logo
logo

விஷ்ணுவின் தந்திரத்தால் பறிபோன சிவனின் வீடு - பத்ரிநாத்தின் புராணக் கதை

பத்ரிநாத் கோயிலின் புராணக்கதையைக் கூறும்போது, சிவன் மற்றும் பார்வதி எப்படி அவர்களின் வீட்டிலிருந்து விஷ்ணுவின் தந்திரத்தால் வெளியேற்றப்பட்டனர் என்பதை சத்குரு தனது பார்வையிலிருந்து முன்வைக்கிறார்.

சத்குரு:

குழந்தையைத் தொடாதே...

பத்ரிநாத் குறித்தொரு புராணக் கதை உண்டு. சிவனும் பார்வதியும் இங்குதான் வசித்தார்கள். இமயமலையில் 10,000 அடி உயரத்தில் இந்தப் பகுதி அமைந்துள்ளது. ஒருநாள், சிவனும் பார்வதியும் வெளியே உலாச்சென்று திரும்பியபோது, வீட்டு வாசலில் ஒரு குழந்தை அழுது கொண்டிருந்தது. கதறி அழுகிற குழந்தையைப் பார்த்ததும் பார்வதியின் தாய்மை உணர்வு விழித்துக் கொள்ள, அந்தக் குழந்தையை அள்ளியெடுக்கப் போனார். சிவன் தடுத்தார். “குழந்தையைத் தொடாதே” என்றார்.

அதிர்ச்சியடைந்த பார்வதி, “இவ்வளவு கல் மனம் படைத்தவரா நீங்கள்?” என்று சினந்து கொள்ள, சிவன் சொன்னார், “இது நல்ல குழந்தையில்லை. நம் வீட்டு வாயிலில் ஏன் கிடக்க வேண்டும்? இதை விட்டுச் சென்றவர்கள் காலடித் தடமெதுவும் பனித்தடத்தில் பதியவேயில்லை. இத்தனை உயரமான மலையில் தானாக இந்தக் குழந்தை முளைத்ததா என்ன?”


சிவன் எவ்வளவு சொல்லியும் பார்வதி கேட்பதாயில்லை. குழந்தையை உள்ளே தூக்கிக் கொண்டு போனார். அந்தக் குழந்தை பார்வதியின் மடியில் சௌகரியமாக உட்கார்ந்து கொண்டு சிவனை கேலியாகப் பார்த்துக் கொண்டிருந்தது. “நடப்பது நடக்கட்டும்” என்று சிவனும் விட்டு விட்டார்.

யார் இந்தக் குழந்தை?

குழந்தைக்கு உணவூட்டிய பார்வதி, அதை உறங்கச் செய்துவிட்டு அருகிலிருந்த வெந்நீர் ஊற்றில் நீராட சிவனுடன் சென்றார். திரும்ப வந்து பார்த்தபோது அவர்களின் வீடு உட்புறமாக இறுகத் தாழிடப்பட்டிருந்தது. பார்வதி அதிர்ந்தார். “இது யார் செய்த வேலை?” என்றார். “நீ ஆசையாகத் தூக்கி வளர்த்த குழந்தையின் வேலை. எவ்வளவோ சொன்னேன். நீ கேட்கவில்லை” என்றார்.

“என்ன செய்யலாம்?” என்றார் பார்வதி. சிவனுக்கிருந்தது இரண்டே வழிகள். ஒன்று, அந்த வீட்டை எரித்து விடுவது அல்லது, அந்த இடத்தை விட்டு அகன்றுவிடுவது. “சிவனும் பார்வதியும் அந்த இடத்தை விட்டு மெல்ல அகன்றார்கள். குழந்தை வடிவில் வந்த திருமால் பத்ரிநாத்தில் கோவில் கொண்டார், சிவனும் பார்வதியும் கேதார்நாத்தில் தங்கள் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டார்கள்.

வந்தது திருமால் என்பது சிவனுக்குத் தெரியவில்லையா என்று நீங்கள் கேட்கலாம். சில விஷயங்கள் தெரிந்தாலும் நடப்பதற்கு அனுமதிக்கத்தான் வேண்டியிருக்கிறது.

    Share

Related Tags

சிவன் மற்றும் அவரது குடும்பம்சிவன் கதைகள்

Get latest blogs on Shiva

Related Content

சிவன் எந்த உலகைச் சேர்ந்தவர்?