கடவுள் அல்லது கர்மா - எதை நம்புவது?
ஒருவர் கடவுளை நம்பவேண்டுமா அல்லது கர்மாவை நம்பவேண்டுமா? முடிவுகள் செய்வதற்குப் பதிலாக, தேடுபவராகும் தைரியமும், அர்ப்பணிப்பும் இருக்கவேண்டும் என்று சத்குரு கூறுகிறார்.
இந்தப் பதிவு ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற 21 நாள் ஹடயோகா நிகழ்ச்சியில் சத்குருவுடனான அமர்விலிருந்து எடுக்கப்பட்டது. முடிவுகளையும் அனுமானங்களையும் மேற்கொள்வதற்கு பதிலாக, தேடுபவராகும் தைரியமும் அர்ப்பணிப்பும் ஒருவரிடம் இருக்க வேண்டும் என்று சத்குரு கூறுகிறார்.
கேள்வி:
குழந்தைப்பருவம் முதலே, கடவுள் இருப்பதாக நான் நம்ப வைக்கப்பட்டுள்ளேன், அதன் விளைவாக, நான் பக்தனானேன். ஆனால் நான் இங்கு ஹடயோகா நிகழ்ச்சியை துவங்கிய பின் ஈஷாவின் முழு அணுகுமுறையும் கர்மாவை மையமாக கொண்டிருப்பதைக் கவனிக்கிறேன். அப்படியென்றால் கடவுளின் பங்களிப்பு எதிலும் இல்லை என்று அர்த்தம். 21 வருடங்களாக நான் கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தேன் - அதை இப்போது உடைப்பது என்பது அவ்வளவு சுலபம் இல்லை. அதைப் பற்றி புரிந்துகொள்ள எனக்கு தயவுசெய்து உதவுங்கள்.
சத்குரு:Subscribe
சங்கரன் பிள்ளையின் திருமண வாழ்க்கை கடினமான சூழ்நிலையில் இருந்தது. அவர் ஒரு திருமண ஆலோசகரிடம் சென்று, “நான் என்ன செய்யவேண்டும்? நான் என்ன முயற்சி செய்தாலும் எல்லாமே தவறாகிவிடுகிறது" என்று கேட்டார். அதற்கு ஆலோசகர், "நீங்கள் அவளிடம் உண்மையில் அவளுக்கு என்ன வேண்டும் என்று கேட்க வேண்டும்" என்றார். மேலும் அதை எப்படிச் செய்வது என்று சில ஆலோசனைகளையும் அவருக்கு கொடுத்தார். சங்கரன் பிள்ளை வீட்டுக்குத் திரும்பி வந்தபோது, அவருடைய மனைவி அவரைக் கண்டுகொள்ளாமல் பெண்கள் பத்திரிகையை வாசித்துக்கொண்டிருந்தாள். அவர் என்ன சொல்வது என்று யோசித்து பிறகு, “அன்பே, நீ யாரை விரும்புவாய், அறிவாளியையா, அழகானவனையா?” என்றார். அவள் எதுவும் சொல்லவில்லை. அவர் கொஞ்சம் நகர்ந்து வந்து அருகில் அமர்ந்து, “அன்பே, கண்ணே, நீ ஒரு அறிவாளியை விரும்புவாயா அல்லது அழகானவனையா?” என்றார். பத்திரிகையை விட்டு பார்வை அகலாமல் அவள் "இரண்டும் அல்ல – நான் உங்களை மட்டுமே காதலிக்கிறேன்" என்றாள். காதல் விவகாரத்தைத் தொடர்வதைவிட தன் திருமணத்தை தக்கவைக்கும் அளவுக்கு அவள் புத்திசாலியாக இருந்தாள்.
நாம் உங்களின் பக்தியைப் பற்றி பார்ப்போம். இதற்கு முன் கடவுள் இருக்கிறார் என்று நீங்கள் முடிவு செய்திருந்தீர்கள். நிகழ்ச்சிக்கு வந்து இப்போது நீங்கள் ஈஷா கர்மாவை மையமாகக் கொண்டுள்ளது என்று முடிவு செய்துவிட்டீர்கள். நிகழ்ச்சியை விட்டுச் சென்று நீங்கள் என்ன முடிவுகள் செய்வீர்கள் என்று யாருக்குத் தெரியும். முடிவுகளை நிறுத்துங்கள். யோகா என்றால் தேடல். தேடல் என்றால் உங்களுக்குத் தெரியாது என்பதை நீங்கள் உணர்ந்துவிட்டீர்கள். மேலும் நீங்களும், உங்களுக்கு இப்போது வசதியாக இருப்பதால் மட்டுமே ஏதோவொன்றை ஏற்றுக்கொள்ள விரும்பாத அளவிலான நேர்மையை அடைந்துள்ளீர்கள்.
ஒரு அனுமானத்திலிருந்து மற்றொரு அனுமானத்திற்கு
உங்கள் சமூகத்தில், உங்கள் குடும்பத்தில், கடவுளை நம்புவது வசதியாக இருக்கிறது, அல்லது எல்லோரும் கடவுள் மேல் நம்பிக்கை வைத்திருந்ததால், நீங்களும் நம்பிக்கை வைத்தீர்கள். பிறகு நீங்கள் இங்கு வந்து, “ராமா ராமா," “ஷிவா ஷிவா" அல்லது வேறெதையோ சொல்லிக் கொண்டிருந்தால் மக்கள் உங்களைப் பார்த்து சிரிப்பார்கள் என்று நினைத்தீர்கள். அதனால் இப்போது நீங்கள் கர்மாவை மையமாகக் கொண்டுள்ளீர்கள்! எவ்வளவு காலம் எடுத்தது நீங்கள் மாறுவதற்கு? இதை உங்களுக்குச் செய்துகொள்ளாதீர்கள். நீங்கள் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு எளிதாக மாற முடிவதற்கு காரணமே, நீங்கள் ஒரு அனுமானத்திலிருந்து இன்னொன்றிற்கு, தேடலுக்கான தைரியமும், அர்ப்பணிப்பும் இல்லாமல் நகருகிறீர்கள். தேடல் உள்ளவர் என்றால் உங்களுக்குத் தெரியாது என்று ஒத்துக்கொள்வது. உங்களுக்கு இந்த உலகைக் கடவுள் ஆள்கிறாரா அல்லது கர்மா ஆள்கிறதா என்பது தெரியாது - அது தான் உண்மை.
ஆரம்பத்தில், இது உங்களை அச்சமூட்டும். ஆனால் எது உங்களைப் பயமுறுத்துகிறதோ, சில காலத்துக்கு பின் அதற்கு நீங்கள் பழகிக்கொள்ளலாம். ஒருவேளை நீங்கள் தீ உமிழும் ஒரு டிராகனுடன் ஒரு அறையில் அடைபட்டிருந்தால், மூன்று நாட்களுக்குப் பிறகு, நீங்கள் எரிந்து போகாமலிருந்தால், மெதுவாக, டிராகனுடன் பேச ஆரம்பிப்பீர்கள். அதனால், எந்த அனுமானமும் செய்யாதீர்கள், அல்லது ஒன்றிலிருந்து மற்றொன்றிற்குத் தாவாதீர்கள். உண்மை என்னவென்றால், உங்களுக்குத் தெரியாது. இது உங்களை காலையில் எழுந்து யோகாவைச் செய்ய வைக்கும். மேலே இருப்பது சொர்க்கமா, நரகமா அல்லது கடவுளா, பிசாசா என்று யாருக்குத் தெரியும்? உங்களுக்குத் தெரிந்தது - உங்கள் உடல், உங்கள் மனம், உங்கள் சக்தி, உங்கள் உணர்ச்சி - அதை நன்றாக வைத்திருங்கள்.
ஒருவேளை நீங்கள் சொர்க்கத்திற்குச் சென்றால் - அதை அனுபவிக்க உங்களின் உடல் சரியாக இருக்கவேண்டும். ஒருவேளை நீங்கள் நரகத்திற்குச் சென்றால் - அப்போது அதை தாங்கிக்கொள்ளவும் பிழைக்கவும் உங்களின் உடல் சரியாக இருக்கவேண்டும். இரண்டிற்குமே, நீங்கள் உங்கள் உடலைச் சரியாக வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் இந்த கிரகத்தில் நன்றாக வாழவும் உங்களின் உடலைச் சரியாக வைத்துக்கொள்ள வேண்டும். அதனால் நீங்கள் கடவுளை நம்பினாலும் நம்பாவிட்டாலும், நீங்கள் உடல்ரீதியாக, மனரீதியாக, உணர்ச்சிரீதியாக, சக்திரீதியாக உங்களை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும்.
குறிப்பு:
எல்லா கட்டுப்பாடுகளுக்கும் அப்பால் செல்வதற்கான ஒரு அரிய வாய்ப்பளித்து ஒரு சாதகரை ஞானத்தின் பாதையில் உச்சபட்ச விடுதலையை நோக்கி சத்குரு அழைத்துச்செல்கிறார். “குரு உங்களை சாதுர்யமாகவே கையாள்கிறார்” நூலில் சத்குரு குரு-சிஷ்ய உறவு பற்றிய அரிய நுண்ணறிவை விளக்குகிறார். பதிவிறக்கம் செய்ய..