பதஞ்சலி முனியின் மகத்தான திறமைகளையும் அவர் இந்த உலகிற்கு யோகாவை எளிமைப்படுத்திக் கொடுத்ததை பற்றியும் விளக்குகிறார் சத்குரு...

Question: நீங்கள் யோகாவை ஓர் இருப்பு நிலை அல்லது உணர்வு நிலை என்று கூறுகிறீர்கள். பெரும்பாலானோர் 'நான் இன்று யோகா செய்யப் போகிறேன்' என்று அதை அவர்கள் செய்யும் பொருளாக பார்க்கிறார்கள். இவை இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன? பதஞ்சலி முனிவர் யோகாவை, தன்னுடைய யோக சூத்திரத்தின் ஆரம்பத்திலேயே “சித்த விருத்தி நிரோதா” என்று சமஸ்கிருதத்தில் கூறியுள்ளார். இது பற்றி தாங்கள் விளக்க முடியுமா?

சத்குரு:

யோகா என்பது ஒன்றிணைப்பதை குறிக்கும் ஓரு விசாலமான வார்த்தை. ஓன்றிணைக்க உதவும் எதுவும் யோகா என்று அழைக்கப்படும். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் இந்த எளிமையான சுவாசத்தில் இருந்து, அமர்தல், நடத்தல், உண்ணுதல் மற்றும் மனிதன் செய்யும் எந்த செயலையும் யோகாவாய் மாற்ற முடியும். நீங்கள் இப்போது உண்கிறீர்கள், அப்போது, நாம் அல்லாத ஓன்றை நம்முடைய ஓரு பகுதியாக மாற்றுகிறோம் என்ற விழிப்புணர்வு இருக்குமானால் பத்து நிமிடங்களுக்கு முன் நாம் அல்லாத ஒன்றை, நம்மோடு ஓன்றிணைக்கிறோம் என்பது உங்கள் அனுபவமாக இருக்குமானால், அப்போது, அதனை நீங்கள் “உண்ணும் யோகா” என்றழைக்கலாம்.

பதஞ்சலி வந்தபோது இந்த அளவிட முடியாத அறிவை கண்டார். ஆனால், எல்லாவற்றையும் ஒருவர் அறிந்துகொள்வது முடியாத காரியமாக இருந்தது. அதனால், அவர் இதனை சில சூத்திரங்களாகக் குறைத்து, எட்டு அங்க யோகமாக, எல்லோரும் உணரும் விதமாக மாற்றினார்.

யோகா என்ற வார்த்தை, பண்டைய காலங்களில் குறிப்பிட்ட ஒரு புரிதலோடு உபயோகப்படுத்தப்பட்டது. ஆனால் இன்று அது தளர்வான, அற்பமான பொருளில் உபயோகப்படுத்தப்படுகிறது. மேற்கு நாடுகளில் இன்று “தண்ணீர் யோகா, நாய் யோகா, பூனை யோகா” என்று பலதும் இருக்கின்றன. இது தவறான புரிதல். மேம்போக்கான யோகா மட்டுமே, மேற்கு நாடுகளுக்கு சென்றிருக்கிறது. யோகாவின் ஆத்மா அல்ல. இது மிகத் தீவிரமான பிரச்சினை. யோகாவை ஒரு பயிற்சி என எண்ணுவது, இறந்த குழந்தையைப் பெறுவதைப் போன்றது. அதில் உயிர் இருக்காது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உங்களுடைய முதுகுவலி மற்றும் தலைவலியில் இருந்து விடுதலை பெறுவதல்ல யோகாவின் நோக்கம். உதாரணத்திற்கு, விமானம் பற்றி அறியாத உங்களுக்கு நான் ஓரு விமானம் அளித்தால், நீங்கள் அதை நகருக்குள் ஓட்டுவீர்கள். ஆனால், அந்த இரு அசிங்கமான இறக்கைகள், விளக்கு கம்பங்கள் மீதும், மரங்கள் மீதும் இடிக்கக்கூடும். அதனால் இறகுகளை வெட்டிவிட்டு, உங்கள் விமானத்தை ஓட்டுவீர்கள். இது உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தலாம். ஆனால் விமானம் பற்றித் தெரிந்த ஓருவர் அதைக் கண்டு அழுவார். பல இடங்களில் யோகா செய்யும் விதங்களைப் பார்க்கும்போது, எனக்கும் அதே உணர்வு, அழும் உணர்வு வருகிறது. ஏனென்றால், அவர்கள் சிறகுகள் வெட்டப்பட்ட விமானங்களை ஓட்டுகிறார்கள்.

யோக சூத்திரங்கள்:

பதஞ்சலி - நவீன யோகாவின் தந்தை, Patanjali naveena yogavin thanthai

மனிதர்கள் 36 அல்லது 84 ஆசனங்களை செய்ய முயல்கிறார்கள். இப்படி, நீங்கள் பல ஆசனங்களை செய்யத் தேவையில்லை. ஓரே ஓரு ஆசனம் போதும். பதஞ்சலியைப் பற்றிக் கேட்டீர்கள். பெரும்பாலானோர் நினைப்பதைப் போல யோகாவின் மூலம் பதஞ்சலி அல்ல. அவர் வருவதற்கு முன்பே 1800 விதமான பள்ளிகள் உருவாகி, வளர்ந்து இருந்தன. அந்த நேரத்தில் 1800 விதமான யோகா, இந்தியாவில் இருந்தது.

தற்சமயம், மருத்துவ அறிவியலில் இது நிகழ்ந்து கொண்டுதானே இருக்கிறது? 30 வருடங்களுக்கு முன்னால் மருத்துவப் பரிசோதனை செய்ய, குடும்ப மருத்துவரை மட்டும் நாடினீர்கள். ஆனால், இன்று 6, 7 வகையான மருத்துவர்களை நாட வேண்டியிருக்கிறது. ஏனென்றால், உடம்பின் வெவ்வேறு பாகங்களுக்கு வெவ்வேறு மருத்துவர்கள் இருக்கிறார்கள்.

சில வருடங்களுக்கு முன் அட்லாண்டாவில் இருந்தபோது, கால்பந்து விளையாட்டில் என் கால்மூட்டில் காயம் ஏற்பட்டது. அதனால் காலில் துணிக்கட்டோடு நான் உரையாற்ற வேண்டி இருந்தது. அதன் முடிவில் ஒருவர் என்னிடம் வந்து, "நான் மூட்டு மருத்துவர். நான் உங்கள் மூட்டை பார்க்கட்டுமா," என்றார். நீங்கள் எலும்பு மருத்துவரா என்று கேட்டேன். இல்லை நான் மூட்டு மருத்துவர், என்றார். அவர் ஓரு நாளில் பல மூட்டு அறுவை சிகிச்சைகளை செய்வாராம். வெறும் மூட்டு மட்டும். நீங்கள் "வலது மூட்டா அல்லது இடது மூட்டா," என்று கேட்டேன்.

ஏற்கனவே, நாம் மருத்துவ பரிசோதனைக்காக 6 மருத்துவர்களிடம் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. மருத்துவத் துறை மென்மேலும் வளரும்போது, இன்னும் 100 மருத்துவர்கள் தேவைப்படுவார்கள். ஏனென்றால், ஓரு சுண்டு விரலை முழுமையாக அறிந்துகொள்ள ஒரு மருத்துவர் குழு தேவை. அது அத்தனை சிக்கலானது. உடம்பின் ஓவ்வொரு பகுதியையும் ஆராய்ந்தால், ஒவ்வொன்றும் ஒரு சிக்கலான கருவி என்பதை உணர்வீர்கள்.

நிபுணத்துவம் ஒரு நிலையைக் கடக்கும்போது, உங்கள் ஆரோக்கியத்தை பரிசோதனை செய்ய நீங்கள் 100 மருத்துவரைக் காண வேண்டியிருக்கும். அவ்வளவு மருத்துவர்களிடம் நேரம் பெறவே நீங்கள் ஒருவரை நியமிக்க வேண்டியிருக்கும். அவ்வளவு முட்டாள்தனமாக நிலைமை மாறிவிடும். இது யோகாவிலும் நடந்தது.

பதஞ்சலி வந்தபோது இந்த அளவிட முடியாத அறிவை கண்டார். ஆனால், எல்லாவற்றையும் ஒருவர் அறிந்துகொள்வது முடியாத காரியமாக இருந்தது. அதனால், அவர் இதனை சில சூத்திரங்களாகக் குறைத்து, எட்டு அங்க யோகமாக, எல்லோரும் உணரும் விதமாக மாற்றினார். 1800 யோக வகைகள் தவறானது அல்ல, ஆனால், நடைமுறை சாத்தியம் இல்லாதது.

சித்த விருத்தி நிரோதா

பதஞ்சலி, யோகாவை வரையறுத்து பல்வேறு வழிகளில் விவரித்தார். ஏனெனில், அவர் சந்நியாசி என்பதை விட ஒரு விஞ்ஞானியாய் இருந்தார். கணித முறைப்படி யோகாவை விவரித்தார். ஒரு சூத்திரம் என்பது ஒரு விதிமுறையை போன்றது. அவர் வெறுமனே “சித்த விருத்தி நிரோதா” என்றார்.

"புத்தி வேலை செய்வது நின்றால் நீங்கள் யோகாவில் இருக்கிறீர்கள்" என்பதே இதன் பொருள். உங்கள் புத்திசாலிதனத்தின் அடிப்படை, பிரித்துப் பார்ப்பதே. அது ஓரு கத்தி போன்ற கருவி. எதையும் பகுத்தறிந்து, கூறிட்டு அறிவதே அதன் வழி. பகுத்து அறிதல் மூலம், வாழ்வின் ஓரு கூறை அறியலாம். ஆனால், வாழ்வின் இயல்பை நீங்கள் அறிய முடியாது.

கூறிடுவதின் மூலம், உடல் கூறினை நீங்கள் அறியலாம். ஆனால், வாழ்வின் முழுமையை அறிய முடியாது. விழிப்புணர்வோடு நீங்கள் புத்தியின் செயல்பாட்டை நிறுத்தினால் - மருந்தின் மூலமாக அல்ல - உங்கள் புத்தியை உங்களால் பிடித்து வைக்க முடிந்து, அது எதையும் கூறுகளாக ஆக்காமல் இருந்தால், பிறகு அது இருக்கும் நிலையே 'நிரோதா' என்றார் பதஞ்சலி. அதாவது உங்கள் புத்தி செயலில் இல்லாமல், நீங்கள் முழு விழிப்புணர்வுடன் இருப்பீர்கள். இது நடந்தால், நீங்கள் யோகாவில் இருக்கீறிர்கள். ஏனென்றால் உலகைப் பகுக்காமல், நீங்கள் வாழ்வின் ஒத்திசைவோடு சுவாசிக்கும் ஒவ்வொரு மூச்சிலும், உலகின் எல்லாவற்றிலும் நீங்கள் ஓரு பகுதி என்பதை உணர்வீர்கள்.

குறிப்பு:

ஜூலை 9ம் தேதி, ஈஷா யோக மையத்தில் குரு பௌர்ணமி கொண்டாட்டம் நடைபெறவுள்ளது. ஆதியோகிக்கு அர்ப்பணிப்பாய், நமது நன்றியை அவருக்கு வெளிப்படுத்த இந்நாள் ஒரு நல்ல வாய்ப்பு. குருவின் அருளில், இத்தினத்தை கொண்டாடிட தங்களை அன்புடன் அழைக்கிறோம்.

மேலும் விபரங்களுக்கு: AnandaAlai.com/guru-purnima