கர்ம யோகம் என்றால் என்ன?
யோகாவின் நான்கு பாதைகளில் கர்ம யோகம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கர்ம யோகம் என்றால் என்ன? கர்மாவிற்கும் கர்ம யோகாவிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? இவற்றை தெளிவாக விளக்குகிறது இக்கட்டுரை...
யோகாவின் நான்கு பாதைகளில் கர்ம யோகம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கர்ம யோகம் என்றால் என்ன? கர்மாவிற்கும் கர்ம யோகாவிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? இவற்றை தெளிவாக விளக்குகிறது இக்கட்டுரை...
சத்குரு:
கர்மயோகம் என்றால் சேவையா?
பலரும் கர்மயோகம் என்றால் சேவை செய்வதென எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், கர்மயோகம் என்பது, நீங்கள் சேகரித்து வைத்திருக்கும் பல பதிவுகளை நீக்குவது. ஏதேனும் ஒரு செயலில் உங்களை மகிழ்ச்சியாய் நீங்கள் ஈடுபடுத்திக் கொள்ளமுடிந்தால் அதுவே கர்மயோகம்.
Subscribe
கடும் முயற்சியுடன் ஒன்றை நீங்கள் மேற்கொண்டால் அது கர்மம் மட்டும்தான், அதில் யோகா இருக்காது. பொதுவாகவே, நீங்கள் செய்கிற பல்வேறு செயல்கள் மூலமாகத்தான் வாழ்க்கையில் சிக்கிப் போய் பல பிணைப்புகளுக்கு ஆளாகிறீர்கள். ஆனால், செயலே உங்களை பிணைப்பதற்குப் பதிலாக உங்கள் விடுதலைக்கு வழியாய் இருந்தால் அதுதான் கர்மயோகம்.
நீங்கள் வேலை பார்த்தாலும் சரி, வீதியில் நடந்தாலும் சரி அல்லது யாருடனாவது பேசிக் கொண்டிருந்தாலும் சரி, நீங்கள் என்ன செயல் செய்கிறீர்கள் என்பது முக்கியமில்லை. ஒரு காரியத்தை அதன் தேவை கருதி மட்டுமே செய்கிறீர்கள். அது உங்களுக்கு ஒரு பொருட்டாக இல்லை. ஆனாலும், உங்கள் வாழ்க்கையே அதுதான் என்று நினைக்கத்தக்க தீவிரத்துடன் நீங்கள் செய்கிறீர்கள் என்றால், அந்தச் செயல் உங்களுக்கு விடுதலை தருவதாக இருக்கும்.
தியானலிங்கத்தின் போது
நாம் தியானலிங்கத்தை உருவாக்கிக் கொண்டிருந்தபோது, அதில் பலரும் வெகுதீவிரமாக ஈடுபட்டார்கள். அவர்கள் எல்லோருமே, ‘‘சத்குரு இதை செய்துமுடிக்க எண்ணுகிறார். இந்த வேலையை முடித்துவிடலாம். பின்னர் ஓய்வெடுக்கலாம்,’’ எனும் எண்ணத்தில் உழைத்தார்கள். வீடு வீடாகச் செல்வது, நிதி கேட்பது, தேவையான உதவிகளைப் பெறுவது என எல்லாவற்றையும் செய்தார்கள். தியானலிங்கம் உருவானதும் அவர்கள் ‘‘அப்பாடா’’ என்று மூச்சு விடுவதற்கு முன்னர், நான் புதிதாக பத்து திட்டங்களை அறிவித்தேன். இத்தகைய திட்டங்களை நான் தொடர்ந்து தந்து கொண்டேயிருப்பேன். ஏனென்றால், தங்கள் நிறைவு, விருப்பு, வெறுப்பு போன்றவை பற்றிய கவலையில்லாமல் இத்தகைய செயல்களில் தொடர்ந்து ஈடுபடவேண்டும்.
எப்படியும் அவர்கள் வளர்ச்சிக்கான செயல்களில் இறங்குகிறார்கள். அந்தச் செயல் எல்லோருக்கும் பயன்தரும் செயலாக அமையட்டுமே! உங்களுக்கு எவ்விதத்திலும் பொருட்டேயில்லாத காரியத்தில் முழு ஈடுபாட்டுடன் இறங்குவது, உங்கள் கர்மவினையின் கட்டமைப்பை உடைக்கும்.
குர்ஜீஃபின் செயல்
பல ஞானிகள் இத்தகைய செயல்களைத் தந்தபடி இருந்ததுண்டு. குர்ஜீஃப், ஐரோப்பாவில் தன் மையங்களைத் தொடங்கியபோது ஐரோப்பாவின் மேல்மக்கள் அவரிடம் வந்தார்கள். அவர்களிடம் மண்வெட்டியையும், கடப்பாறைகளையும் கொடுத்து ‘‘குழிகள் வெட்டுங்கள்’’ என்றார்.
அவர்கள் அத்தகைய வேலையை செய்து பழகியதில்லை. எனவே, கொளுத்தும் வெயிலில் நின்று குழிகள் வெட்டியதில் கொப்புளங்கள் உருவாகிவிட்டன. குர்ஜீஃப் அங்கேயே நின்று வேலை வாங்கிக் கொண்டிருந்தார். அவர்களுக்கோ கடும் பசி. ஆனாலும், குரு சொன்ன வேலையை விடாமல் செய்து கொண்டே இருந்தார்கள். மாலை மங்கி இரவும் வந்தது. குர்ஜீஃப் கடிகாரத்தைப் பார்த்துச் சொன்னார். ‘‘இரவு ஏழு மணியாகிவிட்டது. எல்லோரும் வெட்டிய குழிகளை மூடிவிட்டு வாருங்கள். நாம் சாப்பிடப் போகலாம்.”
'கர்மம்' என்றால்...
‘கர்மம்’ என்றால் செயல். அது யோகாவாக மாறவேண்டுமென்றால், அந்தச் செயல் உங்களுக்கு விடுதலை தருவதாக இருக்க வேண்டும். உங்களுக்கு சம்பந்தமே இல்லாத வேலையில் முழு ஈடுபாட்டுடன் நீங்கள் இறங்குவதுதான் விடுதலைக்கான வழி. அந்த வேலை உங்களை பிணைப்பதாக ஆகுமென்றால், அது ‘கர்மம்’. எனவே, நீங்கள் எவ்வளவு வேலை செய்கிறீர்கள் என்பது பொருட்டல்ல. எப்படி செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே எல்லாம் அமைகிறது.
முக்கிமுணகி வேலை செய்தால் அது கர்மா. மகிழ்ச்சியும், நன்மையுமாய் உங்கள் வேலை வெளிப்பட்டால் அது கர்மயோகம்.
ஆன்மீக சாதனையில் ஈடுபடுவதற்கு செயல் வேண்டுமா என்று சிலர் கேட்பார்கள். செயல் கடந்த நிலைக்கு செல்வதற்குத்தான் யோகா. ஆனால், பலருக்கும் அது சாத்தியமில்லை. செயல் இழந்த நிலை என்பது வழுக்குகிறப் பாறை. மிக எளிமையானது அதுதான், மிக கடினமானதும் அதுதான். அதற்கோர் ஊன்றுகோல் தேவை. அந்த ஊன்றுகோல் தான் கர்மயோகம். அவர்களின் ஆன்மீக வழிக்கு கர்மயோகம் உறுதுணையாய் இருக்கிறது.