இந்திய பாரம்பரிய இசையும் சக்கரங்களை செயலாக்கம் பெறச் செய்வதும்
ஒலி, மந்திரங்கள் மற்றும் இந்திய பாரம்பரிய இசையின் தன்மை, எப்படி மனித உடலில் உள்ள சக்கரங்களை செயல்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாக இருக்கிறது என்பதைப் பற்றி சத்குருவின் பார்வையில்.

"எல்லாம் ஒலியாக இருந்தால், நான் ஏன் அதைக் கேட்க முடிவதில்லை?" படைப்பின் அதிர்வுகள் வெளியேற்றும் ஒலியின் முழு நிறமாலை (Frequency) பொதுவாக மனித காதுகளுக்கு கேட்காது. நீங்கள் கேட்கக்கூடியது ஒரு சிறிய அலைவரிசை மட்டுமே - அதை சோனிக் வீச்சு என்பர். இந்த வரம்பிற்கு மேலே உள்ள எதுவும் அல்டராசோனிக் என்று அழைக்கப்படுகிறது. அதற்கு கீழே இருப்பது சப்சோனிக் ஆகும். சப்சோனிக் மற்றும் அல்டராசோனிக் ஒலிகள் இரண்டும் பொதுவாக மனித காதுகளின் கேட்கும் எல்லைக்கு வெளியே இருக்கிறது.
இருப்பினும், நாம் "ரிதம்பரா பிரக்னா" என்று குறிப்பிடும் ஒரு நிலைக்கு நகர்ந்து செல்ல முடியும். அங்கு, மனிதன் பொதுவாக கேட்கக்கூடிய அலைவரிசைக்கு அப்பால் இருக்கும் ஒலிகளைக் கூட கேட்கலாம். அத்தகைய நிலையில், நீங்கள் எந்த வடிவத்தைப் பார்த்தாலும், அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஒலி உங்களுக்கு தெளிவாக புரியும். முழு இருப்பையுமே வெறும் ஒலியாக அனுபவிக்க முடியும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, வருடத்தில் ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு தனியாக இமயமலைக்கு செல்வது வழக்கம். ஒருமுறை நான் கேதார்நாத் செல்ல நேர்ந்தது. கேதார் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் அற்புதமான இடம். கேதாருக்கு மேலே, காந்த்திசரோவர் என்று ஒரு இடம் உள்ளது, அங்கு மக்கள் பொதுவாக செல்லமாட்டார்கள், ஏனெனில் அது ஒரு கடினமான மலையேற்றம். நான் காந்த்திசரோவர் வரை மலையேற்றம் சென்று அங்குள்ள ஒரு பாறையின் மீது அமர்ந்தேன்.
இதை வார்த்தைகளாக விவரிப்பது மிகவும் கடினம், அங்கே அமர்ந்த சிறிது நேரம் கழித்து, திடீரென எல்லாமே என் அனுபவத்தில் ஒலியாக மாறியது. என் உடல், மலை, எனக்கு முன்னால் உள்ள ஏரி எல்லாம் ஒலியாகிவிட்டன. அந்த இடம் முழுவதும் ஒலி வடிவத்தை எடுத்தது, முற்றிலும் மாறுபட்ட வழியில் என்னுள் ஏதோ நடந்து கொண்டிருந்தது. என் வாய் மூடியிருந்தது - அதை நான் உறுதியாக சொல்ல முடியும் - ஆனால் என் சொந்த குரல் சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்தது, அது ஒரு பாடலை ஒலிக்கும் மைக்ரோஃபோனில் கேட்பது போல இருந்தது - குறிப்பாக அது சமஸ்கிருதத்தில் இருந்தது.
நாத பிரம்மா விஸ்வஸ்வரூபா
Subscribe
நாத ஹி ஸகல ஜீவ ரூபா
நாதஹி கர்மா நாதஹி தர்மா
நாதஹி பந்தன நாதஹி முக்தி
நாதஹி ஷங்கர நாதஹி ஷக்தி
நாதம் நாதம் சர்வம் நாதம்
நாதம் நாதம் நாதம் நாதம்
மொழிபெயர்ப்பு: நாதமே பிரம்மம், நாதமே பிரபஞ்சத்தின் உருவாக்கம், நாதமே உலக உயிர்களாக உருவாகின்றது. நாதமே தளை, நாதமே முக்திக்கான வழி. நாதமே நம்மை பிணைக்கிறது. நாதமே விடுகிறது. நாதமே எல்லாவற்றையும் வழங்குகிறது. நாதமே அனைத்துக்கும் பின்பாக இருக்கிற சக்தி. நாதமே அனைத்தும். அந்த பாடலுக்கு உங்களை நீங்களே கொடுத்தால், அதற்கு ஒரு வகையான சக்தி இருக்கிறது. ஒரு நபரைக் கரைக்கும் சக்தி அதற்கு உண்டு, நீங்கள் உண்மையிலேயே உங்களை அதற்கு அர்ப்பணிக்க முடிந்தால்.
மந்திரம்
நீங்கள் ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் ஒலிகளை ஒருங்கிணைத்தால், அது ஒரு குறிப்பிட்ட வகையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த கலாச்சாரத்தில், நாம் வெவ்வேறு வடிவங்களை ஆராய்ந்து மந்திரங்களைக் கொண்டு வந்தோம். ஒரு மந்திரம் என்பது ஒலியின் தொழில்நுட்ப ரீதியாக சரியான ஒழுங்கு வரிசை. ஆனால் அது அழகாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு மந்திரத்துடன், ஒருவருக்கு இருக்கும் அழகியல் இன்பத்தை விட தொழில்நுட்ப ரீதியாக சரியாக இருப்பதுதான் முக்கியமானது.
மந்திரங்கள் எந்த மதத்தையும் அல்லது பிரிவையும் சேர்ந்தவை அல்ல, அவை ஒரு வழிபாட்டு முறையும் அல்ல. அவை பிரபஞ்சத்தின் ஒவ்வொரு பகுதியையும் திறக்கக்கூடிய முக்கிய ஒலி சாவிகள். யோக அறிவியலில், ஒரு மந்திரத்தை உங்களுள் நிலைநிறுத்த ஒரு வழி இருக்கிறது. பல யோகிகள் தங்களது முழு வாழ்க்கையையும் ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை தங்களுக்குள் நிலைநிறுத்திக்கொள்கிறார்கள்.
எனவே மந்திரம் என்பது நீங்கள் சொல்லும் ஒன்று அல்ல, அது நீங்கள் ஆக முயற்சிக்கும் ஒன்று. நீங்கள் ஒரு சாவியாக இருந்தால், அது உங்களுக்குள் வாழ்க்கையின் வேறுபட்ட பரிமாணத்தையும் அனுபவத்தையும் திறக்கும்.
பாரம்பரிய இசை
இந்திய பாரம்பரிய இசை என்பது மந்திரங்களின் ஒரு மாற்றமாகும், அங்கு ஒலிகளின் தொழில்நுட்ப வரிசை ஒழுங்கு போலவே அழகியல் முக்கியமானது. இசை என்பது ஒலியின் மிகவும் சுத்திகரிக்கப்பட்ட இணக்கமான வரிசை ஒழுங்கு. அதை நீங்கள் கேட்டால் உடல் மிகவும் அற்புதமான இசையுடன் எதிரொலிக்கிறது. சிவன் ஒரு தமருவை (ஒரு இசைக்கருவி) வைத்திருந்தார், ஏனெனில் இது வாழ்க்கை தாளத்தின் அடையாளமாகும். எதிலிருந்தும் ஒரு ஒலி வெளிப்பட்டால், அதற்கு ஒரு குறிப்பிட்ட தாளம் இருக்கிறது. நீங்கள் கேட்கும் ஒவ்வொரு ஒலிக்கும் ஒரு தாளம் இருக்கும். வெளிப்படையாக ஒலியை ஏற்படுத்தும் எதிரொலியிலும் ஒரு தாளம் இருக்கிறது.
இந்திய பாரம்பரிய இசை மனித அமைப்பைப் பற்றிய மிக ஆழமான புரிதலிலிருந்து வருகிறது, ஏனென்றால் நம்முடைய வாழ்க்கை அனுபவங்கள் அனைத்தும் நமக்குள் நிகழ்கின்றன. ஒளி மற்றும் இருள், சத்தம் மற்றும் மௌனம், மகிழ்ச்சியும் துயரமும் நமக்குள் நிகழ்கின்றன. ஒவ்வொரு மனித அனுபவமும் நமக்குள்ளேயே நடக்கிறது. நாம்தான் நம் அனுபவத்தின் அடிப்படை. இதன் காரணமாக, ஒலிகளுக்கு பதிலளிக்கக்கூடிய உடலின் சில பரிமாணங்களை நாம் அடையாளம் கண்டோம். ஒலிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது உங்களுக்குத் தெரிந்தால், ஒலிகளின் சரியான வரிசை ஒழுங்கு நம்பமுடியாத விஷயங்களைச் செய்ய முடியும்.
மனித உடலை இசையின் மூலம் செயல்பட வைப்பது
யோகாவில், மனித உடலை ஐந்து கோஷங்கள் அல்லது ஐந்து உறைகள் அல்லது அடுக்குகளால் ஆனதாக நாம் காண்கிறோம்: அன்னமய கோஷா அல்லது உணவு உடல், மனோமய கோஷா அல்லது மன உடல், பிராணமய கோஷா அல்லது சக்தி உடல், விஞ்ஞானமய கோஷா அல்லது ஈதெரிக் உடல் மற்றும் ஆனந்தமய கோஷா அல்லது பேரின்ப உடல்.
பிராணமய கோஷா அல்லது சக்தி உடல் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். இது 72,000 நாடிகளால் ஆனது, அவை சக்தியின் அலைவரிசை அல்லது உடலில் உள்ள சக்தி பாயும் பாதைகள். இந்த நாடிகள் மனித அமைப்பில் 114 சக்கரங்கள் அல்லது சந்திப்பு புள்ளிகளில் சந்தித்து மறுபகிர்வு செய்கின்றன. இந்த 114 ல், இரண்டு உடல் உடலுக்கு வெளியேயும், 112 உள்ளேயும் உள்ளன. இந்த 112 இல், நான்கு பெரிய அளவில் செயலற்றவை.
மீதியிருக்கும் 108 உடலின் சக்தி மையங்களாக உள்ளன. இந்த 108 ஐ ஈடா மற்றும் பிங்கலா வடிவத்தில் தலா 54 என வலது மற்றும் இடதுபுறமாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், 54 ஒலிகளைக் கொண்ட ஒரு சமஸ்கிருத எழுத்துக்களை உருவாக்கினோம். ஒவ்வொன்றும் பெண்பால் மற்றும் ஆண்பால் ஆகிய இரண்டு வெளிப்பாடுகளில் உள்ளன.
இந்திய பாரம்பரிய இசை, ஒரு கணித துல்லியத்தில், இந்த 108 சக்கரங்களை எந்த ஒலிகள் தூண்டிவிட முடியும் என்பதை அங்கீகரித்து, மனிதனின் இயற்கையான பரிணாம வளர்ச்சியை உயர்ந்த விழிப்புணர்வு நிலைக்கு வழிநடத்தி செல்கிறது. இந்திய பாரம்பரிய இசை ஒருபோதும் பொழுதுபோக்கின் ஒரு வடிவமாக இருந்ததில்லை. இது ஒரு தனிமனிதனை ஒரு உலகளாவிய நிறுவனமாக மாற்றுவதற்கான ஒரு வழியாகும். இந்த கலாச்சாரத்தில், இசை, நடனம் அல்லது ஒரு நபர் எதைச் செய்தாலும் அது பொழுதுபோக்கு அல்ல, அவை ஒரு ஆன்மீக செயல்முறையும் கூட. பொழுதுபோக்கு என்பது வாழ்க்கையில் அணுகுமுறை அல்ல. இங்கே அனைத்துமே ஆன்மீக பயிற்சிகள் மூலம் உயர்ந்த விழிப்புர்ணர்வு நிலையை அடையவேண்டும் என்பதே நோக்கமாக இருந்து வந்திருக்கிறது.
மனித உடலின் பரிமாணத்தை தூண்டிவிடுவதன் மூலம் ஒரு மனிதனை மிக உயர்ந்த சாத்தியத்திற்கு நகர்த்தி செல்வதற்கு பயன்படுத்தப்படும் இந்த 108 ஒலிகளை நாதயோகா என்றழைப்பர். நாதயோகாவின் இந்த அடிப்படை செயல்முறையின் பரிணாமம்தான் இந்திய பாரம்பரிய இசை. ஒருவர் தேவையான ஈடுபாட்டுடன் ஒரு இசையைக் கேட்டால் அல்லது பாரம்பரிய இசை என்று நாம் குறிப்பிடும் செயல்பாட்டில் ஒருவர் தங்களை ஈடுபடுத்திக் கொண்டால், அது உடலின் இன்பம் அல்லது உணர்ச்சியின் மூலம் மட்டுமல்ல, ஒருவர் வாழ்க்கையின் கட்டாய சுழற்சிகளிலிருந்து கடந்து செல்லவும். தனக்கான சுதந்திரத்தையும் விடுதலையையும் அடையவைக்கக் கூடிய ஒரு செயல்முறை.
பார்வையாளர்களை கவர்ந்திழுப்பது
இந்த அற்புதமான இசையை வளர்ப்பதில் பார்வையாளர்களை கவர்ந்திழுப்பது ஒரு முக்கிய பகுதியாகும். பார்வையாளர்களை கவராமல், வளரும் திறமைக்கு அங்கீகாரம் கொடுத்து அனுமதிக்காமல், இந்த கலை வடிவம் வாழ முடியாது. ஒருவரின் வரம்புகளை மீறி ஒரு இறுதி சாத்தியத்தை அடையக்கூடிய மிக அற்புதமான வழிகளில் இதுவும் ஒன்றாகும். இதைச் செய்ய பல வழிகள் உள்ளன, ஆனால் இந்திய பாரம்பரிய இசை அதைச் செய்வதற்கான அற்புதமான மற்றும் அழகான வழியாகும்.