யோகா என்ற வார்த்தை பெரும்பான்மையான மக்கள் மத்தியில் உடற்பயிற்சி என்றுதான் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. ஆனால், யோகிகளும் ஞானிகளும் மனித உடலின் அமைப்பையும் கூறுகளையும் உள்நிலையில் உணர்ந்து, யோக சூத்திரங்களை உருவாக்கியுள்ளனர். அப்படிப்பட்ட யோகாவின் ஒரு அம்சம்தான் 'உபயோகா'. உபயோகாவைப் பற்றி சத்குரு அளிக்கும் ஆழமான விளக்கங்கள் இங்கே!

சத்குரு:

இந்திய மொழிகளில், உபயோகா என்ற வார்த்தை, துரதிஷ்டவசமாக உபயோகம் என்று பொருள் கொள்ளப்படுகிறது. உப - என்றால் துணை, எனவே உபயோகா என்றால், துணை-யோகா அல்லது 'அரை(பாதி) யோகா' என்று பொருள். அதாவது, இப்பிரபஞ்சத்தின் மூலத்திற்குள் உறிஞ்சப்படுவதற்கு தயாராக இல்லாத, அதே சமயத்தில் பொருள் வாழ்க்கையில் தொலைந்து போக விரும்பாத மனிதருக்காக இந்த உபயோகா! அப்படிப்பட்ட ஆசைகளோ நோக்கங்களோ இல்லாதவருக்கு இது தேவையில்லை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
உபயோகா என்பது, ஒருவரின் ஆன்மீக பரிமாணத்தில் அதிகம் சார்ந்திராமல், உடல்நிலை, மனநிலை மற்றும் சக்திநிலையில் சார்ந்துள்ளது.

கால மற்றங்களில், மொழிகளின் உபயோகத்தினால் இந்த உபயோகா என்ற வார்த்தை உபயோகமான யோகா அல்லது உபயோகமான செயல் என்று மாறிவிட்டது. அது உபயோகமானதுதான், அதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் அதை அப்படி அணுகக் கூடாது. எந்த ஒன்றையும், அதன் பலனுக்காக அணுகுவது சரியான அணுகுமுறை அல்ல, அதையும் தாண்டி அதற்கு பல பரிமாணங்கள் இருக்கக்கூடும். அதை எப்படி பயன்படுத்தி கொள்ளலாம் என்ற மனப்பான்மையை நீங்கள் மாற்றினால், அது உங்களுக்கு பலனளிக்கக் கூடியதாக மட்டுமல்லாமல், உங்களின் அடிப்படை அம்சத்தையே மாற்றியமைத்துவிடும்.

உபயோகா என்பது, ஒருவரின் ஆன்மீக பரிமாணத்தில் அதிகம் சார்ந்திராமல், உடல்நிலை, மனநிலை மற்றும் சக்திநிலையில் சார்ந்துள்ளது. ஒருவர் முழுமையான வாழ்க்கை வாழ்வதற்கான ஒரு வழிமுறையாகும். உடல்நிலை என்று நான் குறிப்பிடும்போது, அதில் மனநிலையும், உணர்ச்சிநிலையும் சேர்த்துதான் குறிப்பிடுகிறேன். சிலர் யோகவை வெறுமனே கடுமையான உடற்பயிற்சி போல செய்வதற்கு பதிலாக, உபயோகா செய்யலாம். ஏனென்றால் அது ஒரு சக்திவாய்ந்த வழிமுறை. அதனால் ஈர்க்கப்பட்ட பிறகு வேண்டுமானால், அவர்கள் யோகாவில் ஈடுபடலாம்.

நீங்கள் இரவு உறங்கும் போது, தட்டையான நிலையில் படுத்து அசைவில்லாமல் இருக்கிறீர்கள். அப்போது உங்கள் சக்திநிலையிலும், மூட்டு இணைப்புகளிலும் ஒரு செயலின்மை உருவாகிறது. அதனால் இயல்பான நிலையைவிட, உங்கள் மூட்டுக்களில் உயவுத்தன்மை(lubrication) இல்லாமல் போகிறது. அப்படி அந்த உயவுத்தன்மை இல்லாமல் உங்கள் மூட்டுக்களை நீங்கள் நகர்த்தினால், அது அதிக நாட்களுக்கு தாங்காது. ஒருவர், எந்த மாதிரியான மூட்டு இணைப்புகளைக் கொண்டுள்ளார் என்பதைப் பொறுத்தே உடல்நிலையில் விடுதலை என்பதற்கு வாய்ப்புள்ளது. உடலின் நாடிகள், இந்த மூட்டுப் பகுதிகளில் மட்டும் ஒரு குறிப்பிட்ட விதமாக இயங்குவதால், அனைத்து மூட்டுக்களும் சக்தியின் சேகரிப்பு மையங்கள் போன்று உள்ளன. இந்த உபயோகாவின் குறிப்பிட்ட அம்சம் மூட்டு இணைப்புகளில் உயவுத் தன்மையை வழங்குவதோடு சக்தி முனைகளையும் இயக்கச் செய்வதால் உடலின் மற்ற சக்தி மண்டலங்களும் செயல்படத் துவங்குகின்றன.

இலவச உப-யோகா பயிற்சிகளை ஆன்லைனில் கற்றுக்கொள்ள: AnandaAlai.com/YogaDay

அடுத்த வாரம்...

நீங்க ஜிம்முக்குப் போறீங்களா?! இனிமேல் அவ்வளவு தூரம் போகத் தேவையில்லை. 'அங்கமர்தனா' பற்றி தெரிந்துகொண்டால், அது ஏன் என்று உங்களுக்குப் புரிந்துவிடும். அடுத்த வாரம், அங்கமர்தனா பற்றி சத்குரு பேசுகிறார்.

வகுப்பைப் பற்றிய விபரங்களுக்கு