சத்குரு:

இந்த உலகத்தில் இருக்கும் ஒவ்வொன்றுடனும் தொடர்புகொள்வதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. சிலரிடம், உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை மென்மையான வார்த்தைகளால் உங்களால் புரிய வைக்க முடியும். சிலரிடம் நீங்கள் கடுமையாகப் பேசியாக வேண்டும். அவர்கள் எந்த வகையான "நோய்த்தொற்றால்" அவதிப்படுகிறார்கள் என்பதைப் பொறுத்து, சிலருக்கு ஒரு "இன்ஜெக்ஷன்" தேவைப்படலாம். நீங்கள் சும்மா அவர்களைப் பார்த்தாலே புரிந்துகொள்கிறவர்கள் சிலர் இருக்கிறார்கள். நீங்கள் பார்க்கவே தேவையில்லாத மனிதர்களும் இருக்கிறார்கள் - நான் கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்தால் கூட, அவர்களுக்குப் புரிந்துவிடும். இப்படியாக, தொடர்புகொள்வதற்கு பல்வேறு வழிகள் உண்டு. இதில் தொடர்புகொள்ள சிறந்த வழி எது? அது அவர்களுக்குப் புரியும் விதமாக இருப்பதே மிகச் சிறந்த வழியாகும். ஏனென்றால், தொடர்புகொள்வது என்றால் அடுத்த பக்கத்தில் இருப்பவருக்கு அது போய்ச் சேர வேண்டும், அவ்வளவுதான்.

என்னைப் பொருத்தவரை, மொழி என்பது வெறும் ஒரு கருவி மட்டும்தான். நான் பேசாமல் சும்மா ஒரு இடத்தில் உட்கார்ந்திருக்கவே விரும்புவேன். ஆனால் அப்படிச் செய்தால், மிகச் சிலருக்கு மட்டும்தான் அது புரியும். அதனால் நான் நிறைய பேச வேண்டியிருக்கிறது - சில நேரங்களில் மென்மையாக, சில நேரங்களில் கடுமையாக, சில நேரங்களில் அனல் பறக்கும் விதமாக பேச வேண்டியிருக்கிறது. இது மனிதர்களுக்கு இடையே மட்டும் நடப்பதல்ல - எல்லாவற்றுக்குமே இது பொருந்தும்.

சிலருக்கு, எல்லாமே அவர்களுக்கு ஒத்துழைப்பது போலத் தோன்றும் - அவர்கள் சாப்பிடும் உணவு, அவர்கள் குடிக்கும் தண்ணீர், அவர்கள் சுவாசிக்கும் காற்று, அவர்கள் நடக்கும் பூமி, அதோடு இங்குள்ள அத்தனை பிராணிகளும் தாவரங்களும் என எல்லாமே. ஒரு சில உயிர்களுக்கு எல்லாமே ஒத்திசைவாக இருப்பது போலத் தோன்றும். வேறு சில உயிர்களுக்கோ, எல்லாமே அவர்களுக்கு எதிராகப் போவது போலத் தோன்றும். இது தொடர்பு கொண்டு பரிமாறிக்கொள்வதைப் பொருத்த விஷயம்.

தொடர்புகொள்வது என்பது மொழி சார்ந்தது மட்டுமல்ல. தொடர்புகொள்வது என்பது ஒரு குறிப்பிட்ட செய்தியை வெளிப்படுத்துவது மட்டுமல்ல. தொடர்புகொள்வது என்பது வாழ்க்கையின் பல்வேறு சக்திகளுக்கு இடையிலான பரிமாற்றம். உங்களை நீங்கள் முழுக்க முழுக்க ஒரு தனிநபராக நினைத்துக்கொண்டால், தொடர்புகொள்ள கஷ்டமான ஒரு கிறுக்காகவே நீங்கள் இருப்பீர்கள். உங்களை தனிப்பட்டவராக உணர்ந்துகொள்ளும் சலுகை பெற்ற ஒரு சின்ன உயிர்த்துளி மட்டும்தான் நீங்கள் என்பதைப் புரிந்துகொண்டால், உங்களிடம் சுலபமாகத் தொடர்புகொள்ள முடியும். இது சமீபத்தில் வீட்டில் நடந்த ஒரு சம்பவத்தை என் நினைவுக்கு கொண்டுவருகிறது.

கேட்காமலேயே...

மஹாசிவராத்திரி சமயத்தில், வீட்டில் எனக்கு சில விருந்தினர்கள் இருந்தார்கள், அதோடு ஏராளமான எலிகளும் அணில்களும் இருந்தன. நான் அவற்றைப் பொருட்படுத்தவில்லை, ஆனால் அவை ஓடுக் கூரையின் மேல் ஓடி இரவு முழுவதும் சத்தம் போட்டுக் கொண்டிருந்தன. நான் ஒருவரிடம், “தோட்டத்தில் இரண்டு பாம்புகள் இருந்தால், அவை இதையெல்லாம் கட்டுப்படுத்திவிடும்,” என்றேன். பிறகு ஒரு நாள் சாயங்காலம், நான் தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தபோது, கிட்டத்தட்ட ஆறு அடி நீளமுள்ள ஒரு பாம்பு வந்தது. “இது நல்லதுதான். ஆனால் ஏன் ஒன்று மட்டும் இருக்கிறது, இரண்டு இல்லையே?” என்று நான் நினைத்தேன்.

யோகாவை வெறும் பயிற்சியாக செய்யாமல் நீங்களே யோகாவாக மாறி இருந்தால், நீங்கள் எதையும் கேட்கக்கூட தேவையில்லை - உங்களுக்கு தேவையானது தானாகவே நடக்கும்.

அடுத்த நாள் காலையில், சுமார் 10:30 மணியளவில், வீட்டில் இருப்பவர்கள் பயந்துபோய் என்னிடம் வந்து, “சத்குரு, உங்க பாத்ரூம்ல ஒரு பெரிய பாம்பு இருக்கு!” என்றார்கள். அது எப்படி என் பாத்ரூமிற்குள் வந்தது? வீட்டில் நாம் எந்தக் கதவையும் திறந்து வைப்பதில்லை, ஏனென்றால் ஊர்ந்து போகும் பிராணிகள் விஷயத்தில் நமக்கு ஏகப்பட்ட முன்னனுபவம் உண்டுதானே! கதவைத் திறக்கவேண்டும், உள்ளே போகவேண்டும், கதவை சாத்த வேண்டும் - இதுதான் வீட்டில் உள்ள விதிமுறை. அந்தப் பாம்பு பாத்ரூமிற்குள் போவதற்கு மூன்று கதவுகளைத் தாண்டிப் போயிருக்க வேண்டும். எப்படியோ, வேறு வேறு நேரங்களில், கதவு திறந்திருந்தபோது, அது உள்ளே நழுவி பாத்ரூமிற்குள் போயிருக்க வேண்டும். அதனால் நான் அந்த பாம்பைப் பிடித்து வெளியே விட்டேன். நான் இன்னமும் யோசித்துக் கொண்டிருந்தேன், ஏன் ஒன்று மட்டும்தான் வந்தது என்று. அப்புறம், கொஞ்ச நேரம் கழித்து, இன்னொரு பாம்பு வந்தது - கொஞ்சம் சிறியது, சுமார் நான்கு அடி நீளம் இருக்கும். நான் சொன்னேன், “சரி, இது நல்லதுதான். விஷயங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும்.”

வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது. யோகாவை வெறும் பயிற்சியாக செய்யாமல் நீங்களே யோகாவாக மாறியிருந்தால், நீங்கள் எதையும் கேட்கக்கூட தேவையில்லை - உங்களுக்கு தேவையானது தானாகவே நடக்கும். இது தோட்டத்து பாம்புகளுக்கு மட்டுமல்ல - வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் நடக்கும். நீங்கள் கேட்டால், உங்களுக்கு தெரிந்த ஒன்றையே கேட்பீர்கள். அது வாழ்க்கையை வீணாக்கும் செயல். உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த முட்டாள்தனமான விஷயங்களை கேட்பதில் என்ன பயன்? நீங்கள் கற்பனை செய்ய முடியாத, உங்களுக்கு தெரியாத விஷயங்கள் உங்களுக்கு நடக்க வேண்டும் - அப்போதுதான் வாழ்க்கை நிகழ்கிறது என்று அர்த்தம். ஒரு வகையில், இவை அனைத்தும் தொடர்புகொள்வதை சார்ந்த விஷயம் தான்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நான் "தொடர்பில் இருப்பது" என்று சொல்லும்போது, மக்கள் SMS அனுப்புவது, போனில் பேசுவது என்று நினைக்கிறார்கள். அதுவும் ஒரு வகை தான், ஆனால் அதுபோன்ற தொடர்புகள் சமூகச் சூழலை மட்டுமே நடத்தி செல்லும், அதற்கு மேல் ஒன்றுமில்லை. சமூகச் சூழல்கள் உங்கள் கவனத்தை திசை திருப்பும், நிறைவைத் தராது. சமூக பரிமாற்றங்கள் உங்களை சிறிது காலம் திசை திருப்பலாம், இல்லை மகிழ்விக்கலாம், ஆனால் அவை ஒருபோதும் உங்களுக்கு நிறைவை தரும் திசை நோக்கி நகர செய்யாது. ஏனெனில் அது அவற்றின் இயல்பு அல்ல.

நீங்கள் இங்கே உட்கார்ந்திருக்கும்போது, உங்களைச் சுற்றியுள்ள எல்லாவற்றுடனும் நீங்கள் ஒரு ஆழமான தொடர்பில் இருப்பது முக்கியம். எதுவும் பேசாமல், எந்த குறிப்பிட்ட செய்தியும் இல்லாமல், உங்களுக்கும் இங்கிருக்கும் அனைத்திற்கும் இடையே ஒரு ஆழமான பரிமாற்றம் நிகழ்வது, இதுதான் யோகா. யோகா என்றால் ஒன்றிணைதல். நீங்கள் இங்கே உட்காரும்போது, “நான்” என்ற தன்மை ஒரு சிறிய பாகமாக இருப்பது - உயிர் ஒரு பெரிய பாகமாக இருப்பது. உயிர் என்பது சொட்டு சொட்டாக நடப்பதில்லை - அது ஒரு மிகப்பெரிய நிகழ்வு.

தீவிரத்தை குறைத்துக்கொள்ளும் நேரமல்ல இது

மொத்த பிரபஞ்சத்தின் ஒரு சிறு பாகமாக நாம் இருந்தாலும், வாழ்க்கை உங்களுக்கு ஒரு தனிப்பட்ட அனுபவத்தை தந்திருப்பது ஒரு மகத்தான பாக்கியம். உண்மையில் நாம் ஒன்றுமில்லை, படைப்பில் ஒரு துகளாக மட்டுமே இருந்தாலும், நம்மால் இங்கே உட்கார்ந்து கொண்டு ஒரு தனி உயிரைப் போல் உணர முடிகிறது. இதுதான் படைப்பின் பெருந்தன்மை. இந்த பிரபஞ்சத்துடன் தொடர்புகொள்ளும் உங்கள் திறன், “நான்” என்ற தன்மை எந்த அளவிற்கு குறைந்து இருக்கிறது என்பதை பொறுத்து இருக்கிறது. இந்த பிரபஞ்சத்தில், அதன் ஆரம்பமும் முடிவும் தெரியாத நிலையில், நாம் உண்மையில் ஒன்றுமே இல்லை - ஒரு துகள் கூட கிடையாது. அப்படி இருந்தும் நம்மை நாம் பெரிதாக நினைத்துக்கொள்கிறோம். ஆனால் இந்த துகள் எல்லாவிதமான விஷயங்களையும் கற்பனை செய்துகொள்கிறது. உங்கள் வாழ்நாள் அதன் முடிவை நோக்கி போய்க்கொண்டே இருக்கிறது. அப்படி இருந்தும், நீங்கள் யார் என்பதைப் பற்றி முடிவில்லாமல் பிதற்றுவதில் நேரத்தை செலவிடுகிறீர்கள்.

தொடர்புகொள்வது என்பது உலகத்தில் என்ன தேவையோ அதற்கேற்ப செய்வது. செயலும் உலகின் தேவைக்கேற்ப அமைய வேண்டும். உங்களுக்குள் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பது வேறு விஷயம்.

ஆனால் நீங்கள் ஒன்றும் இல்லாதவராக இருந்தால் உலகில் செயல் செய்ய முடியாது - நீங்கள் யாரோ ஒருவராக இருக்க வேண்டும். சமீபத்தில் ஒருவர் என்னிடம், "சத்குரு, இப்போலாம் சில நாட்கள் உங்க பேச்சு ரொம்ப தீவிரமா இருக்கு” என்றார். நான் சொன்னேன், "எப்போதும் அப்படித்தான்." "இல்லை சத்குரு, இப்படி செய்யாதீங்க. நீங்க உங்க நிதானத்தை இழந்துட்ட மாதிரி தெரியுது," என்றார். நான் சொன்னேன், "நான் எப்போதுமே நிதானமாக இருந்ததில்லை, அப்புறம் எப்படி அதை இழக்க முடியும்? எனக்குள் நான் எப்போதும் ஒரு எரிமலையைப் போலவே இருக்கிறேன், எந்த நேரமும் வெடிக்கத் தயாராக இருக்கிறேன்."

தொடர்புகொள்வது என்பது உலகத்தில் என்ன தேவையோ அதற்கேற்ப செய்வது. செயலும் உலகின் தேவைக்கேற்ப அமைய வேண்டும். உங்களுக்குள் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பது வேறு விஷயம். ஆதியோகியை பாருங்கள் - முழு தீவிரத்துடன் இருக்கிறார். கடந்த காலத்தின் மகா யோகிகளைப் பாருங்கள் - அவர்கள் அனைவரும் தீவிரத்துடன் தீ போலவே இருந்தனர். காலண்டர் யோகிகள் மட்டும் தான் முகத்தில் ஒரு மென்மையான பார்வையை கொண்டிருக்கிறார்கள்.

உயிரும் அதன் பல பரிமாணங்களும் தீவிரத்துடன் நடக்க வேண்டும். நிதானமாக செயல்பட நேரமில்லை. எல்லா வகையிலும் துன்பப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக வாழ்பவர்கள் மட்டும் தான் நீண்ட வாழ்க்கை இருக்கிறது என்று நினைக்கிறார்கள், ஏனெனில் ஒரு மனிதன் அடையக்கூடிய பல்வேறு சாத்தியங்களை வெளியே கொண்டுவர ஒருபோதும் அவர்கள் முயற்சி செய்யவில்லை. அவர்கள் தங்களை சுற்றி சில பொருட்கள், மனிதர்கள் மற்றும் முட்டாள்தனமான விஷயங்களை சேகரிப்பதன் மூலம் தங்கள் வாழ்க்கையை உருவாக்க முயற்சிக்கிறார்கள். நீங்கள் ஒரு மனிதனாக இருப்பதன் பிரம்மாண்டத்தை ஆராய்பவர் என்றால், இது மிகவும் குறுகிய வாழ்க்கை என்பது புரியும். அது அவ்வளவு குறுகியதாக இருக்கும்போது, நீங்கள் முழு தீவிரத்துடன் இருப்பது முக்கியம். அப்படி இல்லாமல் போனால் என்ன நடக்கிறது என்று நீங்கள் உணர்வதற்கு முன்பே, உங்கள் இறுதி சடங்குகள் துவங்கிவிடும். இறுதியில் எப்படியும் தீ தான் உங்களை கரைக்கப் போகிறது, ஆனால் அப்போது அது காலம் கடந்ததாக இருக்கும். ஒன்று நீங்கள் இப்போதே முழு தீவிரத்துடன் தீ போல் செயல்படுங்கள், அல்லது தவணை முறையில் மெதுவாகச் செல்லுங்கள்.

தவணை முறையில் எல்லையற்ற நிலையை அடைய விரும்புபவர்களுக்கு - என் வாழ்த்துகள். யாரும் "ஒன்று, இரண்டு, மூன்று" என்று கணக்கு பார்த்துக்கொண்டு ஒரு நாள் எல்லையற்ற நிலையை அடையவில்லை. நீங்கள் ஒரு பூஜ்ஜியமாக மாறினால், நீங்கள் ஒன்றுமற்ற தன்மையில் இருந்தால், நீங்கள் வேறு எதுவும் செய்யத் தேவையில்லை. ஆனால் உங்களால் உலகத்தில் செயல்பட முடியாது. அந்த நிலை அழகானதுதான். ஆனால் அந்த நிலையில் உங்களுக்கு சுற்றியுள்ள மக்களிடமிருந்து கவனிப்பும் ஆதரவும் தேவைப்படும். ஆனால் நீங்கள் முழுமையாக அந்த நிலைக்குள் இருந்து கொண்டு, அதேசமயம் உலகில் செயல்படவும் விரும்பினால், நீங்கள் முழு தீவிரத்துடன் இருப்பது முக்கியம். அதற்காக நீங்கள் ஒவ்வொரு முறையும் உங்கள் தீவிரத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று அவசியமில்லை. எப்போதாவது ஒருமுறை, தகுதி இருக்கும் யாரோ ஒருவரை அதை சுவைக்க வைக்கலாம்.

கடந்த காலத்தின் தடங்கள்

மற்றபடி, இது நீங்கள் சூடாக, குளிர்ச்சியாக, அமைதியாக, ஆக்ரோஷமாக இருப்பதை பற்றி இல்லை. முக்கியமானது என்னவென்றால், உங்களுக்குள் எது நடந்தாலும், அது விழிப்புணர்வோடு நடக்கிறதா இல்லையா என்பது தான். உங்கள் புத்திசாலித்தனத்திற்கு அல்லது அந்த தருணத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுக்கு ஏற்ப நீங்கள் எதை விழிப்புணர்வுடன் செய்தாலும் அது நல்லது தான்.

உங்கள் கட்டாயத் தன்மையினால் நீங்கள் சூடாகவோ, குளிர்ச்சியாகவோ ஆகும்போது பிரச்சனை வருகிறது. இது கட்டாயத் தன்மையா, இல்லை விழிப்புணர்வா என்பதுதான் கேள்வி. உங்கள் நெருப்பும், உங்கள் குளிர்ந்த நீரும் விழிப்புணர்வான செயலாக நடக்கிறதா, இல்லை நீங்கள் வளர்த்துக்கொண்ட கட்டாயத் தன்மையால் நடக்கிறதா? "கட்டாயத்தன்மை" என்றால் நீங்கள் மீண்டும் மீண்டும் அதையே செய்கிறீர்கள் என்று அர்த்தம். "மீண்டும் மீண்டும்" என்றால் கடந்த காலம் நிகழ்காலத்தை ஆளுகிறது, அதோடு எதிர்காலத்திற்குள் அத்துமீறி நுழைகிறது என்று அர்த்தம்.

கடந்த காலத்தின் தடம் எதிர்காலத்திலும் எதிரொலித்தால் அது ஒரு மோசமான வாழ்க்கை. இதனால் தான் நம்மால் உங்களுக்கு “ஹாரர் ஸ்கோப்” (ஜாதகம்) எழுதவும், நீங்கள் இனிமேல் எப்படி வாழப் போகிறீர்கள் என்று சொல்லவும் முடிகிறது. யார் ஒருவர் தங்கள் கடந்த காலத்தின் தடத்தை எதிர்காலத்தில் பதிக்க அனுமதிக்கிறார்களோ அவர்களுக்கு தான் ஜாதகம் உண்மையாகிறது. நீங்கள் விழிப்புணர்வுடன் இருந்தால், நீங்கள் உங்கள் ஜாதகத்தை எரித்துவிடலாம். நீங்கள் விழிப்புணர்வுடன் இருந்துவிட்டால், கடந்த காலம் மீண்டும் மீண்டும் நிகழாது. உங்கள் ஒவ்வொரு எண்ணமும், ஒவ்வொரு உணர்ச்சியும், ஒவ்வொரு செயலும், நீங்கள் செய்யும் அனைத்தும் விழிப்புணர்வுடன் நிகழ்வது மிகவும் முக்கியம். விழிப்புணர்வுடன் இருக்கும் உங்கள் திறனும், பிரபஞ்சத்தில் இருக்கும் மற்ற அனைத்துடனும் தொடர்புகொள்ளும் உங்கள் திறனும் அடிப்படையில் ஒன்றுதான். ஒரு சாரைப்பாம்பு கூட உற்று கவனிக்கிறது எனும்போது, உங்களுக்கு என்ன?

வாழ்க்கைக்கு தகுதியானவரா நீங்கள்?

“நான்” என்னும் கோட்டைக்குள் இருந்துகொண்டு மற்றவர்களுடன் தொடர்புகொள்ள முயற்சித்தால், அது வேலை செய்யாது. நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்கும்போது இயல்பாகவே இளகிய நிலையில் இருப்பீர்கள். நீங்கள் உண்மையிலேயே விழிப்புணர்வாக மாறினால், நீங்கள் இறுக்கம் இல்லாமல் இளகிய நிலைக்கு மாறிவிடுவீர்கள். இளகிய நிலையில், உங்கள் வழியே அனைத்தும் ஊடுருவி செல்லும். “நான்” என்ற தன்மையை கரைத்துவிடுங்கள். அப்படி இல்லை என்றால் உங்களுக்காக நாங்கள் அதை தேய்த்து எடுத்துவிடுவோம். தேய்த்து எடுப்பது வலி தரும் செயல். நீங்களே கரைத்துக்கொள்வது அற்புதமாக இருக்கும். அதுவாக தேய்ந்து போக பல காலம் ஆகும். காலப்போக்கில் வாழ்க்கையே அந்த தன்மையை தேய்த்துவிடும். ஆனால் “நான்” என்பதை கரைப்பதற்கு அது ஒரு அசிங்கமான வழி. உண்மையான ஏதோ ஒன்று உங்களுக்கும் உலகிற்கும் நடக்க வேண்டுமென்றால், அதற்கான இடமும் நேரமும் இதுதான். ஒரே ஒரு விஷயம் தான், நீங்கள் முற்றிலும் உண்மையானவராக மாறவேண்டும். இல்லையென்றால் இப்படி ஏன் நடக்கிறது என்று நீங்கள் எல்லாவற்றையும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் உண்மையான தேடுதலில் இருப்பவராக இருந்தால், ஏதோ ஒன்று ஏன் நடக்கிறது என்பது முக்கியமல்ல. இது "எனக்கு என்ன கிடைக்க வேண்டும்? எனக்கு ஞானோதயம் கிடைக்க வேண்டுமா? எனக்கு இது கிடைக்க வேண்டுமா அல்லது அது கிடைக்க வேண்டுமா?" என்பதெல்லாம் இல்லை. இது உங்கள் படைப்பின் இயல்பை அதன் உச்சபட்ச திறனில் தெரிந்துகொள்வது.

இவ்வளவு பெரிய மூளை, இவ்வளவு புத்திசாலித்தனம் மற்றும் விழிப்புணர்வுடன் நீங்கள் இங்கு வந்துவிட்டீர்கள் என்றால், இது என்ன என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் போவதற்கு முன், உங்களுக்கு இது தெரிய வேண்டும்: "என் படைப்பின் தன்மை என்ன? எனக்கு இருக்கும் சாத்தியங்கள் என்ன?" நீங்கள் எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்க்கப் போகிறீர்களா இல்லையா என்பது வேறு விஷயம், ஆனால் குறைந்தபட்சம் அது என்ன என்பதாவது உங்களுக்கு தெரிய வேண்டும். வாழ்க்கை உங்களை தொட வேண்டாம் என்று நீங்கள் விரும்பினால், கல்லறைதான் சிறந்த இடம். மக்கள் என்னிடம் தொடர்ந்து வந்து, "சத்குரு, எனக்கு எதுவும் நடக்கக்கூடாதுன்னு ஆசீர்வாதம் பண்ணுங்க," என்று கேட்கிறார்கள். இது என்ன மாதிரி ஆசீர்வாதம்? என் ஆசீர்வாதம் என்னவென்றால், "வாழ்க்கையில் இருக்கும் அனைத்தும் உங்களுக்கு நடக்கட்டும்," என்பதே.

இந்த உலகை, நமது கல்வி, நமது வணிகம் ஆகியவற்றை நடத்தும் விதத்தில் நாம் அடிப்படையான விஷயத்தைத் தவறவிடுகிறோம்.

நீங்கள் உயிருடன் இருக்கும் வரை, ஏதோவொன்று நடந்துகொண்டு தான் இருக்கும். கேள்வி என்னவென்றால், நீங்கள் வாழ்க்கைக்கு தகுதியாக இருக்கிறீர்களா இல்லையா? என்ன நடந்தாலும், இந்த வாழ்க்கையை கையாள்வதற்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும், விழிப்புணர்வுடன் தயாராக இருக்கிறீர்களா? "இல்லை சத்குரு, ஆனால் ஒரு பயங்கரமான விஷயம் நடந்துவிட்டது". அப்படி எதுவும் நடக்கவில்லை. வாழ்க்கை மட்டும்தான் நடந்துகொண்டு இருக்கிறது. யாரோ பிறக்கிறார்கள், யாரோ இறக்கிறார்கள், யாரோ இங்கே இருக்கிறார்கள், யாரோ போய்விட்டார்கள் - இது மட்டும்தான் நடக்கிறது. சிலர் அழகான விஷயங்களை செய்கிறார்கள்; சிலர் மோசமான விஷயங்களை செய்கிறார்கள். இதுதான் எப்போதும் நடந்துகொண்டு இருக்கிறது. மனிதர்கள் செய்யும் மோசமான செயல்கள் அனைத்தையும் நான் அங்கீகரிக்க முயற்சிக்கவில்லை, ஆனால் நீங்கள் அதை நிறுத்த விரும்பினால், சட்டத்தால் அது முடியாது. நீங்கள் எவ்வளவுதான் சட்டத்தை நடைமுறைப்படுத்தினாலும், மக்கள் பல வழிகளில் இந்த விஷயங்களை தொடர்ந்து செய்வார்கள். இந்த சூழல் மாறுவதற்கு தனிமனிதர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். மனித சமுதாயம் மாறுவதற்கு, மாற்றத்திற்கான கருவிகள் பெரிய அளவில் அவர்களுக்கு கிடைக்க வேண்டும். இவற்றை செய்யாமல் மனிதர்கள் செய்யும் அசிங்கமான விஷயங்களை நிறுத்த முடியாது.

மனிதனாக இருப்பதன் அர்த்தம் - இந்த அடிப்படை நமக்கு புரியவில்லை. வாழ்வின் அடிப்படை மூலக்கூறு என்ன என்பதை நாம் முழுவதுமாக தவறவிடுகிறோம். இந்த உலகை, நமது கல்வி, நமது வணிகம் ஆகியவற்றை நடத்தும் விதத்தில் நாம் அடிப்படையான விஷயத்தைத் தவறவிடுகிறோம். குறைந்தபட்சம் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களில் நாம் அந்த ஒரு இடத்துக்கு வந்திருக்கிறோம். நாம் விரும்பினால், இங்கு உட்கார்ந்து கொண்டு ஒட்டுமொத்த உலகத்துடன் தொடர்புகொள்ள முடியும்.

அசிங்கமான விஷயங்களுக்காக அற்புதமான தகவல் தொடர்பு கருவிகளும், இன்டர்நெட்டும் பயன்படுத்தப்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இணையத்தில் விற்கப்படுகிறார்கள், போதை பொருட்கள், ஆயுதங்கள் விற்கப்படுகின்றன - எல்லாவிதமான விஷயங்களும் நடக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, ஒருவருடன் தவறான செயல் செய்ய நம் குழந்தைகளை விற்கும்போது, நாம் உண்மையில் அடிப்படையை இழந்துவிட்டோம் என்று தான் அர்த்தம். நம் மனிதத்தன்மையை முழுவதும் இழந்துவிட்டோம். ஒரு ஆன்மீக அமைப்பு சுமூகமாக, அமைதியாக செயல்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளின் காலம் முடிந்துவிட்டது. அப்படித்தான் நான் நினைக்கிறேன். இதை நாம் ராக்கெட் வேகத்தில் கொண்டு செல்ல வேண்டும்.

நீங்கள் விரும்புவது கணிப்புகளா அல்லது திட்டங்களா?

இது முழு தீவிரத்துடன் நடக்க வேண்டும், அதை அடுத்த சில மாதங்களில் நாம் செய்வோம். நீங்கள் அனைவரும் இதில் பங்கேற்க வேண்டும் என்பது தான் என் விருப்பம். இந்த இயக்கம், மனிதகுலத்தை மதத்திலிருந்து பொறுப்புணர்வுக்கு மாற்றுவதைப் பற்றியது. நீண்ட காலமாக, நாம் செய்யும் அனைத்து மோசமான விஷயங்களுக்கும் பொறுப்பு மேலே எங்கோ இருக்கிறது என்று சொல்லி வந்தோம். நாம் செய்யும் நல்ல விஷயங்களுக்கு, நிச்சயம் நாம் தான் பொறுப்பு என்று பெருமைபட்டுக் கொண்டோம். யாரோ ஒருவர் இன்று தாக்கப்பட்டால் - "அது கடவுளின் விருப்பம்” என்று சொல்கிறோம். இந்த நிலை மாறவேண்டும். இன்றைக்கு நாம் முட்டாள்தனமாக இருப்பதற்கும், நமக்கிருக்கும் சாத்தியங்களுக்கும் நாம் தான் பொறுப்பு என்று உணரும் நேரம் வந்துவிட்டது. நாம் செய்த மகத்தான விஷயங்களுக்கும், அசிங்கமான விஷயங்களுக்கும் பொறுப்பேற்க விருப்பத்துடன் இருக்க வேண்டும். இந்த உலகில் நாளை நாம் என்ன உருவாக்கப் போகிறோம் என்பதும் நம்முடைய பொறுப்புதான்.

மக்கள் என்னிடம் கேட்பார்கள், "சத்குரு, 50 வருஷத்துல உலகம் எங்க இருக்கும்னு நீங்க நினைக்கிறீங்க? நான் கேட்பேன், "உங்களுக்கு ஒரு கணிப்பு வேணுமா, இல்லை பிளான் வேணுமா?" திட்டங்களை வகுக்கத் தெரியாத எல்லா முட்டாள்களும் கணிப்புக்காக காத்திருக்கிறார்கள். உண்மை என்னவென்றால், படைப்பு உங்களுக்கு இவ்வளவு பெரிய மூளையைக் கொடுத்திருக்கிறது என்பதும், பல விஷயங்களை உருவாக்கும் சாத்தியம் இருக்கிறது என்பதும், முட்டாள்தனமான கணிப்புகளுக்கு காத்திருக்காமல் நீங்கள் நல்லதொரு திட்டத்தை வைத்திருப்பீர்கள் என்பதால் தான். நாம் எங்கே போகிறோம் என்பதுதான் கேள்வி. இப்படி நடக்க வேண்டும் என்றால், நீங்கள் மனிதர்களுக்கு அவர்களின் உடல் மற்றும் மனதைத் தாண்டிய ஒரு சக்தியை தரவேண்டும். பெரிதாக ஏதோவொன்று அவர்களைத் தொடவேண்டும். நாம் செய்து கொண்டிருப்பதில் அடிப்படை முயற்சி அதுதான். அனைத்தும் முழுவீச்சில் நடக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.

குறிப்பு:

"உருவாக்கும் ஆற்றல்" - சித் சக்தி தியானம். அமைதி, அன்பு, ஆரோக்கியம் மற்றும் வெற்றிக்கான தியானங்கள். நாம் விரும்புவதை நாமே உருவாக்கிக்கொள்ளும் ரசவாதம். நம் ஒவ்வொருவரையும் சக்திமிக்கவர்களாக மாற்றி, நம் நீண்ட கால ஆசைகளை நிஜமாக்க வழிவகுக்கும் சித் சக்தி தியானம் - Sadhguru Appல்.