ஞானயோகா - புத்திசாலிகளுக்கு மட்டும்!
யோகத்தில் அடிப்படையாக நான்கு பாதைகள் உள்ளன. அவை பக்தி, கர்மா, கிரியா, ஞானம். பக்தி சரி, கிரியா சரி, ஞான யோகா என்றால் என்ன என்கிறீர்களா? இதோ சத்குரு இந்தக் கட்டுரையில் விளக்குகிறார்...
யோகத்தில் அடிப்படையாக நான்கு பாதைகள் உள்ளன. அவை பக்தி, கர்மா, கிரியா, ஞானம். பக்தி சரி, கிரியா சரி, ஞான யோகா என்றால் என்ன என்கிறீர்களா? இதோ சத்குரு இந்தக் கட்டுரையில் விளக்குகிறார்...
சத்குரு:
Subscribe
ஞானம் என்றால் "அறிந்துகொள்வது" என்று அர்த்தம், அனைத்தையும் தத்துவமயமாக்குவது அல்ல. ஆனால் துரதிருஷ்டவசமாக தத்துவம் பேசுவதுதான் இன்று ஞானயோகம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. அடிப்படையில், நீங்கள் ஞானயோகத்தைப் பின்பற்ற விரும்புபவராக இருந்தால், உங்களிடம் அதீத விழிப்புடன் செயல்படும் கூர்மையான புத்தி இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும் உங்கள் புத்தியை நீங்கள் கூர் தீட்ட வேண்டும். தொட்டால் கிழித்துவிடும் அளவிற்கு அது கூர்மையாக ஆக வேண்டும். அதன் கவனத்தில் இருந்து எதுவும் தப்பாது, எல்லாவற்றையுமே அது துளைத்து விடும் - ஆனால் அது எதனோடும் ஒட்டாது நிலையில் அதனை வைத்திருக்க வேண்டும்.
ஞான யோகத்தின் வழியில் செல்ல எத்தனிக்கும் மதி இப்படித்தான் இருக்க வேண்டும். ஞான யோகத்தில் செல்கின்ற அறிவு மிகக் கூர்மையாக இருக்கும், ஆனால் சுற்றி என்ன நடந்தாலும், எது நடந்தாலும், அதனால் அது பாதிக்கப்படாது. கடவுளே வந்து எதிரில் நின்றாலும், அவரையும் கூறாக்கி பகுத்து பார்க்க வேண்டும், அவரது ரத்தம் கூட உங்களை பாதிக்கக் கூடாது. இந்தக் கத்தி எப்போதும் சுத்தமாக இருக்கும் - தன் அறிவை மழுங்கடிக்கும் எதனையும் அது சேர்த்துக் கொள்ளாது. இதுதான் ஞானம்.
உங்கள் புத்தி இப்படி இருக்குமானால், இயல்பாகவே அது வாழ்க்கையின் செயல்பாடுகளை ஊடுறுவி, எது உண்மை, எது உண்மையில்லை என்பதை தெளிவாகக் காட்டிவிடும். ஆனால், இன்று மக்கள், "இது அப்படித்தான், அது இப்படித்தான்", என்று அலட்சியமாக தீர்மானங்கள் எடுத்துவிடுகின்றனர். தத்துவங்களை உருவாக்கி விடுகின்றனர். வெகு சாதாரணமாக "எல்லாமே மாயை, எல்லாம் வெறும் கற்பனை, கவலை எதற்கு?" என்று வேதாந்தம் பேசுகின்றனர். இது தங்களைத் தாங்களே தேற்றிக் கொள்ளும் முயற்சி மட்டும்தான். உண்மையில் மாயை தன் கைவரிசையை அவர்களிடம் காட்டும்போது, அவர்களது எல்லா தத்துவங்களும் பஞ்சாகப் பறந்துவிடும்.
இது விவேகானந்தரைப் போன்ற உயர்ந்த மனிதர்களுக்கும் நடந்துள்ளது. விவேகானந்தர் அமெரிக்காவிற்கு 1895ல் சென்றார். அந்தக் காலகட்டத்தில், ‘யோகி’ என்று அறியப்பட்டு, பெரும் சலசலப்பு ஏற்படுத்திய முதல் நபர் அவர்தான். எங்கு பேசும்போதும் திடகாத்திரமாக, "எல்லாமே மாயை. எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். நீங்கள் அனுபவத்தில் உணரும் இவ்வுலகம் முழுவதும் கூடக் கற்பனைதான்" என்று முழங்கினார். ஒருமுறை அவர் தன் இரண்டு சீடர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தபோது, ‘ரேபிஸ்’ என்ற வெறி நோயால் பாதிக்கப்பட்ட குரங்கு ஒன்று அவரைத் துரத்தத் துவங்கியது. இதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா என்று தெரியவில்லை - வெறிபிடித்த குரங்கிற்கு, இரண்டு கை இரண்டு கால் இருப்பதாகத் தோன்றாது, ஆயிரம் கை ஆயிரம் கால் இருப்பது போல அது ஆவேசமாக செயல்படும். இந்த வெறிபிடித்த குரங்கு அவரை நோக்கி முழு வேகத்துடன் பாய்ந்தது. விவேகானந்தர் அலறி அடித்து ஓடத்துவங்கினார். துரத்த ஆரம்பித்த அக்குரங்கு வேறேதோ ஒன்றால் கவரப்பட்டு அதன் பின்னே சென்றுவிட்டது.
விவேகானந்தர் ஓடுவதை நிறுத்தினார், தான் இதுவரை போதித்துவந்த "மாயை" தனக்கே வேலை செய்யாமல் போனதை உணர்ந்தார். "குரங்கும் மாயைதான், குரங்கின் வெறியும் மாயைதான். குரங்கு என்னை கடிக்க வந்ததும், மாயைதான். நான் ஏன் இப்படி ஓடினேன்?" என்று அவருக்கு கேள்வி எழுந்தது. இது அவரை பெரிதும் பாதித்தது. அப்போதிலிருந்து, அவர் முன்போல் இல்லை. திடீரென்று சற்றே அடங்கிப்போனார். சில வேலைகளைச் செய்வதற்காக அவரை ஒரு கருவியாக அவரது குரு பயன்படுத்தினார். விவேகானந்தரும் தன் வேலையை, தான் செய்ய வேண்டியவற்றை சிறப்பாகச் செய்து வந்தார் என்றாலும், திடீரென்று, தான் ஒன்றுமற்று வெறுமையாய் இருப்பதை உணர்ந்தார்.
எனவே, மாயை பற்றிப் பேசுவதோ, படைத்தவனைப் பற்றிப் பேசுவதோ, படைப்பைப் பற்றி பேசுவதோ, "உலகம் இது போல, அது போல" என்று நம்புவதோ ஞானம் அல்ல. ஞான யோகிகளுக்கு எதையும் நம்பவோ அல்லது எதனோடும் அடையாளம் ஏற்படுத்திக் கொள்ளவோ இடமில்லை. அப்படிச் செய்தால், அக்கணத்திலேயே, தங்கள் புத்தியின் கூர்மையையும், திறனையும் அவர்கள் இழந்துவிடுவார்கள். துரதிருஷ்டவசமாக, இன்று ஞானத்தின் பெயரில், "நான் ஆத்மா, நான் பரமாத்மா" என்று பலவற்றை மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பிரபஞ்சத்தின் கட்டமைப்பு, ஆத்மாவின் வடிவம்-உருவம், பிரபஞ்சத்தின் பிடியினின்று ஆத்மா எப்படி விடுபடும், என்பதையெல்லாம் மக்கள் புத்தகங்களில் படிக்கிறார்கள். இப்படிப் படித்துத் ‘தெரிந்து’ கொள்வது ஞானயோதயம் அல்ல. இது வெறும் நம்பிக்கைதான். ஞான யோகத்தின் பாதையில் நடப்பவர்களுக்கு எதிலும் எதைப்பற்றியும் ‘நம்பிக்கை’ கிடையாது, ‘அவநம்பிக்கை’யும் கிடையாது. அவர்களைப் பொறுத்தவரை, "எனக்கு என்ன தெரியுமோ, அதுவே எனக்கு தெரியும்; எனக்கு என்ன தெரியாதோ அது எனக்கு தெரியாது" என்கிற நிலையிலேயே இருக்கிறார்கள். இதுதான் ஞானம்.
100% ஞான யோகத்தின் வழியில் செல்ல வெகு சிலரால் மட்டுமே முடியும். ஞான யோகத்தின் பாதையில் ‘என்ன நடக்கிறதென்றே’ பெரும்பாலான மக்களுக்குப் புரியாது. வெகு சிலரால் மட்டுமே அதனை புரிந்துக் கொள்ளமுடியும். ஞான யோகத்தை அதன் முழுமையில் கடைபிடிப்பதற்குத் தேவையான புத்திசாலித்தனம் உள்ளவர்களைப் பார்ப்பதே அரிது. இந்தப் பாதையை மேற்கொள்வதற்கு பெருமளவில் ஆயத்தம் தேவைப்படும். காரணம், சக்தி அளவிலும், உணர்ச்சி நிலையிலும் எழுச்சி ஏற்படுத்துவது கூட மிக எளிது. ஆனால், மனதை ஒரு நிலையிலிருந்து, அடுத்த நிலைக்கு நகர்த்துவது அத்தனை சுலபம் அல்ல. அதற்கு நிறைய நேரம் செலவிட நேரிடும். ஏனென்றால், மனம் தந்திரம் நிறைந்தது. பல சூழ்ச்சிகளை செயல்படுத்த வல்லது. உணர்ச்சிகளும் சக்தியும் அப்படியல்ல. உணர்ச்சிகள் எளிமையானவை; சக்திநிலையும் நேரிடையானது, குழப்பமற்றது - ஏதேனும் நடக்கும், அல்லது ஒன்றுமே நடக்காது. ஆனால், மனம் அப்படியல்ல. அது ஆயிரமாயிரம் மாயத் தோற்றங்களை உருவாக்கும். அவற்றை எல்லாம் வெட்டி வீழ்த்துவதற்குள், எங்கிருக்கிறோம், முன்னேறுகிறோமா, பின்னடைகிறோமா என ஒன்றும் புரியாது. அதனால் ஞான யோகத்தை உங்கள் பாதையின் ஒரு பகுதியாக வைத்துக் கொள்வது தவறல்ல, ஆனால் ஞானயோகத்தை அதன் முழுமையில் பின்பற்றுவது வெகு சிலரால் மட்டுமே முடியும். மற்றவர்கள் அப்பாதையில் தொலைந்து போகும் அபாயம் உள்ளது.