க முடியும். அவற்றுள், சில குறிப்பிட்ட நிலைகள், ‘யோகாசனங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. “யோகா” என்றால், உயர்நிலைப் பரிமாணங்களுக்கோ அல்லது வாழ்வின் உச்சபட்ச புரிதலை நோக்கியோ உங்களை அழைத்துச் செல்வது. எனவே ஒரு உயர்ந்த சாத்தியத்தை நோக்கி உங்களை வழி நடத்தக்கூடிய உடல் இருப்பு நிலை “யோகாசனம்” என்று அழைக்கப்படுகிறது.

உடல் மற்றும் மனரீதியான பலன்கள் 

 • முதுகு வலியில் இருந்து நிவாரணம்
 • மூட்டு வலி குறைகிறது
 • தன்னியக்க நரம்பு மண்டலத்தில் சமநிலையை ஏற்படுத்துகிறது
 • இதயத்தின் திறன் மேம்படுகிறது
 • சுவாசிக்கும் திறன் மேம்படுகிறது
 • இரைப்பையின் செயல்பாடு இயல்பாகிறது
 • நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடு இயல்பாகிறது
 • உடலின் கழிவு வெளியேற்றும் செயல் மேம்படுகிறது
 • தசைக்கூடுகள் வளைந்து கொடுக்கும் தன்மை பெறுகிறது
 • உடல் எடை சீராகிறது
 • தூக்கம் மேம்படுகிறது
 • நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கிறது
 • பலம், மீண்டு வருதல், தாங்கும் ஆற்றல், சக்திநிலை, தளரா உறுதி அதிகரிக்கிறது
 • உடல் பாகங்களிடையே ஒருமித்த செயல்பாடு, கண்-கை கூட்டு செயல், சமநிலை அதிகரிக்கிறது
 • பதட்டம் மற்றும் மனச்சோர்வு குறைகிறது
 • கவனம், மனம் குவிப்பு திறன் மேம்படுகிறது
 • நினைவாற்றல் அதிகரிக்கிறது
 • கற்றல் திறன் அதிகரிக்கிறது.

சூரிய நமஸ்காரம் (Surya Namaskar in Tamil)

தொடர்ச்சியாக செய்யப்படும் 24 யோகாசனங்கள்தான் சூரியநமஸ்காரம் என்று அழைக்கப்படுகிறது. அதை சூரியநமஸ்காரம் என்று அழைப்பதிலேயே பல அர்த்தங்கள் இருக்கின்றன. சூரிய நமஸ்காரம் உங்கள் நாடிகளைத் திறந்து, உங்களுக்குள் இருக்கும் சூரியனை தூண்டிவிடுகிறது, இதன் மூலம் நீங்கள் மிகவும் துடிப்பாக, உயிர்ப்புடன் இருக்க முடியும். உங்களை பேணிப் பாதுகாக்கின்ற சூரியனுக்கு தினமும் காலையில் செய்யும் ஒரு வழிபாடாகவும் அது இருக்கிறது. உங்களுக்கு இந்த உடல் இருப்பதன் காரணமே சூரியன்தான், இல்லையா? இந்தக் கலாசாரத்தில் வழிபாடு செய்வதென்றால் சில சடங்குகளைச் செய்வதோ அல்லது சில மந்திரங்களை முணுமுணுப்பதோ அல்ல. உங்கள் முழு உடலையுமே வழிபாடாக ஆக்குவதுதான் இங்கு வழிபடும் முறை.

சூரிய நமஸ்காரத்தின் பலன்கள் இங்கே.(Surya Namaskar Benefits in Tamil)

யோகா செய்தால் எடை குறையுமா? (yoga for weight loss in tamil)

சத்குரு:

நீங்கள் யோகா செய்யும்போது, அதிகப்படியான எடை கண்டிப்பாகக் குறைந்துவிடும். யோகா ஓர் உடற்பயிற்சியாக மட்டும் செயல்படுவதில்லை. அது உங்கள் அமைப்புகளுக்கு புத்துணர்வு ஊட்டி, நீங்கள் அதிகமாக சாப்பிடாமல் இருக்கும் ஒரு விழிப்பினை உங்களுக்குள் கொண்டு வருகிறது. உங்கள் உடலுக்குள் ஓரளவு விழிப்புத்தன்மை வந்துவிட்டால், அதற்கு எது தேவையோ அதை மட்டும்தான் உடல் உண்ணும். அதற்கு மேல் எதையும் அது உண்ணாது. மற்ற உடற்பயிற்சிகளையோ அல்லது உணவுத் திட்டங்களையோ கடைப்பிடித்தால், எப்போதும் உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள முயற்சிப்பீர்கள். ஆனால் யோகப் பயிற்சிகள் செய்து வரும்போது, உங்களை நீங்கள் கட்டுப்படுத்தி வைக்க வேண்டிய அவசியம் இருக்காது. நீங்கள் பயிற்சிகளை மட்டும் செய்து வந்தால் போதும். நீங்கள் அதிகமாக உண்ணாத அளவு உங்கள் அமைப்புகளை யோகா கவனித்துக் கொள்கிறது. இதுதான் யோகாவில் இருக்கும் மிகப் பெரிய வித்தியாசமும் நன்மையும்.

யோகாவின் வரலாறு (History of yoga in Tamil)

யோகா எல்லா மதங்களுக்கும் முற்பட்டது. மனித மனதில் மதம் என்ற சிந்தனையே துவங்கியிருக்காத போதிலிருந்தே யோகா இருக்கிறது.- சத்குரு

சத்குரு:

யோக கலாச்சாரத்தில் சிவன் கடவுளாக பார்ககப்படுவதில்லை. முதல் யோகி - ஆதி யோகியாகவே பார்க்கப்படுகிறார். சுமார் பதினைந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் இமாலய பர்வதத்தில் ஒரு யோகி தோன்றினான். அவன் யார், எங்கிருந்து வந்தான் என்பது யாருக்கும் தெரியவில்லை. பரவசத்துடன் அசைவின்றி அமர்ந்திருப்பவன் நடனமாட துவங்கி, பரவசத்தின் உச்சமடைந்து மீண்டும் அசைவின்றி அமர்ந்திடுவான். ஏதோ அதிசயம் எதிர்பார்த்து கூடிய கூட்டம் நாட்கணக்கில் அசைவின்றி அமர்ந்திருந்த யோகியை விட்டு விலகியது. உணவு, ஓய்வு, கழிவு என உடலின் கட்டுப்பாடுகளை தாண்டி அசைவற்றிருப்பதே ஒரு அதிசயம் என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் எழுவர் மட்டும் யோகியை தொடர்ந்தார்கள், தங்களுக்கும் ஏதாவது கற்றுத்தர வேண்டினார்கள். பல நாட்களுக்குப்பின் மனமிரங்கிய ஆதியோகி, தயார் செய்யும் ஆசனங்களை வழங்கிவிட்டு பரவசநிலையை தொடர்ந்தான்.

சூரியனின் கதிர் பூமியின் வடபாகத்திலிருந்து தென்பாகம் (உத்தராயணத்திலிருந்து தக்ஷிணாயணத்திற்கு) திரும்பிய முதல் பௌர்ணமியன்று ஆதியோகியின் அருட்பார்வை எழுவரின் மீதும் பதிந்தது. 84 ஆண்டு சாதனாவில் கனிந்து, ஞானத்தை பெற முழு தகுதியுள்ளவர்களாக, ஆதியோகியால் மேலும் புறக்கணிக்க முடியாதவர்களாக எழுவரும் அமர்ந்திருந்தார்கள். 28 நாட்கள் கூர்ந்து கவனித்தவர், அடுத்த பௌர்ணமியன்று குருவாக அருள் பாலிக்க முடிவெடுத்தார். அந்நன்னாள்தான் குரு பௌர்ணமி.

முதல் யோகி -ஆதியோகி - முதல் குருவாக - ஆதிகுருவாக தென்திசை நோக்கி அமர்ந்ததால் தக்ஷிணாமூர்த்தி என்றும் அழைக்கிறோம். ஆதியோகியின் ஞானத்தை யோக விஞ்ஞானமாக உலகெங்கும் சேர்த்த ஏழு தீவிர சாதகர்களையும் சப்தரிஷிகள் என்று வழங்குகிறோம்.

அகத்தியர் (Agathiyar)

ஆதியோகியான சிவனே யோகாவிற்கு மூலமானவர் என்பதை இந்த உலகம் அறிய வேண்டும் எனபதே நம் விருப்பம்.-சத்குரு

யோகா என்றால் என்ன?

Image courtesy: WikiMapia (https://wikimapia.org/32184065/Gandhi-Sarovar-Chorabari-Lake-Kanti-Sarovar#/photo/5402904)

யோக விஞ்ஞான பரிமாற்றம் நிறைவுற்றதும், உலகமக்கள் அனைவருக்கும் இதை வழங்க சப்தரிஷிகளை பணித்தார் ஆதியோகி. கலைகளிலும் அறிவியலிலும் வல்லவர்களாக விளங்கிய சப்தரிஷிகள் அந்த யுகத்தின் நாகரீகங்களையும் அறிவியல் மேம்பாட்டையும், சிகிச்சை முறைகளையும் வடிவமைத்தார்கள்.

 சித்த வைத்தியம், ரசவைத்தியம் ஆகியவற்றின் தந்தையென்று கருதப்படுபவரும், இந்திய தீபகற்பத்தின் தென்பகுதிக்கு வந்துசேர்ந்தவருமான அகஸ்த்திய முனிவர் நமக்கு மிகமிக முக்கியமானவர். அன்றைய மனித குடியிருப்பு அனைத்தையும் தொட்ட இவரது செயல், ஒரு கோட்பாடாகவோ, தத்துவமாகவோ, பயிற்சியாகவோ இல்லாமல் ஒருவர் அமரும் விதம், உண்ணும் விதம், என அன்றாட வாழ்க்கைமுறையோடு ஒரு அங்கமாக ஆன்மீகத்தை இரண்டறக் கலந்துவிட்டது.

அகஸ்தியர் வழங்கிய முறைகளை பின்பற்றித்தான் நெருப்புக் குழம்புகள் போல் நூற்றுக்கணக்கான யோகிகள் இந்தியாவில் தோன்றினர்.

பதஞ்சலி (Patanjali) - நவீன யோகாவின் தந்தை

சத்குரு:

பெரும்பாலானோர் நினைப்பதைப் போல யோகாவின் மூலம் பதஞ்சலி அல்ல. அவர் வருவதற்கு முன்பே 1800 விதமான பள்ளிகள் உருவாகி, வளர்ந்து இருந்தன. அந்த நேரத்தில் 1800 விதமான யோகா, இந்தியாவில் இருந்தது.

1800 யோக வகைகள் தவறானது அல்ல, ஆனால், நடைமுறை சாத்தியம் இல்லாதது. ஏனென்றால் ஒவ்வொன்றும் தனித்தனியாக நிபுணத்துவமான பிரிவுகளாக வளர்ந்திருந்தது. பதஞ்சலி வந்தபோது இந்த அளவிட முடியாத அறிவை கண்டார். அவர் இதனை சில சூத்திரங்களாக்கி, எட்டு அங்க யோகமாக, எல்லோரும் உணரும் விதமாக மாற்றினார்.

பதஞ்சலி ஒரு சந்நியாசி என்பதை விட ஒரு விஞ்ஞானியாய் இருந்தார். 1800 யோக வகைகளை 200 யோக சூத்திரங்களாக அவர் வழங்கிய வழியே இன்று நடைமுறையில் உள்ளது. 'சூத்ரா' என்ற‌ பதம் இங்கே கயிறு அல்லது நூல் என்ற பொருளில் வழங்கப்படுகிறது. 200 சூத்திரங்களில் 1800 யோக வகைகளும் அடங்கும்படி ஒரு மாலையாக பதஞ்சலி தொடுத்தார். இதனால், ஒவ்வொரு நோக்கத்திற்காகவும் ஒவ்வொரு யோகாசனங்களை ஒருவர் செய்ய வேண்டிய நிலையிலிருந்து, ஏதாவது ஒரேயொரு யோகாசனம் மட்டுமே பயிற்சி செய்தாலே முழுமையான பலன் கிடைக்கும் என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறார்.

யோகாவின் வகைகள் (how many types of yoga in tamil)

சத்குரு:

உடல், மனம், உணர்வு, சக்தி என உங்கள் வாழ்க்கையில் நான்கு உண்மைகள்தான் உள்ளன. எனவே உங்களுக்கு நீங்கள் என்ன செய்துகொள்ள வேண்டும் என்று கருதுகிறீர்களோ அவை இந்த நான்கு தளங்களில் மட்டுமே நிகழமுடியும். நீங்கள் செய்ய விரும்புவதையெல்லாம் உங்கள் உடல் மூலமாகவும், உங்கள் மனம் மூலமாகவும், உங்கள் உணர்வுகள் மூலமாகவும், உங்கள் சக்திகள் மூலமாகத்தான் செய்ய முடியும்.

உணர்வுகளைப் பயன்படுத்தி உச்சநிலையை எட்டிவிட முடிந்தால் அதற்கு பக்தி யோகம் என்று பெயர். இது அன்பின் பாதை.

உங்கள் அறிவைப் பயன்படுத்தி இறைநிலையை எட்டமுயன்றால் அதற்கு ஞானயோகம் என்று பெயர். இது அறிவின் பாதை.

உங்கள் உடலைப் பயன்படுத்தி, செயல்களின் மூலமாக இறைநிலையை எட்ட முயன்றால் அதற்கு கர்மயோகம் என்று பெயர். அது செயல்களின் பாதை.

உங்கள் சக்திநிலைகளை மேம்படுத்தி இறைநிலைகளை எட்ட முயன்றால் அதற்கு கிரியா யோகம் என்று பெயர். அதற்கு உள்நிலை செயல் என்று பொருள்.

யோகா பற்றி அதிகம் கேட்கப்படும் கேள்வி பதில்கள் (Questions and Answers about Yoga in Tamil)

"உண்மையான நல்வாழ்வை உணர உள்நோக்கி திரும்புவதே ஒரே வழி. யோகா என்றால் மேலேயோ, வெளியேயோ பார்ப்பது அல்ல, உள்முகமாய் பார்ப்பது. விடுதலைக்கான ஒரே வழி உள்ளே இருக்கிறது" - சத்குரு

யோகா - உடற்பயிற்சி என்ன வித்தியாசம்?

யோகா என்பது உங்கள் உடலின் எடையையே உபயோகித்து பயிற்சி செய்வது. 6'×6' இடம் இருந்தால் நீங்கள் எங்கே இருந்தாலும் பயிற்சி செய்ய முடியும். பளுதூக்கி செய்யும் எந்த பயிற்சிகளுக்கும் இது நிகரானதே. அதே நேரத்தில் இது உங்கள் உள்ளுறுப்புகளுக்கு எந்த விதமான அழுத்தத்தையும் உண்டாக்காது. யோகாசனங்கள் செய்வதன் மூலம் தசைகள் உறுதியாவதுடன், உடலின் நெகிழும், வளைந்து கொடுக்கும் தன்மையையும் அதிகரிக்கிறது. யோகாசனங்கள் உங்கள் தசைகளுக்கு வலுவூட்டி உங்களை வலிமையுள்ளவராக மாற்றும் அதே நேரத்தில், நீங்கள் விவேகமுள்ளவராகவும் மாறுவீர்கள்.

யோகா செய்ய நேரமில்லையே, என்ன செய்வது?

கேள்வி: காலையில் சீக்கிரமாக எழுந்து சமைக்கவேண்டும். குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல தயார்படுத்த வேண்டும். அலுவலகம் செல்ல நானும் தயாராக வேண்டும். மாலையில் திரும்பி வந்தவுடன் குழந்தைகளை படிப்பதற்கு தயார்படுத்த வேண்டும். நாள் முழுவதும் இப்படி ஓயாமல் வேலை செய்து கொண்டிருக்கும் எனக்கு யோகா எப்படி பொருந்தும்?

சத்குரு:

உங்களுடைய குழந்தைகள், உங்களுடைய வேலைகள், இதர வேலைகள் கையாள்வதற்கான திறமை உங்களுக்கு இல்லாவிட்டால் உங்கள் செயல்களை நீங்கள் குறைத்துக் கொள்ள வேண்டும் அல்லது உங்களுடைய திறமையை அதிகரித்துக் கொள்ள முடியுமானால் அதை நீங்கள் செய்ய வேண்டும். நான் கற்றுத் தரும் யோகப் பயிற்சியை தினம் 25 நிமிடங்கள் நீங்கள் செய்தால் போதும். ஒருநாளில் பெருமளவு நேரத்தை நீங்கள் மிச்சப்படுத்துவீர்கள்.

ஈஷா யோகா பயிற்சியை மேற்கொண்ட பலரது அனுபவம் இது. இந்த பயிற்சியை 6லிருந்து 8 வாரங்கள் தொடர்ந்து செய்த ஒருசிலர் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் அலுவலகத்தில் அல்லது வேறு பணியில் இருக்கும்போது 8 மணி நேரத்தில் மற்றவர்கள் செய்யக்கூடிய செயலை மிக சாதாரணமாக 3லிருந்து 4 மணி நேரத்தில் செய்து முடிக்கிறார்கள்.

 5 நிமிட இலவச யோகப் பயிற்சிகள் 

அசைவ உணவு சாப்பிடுகிறேன். மது அருந்துகிறேன். நான் யோகா செய்யலாமா?

சத்குரு:

யோகா எதையும் தடை செய்வது கிடையாது. வாழ்வு பற்றிய ஆழமான புரிதல்தான் யோகா. போதைக்காகத்தானே குடிக்கிறீர்கள்? நீங்கள் உங்களுக்குள்ளேயே இயல்பாக ஒரு பரவசத்தை உருவாக்கிக்கொள்ள தெரிந்தால், புகை, மது போன்றவற்றை தேடமாட்டீர்கள் இல்லையா? நான் இதுவரை எந்த போதைப் பொருளையும் தொட்டது இல்லை. ஆனால், என் கண்களைப் பாருங்கள், நான் ஒரு நிரந்தர போதையிலேயே இருக்கிறேன். யோகிகளுக்கு மது, போதைப் பொருட்கள் என்பவை எல்லாம் சொற்பமானவை. காரணம், உயிர்சக்தியின் தீவிரத்தாலேயே அதைவிட ஆயிரம் மடங்கு போதையை உங்களுக்குள்ளேயே உருவாக்கிட எங்களால் முடியும். அதனால், வெறும் குடி எதற்கு? தெய்வீகத்தை பருகிட வாருங்கள்!

புத்தகம் பார்த்து யோகா செய்யலாமா?

சத்குரு:

ஒரு பெரும் புத்தகக் கடையினுள் நுழைந்தால், அங்கு நிச்சயம் 15 - 20 வகையான யோகப் புத்தகங்கள் இருக்கும். 7 நாளில் யோகா கற்பது எப்படி? 21 நாளில் யோகியாவது எப்படி?... புத்தகம் வழியாக யோகா கற்று, தனக்குத்தானே பெருமளவில் பாதிப்பு விளைவித்துக் கொண்டவர்கள் பலர். இப்பயிற்சிகள் மிக எளிமையாகத் தோன்றலாம். ஆனால், அது மிக நுட்பமான முறையில் செயல்படும் என்பதால், சரியான புரிதலோடு, முறையான வழிநடத்துதலோடு தான் அவற்றை பயிற்சி செய்யவேண்டும். இல்லையெனில், விளைவுகள் மிக மோசமாக இருக்கும். புத்தகத்தின் வாயிலாக ஊக்கம் பெறலாம், ஆனால், அவற்றைக் கொண்டு கற்பதோ, பயிற்சி செய்வதோ கூடாது.

மேலும் கேள்வி பதில்கள் இந்தப் பதிவில்.

எது யோகா இல்லை?(கட்டுக்கதைகளும் உண்மையும்)

கட்டுக்கதை 1: யோகா இந்து மதம் சார்ந்தது, தெரியுமா?

கட்டுக்கதை 2: உடலை கடினமாக வளைப்பதுதான் யோகா

கட்டுக்கதை 3: சிக்ஸ்-பேக் உடற்கட்டு வேண்டுமா? யோகா பெஸ்ட் வழி

கட்டுக்கதை 4: கடந்த 100 ஆண்டுகளில் மட்டுமே யோகா உலகெங்கும் பரவியிருக்கிறது.

கட்டுக்கதை 5: இசையுடன் யோகா - செம்ம காம்பினேஷன்!

யோகா பற்றிய இந்த கட்டுக்கதைகளுக்கு விடைகள் இங்கே. (yoga myths and facts)

யோகா பயிற்சிகள் - இவற்றை கவனிப்பது முக்கியம் (Yogasanas - Things to remember)

Question: யோகா செய்ய உணவுப் பழக்கவழக்கங்களில் ஏதேனும் மாற்றம் கொண்டு வரவேண்டுமா? (Food for Yoga in Tamil)

சத்குரு:

தேவையில்லை. ஆனால் சில உணவுக்குறிப்புகளைத் தருகிறோம். எப்படிப்பட்ட உணவை உட்கொள்வது சிறந்தது என்ற உணவுக்குறிப்புகளைத் தருகிறோம். இது யோகாவிற்காக மட்டுமல்ல. நன்றாக வாழ்வதற்காக. மிகவும் கடினமான உணவுப்பழக்கம் என்றெல்லாம் எதுவுமில்லை. ஆனால் தங்கள் உடலைப்பற்றிய விழிப்புணர்வை அவர்களுக்கு அதிகரிப்பதற்காக சில குறிப்புகளைத் தருகிறோம்.

உணவு என்பது உடலைப் பற்றியது. உடல் எப்படி விரும்புகிறதோ அப்படிபட்ட உணவை நீங்கள் உட்கொள்ளவேண்டும். உங்கள் சமூகம் எப்படி விரும்புகிறதோ, உங்கள் மனம் எப்படி விரும்புகிறதோ, உங்கள் மருத்துவர் எப்படி விரும்புகிறாரோ அப்படிப்பட்ட உணவை நீங்கள் உண்ணக்கூடாது. உடல் விரும்பும் உணவைத்தான் நீங்கள் உண்ண வேண்டும். மிகவும் கடினமான குறிப்புகளோ அல்லது நீங்கள் இதைத்தான் உண்ண வேண்டும் என்ற உத்தரவுகளோ இங்கு கிடையாது.

தினமும் யோகா செய்ய சரியான நேரம் எது?

சத்குரு:

இந்தியாவின் வெப்ப மண்டல பகுதிகளில் யோகா பரிணமித்ததால் நாம் எப்போதுமே காலை 8.30 மணிக்கு முன் அல்லது மாலை 4, 4.30 க்கு பிறகு யோகப் பயிற்சிகள் நிகழ வேண்டும் என்றோம்.

யோகா செய்யும்போது எப்படிப்பட்ட உடைகளை அணிவது?

சத்குரு:

துணியைத் தைக்கும்போது, சக்தியின் ஓட்டம் சற்று தடைபடுகிறது. ஆன்மீகப் பயிற்சிகள் செய்யும்போது இதை நாம் குறைக்க விரும்புகிறோம். அப்படியானால் நீங்களும் கோவணம் அணியத் துவங்கவேண்டும் என்று அர்த்தமில்லை, ஆனால் யோகப் பயிற்சிகள் செய்பவர்கள் விளையாட்டு வீரர்கள் அணிவதுபோல செயற்கையான (synthetic) துணி வகைகளை அணியக்கூடாது. உங்கள் துணிகள் இயற்கையாக இருப்பதே சிறந்தது. அதாவது பருத்தி அல்லது மூலப்பட்டுத் துணியாக இருக்கவேண்டும். இயற்கையான மூலப்பட்டு விலைமதிப்பானதாகவும், கிடைப்பதற்கு அரிதாகவும் இருப்பதால், இயற்கையான பருத்தித்துணியே சிறந்ததாக இருக்கும். கம்பளித் துணியையும் பயன்படுத்தலாம்.

யோகாவுக்கும் தியானத்திற்கும் என்ன வித்தியாசம்?

சத்குரு:

பொதுவாக கண்களை மூடி உட்கார்ந்தாலே தியானம் என்று சொல்கிறார்கள். ஆனால், கண்களை மூடி நீங்கள் செய்யக்கூடியவை பல - ஜபம், தவம், தாரணை, தியானம், சமாதி, சூன்யா என்பவை போக சிலர் முதுகை நேராக வைத்து உட்கார்ந்தபடியே தூங்குவதில்கூட வல்லவர்களாக இருக்கலாம். இதில் தியானம் என்பது யோகாவின் ஒரு அம்சம் மட்டுமே.

தியானம் என்பது நீங்கள் செய்யக்கூடிய ஒரு செயல் என்பதில்லை. அது ஒரு குறிப்பிட்ட தன்மைதானே தவிர, ஒரு செயல் அல்ல. நீங்கள் தியான நிலையில் அல்லது தியான தன்மையில் இருக்க முடியும், தியானம் செய்ய முடியாது.

ஈஷா கிரியா:

ஈஷா கிரியா என்பது பொய்மையில் இருந்து உண்மைக்கு இட்டுச்செல்லும் ஒரு எளிமையான, ஆனால் சக்திவாய்ந்த கருவி.-சத்குரு

ஈஷா கிரியா என்பது மிகவும் எளிமையான ஆனால் சக்தி வாய்ந்த பயிற்சியாகும். ஈஷா கிரியாவின் நோக்கமே, ஒவ்வொருவரையும், தன் உயிரின் மூலத்துடன் தொடர்பு கொள்ளச் செய்வதுதான். அதன் மூலம் ஒவ்வொருவரும் தன் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் தன் வாழ்வை அமைத்துக் கொள்ள முடியும். தினமும் ஈஷா கிரியா பயிற்சி செய்வதன் மூலம் உடல்நலம், உற்சாகம், அமைதி, நல்வாழ்வு போன்றவற்றைப் பெறமுடியும். இது, இன்றைய அவசர யுகத்தின் வாழ்க்கை முறைக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள சக்தி வாய்ந்த கருவி.

ஈஷா கிரியா - பாகம் 1

 

ஈஷா கிரியா - பாகம் 2