சத்குரு: ஆன்மீகம் என்பது எந்தவொரு குறிப்பிட்ட பயிற்சியும் அல்ல. அது குறிப்பிட்ட ஒரு விதத்தில் நாம் இருக்கும் தன்மை. அந்த இடத்திற்கு செல்ல, பல விஷயங்களை நாம் செய்ய வேண்டியிருக்கிறது. இது உங்கள் வீட்டில் இருக்கும் ஒரு தோட்டத்தைப் போன்றது. மண், சூரிய வெளிச்சம் அல்லது செடியின் தண்டு ஒரு குறிப்பிட்ட விதத்தில் இருந்தால், அது பூக்களைக் கொடுக்காமல் இருக்கலாம். அப்போது நீங்கள் வேறு ஏதாவது செய்ய வேண்டியிருக்கும். இந்த மாதிரி விஷயங்களை கொஞ்சம் கவனிக்க வேண்டும்.

நீங்கள், உங்களது உடல், மனம், உணர்வுகள் மற்றும் சக்தி நிலைகளை ஒரு குறிப்பிட்ட முதிர்ச்சிநிலைக்கு எடுத்து சென்றால், ஏதோவொன்று உங்களுக்குள் மலரும் - இதுதான் ஆன்மீகம். உங்களது காரண அறிவு முதிர்ச்சியடையாமல் இருந்தால், அது எல்லாவற்றையும் சந்தேகத்துடன் அணுகும். மாறாக உங்கள் காரண அறிவு முதிர்ச்சி அடைந்திருந்தால், அது எல்லாவற்றையும் முற்றிலும் மாறுபட்ட ஒரு கோணத்தில் பார்க்கும்.

படைப்பின் மூலம், உங்களுக்குள் சிக்கியிருக்கிறது. இதை நீங்கள் தவறவிடக்கூடாது. இதனை தவறவிடாமல், உங்களுக்குள் இருக்கும் படைப்பின் மூலத்தை அறிந்துகொண்டால், நீங்கள் ஆன்மீகத்தில் இருக்கிறீர்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

எப்போதெல்லாம் ஒரு மனிதன், தன்னைவிட பெரிதான ஒன்றை தன்னுடைய அனுபவத்தில் உணர்கிறானோ, பாரம்பரிய வழியில் அதை நாம் பார்த்தால், “அதுதான் கடவுள்”. கடவுள் என்றாலே இதுதான் - நம்மைவிட பெரிதான எல்லாமே. அது ஒரு மனிதனாக இருக்கலாம், ஒரு அனுபவமாக இருக்கலாம் அல்லது இயற்கையின் ஒரு அம்சமாக இருக்கலாம். ஆனால், இது ஆன்மீகமா? இல்லை, இது வெறும் ஓர் உயிர். “வெறும் ஒரு உயிர்” என்று நான் சொல்வதை, சாதாரணமான ஒரு சிறு விஷயமாக ஒதுக்கிவிட முடியாது. இதுதான் மிகப் பெரிய விஷயம். வாழ்க்கை என்பது மிகவும் சக்திவாய்ந்ததாகவும், மூழ்கடிப்பதாகவும், பேரானந்த அனுபவமாகவும் இருந்தால், இதனை யார் உருவாக்கியிருப்பார்கள் என்று உங்களுக்கு தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கும். 

இந்த படைப்பின் மூலத்தையோ அல்லது படைத்தல் செயல்முறையையோ பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமானால், உங்களது உடல்தான் உங்களுக்கு படைப்பின் மிக நெருங்கிய அங்கமாக உள்ளது, அல்லவா? படைப்பின் மூலம், உங்களுக்குள் சிக்கியிருக்கிறது. இதை நீங்கள் தவறவிடக்கூடாது. இதனை தவறவிடாமல், உங்களுக்குள் இருக்கும் படைப்பின் மூலத்தை அறிந்துகொண்டால், நீங்கள் ஆன்மீகத்தில் இருக்கிறீர்கள்.

கடவுள் மீது நம்பிக்கை கொண்டிருப்பது ஒருவரை ஆன்மீகவாதியாக்குமா?

கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர் ஆன்மீகத்தில் இருக்க முடியாது. ஆனால், நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், கடவுள் மீது நம்பிக்கை உள்ளவர்களும் ஆன்மீகவாதியாகிவிட முடியாது. ஏனென்றால், கடவுள் மீது நம்பிக்கை உடையவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை. இரண்டு பேருமே தங்களுக்கு தெரியாத ஒன்றைப் பற்றி நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். உங்களது பிரச்சனை என்னவென்றால், உங்களுக்கு தெரியாததை, “தெரியாது” என்று ஒப்புக்கொள்ளும் நேர்மை உங்களிடம் இல்லை. அதனால் ஆத்திகருக்கும், நாத்திகருக்கும் பெரிதாக வேறுபாடு ஒன்றும் இல்லை. இரண்டு பேருமே தாங்கள் வெவ்வேறானவர்கள் என்று வேஷம் போடுகிறார்கள். ஆன்மீகத் தேடலில் உள்ள ஒருவர், ஆத்திகனுமல்ல, நாத்திகனுமல்ல. தனக்கு ஒன்றும் தெரியாது என்ற புரிதலால், அவர் ஒரு தேடலில் இருக்கிறார்.

நீங்கள் ஏதோவொன்றின் மேல் நம்பிக்கை வைக்கும் அந்த க்ஷணத்தில், மற்ற அனைத்தையும் பார்க்கத் தவறி, குருடாகிவிடுகிறீர்கள். இப்போது இவ்வுலகில் உள்ள சண்டைகள் அனைத்தும், அவர்கள் காட்டிக்கொள்வதைப்போல நல்லதுக்கும் கெட்டதுக்கும் இடையில் நடப்பவை அல்ல. இது எப்போதுமே, ஒரு மனிதனின் நம்பிக்கைக்கும், இன்னொரு மனிதனின் நம்பிக்கைக்கும் இடையே உள்ள முரண்பாடாகும். நம்பிக்கைக்கான தேவை என்பது, ஆன்மீகத்தை விடவும், உளவியல் சார்ந்ததாக உள்ளது. உங்களுக்கு ஏதோவொன்றின் மேல் தொற்றிக்கொள்ள வேண்டும், பாதுகாப்பாக உணர வேண்டும், மற்றும் எல்லாமே தெரியும் என்ற உணர்வுடன் இருக்க வேண்டும்; இவை அனைத்தும் ஒரு முதிர்ச்சியில்லாத மனதின் வெளிப்பாடாகும். இந்த பிரபஞ்சத்தைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை என்றால்தான் என்ன? உண்மையில், உங்களுக்கு ஒன்றும் தெரியாது. இது அழகானதாகும்! நீங்கள், உங்களுக்குள் அழகாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பது எப்படி என்று பாருங்கள். அது உங்கள் கைகளில்தான் உள்ளது. 

ஆன்மீக அனுபவம் என்றால் என்ன?

ஒரு அனுபவத்தைத் தேடி, கடலுக்கோ அல்லது மலைகளுக்கோ போவது அழகானதுதான், ஆனால் உலகத்தை, அது எப்படி இருக்கிறதோ அப்படியே மகிழ்ச்சியுடன் அனுபவிக்க வேண்டும். ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும், கடலுக்குள் இருக்கும் மீன் அதனை ஆன்மீக அனுபவம் என்று எண்ணாது, மலைகளில் வாழும் ஆடுகளும் அதனை ஆன்மீக அனுபவம் என்று எண்ணாது, ஏனென்றால் அவை எப்போதுமே அங்குதான் இருக்கின்றன. மாறாக அவைகளை நகரத்திற்கு கொண்டுவந்தால், அவை அதனை ஆன்மீக அனுபவமாக எண்ணலாம். இது உங்களுக்குள் இருக்கும் தடைகளை உடைப்பது பற்றியதாகும் - உங்களுக்குள் ஏதோவொன்று உடைந்தது. நீங்கள் ஒரு ஓட்டிற்குள் இருந்தீர்கள். அது உடைந்து, ஒரு பெரிய ஓடாக ஆனது. நான் என்ன சொல்கிறேன் என்றால், நீங்கள் இந்த பெரிய ஓட்டிற்கு பழகிவிட்டால், அதையும் முந்தையதைப் போலவே உணர்வீர்கள்.

நீங்கள் எல்லையற்ற தன்மையாக மாறவேண்டும் என்றால், அதனை நீங்கள் உடலளவில் அடைய முயன்றால், எல்லையற்றதை அடைய நீங்கள் தவணை முறையில் முயற்சி செய்கிறவராக இருப்பீர்கள். உங்களால் 1, 2, 3, 4, 5 என்று தொடங்கி எல்லையற்றது வரைக்கும் எண்ண முடியுமா? நீங்கள் முடிவில்லாமல் எண்ணிக்கொண்டிருக்க வேண்டியிருக்கும். அதற்கான வழி இதுவல்ல. உடலளவில் உங்களால் எல்லையற்ற தன்மையை உணரவே முடியாது. ஒவ்வொரு மனிதருமே எல்லையற்றதாக ஆகவேண்டும் என்றே விரும்புகிறார்கள். அவருக்கு விரும்புவதையெல்லாம் கொடுத்துவிட்டாலும், ஒரு மூன்று நாட்களுக்கு அவர் சரியாக இருக்கலாம். ஆனால், நான்காவது நாள் அவர் வேறு எதையாவது தேடிக்கொண்டிருப்பார். இதை சிலர் பேராசை என்று முத்திரை குத்துவார்கள், ஆனால் நான் இதனை, தவறான திசையில் போகும் வாழ்க்கை செயல்முறை என்பேன். 

எல்லையற்ற தன்மையை நீங்கள் அடைய வேண்டுமென்றால், பொருள்தன்மை தாண்டி ஏதோவொன்றை நீங்கள் உணரவேண்டும். நீங்கள் கடலில் குதித்தபோது ஏதோவொரு அனுபவத்தை நீங்கள் தொட்டிருக்கலாம், மலையைப் பார்த்த போதாக இருக்கலாம், நீங்கள் ஏதோ ஒரு பாட்டு பாடியபோது, நடனம் ஆடியபோது அல்லது கண்களை மூடிக் கொண்டிருந்தபோது என்று பல வழிகளில் ஒரு தனிமனிதருக்கு அது நடந்திருக்கலாம். நீங்கள் அதனை தொட்டுவிட்டீர்கள், ஆனால் அதன் நீடித்திருக்கும் நிலைத்தன்மை கேள்விக்குரியதாகும்.

ஒரு எளிய பயிற்சி

உங்களை, ஒரு எளிய உள்ளுணர்வு சார்ந்த பயிற்சியில் ஈடுபட வைக்கலாம். எந்தவொரு உள்ளுணர்வு சார்ந்த தொழில்நுட்பத்தையும், ஈடுபாடில்லாத சூழல்களில் உங்களுக்கு கற்றுக்கொடுக்க இயலாது. ஈடுபாடும், கவனமும் செலுத்துவதற்கான ஒரு சிறிய அளவிலான இடத்தையும், நேரத்தையும் உங்களால் கொடுக்க முடியுமானால், நாங்கள் உங்களை ஒரு எளிய பயிற்சியில் ஈடுபட வைக்கலாம். இதில், ஒரு நாளைக்கு வெறும் 21 நிமிடங்கள் (ஈஷா யோகா) முதலீடு செய்தால், உங்களது நாளை ஒரு மகத்தான ஆன்மீக அனுபவத்துடன் துவங்கலாம். இந்த மகத்தான அனுபவம், உங்களை நாள்முழுவதும் அமைதியுடனும், ஆனந்தத்துடனும் வைத்திருக்கும்.

அதுமட்டுமல்ல, இந்த அனுபவம் நிலைத்திருப்பதற்கு, ஒவ்வொரு மனிதரும் செய்யவேண்டிய எளிய விஷயம் என்னவென்றால், உங்களது ஈடுபாடு பாகுபாடில்லாமல் இருக்கவேண்டும். நீங்கள் ஒரு மனிதரைப் பார்த்தாலும், ஒரு மரத்தை அல்லது மேகத்தைப் பார்த்தாலும் சமமான ஈடுபாட்டுடன் இருக்கவேண்டும். உங்களது சொந்த உடலுடனும் மூச்சுடனும் அதே அளவு ஈடுபாட்டுடன் இருக்கவேண்டும். ஒன்றைவிட மற்றொன்று சிறந்தது என்ற பாரபட்சமில்லாமல் இருந்தால், வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்துடனும் சமமான ஈடுபாட்டுடன் இருந்தால், அப்போது நீங்கள் நிரந்தரமாக ஆன்மீகத்தில் இருப்பீர்கள். யாரும் உங்களுக்கு ஆன்மீகத்தைப் பற்றி கற்றுத்தரத் தேவையில்லை.

ஆசிரியர் குறிப்பு: ஆரோக்கியத்தையும், உடல்நலத்தையும் வழங்கும் ‘ஈஷா கிரியா‘ என்ற வழிகாட்டலுடன் கூடிய தியானத்தை ஆன்லைனில் இலவசமாக சத்குரு வழங்குகிறார். இந்த 12 நிமிட எளிய, திறன்மிக்க செயல்முறை ஒருவரது வாழ்க்கையை மாற்றியமைக்கும் சக்திவாய்ந்தது.

முயற்சித்துப் பாருங்கள் ‘ஈஷா கிரியா'