கிரியா யோகா - ஒரு விளக்கம்
யோகத்தில் நான்கு பாதைகள் உள்ளன. அவை கர்ம யோகா, ஞான யோகா, கிரியா யோகா, பக்தி யோகா. இந்நான்கில், சக்தியைப் பயன்படுத்தி ஒரு நிலையை அடையும் கிரியா யோகாவின் சூட்சுமங்களை சத்குரு இந்தக் கட்டுரையில் விளக்குகிறார்.
யோகத்தில் நான்கு பாதைகள் உள்ளன. அவை கர்ம யோகா, ஞான யோகா, கிரியா யோகா, பக்தி யோகா. இந்நான்கில், சக்தியைப் பயன்படுத்தி ஒரு நிலையை அடையும் கிரியா யோகாவின் சூட்சுமங்களை சத்குரு இந்தக் கட்டுரையில் விளக்குகிறார்.
கிரியா என்றால் உள்நிலை செயல்பாடு என்று பொருள். உள்நிலை செயல்பாட்டில் உடல் மற்றும் மனத்தின் ஈடுபாடு கிடையாது. ஏனென்றால் உடலும், மனமும் இன்னமும் உங்களுக்கு வெளியாட்கள்தான். உங்கள் சக்திநிலையின் மூலம் ஒரு செயலைச் செய்ய, தேவையான அளவு நிபுணத்துவம் உங்களுக்கு இருந்தால், அது கிரியா. வெளிநிலையில் ஒரு செயல் செய்தால், அதன் பெயர் கர்மா. உள்நிலை செயல்பாட்டை கிரியா என்று அழைக்கிறோம். காலம், காலமாக கர்மா என்பது ஒருவருக்கு தளையாகவும், கிரியா என்பது ஒருவரை விடுவிப்பதாகவும் நம் புரிதலில் இருக்கிறது.
Subscribe
உங்கள் மனப்பான்மையிலும், எண்ணத்திலும் நீங்கள் ஏதேனும் மாற்றம் கொண்டுவர நினைத்தால், அது மற்றொரு விதத்தில் செல்ல நினைக்கிறது. ஏனென்றால், உங்கள் எண்ணம் இன்று ஒரு வழியில் செல்லலாம், நாளை வேறொருவர் வந்து, உங்களை ஆதிக்கம் செலுத்தும்போது அது மற்றொரு வழியில் செல்லும். அதே போலத்தான், உங்கள் உடலளவில் நீங்கள் என்ன செய்தாலும் அது வேலை செய்யாது. உங்கள் உடல் நன்றாக இருப்பதால், இன்று அதற்கு ஆசனங்கள் பிடிக்கிறது. நாளைக் காலை உங்கள் உடல் இறுக்கத்துடன் இருந்தால், நீங்கள் ஆசனங்களை வெறுப்பீர்கள்.
உங்கள் உணர்ச்சிகளும் நம்பத் தகுந்தவை அல்ல. எந்த கணத்திலும் அவை ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு தாவிவிட முடியும். ஆனால் உங்கள் சக்தி முற்றிலும் வேறு விதமான தன்மையுடையது. உங்கள் சக்தியுடன் நாம் குறிப்பிட்ட விதத்தில் வேலை செய்யத் துவங்கினால், உங்கள் வாழ்வில் ஆழம் சேர்வதை நீங்கள் கவனிக்க முடியும். திடீரென்று, உங்கள் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் ஒரு புதிய பார்வை ஏற்படுவதை நீங்கள் உணரலாம். ஏனெனில், உங்கள் உயிர் சக்தி வேறு விதத்தில் தூண்டப்பட்டு, மிக ஆழமாக தொடப்படுகிறது.
கிரியா யோகா, ஆன்மீகப் பாதையில் நடப்பதற்கான சக்தி வாய்ந்த ஒரு வழி. அதே நேரம், உங்கள் ஈடுபாடும் அதிகம் தேவைப்படும் ஒரு பாதை. இப்பாதைக்கு அத்தனை ஒழுக்கமும், அனைத்திலும் ஒருவித கச்சிதமும் தேவைப்படுகிறது.
இன்று பெரும்பாலானவர்களுக்கு, கிரியா யோகப் பாதையில் செல்வதற்குத் தேவையான உடலோ, மனமோ அல்லது உணர்ச்சி நிலையில் சமநிலையோ இருப்பதில்லை. சிறுவயதிலிருந்தே, மக்கள் சௌகரியமாக வாழ்ந்து பழகிவிட்டதே இதற்கு முக்கிய காரணம். சௌகரியம் என்றால் அது உடல்ரீதியான சௌகரியங்கள் மட்டுமல்ல. வசதியான ஒரு நாற்காலியில் அமர்ந்திருப்பது ஒரு தடையல்ல, ஆனால் உங்கள் உடலமைப்பு முழுவதும் எப்போதும் வசதியைத் தேடிக் கொண்டிருந்தால், அது மிகப் பெரிய தடையே. நீங்கள் தொடர்ந்து வசதியைத் தேடிக் கொண்டிருப்பவராய் இருந்தால், இதுபோன்ற மனம், இதுபோன்ற உணர்ச்சி கிரியா யோகாவுக்கு தகுந்தது அல்ல.
தன்னை உணர்தல் என்ற நிலையைத் தாண்டி செயல்பட நீங்கள் விரும்பினால் மட்டுமே உங்களுக்கு கிரியா யோகா முக்கியமானது. இந்த சிறையிலிருந்து எப்படியாவது தப்பித்து, ஞானோதயம் அடைந்தால் போதும் அல்லது முக்தி மட்டுமே போதும் என்பவராய் நீங்கள் இருந்தால், கிரியா யோகா பாதையில் நீங்கள் செல்ல வேண்டிய அவசியமில்லை. கிரியாவை சிறிய அளவில் பயன்படுத்தி கொண்டாலே போதும், அது மிகத் தீவிரமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
கிரியா யோகா பாதையில் நீங்கள் மிகத் தீவிரமாக பயணம் செய்தால், சரியான வழிகாட்டுதல் இல்லாமல் அதில் முதிர்ச்சியடைய சில பிறவிகள் தேவைப்படும். உயிருடன் இருக்கக் கூடிய யாரோ ஒருவர், உங்களுடன் சில செயல்களை செய்தால், உங்களுக்கு அது இந்தப் பிறவியிலேயே சாத்தியமாகும் வாய்ப்பு உள்ளது. அப்படி இல்லாத பட்சத்தில், கிரியா யோகா சற்று சுற்றானப் பாதையே. ஆனால் கிரியா யோகாவில், நீங்கள் தன்னை உணர்தலை மட்டும் நாடவில்லை, உயிரை உருவாக்கும் தொழில்நுட்பத்தையும் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்கள். உயிர் எப்படி உருவாகின்றது என்ற தொழில்நுட்பத்தை தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறீர்கள்; அதனாலேயே அதைக் கற்றுக் கொள்ள அத்தனைக் காலம் பிடிக்கிறது.