பொருளடக்கம்
1. ஆதிசங்கரர் - ஓர் இளம்மேதை
2. ஆதிசங்கரரின் அசாதாரண குரு
3. ஆதிசங்கரரும் பத்ரிநாத் கோவிலும்
4. ஆதிசங்கரருடைய தாயின் மரணம்
5. ஆதிசங்கரர் எப்படி ஒரு இறந்த அரசனின் உடலுக்குள் சென்றார்
6. ஆதிசங்கரர் தனது சீடர்களுக்கு நடைமுறைப் பாடம் ஒன்றைக் கற்பிக்கிறார்
7. ஆதிசங்கரரின் மரணம்
8. ஆதிசங்கரரை ஒரு மகத்தான மனிதராக்குவது எது
9. மாயை குறித்த ஆதிசங்கரரின் போதனைகள் – சத்குரு தெளிவுபடுத்துகிறார்.
10. ஆதிசங்கரரின் போதனைகள் – படைப்பும் படைப்பவரும் ஒன்றே
11. இன்றைய உலகத்தில் ஆதிசங்கரரின் தொடர்புடைமை
12. ஆதிசங்கரரின் ஸ்தோத்திரங்கள்

ஆதிசங்கரர் - ஓர் இளம்மேதை

சத்குரு: ஆதிசங்கரர் அறிவுநிலையில் ஒரு பிரம்மாண்டம், மொழியியலின் மேதை, அனைத்துக்கும் மேல், ஒரு ஆன்மீக ஒளி மற்றும் பாரதத்தின் பெருமை. இளம் வயதிலேயே அவர் வெளிப்படுத்திய விவேகமும் ஞானமும் அவரை மனிதகுலத்திற்கான ஒளி விளக்காக உருவாக்கியது.

அறிவார்ந்த தெளிவுடன் அவர் தன்னையே வெளிப்படுத்தியதும், பேரார்வமும், சக்தியுமாக அவர் தேசமெங்கும் அதைப் பரப்பியதும்தான் ஆதிசங்கரரை தனித்தோங்கி நிற்கச் செய்கிறது.

அவர் ஒரு பிறவி மேதையாகவும், ஏறக்குறைய அதி உன்னத மனிதத் திறன்களுடன் ஒரு அசாதாரணமான அறிவாளியாகவும் இருந்தார். அவரது இரண்டு வயதில், அவரால் சமஸ்கிருதத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் முடிந்தது. நான்கு வயதாக இருந்தபோது, எல்லா வேதங்களையும் அவரால் ஒப்புவிக்கமுடிந்தது, மற்றும் பன்னிரண்டு வயதில், அவர் சன்னியாசம் மேற்கொண்டு, தனது வீட்டைத் துறந்து சென்றார். அவ்வளவு இளம் வயதிலேயே, அவர் சீடர்களைத் திரட்டிக்கொண்டு, ஆன்மீக அறிவியலை மறுநிர்மாணம் செய்வதற்காக நாடெங்கும் நடைப்பயணம் செய்யத் தொடங்கினார்.

அவர் முப்பத்து இரண்டு வயதில் தன் உடலைத் துறந்தார், ஆனால் பன்னிரண்டு வயதிலிருந்து முப்பத்து இரண்டு வயது வரைக்கும் அந்த இருபது வருடங்களில், அவர் இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாக, வடக்கிலிருந்து தெற்கும், கிழக்கிலிருந்து மேற்கும், கேரளாவிலிருந்து பத்ரிநாத் வரை சென்று திரும்பியும், எல்லா திசைகளிலும் எல்லா இடங்களுக்கும் பயணம் செய்துகொண்டிருந்தார். வாழ்க்கையின் குறுகிய கால அவகாசத்தில் அவ்வளவு நடைப்பயணம் செய்வதற்கு, அந்த மனிதர் உண்மையிலேயே விரைவான நடையை உடையவராக இருந்திருக்க வேண்டும். இதற்கிடையில், அவர் ஆயிரக்கணக்கான பக்கங்களைக் கொண்ட இலக்கியமும் படைத்தார்.

ஆதிசங்கரரின் அசாதாரணமான குரு

ஆதிசங்கரருக்கான வழிகாட்டல், கௌடபாதரிடம் இருந்து வந்தது. அவரது வழிகாட்டலின் கீழ், சங்கரர் இந்த நம்புதற்கரிய வேலைகளைச் செய்துகொண்டிருந்தார். கௌடபாதர் நமது பாரம்பரியத்தின் ஒரு பாகமாகவே இருந்தார். அவர் ஒரு அசாதாரணமான குருவாக இருந்தார், ஆனால் அவரது போதனைகள் ஒருபோதும் எழுதப்படவில்லை. அது எழுதப்படாமல் இருப்பதை அவர் உறுதி செய்துகொண்டார். அவர் ஆயிரக்கணக்கான மக்களுக்குக் கற்றுக்கொடுத்திருக்க வேண்டும், ஆனால் பதினைந்திலிருந்து இருபது சிறப்பான நபர்களை உருவாக்கினார். இவர்கள் இந்த நாட்டின் ஆன்மீக அறிவியலை மிகுந்த ஆரவாரமின்றி, எந்த சப்தமும் இல்லாமல், வேறு எந்தப் புதிய மதத்தையும் தொடங்காமல் மறு நிர்மாணம் செய்தனர். பல வழிகளிலும், ஈஷாவின் பணிகளிலும்கூட அதுதான் நோக்கமாக இருந்துவந்துள்ளது – ஒரு புதிய மதத்தை அல்லது ஒரு புதிய வேத நூலை உருவாக்காமல், ஆனால் ஆன்மீக அறிவியல்களை ஒரு வாழ்க்கை முறையாக, ஒரு மனிதருக்குள் பதியவைத்து நிர்மாணம் செய்வது.

ஆதிசங்கரரும், பத்ரிநாத் ஆலயமும்

பத்ரிநாத் வரலாற்று முக்கியத்துவமானது ஏனென்றால் இங்கிருக்கும் ஆலயம் ஆதிசங்கரரால் நிறுவப்பட்டது. அவரது பிறந்த மண்ணின் மக்களையே அவர் விரும்பியவாறு உருவாக்கம் செய்தார். இன்றைக்கும்கூட, அவர் உருவாக்கிய நம்பூதிரிகள் எனப்படுபவர்களின் குடும்ப வழித்தோன்றல்கள்தான் பாரம்பரியமாக, பத்ரிநாத் கோவிலின் பூசாரிகளாக இருக்கின்றனர். காலடியிலிருந்து பத்ரிநாத் வரை, நடைப்பயணம் மேற்கொள்வது என்பது, மூன்றாயிரம் கிலோமீட்டர் தூரத்தைக் கொண்டது. ஆதிசங்கரர் அவ்வளவு தூரங்களையும் நடந்தே பயணித்தார்.

ஆதிசங்கரரின் தாயின் மரணம்

ஒருமுறை, ஆதிசங்கரர் வடக்கே மலையில் இருந்தபோது, அவரது தாய் மரணித்துக்கொண்டிருந்ததை உள்ளுணர்வில் அறிந்துகொண்டார். தாய் மரணிக்கும் தருவாயில், ஆதிசங்கரர் தாயுடன் இருப்பதாக உறுதியளித்தபிறகே, பன்னிரண்டு வயதில் சந்நியாசம் மேற்கொள்வதற்கு அவரின் தாய் அனுமதியளித்திருந்தார். ஆகவே அவரது தாய் நோயுற்றிருப்பதை அவர் உணர்ந்ததும், அவரது தாயின் மரணப்படுக்கையில் அவரருகில் இருப்பதற்காகவே அவ்வளவு நெடுந்தொலைவிலிருந்து நடந்து கேரளாவுக்கு வந்தார். அவரது தாயுடன் ஒரு சில நாட்கள் கழித்தார். அவர் இறந்தபிறகு, ஆதிசங்கரர் மீண்டும் வடக்கு நோக்கித் திரும்ப நடந்தார். நீங்கள் இமயமலைகளுக்கு பயணம் செய்யும்போது, எப்படி ஒருவரால் இதை நடந்து கடந்திருக்க முடியும் என்று வியந்துபோவீர்கள். அதற்காக மேற்கொள்ளப்பட்ட கடும் பிரயத்தனத்தை கற்பனை செய்துபாருங்கள்.

ஒரு இறந்துபோன அரசனின் உடலுக்குள் எப்படி ஆதிசங்கரர் நுழைந்தார்?

விவாதத்தில் ஆதிசங்கரர், Adi Shankara in an Argument

ஆதிசங்கரர், ஒரு நபருடன் விவாதம் செய்து, வெற்றி பெற்றார். அப்போது அந்த நபரின் மனைவி சூழ்ச்சி செய்து, தன்னை விவாதத்துக்குள் ஈடுபடுத்திக்கொண்டாள். ஆதிசங்கரர் ஒருவிதமான தர்க்கரீதியான ஒரு மனிதர் – அந்த மாதிரி ஒருவருடன் விவாதம் செய்யக்கூடாது. ஆனால் அவள் பேச்சுவார்த்தை நடத்தி தன்னை விவாதத்துக்குள் ஈடுபடுத்தினாள், அதாவது, “நீங்கள் என் கணவரைத் தோற்கடித்துவிட்டீர்கள், ஆனால் அவர் முழுமையானவர் அல்ல. நாங்கள் ஒன்றின் இரு பாதிகளாக இருக்கிறோம். ஆகவே நீங்கள் என்னிடமும் விவாதிக்க வேண்டும்” என்றாள். அவளது இந்த தர்க்கத்தை நீங்கள் எப்படி தோற்கடிக்க முடியும்? ஆகவே, பெண்மணியுடன் விவாதங்கள் தொடங்கின. அதற்குப் பிறகு, அவள் விவாதத்தில் தான் தோற்றுக்கொண்டிருப்பதை உணர்ந்து, மனித இனத்தின் பாலுணர்வு குறித்த கேள்விகளை அவரிடம் கேட்கத் தொடங்கினாள். சங்கரர் கூறவேண்டிய அனைத்தையும் கூறினார். பிறகு அவள் மேலும் நுட்பமாகச் சென்று, "அனுபவத்தில் உங்களுக்கு என்ன தெரிந்திருக்கிறது?" என்று கேட்டாள்.

ஆதிசங்கரர் ஒரு பிரம்மச்சாரி. அவரைத் தோற்கடிக்க இது அவளுக்கு ஒரு தந்திரம் என்பதை அவர் அறிந்துகொண்டதால், “எனக்கு ஒரு மாத இடைவெளி வேண்டும். ஒரு மாதம் கழிந்தபிறகு நாம் நிறுத்திய இடத்திலிருந்து தொடங்குவோம்”, என்று கூறினார்.

பிறகு அவர் ஒரு குகைக்குள் சென்று, தன் சீடர்களிடம், “என்ன நிகழ்ந்தாலும் பரவாயில்லை, இந்தக் குகைக்குள் யாரையும் அனுமதிக்காதீர்கள். ஏனென்றால் நான் எனது உடலை விட்டு, சிறிது காலத்துக்கு வேறொரு சாத்தியத்தை எதிர் நோக்கிச் செல்கிறேன்”, என்று கூறினார். உயிர்சக்திகள் அல்லது பிராணா என்பது, ஐந்து பரிமாணங்களில் வெளிப்படுகிறது: பிராண வாயு, சமான வாயு, அபான வாயு, உதான வாயு மற்றும் வியான வாயு. பிராணாவின் இந்த ஐந்து வெளிப்பாடுகளும் தனித்தனியான செயல்பாடுகளுடன் இருக்கின்றன. பிராண வாயு என்பது சுவாச செயல்பாடு, சிந்தனைச் செயல்முறை மற்றும் தொடு உணர்வுக்கு பொறுப்பானது. ஒருவர் உயிருடன் இருக்கிறாரா அல்லது இறந்துவிட்டாரா என்பதை எப்படி சோதித்துப் பார்க்கிறீர்கள்? அவரது சுவாசம் நின்றுவிட்டிருந்தால், அவர் இறந்துபோனதாகக் கூறுகிறீர்கள். சுவாசம் நிற்பது ஏனென்றால், பிராண வாயு வெளியேறத் தொடங்கியுள்ளது. அது முழுமையாக வெளியேறுவதற்கு ஒன்றரை மணி நேரங்கள் வரை எடுத்துக்கொள்ளும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அதனால்தான், சுவாசம் நின்ற பிறகு, யாரையாவது எரியூட்டுவதற்கு குறைந்தபட்சம் ஒன்றரை மணி நேரங்கள் காத்திருக்க வேண்டும் என்பது பாரம்பரியமாக இருந்துவந்துள்ளது. ஏனென்றால் அந்த ஒன்றரை மணி நேரத்தில், அவர் பல்வேறு வழிகளில் இன்னமும் உயிருடன் இருக்கிறார். நாம் ஒன்றரை மணி நேரங்கள் காத்திருப்பதால், அவரது சிந்தனைச் செயல்முறை, சுவாசச் செயல்பாடு மற்றும் அவரது தொடு உணர்ச்சிகள் மறைந்துவிடுவதால், அவர் எரியூட்டப்படுவதை உணர்வதில்லை. இப்போதும் பிராணாவின் எஞ்சிய பகுதிகள் இன்னமும் அங்கே இருக்கும். பிராணாவின் கடைசி பரிமாணமாகிய வியானா என்பது பன்னிரண்டிலிருந்து பதினான்கு நாட்கள் நீடித்திருக்க முடியும். உடலில் வியான பிராணன் இயங்குவதன் காரணமாகத்தான், உடலைப் பாதுகாப்பதும், ஒருங்கிணைப்பதும் பெரும்பாலும் சாத்தியமாகிறது. ஆதிசங்கரர் அவரது உடலை விடும்போது, அவரது உடல் பராமரிக்கப்பட வேண்டியிருந்த காரணத்தால், அவரது வியானனை தன்னுடைய உடலமைப்பில் விட்டுச் சென்றார்.

ஒரு அரசன், ராஜநாகத்தால் கடிபட்டு இறந்துபோக நேர்ந்தது. ராஜநாகத்தின் விஷம் உடலில் ஏறிவிடும்போது, இரத்தம் உறையத் தொடங்கி, சுவாசிப்பது கடினமாகிறது. ஏனென்றால் இரத்த ஓட்டம் கடினமாக இருக்கும்போது, சுவாசிப்பது கடினமாகிவிடுகிறது. பிராணவாயு வெளியேறுவதற்கு வெகு முன்னதாக, உங்கள் சுவாசம் நின்றுவிடும். பல வழிகளிலும், அந்த உடலுக்குள் ஒருவர் நுழைய விரும்பினால், அதற்கு இதுதான் பொருத்தமான நிலை. சாதாரணமாக, அது ஒன்றரை மணி நேர இடைப்பட்ட அவகாசத்தை மட்டும் அளிக்கும். ஆனால் ஒரு நபரின் உடலில் ராஜநாகத்தின் விஷம் இருந்தால், அது உங்களுக்கு நான்கரை மணி நேரங்கள் வரை அவகாசம் தருகிறது.

ஆகவே ஆதிசங்கரருக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததும், அவர் மிக எளிதாக அரசனின் உடலுக்குள் நுழைந்துவிட்டார். மற்றும் அந்தப் பெண்மணியின் கேள்விகளுக்கு அனுபவப்பூர்வமாக பதில்கூறும்வண்ணம் அவர் அந்தச் செயல்முறையை உணர்ந்துகொண்டார். அரசனின் அருகாமை வட்டத்தில் சில விவேகமான மக்கள் இருந்தனர். இறந்துபோனதாக அவர்கள் அறிவித்திருந்த ஒருவர் திடீரென்று முழு சக்தியுடன் எழுந்ததை அவர்கள் கண்டதுடன், அதற்குப் பிறகும் அவரது நடவடிக்கைகளினால் அது அரசன் அல்ல, ஆனால் அரசனது உடலில் வேறொருவர் இருக்கிறார் என்பதை அடையாளம் கண்டுகொண்டனர். அதனால் அவர்கள் வீரர்களை நகரெங்கும் அனுப்பி, எங்கெங்கு கேட்பாரற்று ஒரு உடல் கிடந்தாலும், அதை உடனடியாக எரித்துவிடுமாறு அறிவுறுத்தினர். அதனால், அரசரது உடலுக்குள் இங்கே வந்திருக்கும் நபருக்கு அந்த உடல் உரியதாக இருக்குமேயானால், அதற்குப்பிறகு அவர் இங்கிருந்து திரும்பிச் செல்லமுடியாது. ஏனென்றால் இப்போது அரசர் உயிருடன் வந்துள்ளார் – வேறொரு நபர்தான் என்றாலும் அவர் அதேபோலத் தோன்றுகிறார், அதனால் என்ன? ஆனால் அவர்கள் வெற்றிபெறவில்லை, ஆதிசங்கரர் திரும்பிச் சென்றுவிட்டார்.

ஆதிசங்கரர் அவரது சீடர்களுக்கு நடைமுறைப் பாடம் ஒன்றைக் கற்பிக்கிறார்

உருக்கிய இரும்புக்குழம்பைக் குடிக்கும் ஆதிசங்கரர், Adi Shankara drinking molten iron

ஒருமுறை, சங்கரரின் சீடர்கள் குழு ஒன்று ஓட்டமும் நடையுமாக அவரைப் பின்தொடர்ந்து வருகையில், அவர் மிடுக்காக நடந்து ஒரு கிராமத்துக்கு வந்தார். கிராமத்துக்கு வெளியே, சிலர் நாட்டுச் சாராயம் அல்லது கள்ளாக இருக்கக்கூடிய ஒரு பானத்தை அருந்திக்கொண்டிருந்ததை அவர் கண்டார். இந்தியாவில் அந்த நாட்களில், இருபத்தைந்து, முப்பது வருடங்களுக்கு முன்புகூட, மதுபானக் கடைகள் எப்போதுமே கிராமத்துக்கு வெளியில்தான் இருந்தன. இப்போதெல்லாம், மதுபானம் கிராமத்துக்குள், உங்கள் வீட்டுக்கு அடுத்து, உங்கள் குழந்தையின் பள்ளிக்கு முன்பாக விற்கப்படுகிறது. அந்த நாட்களில், அது எப்போதும் நகருக்கு வெளியில் இருந்தது.

அந்த மக்கள் போதை நிலையில் இருந்ததை ஆதிசங்கரர் கண்டார். மது அருந்துபவர்கள் அதனை அவர்களது வாழ்வின் சிறந்த நேரமாகவும், மற்ற அனைவரும் அதைத் தவறவிடுவதாகவும் எப்போதும் நினைக்கின்றனர். ஆகவே அவர்கள் அவரை நோக்கி சில விமர்சனங்களைச் செய்தனர். ஒரு வார்த்தையும் பேசாமல், ஆதிசங்கரர் கடைக்குள் நடந்து, ஒரு மதுக்கலயத்தை எடுத்து, அதனை அருந்திவிட்டு, மேற்கொண்டு நடந்துவிட்டார்.

அவருக்குப் பின்னால், அவரது சீடர்கள் ஓடியும் நடந்தும் வந்துகொண்டே, “நம்முடைய குரு அருந்தமுடியும் எனும்போது, நாம் ஏன் அருந்தமுடியாது?”என்று அவர்களுக்குள் விவாதிக்கத் தொடங்கினர். தமக்குப் பின்னால் என்ன நிகழ்ந்துகொண்டிருந்தது என்பதை ஆதிசங்கரர் அறிந்திருந்தார். அவர் அடுத்த கிராமத்துக்கு வந்தபோது, அங்கே ஒரு இரும்புக்கொல்லன் வேலை செய்துகொண்டிருந்தார். ஆதிசங்கரர் பட்டறையின் உள்ளே சென்று, உருக்கிய இரும்புக்குழம்புப் பானையை எடுத்து, அதை அருந்திவிட்டு மேற்கொண்டு நடந்துசென்றார். இப்போது அவரைப்போல் நீங்கள் செய்யப்போவதில்லை!

ஆதிசங்கரரின் மரணம்

அவரது வாழ்வின் இறுதிக் கட்டங்களில், ஆதிசங்கரர் அவரது பண்பாடு, அவரது பிராமண வாழ்க்கைமுறை மற்றும் அவருடைய வேத பாண்டித்தியம் போன்றவற்றில் அதிகம் நிலைத்திருந்ததால், அவர் அடிப்படைகளை முறையாகப் பார்க்கவில்லை. ஒருநாள், அவர் ஒரு கோவிலுக்குள் நுழைந்துகொண்டிருக்க, வேறொரு நபர் கோவிலில் இருந்து வெளியே நடந்துகொண்டிருந்தார். அந்த நபர் கீழான சாதியைச் சேர்ந்தவராக இருந்தார், ஆனால் ஆதிசங்கரர் தூய்மையிலும் தூய்மையான பிராமணராக இருந்தார். ஆகவே அவர் கோவிலுக்குள் நடந்து செல்லும்பொழுது, கீழ் சாதி நபரைக் காண நேர்ந்ததால், அதனை ஒரு கெட்ட நிமித்தமாக அவர் கருதினார். அவர் அந்த நபரைப் பார்த்து, “விலகிச் செல்”, என்றார். அந்த நபர் அங்கேயே நின்றபடி, “எது விலகிச் செல்லவேண்டும், நானா அல்லது என் உடலா?” அவர் கேட்டதெல்லாம் அதுதான். இது ஆதிசங்கரரை மிகக் கடுமையாகத் தாக்கியதுடன், அவர் பேசிய கடைசி நாளும் அதுவாகவே இருந்துவிட்டது. அவர் அதற்குப் பிறகு ஒருபோதும் வேறு எந்த போதனையும் வழங்கவில்லை. அவர் அப்படியே நேராக இமயமலைகளுக்கு நடந்துவிட்டார். மீண்டும், எப்போதும் அவரை ஒருவரும் பார்க்கவில்லை.

ஆதிசங்கரரை ஒரு மகத்தான உயிராக உருவாக்கியது எது?

ஆதிசங்கரர், Adi Shankara in Tamil

அப்படிப்பட்ட ஒரு மனிதரை எப்படி உருவாக்குவது? அவரது குறுகிய வாழ்நாளில், அவர் இந்த தேசத்தின் குறுக்கும் நெடுக்குமாக நடந்தார். இந்த சக்தி, இந்தப் பேரார்வம் மற்றும் இந்த அறிவாற்றல் எங்கிருந்து வந்தது? மிக முக்கியமானதும், குறியீடாகவும் இருக்கும் ஒரு அம்சம் என்னவென்றால், இன்றைக்கு ஒரு சிறிய நகரமாக இருக்கும் காலடி என்றழைக்கப்படும் ஒரு கிராமத்திலிருந்து ஆதிசங்கரர் வந்தார். காலடி என்றால், “பாதத்தின் அடியில்” என்பது பொருள். தெற்கில் நாம் பாரத மாதாவின் பாதத்தில் இருக்கிறோம், மற்றும் இது நமக்கு பல வழிகளில் நன்மை அளிப்பதாக உள்ளது.

மகாபாரதத்திலிருந்து ஒரு அழகான கதை. குருக்ஷேத்திர யுத்தத்துக்காக, அர்ஜுனனும், துரியோதனனும் கிருஷ்ணனிடம் இருந்து ஆதரவு பெறும்பொருட்டு சென்றபோது, இருவரில் ஒருவர் கிருஷ்ணனின் தலைமாட்டிலும், மற்றவர் கிருஷ்ணனின் கால்மாட்டிலும் நிற்பதை தேர்வு செய்ததால், அதுவே அனைத்தையும் தீர்மானிப்பதாக இருந்தது. அந்த மதியப்பொழுதில், அர்ஜுனன் கிருஷ்ணனின் காலடியில் நின்றபொழுது, அவன் அடிப்படையில் யுத்தத்தை வென்றுவிட்டான். நாம் அனைத்துக்கும் தலைவணங்கும் காரணத்தால், நாம் உயர்வடைகிறோம் என்ற நிலையில், இது நமது தேசம் மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையான பண்பாக உள்ளது. நமது வழியில் முஷ்டியை மடக்குவதால் நாம் உயர்வது கிடையாது, ஆனால் தலைவணங்குவதால் நாம் உயர்வடைகிறோம். பாரதம் என்றால், தெய்வீகத்தின் காலடியில் இருப்பது எப்படி என்பதை நாம் எப்போதும் கற்றிருக்கிறோம்.

இது உந்தப்பட்ட ஆடம்பரத்தின் கலாச்சாரம் அல்ல, ஆனால் இது இயல்பான பக்தியின் கலாச்சாரம். அது கடவுளாக இருக்கலாம், ஒரு ஆணாக, ஒரு பெண்ணாக, ஒரு குழந்தையாக, ஒரு விலங்காக, ஒரு மரமாக, அல்லது ஒரு பாறையாக இருக்கலாம், ஆனால் நாம் அனைத்துக்கும் தலைவணங்கக் கற்றுக்கொண்டோம். இந்த ஒரு அம்சத்தினால் மட்டுமே, நம்மால் மகத்தான மனிதர்களை உருவாக்க முடிகிறது. தெய்வீகத்தின் காலடியில் இருப்பதனாலேயே, நாம் கற்றுத்தேர்ந்து, பரிணமித்து, மலர்ச்சியடைந்து, நீண்டதொரு காலமாக உலகின் எஞ்சிய மக்களுக்கு ஒளிரும் விளக்குகளாக மாறினோம். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக, ஆதியோகியில் தொடங்கி, பல யோகிகளும், ஞானிகளும், முனிவர்களும், துறவிகளும் இதனைப் பல வழிகளிலும் கூறியுள்ளனர்.

அறிவார்ந்த தெளிவுடன் அவர் தன்னையே வெளிப்படுத்தியதும், பேரார்வமும், சக்தியுமாக அவர் தேசமெங்கும் அதைப் பரப்பியதும்தான் ஆதிசங்கரரை தனித்தோங்கி நிற்கச் செய்கிறது. இந்த எல்லா அறிவும், இந்த எல்லா மேதமையும் நம்பிக்கையிலிருந்து வராமல், உணர்தலினால் வந்தவை என்பதுதான் இன்றைய உலகில் மிக முக்கியமான ஒரு அம்சம். ஆன்மீக செயல்முறை என்பது ஏதோ ஒருவிதத்தில் மனிதரின் அடிப்படையான காரணஅறிவு மற்றும் தற்கால அறிவியல் முடிவுகளுடன் ஒத்திசைவில் இல்லையென்றால், மக்கள் அதனை எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அவர்களது காரணஅறிவுக்கு இணங்காத, அறிவியல்பூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியாத எதையும் எதிர்காலத் தலைமுறையினர் ஒதுக்கிவிடுவார்கள். இது தொடர்பாக, ஆதிசங்கரர் இன்றைக்கு மிகவும் முக்கியத்துவமானவர்.

மாயை குறித்த ஆதிசங்கரரின் போதனைகள் – சத்குருவின் விளக்கம்

ஆதிசங்கரர் கூறியவை பற்றிய சில தவறான புரிதல் இருக்கின்றன. குறைந்தபட்சம் ஒன்றையாவது நாம் தெளிவுபடுத்திட, அவருக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம் என்று நான் எண்ணுகிறேன். “'அனைத்தும் மாயை' என்று அவர் கூறியது அர்த்தமில்லாததாக இருக்கிறது”, என்று மக்கள் பலரும் கூறுகின்றனர்.

அது எப்படி (தவறாக) புரிந்துகொள்ளப்படுகிறது என்றால், “மாயை என்றால் அது இல்லாத ஒன்று.” மாயை என்றால், ‘அது இல்லாதது’ என்பது அதன் பொருளல்ல. மாயை என்றால், ஒரு பொய்த்தோற்றம், அதாவது அது எப்படி இருக்கிறதோ அப்படி நீங்கள் அதைப் பார்ப்பதில்லை. இங்கே நீங்கள் வெளித்தோற்றத்தில் இந்த திட உடலுடன் இருக்கிறீர்கள், ஆனால் நீங்கள் உண்ணும் உணவுடன், அருந்தும் நீருடன், சுவாசிக்கும் காற்றுடன், தினசரி அளவில் உங்களது உடலின் அணுக்கள் பரிமாற்றம் செய்யப்படுகின்றன. அணுக்களின் விதத்தைச் சார்ந்து, உங்களது உடலின் திசுக்களும், உறுப்புகளும் இரண்டு நாளிலிருந்து ஒரு சில வருடங்களுக்குள் புத்துயிர் பெறுகிறது. இதன் பொருள் என்னவென்றால், சிறிது காலம் கழித்து உங்களுக்கு முற்றிலும் புதியதொரு உடல் கிடைக்கிறது. ஆனால் உங்கள் அனுபவத்தில், அது முன்பிருந்த அதே உடல் போலத் தோன்றுகிறது, இதுதான் மாயை. 

அதைப்போலவே, நீங்கள் படைப்பை புரிந்துணரும் விதமும், ஐம்புலன்கள் மூலமாக உலகத்தை அறிந்துகொள்ளும் விதமும், முற்றிலும் சரியானது அல்ல என்பதால், அதுதான் பொய்த்தோற்றம் எனப்படுவது. அது கானல் நீர் போன்றது. நீங்கள் நெடுஞ்சாலையில் வண்டி ஓட்டிச் சென்றால், சுட்டெரிக்கும் சில தருணங்களில், வெகுதொலைவில், அங்கே நீர் பாய்வதுபோலத் தோன்றுகிறது. நீங்கள் அங்கே செல்லும்போது, நிச்சயமாக அந்த இடத்தில் தண்ணீர் இல்லை. இதனால் அங்கே எதுவுமில்லை என்பது அர்த்தமல்ல. அங்கே சற்று ஒளிவிலகல் ஏற்பட்டு, இந்தப் பொய்த்தோற்றத்தை ஏற்படுத்துகிறது. ஒரு குறிப்பிட்ட விஷயமாக இருந்த ஒன்று, வேறொன்றாகத் தோன்றுகிறது. “நான்” என்று நீங்கள் எண்ணியிருப்பது எதுவோ, அது உண்மையில் எல்லாமுமாக இருக்கிறது. இதுதான் மாயை. “வேறொன்று” என்று நீங்கள் எண்ணியிருப்பது எதுவோ, அது உண்மையில் நீங்கள்தான். எல்லாமுமாக நீங்கள் எண்ணியிருப்பது எதுவோ, அது ஒன்றுமில்லாததாகவும் இருக்கிறது. அந்த மாயையைப் பற்றித்தான் ஆதிசங்கரர் பேசுகிறார்.

ஆதிசங்கரரின் போதனைகள் – படைப்பும், படைத்தவரும் ஒன்றே

மேலும், இந்த மனித உடலமைப்பை அறிந்துகொள்வதால், ஒருவர் பிரபஞ்சம் முழுவதையும் அறிந்துகொள்ள முடியும் என்றும் கூறினார். ஒட்டுமொத்த பிரபஞ்சமும் அடிப்படையில் ஒரே சக்தியாக உள்ளது என்று நவீன இயற்பியல் கூறுகிறது. அதைப்போன்றே ஆதிசங்கரர், படைப்பும், படைத்தவரும் ஒன்று என்று கூறினார். இன்றைக்கு, நீண்ட நெடிய காலம் கழித்து, ஆதிசங்கரரும், கடந்த கால முனிவர்களும் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பதற்கு இணையாக நவீன அறிவியல் வந்துள்ளது.

இன்றைய உலகில் ஆதிசங்கரரின் தொடர்புடைமை

இந்த ஆன்மீக அறிவானது மலைகளிலிருந்து கீழிறங்கி, மாநகரங்கள், நகரங்கள், கிராமங்கள் மற்றும் எல்லாவற்றுக்கும் மேல், மக்களின் இதயங்கள், மற்றும் மனங்களுக்குள் செல்லத் தேவைப்படுகிறது. தலைவணங்கக் கற்றுக்கொள்வதற்கும் மற்றும் நமக்கு அளப்பரிய நற்பலன்களை வழங்கியுள்ள பக்தி மற்றும் பணிவான உணர்வின் இந்தக் கலாச்சாரத்தை நாம் திரும்பக்கொண்டு வருவதற்கான நேரமிது. மேலும், இதுதான் நமது பலமாக இருந்து வந்துள்ளது, நமது வழியாகவும் இது இருந்துள்ளது, நம்முடைய பரிணாமம் மற்றும் உணர்தலின் செயல்முறையாகவும், வழிமுறையாகவும் இது இருந்து வந்துள்ளது. இனிமேலும், இது மகத்தான பொக்கிஷமாக இருக்கப்போவதுடன், இது நமது தேசத்தின் எதிர்காலமாகவும் இருக்கப்போகிறது. இந்த ஒரு விஷயத்தை நாம் செய்தால், ஒட்டுமொத்த உலகமும் நம்மிடமிருந்து வழிகாட்டலை நாடிவரும். இந்த நாட்டிலும், உலகின் மற்ற பாகங்களிலும், ஆதிசங்கரரின் உயிரோட்டத்தினை மீண்டும் கிளர்ந்தெழச் செய்வோம்.

ஆசிரியர் குறிப்பு :-

ஆதிசங்கரர் அருளிய ஸ்தோத்திரங்கள்

ஆதிசங்கரர் தனது மேதமையையும் பக்தியையும் தன்னகத்தே கொண்டிருக்கும் ஆழமான ஸ்தோத்திரங்களை வடித்தார். மனித விழிப்புணர்வை உயர்த்துவதற்கான அவரது அறிவாற்றலுக்கும், ஓய்வறியா முயற்சிகளுக்கும் அது உண்மையான அர்ப்பணமாக உள்ளது. ஏனெனில் ஆயிரத்துக்கும் அதிகமான வருடங்களுக்குப் பிறகும், அந்த சொற்றொடர்கள் அல்லது ஸ்தோத்திரங்கள் இன்னமும் மக்களின் இதயங்களிலும், மனங்களிலும் உயிர்ப்புடன் நிலைத்திருக்கின்றன.

மிக நன்றாக அறியப்பட்ட ஆதிசங்கரரின் நான்கு ஸ்தோத்திரங்கள் இங்கே :

1. நிர்வாண ஷடகம்

பல ஆண்டுகளாக துறவுப் பாதையுடன் இசைந்திருக்கும் நிர்வாண ஷடகம் ஒரு சக்தி மிகுந்த உச்சாடனம். அது முதன்முதலாக எழுதப்பட்டபோது ஏற்படுத்தியதைப் போலவே, இன்றைக்கும் அதிக தாக்கம் நிறைந்ததாக உள்ளது. கவனமாக கோர்க்கப்பட்டுள்ள ஒலிகளின் இந்த கோர்வை, யோகப் பாதையில் கடைப்பிடிக்கப்படும் ஆன்மீக செயல்முறையின் அடித்தளமாக உள்ளது.

இந்தப் பதிவில், நிர்வாண ஷடகத்தின் வரிகளையும், சத்குருவின் விளக்கத்தில் அதன் பொருளையும் அறியுங்கள். மேலும், இந்த உச்சாடனத்தின் வாயிலாக ஆதிசங்கரர் எதனை உணர்த்துவதற்கு முயற்சிக்கிறார் என்பதையும் காணுங்கள்.

2. பஜகோவிந்தம்

ஆதிசங்கரர் இயற்றியவைகளுள், பஜகோவிந்தம் சத்குரு அதிகமாக உச்சாடனம் செய்யும் ஒன்றாக உள்ளது. வாழ்க்கையின் சமுத்திரத்தைக் கடப்பதற்கு, சாத்தியப்படும் எந்த ஒரு வழியையும் மேற்கொள்ளுமாறு ஒரு சாதகரை துரிதப்படுத்தும் இந்த உச்சாடனம் தனித்துவமானது. ஆதிசங்கரர் என்ன கூறுகிறார் என்றால், அது போகத்தின் மூலமாகவா அல்லது யோகத்தின் மூலமாகவா என்பது முக்கியமல்ல, ஒருவர் அதைக் கடப்பதுதான் முக்கியம். உச்சாடனத்தின் வரிகளுக்கும், சத்குருவினால் வழங்கப்படும் சிறிய விளக்கத்துக்கும் இங்கே கிளிக் செய்யுங்கள்.

3. சௌந்தர்யலஹரி

ஆதிசங்கரரின் இந்த அழகான கவிதை, படைப்பின் அற்புதமான ஆற்றலையும், அழகையும் புகழ்ந்து பாடுகிறது. கவிதை வரிகளின் சாரத்தை அதன் சுவைமாறாமல் இசையமைத்து வழங்கியுள்ள சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் இந்த படைப்பு, ஆதிசங்கரரின் இணையற்ற கவித்திறனுக்கு அஞ்சலி செலுத்துவதாகவும் அமைந்துள்ளது.

4. ப்ராத்தஸ்துவே பரசிவம் பைரவி

இந்தப் பாடல், தேவியை தாமரை மலர் மீது வீற்றிருப்பவளாகவும், சொற்கள் மற்றும் மொழியின் பெண்தெய்வமாகவும் போற்றுகிறது. ஆதிசங்கரரால் எழுதப்பட்ட இந்தப் பாடல், நவராத்திரியின்போது தேவியின் ஒன்பது திருநாளையும் கொண்டாடி, தெய்வீகப் பெண்தன்மையின் அருளைப் பெறுவதற்காக வேண்டி, சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவினால் இசைவடிவாக வெளிப்படுத்தப்படுகிறது.