இந்த வார சத்குரு ஸ்பாட்டில் பாரம்பரிய ஹட யோகத்தை பற்றி பேசும் சத்குரு, சூரிய சந்திர சூழற்சி நம் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை விளக்கி, அதிலிருந்து விடுபடும் எளிய சூத்திரங்களையும் விளக்குகிறார். இந்த வார ஸ்பாட் தலையெழுத்தை நிர்ணயிக்கும் ஹட யோகமாய்... படித்து மகிழுங்கள்!


குரு பௌர்ணமி தினத்தில், இரண்டாவது வருடாந்திர ஹட யோகா ஆசிரியர் பயிற்சி வகுப்பை யோகா மையத்தில் நாம் தொடங்கினோம். அடுத்த 21 வாரங்களுக்கு தீவிர பயிற்சி பெறவும், பாரம்பரிய ஹட யோகாவிற்கு தங்களை பரிச்சயப்படுத்திக் கொள்ளவும், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருக்கும் 85 பேரை பார்க்க மிகவும் சந்தோஷமாக உள்ளது.

யோகா என்றால் பலபேருக்கு பல விஷயங்களாக இருக்கின்றது. ஆனால் நரகத்திற்குச் செல்வதை தவிர்க்க ஒரு வழி என்பது மட்டும் நிச்சயமான விஷயம். ஏனென்றால் உங்களை நரகத்திற்கு அனுப்பினாலும் ஹட யோகத்திற்கு பிறகு அதை சொர்க்கமாகவே பார்ப்பீர்கள். இதற்குபிறகு உங்களை யாராலும் சித்ரவதை செய்ய இயலாது. இந்த சுதந்திரம் மிகச் சிறியது என்று நினைத்துவிட வேண்டாம். உங்கள் உடல், மனம், சக்தி நிலைகளைக் கொண்டு வாழ்க்கையை உணர்வதற்கான ஒரு தளத்தை உருவாக்கும் அற்புத விஞ்ஞானம் ஹட யோகா. ஆனால் உங்கள் வாழ்க்கை அனுபவங்கள் எவ்வளவு ஆழமாக இருக்கின்றன என்பதுதான் உங்கள் முன் உள்ள கேள்வி.

உங்கள் ரசாயனத்தை ஏதோ ஒரு முறையில் மாற்றுவது என்பது அறிவுசார்ந்த ஒரு விஷயமாக இருக்காது. உங்கள் ரசாயனத்தை யோகா மூலமோ அல்லது போகா மூலமோ மாற்றினால் உங்களுக்கு இனிமையான அனுபவம் கிடைக்கும். ஆனால் இனிமை தேடுவது மட்டும் ஒரு அறிவார்ந்த விஷயமாக இருக்காது. வாழ்க்கையின் அனைத்து பரிமாணங்களையும் அனுபவமாக கைக் கொள்ளக்கூடிய ஒரு திறமையே ஹட. எந்தவொரு அனுபவமும் உங்கள் உடல் மனக் கட்டமைப்பை தகர்க்கவோ அல்லது உங்கள் சக்திநிலையைக் குலைக்கவோ முடியாத அளவிற்கு உருவாக்கப்பட்ட முறையே ஹட யோகா.

Sign Up for Monthly Updates from Isha

Summarized updates from Isha's monthly Magazine on Isha and Sadhguru available right in your mailbox.

No Spam. Cancel Anytime.

உடலின் இரு முக்கிய சூத்திரதாரிகளான சூரியன் மற்றும் சந்திரன் இடையே ஒரு இணக்கத்தை உருவாக்கும் முறையை ஹட என்கிறோம். நம் வாழ்வின் ஒவ்வொரு கணமும், நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் இந்த இரண்டு சக்திகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. ஆசனங்களை விடுங்கள், நடப்பது போன்ற எளிமையான விஷயத்தில் இருக்கும் உடலியக்க விதிகள் கூட ஒருவர் புரிந்து கொள்ள மிகவும் சிக்கலானவை.

உங்கள் காதிலுள்ள ஒரு துளி திரவத்தை எடுத்துவிட்டால், உங்களால் திடீரென நிற்க இயலாமல் போய்விடும். ஏனெனில், அத்திரவம் உங்கள் சமநிலையை தக்க வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் கால்கள் வலுவானவையாக இருக்கலாம், ஆனால் அதி வேகமாக சுழன்று, பயணம் செய்து கொண்டிருக்கும் இந்த கோள வடிவ கிரகத்தில் அவை நடப்பதென்பது பல்வேறு சக்திகளுடன் சம்பந்தம் உடையது.

ஹட யோகா என்பது இந்த சக்திகளுக்கு பணிவதன் மூலம், அந்த சக்திகளை பயன்படுத்தி உங்கள் வாழ்கை அனுபவத்தை உணர அல்லது வாழ்க்கையின் பெரும்பகுதி உங்களுக்கு கிடைக்க செய்வதற்கான ஒரு வழி. ஒவ்வொரு மனிதனின் தேடுதலும் அதுதான். நீங்கள் பணம், அறிவு, செல்வம், அன்பு இப்படி எதன் பின்னால் ஓடினாலும், அடிப்படையில் வாழ்க்கை என்னும் கனியின் பெரும்பகுதியைச் சுவைத்திடவே அனைவரும் விரும்புகின்றனர். முழுமையாக சுவைத்திட வேண்டும் என்றால், அதைச் செரிமானம் செய்யும் திறனும் உங்களுக்கு இருக்க வேண்டும். அது மிக முக்கியம்.

பாரம்பரிய ஹட யோகா என்பது உங்கள் உடல் மற்றும் மனத்தை தயார் செய்கிறது. அனைத்திற்கும் மேலாக உங்கள் சக்தி நிலையை பலப்படுத்தி, எப்பேர்பட்ட அனுபவத்தையும் தாங்கிக் கொள்ளும் திறத்தை வழங்குகிறது. நீங்கள் வாழ்க்கை என்று எதை அழைக்கிறீர்களோ அவற்றை கையாளும் திறன் படைத்ததாக உங்கள் சக்தி உடல் இருக்கும்.

இனிமையானதோ இனிமையற்றதோ, எது நிகழ்ந்தாலும் அவற்றை உங்கள் நலனுக்காகவே மாற்றும் திறன் கொண்ட உடல் கட்டமைப்பை உருவாக்குவதே ஹட யோகா. வாழ்க்கை உங்கள் மீது எதை வீசப் போகிறது என்று உங்களுக்கு தெரியாது. ஆனால் அதிலிருந்து நீங்கள் எதை உருவாக்கலாம் என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியும். இது நிகழ, உங்களுக்கு சரியான உடல், மனம், மற்றும் சக்தி நிலை தேவை. இவை இல்லாதபட்சத்தில், வாழ்வின் முறைகள் உங்களை முழுவதுமாக அழித்துவிட முடியும். மிகவும் நல்லவராக, இனிமையானவராக உங்களை நீங்களே நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் யாராவது ஏதாவது ஒன்று உங்களுக்கு செய்துவிட்டால், நீங்கள் நொறுங்கிப் போவீர்கள்.

ஹட என்பதன் இன்னொரு அர்த்தம் பிடிவாதம். நீங்கள் பிடிவாதமாய் இருக்கிறீர்கள், எதையும் சுலபமாய் விட்டுவிடும் ரகம் அல்ல. ஆனால் வேறு சிலர் இருக்கிறார்கள், அவர்கள் பாதையில் மலர்களை வீசினால் மட்டுமே தொடர்ந்து செல்வார்கள், அசிங்கத்தை வீசினால் ஓடி விடுவார்கள். ஆனால் நீங்கள் பிடிவாதமானவர் என்றால் வாழ்க்கையில் பூ, புழுதி என்று எதை வீசினாலும் பொருட்படுத்தாது எங்கு செல்ல வேண்டுமோ அங்கு செல்வீர்கள். இந்த உலகம் உங்கள் மேல் எதை வீசினாலும் அது உங்களை பாதிக்காது. நீங்கள் அதுபோன்ற மனிதராய் உருவாக வேண்டுமென்றால் ஹட யோகா ஒரு நல்ல முறை. உங்கள் விதியை தீர்மானித்து, அதை செயல்படுத்த ஹட யோகா ஒரு சக்தி வாய்ந்த கருவி.

Love & Grace